அப்பம் வடை தயிர்சாதம்

அன்புள்ள ஜெ

பாலகுமாரனின் தீவிர வாசகன் நான். அவருடைய எல்லா பதிவுகளையும் படித்திருக்கிறேன். அவருடைய தமிழ் விக்கிப் பக்கம் பார்த்தேன். பாலகுமாரன். மிக விரிவாக இருந்தது. உடையார் உட்பட அவருடைய எல்லா முக்கியமான நாவல்களுக்கும் தனிக்கட்டுரைகளும் தொடுப்புகளும் இருந்தன. மகிழ்ச்சி.

அதன் வழியாக அப்பம் வடை தயிர்சாதம் கட்டுரையை வாசித்தேன். நான் அவருடைய நாவல்களிலேயே வீக் ஆன நாவல் என நினைப்பது அப்பம் வடை தயிர்சாதம்தான். ஆமாண்டா நாங்கள்லாம் அப்டித்தான் என்று சொல்வதுபோல எழுதப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த கட்டுரை வாசித்தபோது நான் வாசித்த முறையே தப்பு என்று தோன்றியது. அது மூன்று தலைமுறை இடப்பெயர்வின் மனநிலைகளையும் அதன் பிரச்சினைகளையும் பேசும் படைப்பு.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். அந்நாவலைப் பற்றி தமிழ் விக்கியில் உள்ள அந்த மதிப்பீடு சரியாக இருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் அப்படி இருக்கலாமா? கலைக்களஞ்சியம் தகவல்களை அல்லவா தரவேண்டும்? அபிப்பிராயங்களைச் சொல்லலாமா?

ராம் முகுந்த்

***

அன்புள்ள ராம்,

உலகம் முழுக்க கலைக்களஞ்சியங்களில் வகுத்துரைப்புகள் உள்ளன. அவை இல்லாவிட்டால் அந்தப் பதிவு ஏன் கலைக்களஞ்சியத்தில் உள்ளது என்பதற்கு காரணம் இல்லை. ஏன் இன்னொரு நாவலுக்கு பதிவு இல்லை?

ஆனால் விக்கிப்பீடியாவில் கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு ஆசிரியர் என எவருமில்லை. எவரும் எதுவும் எழுதலாம். ஆகவே எதற்கும் உசாத்துணை, சான்றாதாரம் தேவை. கருத்து என்றால்கூட அது மேற்கோள் ஆகவே வரமுடியும். அதற்கும் மதிப்பில்லை.

தமிழ்விக்கி ஒரு Peer Reviewed கலைக்களஞ்சியம். இதற்கு ஆசிரியர் குழு உள்ளது.  அது வெளிப்படையாக உள்ளது. மதிப்பீடு அல்லது கருத்து என்பது ஆசிரியர்குழுவின் திரண்ட கருத்து என்றே எடுத்துக்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர்குழு கல்வியாளர் அடங்கியது. ஆகவே இக்கருத்துக்களை கலைக்களஞ்சியத்தின் கருத்துக்களாக எந்த ஆய்வேட்டிலும் மேற்கோள் காட்டலாம்.

ஜெ

 அப்பம் வடை தயிர்சாதம்

முந்தைய கட்டுரைஉரை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைநித்யாவின் இறுதிநாட்கள்