பொன்னியின் செல்வனும் கோதாவரியும்

(இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 அன்று எழுதப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொருட்டு நான் பிரம்மாவர் அருகே கோதாவரிக் கரையோரமாக எலமஞ்சிலி லங்கா என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். இந்த நாளில்தான் அங்கிருந்து கிளம்பினேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே நாளில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதி வெளியாகவிருக்கிறது)

கோதையின் தொட்டிலில்…

ஓர் இடம் 

அன்புள்ள ஜெ,

நீரின்றி அமையாது உலகு என்பது வாக்கு. பெரு நாகரிகங்களும், பேரரசுகளும், நதிக்கரையை ஒட்டியே வளர்ந்துள்ளன. வேளாண் பெருமக்கள் நீர் வசதிக்காக நதிக்கரைகளைத் தேர்ந்தேடுத்துக்கொண்டார்கள் என்ற கோட்பாடு இருந்தாலும், மற்ற சமூகங்களும் குறிப்பாக அந்தணர்கள் கூட நதிக்கரையை ஒட்டியே தங்கள் இருப்பிடங்களை வகுத்துக்கொண்டார்கள்.

நீங்கள் கடந்த சில வாரங்களாக கோதாவரி நதிக்கரையில் வசித்து வருவது தெரியும். முன்னமே நீங்கள் நதிக்கரையில் வாசித்திருக்கக்கூடும். கோதாவரி போன்ற பெரு நதிக்கரை வாசம் உங்களில் எத்தகைய மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது?

ஏதும் வித்யாசமாக உணர்கிறீர்களா? உங்கள் சிந்தனை முறைமைகளில் இவ்வாசம் ஏதும் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறதா?  நான் பிறந்ததில் இருந்து மிகப்பெரும்பாலும் நதிக்கரையிலே வசித்து வருகிறேன். கோதாவரி என் வாழ்கையில் மிக மிக முக்கியமான நதி.

இப்போது இங்கே கூட என் வீட்டிலிருந்து நூறு அடியில் ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மாலையானால் நானும் என் மகனும் அதன் கரையில் போய் அமர்ந்துகொள்கிறோம். இதையே எனது கோதாவரியாக   நினைத்துக்கொள்கிறேன். ஏன் எனத் தெரியாது சற்றே ஆசுவாசமாக இருக்கிறது.

நன்றி

ராம்

*

அன்புள்ள ராம்

கோதாவரியின் கரையில் இருந்து 26 மதியம் கிளம்பி சென்னை செல்கிறேன். கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கும் மேலாக இங்கே எலமஞ்சிலி லங்காவில் இருந்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லாநாட்களையும்போலவே இவையும் முக்கியமானவை, மறக்கமுடியாதவை.

ஓர்  ஊரைச் சென்று பார்க்கும்போது நம் அகம் ஒரு அதிர்ச்சியை அடைந்து திறந்துகொள்கிறது. கொஞ்சநேரம் அந்த பரவசம் நீடிக்கிறது. நம் பார்வையை மூடியிருக்கும் பழக்கம் என்ற திரை அங்கே இல்லை. ஆகவே அந்த இடத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து உள்ளே வாங்கிக்கொள்கிறோம். அது ஒரு முக்கியமான அனுபவம். இந்த திறப்புக்கு அந்தகரண விருத்தி என்று பெயர்

ஒரே இடத்தில் தொடர்ந்து நெடுநாட்களாக இருக்கும்போது அந்த இடத்தை நம் மனம் பழகிக் கொள்கிறது. அதை முதலில் மொழியாக ஆக்கிக்கொள்கிறோம், இதை சப்தாகரண விருத்தி என்கிறார்கள். பெயர்கள் அடையாளங்கள் என அந்த இடம் மாறுகிறது. அதன் பின் அந்த பழக்கத்தைக்கொண்டு அந்த இடத்தை அறிகிறோம். அதன் உண்மையான காட்சி மனதை எட்டுவதில்லை. இது ததாகரண விருத்தி. இந்த பழக்கத்தின் திரையை கிழித்து இயற்கையைப்பார்க்கவே பயணங்கள் தேவையாகின்றன. நம் கொல்லைப்பக்க இயற்கை நம்மைக் கவர்வதில்லை. பயணத்தில் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம்.

ஆனால் ஒரு இடத்தில் தங்கி அதைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பயிற்சி மூலம் அதை ஒவ்வொருநாளும் புதியதாக உள்ளே செலுத்திக்கொள்ள முயல்வதென்பது மிக முக்கியமான ஒன்று. அதைத்தான் இங்கே செய்தேன் எனலாம். முன்னரே முடிவெடுத்தேன். எதையும் வாசிப்பதில்லை. செய்தித்தாள்களைக்கூட. தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அரட்டை கூட அதிகம் இல்லை. கூட இருந்தவர் தனசேகர். இனிய அமைதியானச் சின்னப்பையன்.

இந்த பெரிய உப்பரிகையில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் காலைமுதல் இரவு வரை இடைவிடாது கோதாவரியை பார்த்துக்கொண்டே இருந்தேன். மீண்டும் மீண்டும்  இமை பிளந்து கண்ணால் பார்ப்பது போல பிரக்ஞையை பிளந்து ஆழ்மனதால் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். துணைக்கு இசை. மெல்லமெல்ல இந்த இடம் உள்ளே ஆழமாகப் பதிந்தது. அதன்பின் மிக இயல்பாக இதைத்தவிர எதையும் பார்க்க முடியாதென்ற நிலை வந்தது. வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டால் போதும். கோதாவரி மட்டுமே இருக்கும்.

நண்பர்கள் வந்திருந்தார்கள். வசந்தகுமார் நாலைந்து நாள் இருந்தார். அவர் பாட்டுக்கு பாலகொள்ளு, ராசூல் என்று அலைந்துகொண்டிருந்தார். அதன்பின் ஆனந்த் உன்னத் வந்தார். பிறகு கல்பற்றா நாராயணன். அதன்பின் கிருஷ்ணன், அரங்கசாமி, ஆனந்தக்கோனார். அதன்பின் யுவன் சந்திரசேகர், கெ.பி வினோத். நண்பர்களுக்கும் இந்த இடம் அபாரமான மனஎழுச்சியை அளித்தது. கல்பற்றா மிகவும் தீவிரமான மனநிலையில் இருந்தார்

தினமும் காலையில் கொஞ்சம் எழுத்து. மாலையில் கோதாவரியில் படகுப்பயணம். இரவில் நாலைந்து மணிநேரம் இசை. இந்த இடத்துக்கான குரலாக பானுமதி மனதில் உருவானார்கள். தெலுங்கு சாயல் கொண்ட இனிமையான குரல். வெய்யிற்கேற்ற நிகலுண்டு என்று பாடுகிறார்கள். அதன்பின் கர்நாடக சங்கீதம்.

இந்த நாட்களில் இரு பௌர்ணமி வந்து சென்றது. வந்தபோது முழுநிலா. அது தேய்ந்து மறைந்தபின் மீண்டும் முழுநிலா வந்து தேய்ந்து கொண்டிருக்கிறது. உருகும் இரும்புக்கோளம் போல நிலா கோதாவரி மேல் நிற்கும். நதிப்பரப்பு தழலாகும். காலையில் பிரம்மாண்டமான பொன்னிற மசூதிமுகடு போல சூரியன். கண்கூச ஒளிரும் கோதாவரி.

கண்வழியாக ஆன்மாவுக்குள் போதுமான அளவுக்கு அள்ளிவிட்டேன் என்று நினைக்கிறேன்.கிளம்பும்போது தனசேகர் மனம் கசிந்துகொண்டே இருக்கிறார். எனக்கு சோகம் ஏதும் இல்லை. ஏக்கமும் இல்லை. நிறைவுதான்.

வித்தியாசமாக ஏதும் உணரவில்லை.என்னுடைய வீட்டுக்கு வெளியே தெரியும் வேளிமலையும் இதே அளவுக்கு மகத்தான காட்சிதான். இங்கிருப்பதே அங்கும் இருக்கிறது. அங்கிருந்ததை இங்கே இருந்தேன் என்றே நினைக்கிறேன்.

நான் பிறந்ததும் வளர்ந்ததும் நதிக்கரையில்தான். வாழ்வதும் நீர் வெளிகள் நடுவேதான். ஆறுகள் மேல் எப்போதும் பெரும் பித்து உண்டு. அவை என்றுமிருப்பவை. மனிதர்கள் அவற்றில் வெறும் குமிழிகள். ஆனால் இருக்கும் காலம் முழுக்க வானை பிரதிபலிக்க வேண்டும், ஏழுவண்ணம் கொண்டு ஒளிவிடவேண்டும்.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 28, 2011

முந்தைய கட்டுரைசு.தியடோர் பாஸ்கரன்
அடுத்த கட்டுரைசிதையும் குடும்பம் – வெங்கி