கடிதங்கள்

ஆசிரியருக்கு,

தற்போது தான் ‘ஈரம்‘ வாசித்தேன். முணுமுணுப்பின் பேரோசை அது.   தீவிர இலக்கியத்தின் வாசகனாக இருப்பதினாலேயே என்னைப் பெருமை கொள்ளச் செய்யும் பதிவு இது. அம்மெல்லிய தனிக் குரல் (ஆனால் மனசாட்சியின் முரசுப்பரப்புகளை தொட்டு அதிரச்செய்ய அது போதும்) காலமெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருக்கும், அணையாத ஒரு தூண்டா விளக்கு போல.

எப்போதுமே உங்கள் உரைகள், ஒரு தரம் உயர்ந்த தீவிர கட்டுரைக்கு இணையாகவே  இருக்கும், இதுவும் அவ்வாறே. ‘மாயண்டிக் கொத்தனின் ரசமட்டம்’, ‘திசைகளின் நடுவே’ மற்றும் உங்களின் அமரிக்க அனுபவம் என மூன்று கண்ணிகள் வழியே நகரும் இந்த உரை, அதை நேரில் கேட்க நான் இல்லாததன் ஏமாற்றத்தை இப்போது உணர்த்துகிறது.

உங்கள் எழுத்துக்கள் எனக்கு உரைப்பவை, நீங்கள் ரசமட்டதை கைப்பற்றி இருக்கும் கொத்தன் அல்ல ,மாறாக அதை ஒரு நல் மரத்தில் இழைத்து செதுக்கும் ஆசாரி. சிதறிக் கிடக்கும் மரச் சுருள்கள் மட்டுமே இவ்விணைய கட்டுரைகள்.

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

நன்றி,

அடிபப்டையான ஒரே உணர்ச்சியைச் சொல்ல எத்தனை சொற்கள் தேவையாகிறது. கருணை, ஈரம், நீதி…

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய ‘உலோகம்’ நாவலை வாசிப்பதற்காக நான் கடந்த சில மாதங்களாக வெகுவாகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கடந்த மாதம் என் கணவர் தமிழ்நாட்டிற்கு வந்த போது அந்த நூலைக் “காலச்சுவடு” பதிப்பகம் சென்று பெற்று வரும்படி நான் வேண்டிக் கொண்டதில், அவர் முயற்சி எடுத்தும் அங்கு அதனைப் பெறமுடியவில்லை. காலச்சுவடு ஊழியர்கள் வேறு இடங்களில் முயன்றும், முயற்சி தோல்வியே!

பின்னர் என் நண்பர் ஒருவர் ஊடாக தங்களுடைய இணையத் தளத்தில் அதை வாசிக்கலாம் என்றறிந்து அங்கு சென்று 2 பாகங்களை வாசித்து, 3ம் பாகத்திற்குப் போகும் போது மீண்டும் ஏமாற்றம்!! அதிலிருந்து மிகுதி அனைத்தும் வெறுமையாக இருக்கிறது. தடைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

நான் இலண்டனில் இருக்கிறேன். இங்கு எங்காவது ‘உலோகம்’ நூலைப் பெறமுடியுமா? அல்லது தமிழ் நாட்டில் எங்கிருந்தாவது தபாலில் பெறமுடியுமா? 2 பாகத்தை வாசித்து விட்டு என்னால் நித்திரையும் செய்ய முடியவில்லை! மிகுதியை வாசிக்காவிட்டால் என் தலை வெடிக்கும் சந்தர்ப்பம் உண்டு!

தங்கள் ‘விஷ்ணுபுரம்’ பல வருடங்களுக்கு முன் யாழ் நகரில் இருக்கும் போது வாசித்திருந்தேன்.

ஒரேயொரு பதிலை அறிய ஆதங்கம்!  தாங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றறிகிறேன். ஒரு ஈழப்போராளியின் உணர்வுகளை , செயற்பாடுகளை இத்தனை தத்ரூபாமாக வடிக்க எங்கிருந்து மாயவரம் பெற்றுக் கொண்டீர்கள்?????

‘உலோகம்’ பெறும் இடம், தயைவுடன் அறியத் தாருங்கள்.

அன்புடன்
சந்திரா இரவீந்திரன் (திருமதி)
லண்டன்.

அன்புள்ள சந்திரா

நன்றி

நீங்கள் என் இணையதளத்தில் உள்ள இணைப்பு வழியாக கிழக்கு இணைய புத்தக அங்காடிக்குச் சென்று பணம் செலுத்தி எளிதில் அந்நூலை வாங்கிவிடமுடியும். இப்போது 50 ரூபாய்க்கு மலிவுப்பதிப்பாக வந்துள்ளது

ஜெ

https://www.nhm.in/shop/Jeyamohan.html

முந்தைய கட்டுரைஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்
அடுத்த கட்டுரைகுடி- கடிதங்கள்