பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்

அன்புள்ள ஜெ,

பூன் இலக்கிய முகாமில் உங்களோடு கழித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. பதினைந்து ஆண்டுகள் எழுத்தின் வழி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த எனக்கு, தங்கள் சன்னிதியில் அமர்ந்து சொற்கள் வழி பெருகிய ஞான அமுதத்தை வாங்கக் கிடைத்த நல்வாய்ப்பெனவே இவ்விரு நாட்களும் அமைந்தன. இரண்டு நாட்கள் முகாம் முடிந்து வீடு திரும்பியவுடன், முகாமில் நிகழ்ந்தவற்றையும், பரிமாறப்பட்டவைகளையும் மனத்திலிருந்து எடுத்து மீட்டிக் கொள்ளும் சுகத்துக்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

பென்ஸில்வேனியாவின் தென்திசையிலிருந்து மேரிலேண்ட், வர்ஜெனியா வழியாக வடகரோலைனாவிற்குள் ஊடுருவும் ப்ளூரிட்ஜ் மலைத்தொடர்களில் அமைந்த பூன் என்னும் இடத்தில்தான் முகாம் நடைபெற்றது. வியாழன் (12 மே) அன்று மாலையே நண்பர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் எங்கிருந்தெல்லாம் வந்தனர் என்று குறிக்கும் வரைபடத்தைக் குழுவில் பார்த்தபோது வியப்பேதும் ஏற்படவில்லை. இத்தனைக் கயிறுகளையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளி நீங்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் வெவ்வேறு நேரமண்டலங்களிலிருந்தெல்லாம் நண்பர்கள் வருகை புரிந்தனர். ஐந்து மணிநேர விமானப்பயணம், ஒன்பது மணிநேர கார் பயணம் எல்லாம் செய்து நண்பர்கள் அந்த மலை மாளிகையை வந்தடைந்தனர். இந்த முகாமுக்குச் சில வாரங்கள் முன்பே ஒரு வாட்ஸப் குரூப் ஆரம்பித்து அதில் விவாதத்துக்கான படைப்புகளையும் , தங்குமிடத்தில் கைக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். வாட்ஸப் கணக்குப்படி பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை நாற்பத்தி மூன்று. இரண்டு அல்லது மூன்று பேர் உடல் நிலை காரணமாக வர இயலவில்லை. சிலர் இடம் போதாமையால் ஏற்கனவே அருகில் இருக்கும் இன்னொரு கேபினில் தங்க இடம் பதிவு செய்திருந்தனர்..

நான் தெற்கு கரோலைனாவிலிருந்து என் மனைவி அனுஷாவுடன் காரில் வந்தேன். ஐந்து மணி நேர பயணம். வரும் வழியில் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து விமானத்தில் வந்திறங்கியிருந்த விசுவையும், அவர் மனைவி பிரமோதினியையும் சார்லட் விமான நிலையம் சென்று அழைத்துக் கொண்டு மலை மாளிகைக்கு விரைந்தோம். வரும் வழியெங்கும் பேசிப்பேசி ஒருவரையொருவர் அறிந்து, மாளிகையை நெருங்குவதற்குள், நாங்கள் ஒருவரையொருவர் நெருங்கி விட்டோம்.

சன்னிசைட் பார்ம்ஸ் என்பது முகாம் நடக்கவிருக்கும் கேபினின் பெயர். எண்புறமும் மலைக்குன்றுகள். மலைச்சரிவுகளில் மேயும் மாடுகள் (பீஃப் என்பது பாடபேதம்). இதமான தட்ப நிலை. கேபினும் ஒரு குன்றின் உச்சியில்தான் இருந்தது.

உள்ளே நுழைந்தபோது, நீங்கள் ஏற்கனவே வந்து முன்னறையில் அமர்ந்திருந்தீர்கள். அருகில் அருண்மொழி நங்கை. உங்களைப் பார்த்ததும் ஓர் அணிச்சைச் செயலாகக் காலணிகளைக் கழற்றி விட்டுப் பாதம் பணிந்தேன். நீங்கள் ஆரத்தழுவி ஆசி கூறினீர்கள். அருண்மொழி நங்கையிடம் நீங்கள் என்னை அறிமுகப்படுத்தியது எனக்கு இனிய அதிர்ச்சி. நான் வெண்முரசு புதிய வாசகி திருமதி அனுஷாவை அறிமுகப்படுத்தினேன்.

வாட்ஸப்பிலும், சூமிலும் மட்டுமே அறிமுகமாயிருந்த எல்லா நண்பர்களையும் அன்றுதான் நேரில் கண்டேன். அன்று மாலை இரவுணவை (தாயினும் சாலப்பரிந்து வேளாவேளைக்கு உணவைத் தருவித்து எங்களை போஷித்த நண்பர்கள் விவேக் மற்றும் முத்து காளிமுத்து இருவரும் என் கண்ணில் இக்கணம் நிறைகின்றனர். ருசியான இந்திய உணவு. வாய் மென்று கொண்டும், கண்கள் உங்களைக் கவனித்துக் கொண்டும் இருந்தமையால் என்ன உண்டோம் என்று இப்போது நினைவு கூர முடியவில்லை எனினும் சோறும், நீரும் வேளாவேளைக்குப் பொழிந்து கொண்டே இருந்தன என்பதை மட்டும் மறக்க இயலவில்லை.) முடித்துவிட்டு நண்பர்களின் அறிமுகப்படலமும், முகாமின் விதிமுறைகள், வழிகாட்டுதலுக்காகவும் குழுமினோம். முக்கியமான விதிகளில் ஒன்று கேபினுக்குள் இருக்கும் எண்ணிறந்த கண்ணாடிக் கதவுகளைத் திறந்து வைத்து விடாமல் இருக்க வேண்டும் என்பது. அபலாச்சியன் மலைத்தொடர்களில் (ப்ளூரிட்ஜ் மலைத்தொடர் இதன் அங்கம்) கறுப்புக் கரடிகள் சகஜம். மிகுந்த புத்திசாலித்தனமும், நுண்ணுணர்வும் கொண்ட அக்கரடிகள் திறந்த கதவுகள் வழியாக உள்ளே வந்து இலக்கியமுகாமில் எங்களது அறிவுப்பசிக்கு (வயிற்றுப் பசிக்கும்தான்) போட்டியாளர்களாகி விடுவதை ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. பின் நண்பர்களின் அறிமுகம். ஒவ்வொருவரும் எவ்வாறு உங்களை வாசிக்க வந்தனர் என்று தெரிவித்தனர். சிலர் உங்கள் புனைவுகளின் வழியே, சிலர் இலக்கிய, ஆன்மிக விமர்சனக் கட்டுரைகள் வழியே. பத்தினியின் பத்துமுகங்கள் போன்ற நகைச்சுவைக் கட்டுரைகள் வழியாகக்கூட சிலர் நுழைந்திருந்தனர். கூடத்தில் குழுமியிருந்த நாற்பத்தி சொச்சம் பேரில் நான் உங்களை மட்டுமே இதற்கு முன் நேரில் கண்டிருக்கிறேன் (தேவதேவன் விருது நிகழ்வு) என்று நினைத்த போது வியப்பாக இருந்தது. அதையே பகிர்ந்தும் கொண்டேன். மறுநாள் நான் பேசும் வாய்ப்பு வந்தபோது உங்களோடு முதன் முதலாக தொடர்பு ஏற்பட்ட சமயம் குறித்துப் பகிர்ந்து கொண்டேன். இது நிகழ்ந்தது பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு. ஜெயமோகன் தளத்தில் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்ட காலம். அப்போது உங்கள் தளத்தில் பாலகுமாரனின் இலக்கிய இடம் குறித்த சர்ச்சை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. ஒரு எழுத்தாளனின் எல்லாப் படைப்புகளும் இலக்கியத்தரமாக இருக்க வேண்டுமா என்றும், பாலகுமாரனின் ஆரம்ப கால நாவல்களும், அவரது சில கவிதைகளும் இலக்கியத்தரமுள்ளவையே என்று எண்ணுவதாகவும் பின்னூட்டமிட்டிருந்தேன். அடுத்த நாள் அந்தக் கேள்வியைப் பின்னூட்டத்திலிருந்து எடுத்து, அதற்கான பதிலை ஒரு முக்கியக் கட்டுரையாகவே வெளியிட்டிருந்தீர்கள். ஒரு சாதாரண வாசகனையும் இணையாக மதித்து பதில் சொன்ன விதம் உங்கள் மீது மிகுந்த மரியாதையையும், தமிழின் மகத்தான எழுத்தாளர் ஒருவரிடம் என்னால் ஒரு தொடர் உரையாடலில் இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. உங்களது இலக்கிய விமர்சனங்கள், ஆன்மிகக் கட்டுரைகள், இந்திய இலக்கிய, உலக இலக்கிய அறிமுகங்கள் ஆகியவை மூலமே நான் உங்களைத் தொடர்ந்து வாசித்துத் தொடர்ந்தபடியிருந்தேன்.

மறுநாள் காலை (13 மே) காலையுணவிற்குப் பின்னரே முகாம் துவங்கும் என்றாலும், காலை கண்விழித்து நீங்கள் வெளிவந்த மறுகணமே உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கேள்விகளோடும், விழி நிறைந்த பரவசத்தோடும், கையில் காபி கோப்பைகளோடும் சூழ்ந்து கொள்ளும். உங்கள் பேச்சைப் பருகியபடி, அதிலிருந்து கிளைக்கும் ஐயங்களைக் கேள்விகளாக மாற்றி அதற்கு நீங்கள் தரும் விளக்கங்களை பெற்றபடி என நேரம் நகரும். இந்தச் சூழலில் உங்களால் எவ்வாறு உணவுண்ண முடிகிறது என்று வியப்பாகவே இருந்தது. சொற்களை பெருக்கிக் கொண்டே இருந்த அந்த வாய்க்கு மெல்ல எங்கனம் நேரம் கிடைத்தது?

சிறுகதைகளின் பரிணாமம் – ஜெயமோகன்

இந்த முகாமின் ஒவ்வொரு அமர்வும் ஏதேனும் ஒரு இசை நிகழ்வுடனே துவங்கியது. ஸ்ரீகாந்தின் புல்லாங்குழல் இரண்டுமூன்று முறை அறையை நிரப்பி விட்டது. இப்படி ஏதாவது இசைக்கருவியை வாசிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு ரகசிய பொறாமை உண்டு. பழனி ஜோதி, ஷங்கர் கோவிந்தராஜூ, ராஜன் சோமசுந்தரம் ஆகியோர் அழகான மரபிசைப்பாடல்களைப் பாடி அமர்வுகளுக்கு அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தனர்.

சிறுகதைகளின் பரிணாமம் குறித்த உங்கள் உரையுடன் முகாமின் முதல் அமர்வு துவங்கியது. துவக்கத்தில், ஒரு இலக்கிய முகாமில் அல்லது தத்துவ வகுப்பில் கேட்டல் எங்கனம்  என்பதை விளக்க விரும்புவதாகச் சொன்னீர்கள். கேட்டலின் போது இழைக்கப்படும் மூன்று விதமான பிழைகள் என்ன கேட்டோமோ அதைப் புரிந்து கொள்வதற்குத் தடை. அவை 1. Peripheral Associative சொல்லப்பட்ட கருத்தின் மையத்தை விட்டுவிட்டு, அதன் விளிம்புகளில் உள்ள செய்திகளையே மையச் செய்தியாகப் புரிந்து கொள்ளுதல் அல்லது சொல்லப்பட்ட கருத்துக்கு இணையான இன்னொரு கருத்துடன் அதை ஒப்பிட்டு இதுவும் அது போலத்தான் என்று புரிந்து கொள்ளுதல். 2. Distraction Fallacy – கருத்துகள் உரைக்கப்படுகையில் நாம் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது. 3.Counter Argumentative Fallacy – சொல்லப்பட்ட கருத்துக்கும்,  நம் மனதில் ஏற்கனவே நாம் உண்மை என்று ஏற்றுக்கொண்டு விட்ட கருத்துக்கும் ஒரு விவாதத்தை மனதில் வளர்த்தபடியே இருப்பது.

ஒரு வகுப்பில் நாம் கேட்டதை அப்படியே திருப்பிச் சொல்லுமளவு கவனிப்பதே உண்மையான கேட்டல். ஒரு முறை குரு உங்களை தன் உரையைத் திருப்பிச் சொல்லப் பணித்தபோது நீங்கள் சொன்னது நீங்கள் புரிந்து கொண்ட உரையின் வடிவமே அன்றி, உரையின் முழு வடிவம் அல்ல என்று குரு சொன்னதாகவும், இன்னொருவர் எழுந்து அந்த உரையை அப்படியே திருப்பிச் சொன்னதாகவும் சொன்னீர்கள். விஷ்ணுபுரம் கூட்டங்களில் பலர் அப்படி உரையைத் திருப்பிச் சொல்லுமளவுக்கு கூர்ந்த கவனத்திறன் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டீர்கள். மேலும் ஒரு உரையை ஆற்றுவதற்கு எவ்வாறு திட்டமிடவேண்டும் என்றும் குறிப்பிட்டீர்கள். உங்களுடைய முறை சொல்லத் துணியும் விஷயங்களை மனதிற்குள் அட்டவணையைப் போல் தயாரித்துக் கொள்வது. ஒரு குறிப்பிலிருந்து, இன்னொரு குறிப்பிலிருந்து கிளைத்துச் சென்று கருத்துக்களை முன்வைப்பது. சிலர் (உ.ம் அஜிதன்) தங்களது உரையை மனதில் வரைபடமாக விரித்துக் கொள்வர். உரையின் போது அவ்வரைபடத்தினூடாக மனக்கண்ணில் ஒரு பயணம் செல்லும்போது உரை தன்னளவில் முழுமையடைந்து விடும் என்றெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது தனிப்பட்ட முறையில் அடுத்த அமர்வில் பேச இருந்த எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

இந்த அறிமுகத்துக்குப் பின் சிறுகதைகளின் பரிணாமம் பற்றிய உங்கள் உரையைத் துவக்கினீர்கள். எவ்வாறு பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஜோக் என்ற வடிவம் தோன்றியது என்பதிலிருந்து துவங்கினீர்கள்.. விருந்துகளில் கலை நிகழ்வுகளை நடத்த வெளியிலிருந்து ஆள் கொணர்வதற்கு மாற்றாக, தங்களுக்குள் தாங்களே கேளிக்கை செய்து மகிழ ஆங்கிலேயர் கண்டுபிடித்ததே ஜோக் என்னும் வடிவம். ஒரு சுருக்கமான நிகழ்வைச் சொல்லி அதற்கு நாம் எதிர்பாராத திடீர் முடிவு ஒன்றைச் சொல்லுவதன் மூலம் நம்மை வியக்க வைத்தல், சிரிக்க வைத்தல். பல நேரங்களில் அம்முடிவு நாம் எதிர்பார்த்திருந்த முடிவுக்கு நேர் எதிராக இருக்கும். சீட்டுக்கட்டு ஆட்டத்தில் நாம் ஒரு சீட்டை இறக்கும்போது, அதற்கு எதிர்மாறான சீட்டை இறக்குவது போன்றது இது. நகைச்சுவைத் துணுக்கு என்ற இந்த வடிவமும், சீட்டுக் கட்டு ஆட்டமும் ஒரே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் தோன்றியிருக்கின்றன. துவக்கத்தில் நகைச்சுவைத் துணுக்கின் விரிந்த வடிவமாகவே சிறுகதை தோன்றியிருக்கிறது. திடீர் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வடிவம் மிகுந்த புகழ்பெற்றது. ஓ. ஹென்றி, எட்கர் அலன் போ போன்றோர் இவ்வகையில் எழுதிய குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள். ஆனால் வெறும் திடுக்கிடும் திருப்பத்துக்காகவே எழுதப்படும் கதைகள் எவ்வகையில் இலக்கிய மதிப்புள்ளவை என்ற கேள்வி காலப்போக்கில் எழுகிறது. செகாவ், மாப்பஸான் போன்ற சிறுகதையாசிரியர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடைபோலமைந்த கதைகளை எழுதுகிறார்கள். கதையின் முடிவிலிருந்து வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பும் கதைகள், கதை முடிந்தபின் அம்முடிவே முழுக்கதையையும் வேறுருக்கொள்ள வைக்கும் கதைகள் போன்றவற்றை எழுதுகிறார்கள். இரண்டு வகைகளுக்கும் எடுத்துக்காட்டாக ஹெச்.ஹெச். மன்றோவின் சோப் கதையையும், செகாவின் பந்தயம் கதையையும் குறிப்பிட்டீர்கள். தமிழின் முதல் சிறுகதை குறித்து நிலவி வரும் கருத்துக்களையும், புதுமைப்பித்தன் எல்லாவகையிலும் எழுதிப்பார்த்ததையும், அவனே தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் என்பதையும் குறிப்பிட்டீர்கள். சரியாக முப்பத்தொன்பது நிமிடங்களில் உங்கள் உரை முடிந்தது என்று அலைபேசியில் நேரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் சொன்னார். நீங்கள் எதிலும் நேரம் பார்த்தமாதிரி தெரியவில்லை. நான் கழுத்தைத் திருப்பி உங்களுக்கு நேர் எதிரே இருந்த சுவற்றில் பார்த்தேன். அங்கு எந்த கடிகாரமும் மாட்டப்பட்டிருக்கவில்லை.

பிரயாணம் – அசோகமித்திரன் – ஜெகதீஷ் குமார்

அசோகமித்திரனின் பிரயாணம் சிறுகதை குறித்து நான் பேசினேன். கதையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு அந்தத் திடுக்கிடும் முடிவைப் பற்றி என் கருத்துக்களை வைத்தேன்.இந்த முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. யோகம் என்பது உடலை உறுதியோடும், நலத்தோடும் வைத்திருத்தல் மட்டும்தானா? யோகப்பயிற்சி ஒருவனை உடல் மீது பற்றற்ற நிலைக்கு எடுத்துச் செல்ல உதவாதா? ஆன்மிகத்தில் எவ்வித உயர் நிலை அடைந்தாலும், தன் உடலைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் எளிய உயிர்தானா ஒரு யோகி?  இதே இடத்தில் தன்னை முழுதுணர்ந்த ஒரு ஞானி இருந்திருப்பின் தன் உயிருக்குப் போராடியிருப்பாரா? அல்லது தன்னை முழுதளித்திருப்பாரா? யோக மார்க்கத்திற்கும், ஞான மார்க்கத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பிட விரும்புகிறாரா அசோகமித்திரன்? கடைசி இரண்டு வரிகள் நம்மை மேலும், மேலும் கேள்விகளுக்கும், வாழ்வின் பொருளற்றதன்மை ஒருவனின் இறுதிக் கணத்தில் உறுதி செய்யப்படுவதற்கும் இட்டுச் செல்கின்றன என்றெல்லாம் சொன்னேன்.

இக்கதையின் முடிவு ஒரு ஆங்கிலக்கதையின் பாதிப்பு என்று இணையத்தில் உலவி வருகிறது. நான் அக்கதையை வாசித்ததையும், இரண்டையும் ஒப்பிடும்போது கூட, எனக்கு அ.மியின் கதையே சிறந்ததாகப் படுவதாகவும் சொன்னேன்.அம்ப்ரோஸ் பியர்ஸினுடைய கதையில் மனைவி இறக்கிறாள் கணவன் உடலைக் காப்பாற்ற ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் மனைவியைக் குதறிவிடுகின்றன ஓநாய்கள். ஆனால் மனைவியின் வாயில் ஒரு ஓநாயின் கடித்துத் துண்டாக்கப்பட்ட காது இருக்கிறது. இக்கதை பிரயாணம் கதையைப் போலவே இருக்கிறது. முடிவை இந்தக் கதையிலிருந்து அசோகமித்திரன் கையாண்டிருக்கிறார். எவ்வகையில் இந்த முடிவு அவரது கதையில் வேறுபடுகிறது என்று பார்க்கலாம். இங்கு ஓநாய்களால் குதறப்பட்டு முண்டமாகக் கிடப்பவர் ஒரு யோகி. தன் வாழ் நாளெல்லாம் யோகம் பயின்றவர். தன் மூச்சு இயங்குவது கூடப் பிறர் அறியாது மென்மையாக இயங்கும் வண்ணம் தன் உடலையும், பிராணனையும் தயார் செய்தவர். நமது யோக பரம்பரையில் ஒரு ஆன்மிக வாதிக்கு உடல், மனம், புத்தி இவை அனைத்தும் உயர் நிலைக்குச் செல்வதற்கான கருவிகளே. என்னதான் வாழ்நாள் முழுக்க தன்னுடலையும், மனத்தையும் அவன் தயார் செய்தாலும் யாக்கை நிலையாமையை அவனைப் போல் உணர்ந்தவர் இருக்க முடியாது. சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற ஞானியர் உடல் உணர்வைக் கடந்து, தன் கை வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டும் நிலையிலும் எதுவும் நடவாதது போல நடந்து செல்வதை நாம் கதைகள் வாயிலாக அறிகிறோம். ஞானியருக்கு உடல் என்பது ஒரு வாகனமே. அங்கனம் இருக்க, இங்கு மயக்க நிலைக்குச் சென்ற, தன் சீடனால் இறந்து விட்டோம் என்று தீர்மானிக்கப்பட்ட குருதேவர், தன் இறுதிக்கணத்தில், ஓநாய்களால் தாக்கப்படும்போது தன்னிலைக்கு ஒரு கணம் வருகிறார். அக்கணத்தில் வாழ்வாசை என்ற உயிர்களின் அடிப்படையான இச்சையே அவரை உந்திச் செலுத்துகிறது. இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விஷயம், அவரிடம் நாம் காண்பது தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்துக்கான அறிகுறிகளை மட்டுமல்ல. ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுத்திருக்கிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நேரத்தில் ஒருவருக்கு வரும் அசுர பலம் அளப்பரியது. கடைசி இரண்டு வரிகள் நம்மை மேலும், மேலும் கேள்விகளுக்கும், வாழ்வின் பொருளற்றதன்மை ஒருவனின் இறுதிக் கணத்தில் உறுதி செய்யப்படுவதற்கும் இட்டுச் செல்கின்றன. ஆனால் ஒருவேளை இந்த இரண்டு வரிகளை நீக்கி விட்டாலும் இந்தச் சிறுகதை உன்னதமான அனுபவமாகவே இருக்கும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

சற்றே நம் கவனத்தை குருவிடமிருந்து சீடனுக்குக் கொண்டு செல்வோம். மனித வாடை படாத ஒரு பிரதேசத்தில் நோயுற்ற குருவோடு நின்றிருக்கும் அவனுக்கு ஒரே குறிக்கோள். தன் குருவை சிற்றாறு தாண்டியுள்ள ஹரிராம்புகூருக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவ உதவிகள் கிட்டச் செய்திட வேண்டும். அவர் இறந்து விட்டார் என்று அறிந்த பின் அவரை மலைச்சரிவு தாண்டியுள்ள சமவெளியில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கமாக அந்தக் குறிக்கோள் மாறுகிறது. அவனோடு சேர்ந்துதான் நாம் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். மலைகளின் பின்னால் சூரியன் விழ அவற்றின் நிழல்களே அவை மீது விழுவதைப் பார்க்கிறோம். இரவும், நிழல்களும் ஒன்றறக் கலக்கும் அந்தச் சில நிமிடங்களைக் கண்ணுறுகிறோம். புதிய அனுபவங்கள்!

அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

உறைந்த பேரலைகள் போல் மலைச்சிகரங்கள்

அவன் குருவுக்கு கிழங்கு மாவில் கஞ்சி கிண்டுகிறான். அதற்கு அவன் உறைந்த மண்ணென்ணையை எரிக்கிறான். உறைந்த மண்ணெண்ணை என்ற அவதானிப்பே புதுமையாக இருந்தது. ஜெயமோகன் எழுதிய மெல்லிய நூல் சிறுகதையில் பாபு வேகவைத்த வாழைப்பழங்கள் சாப்பிடுவார் என்று குறிப்பிட்டிருப்பார். வாழைப்பழத்தை எதற்கு வேகவைக்க வேண்டும்? வேகவைப்பதற்கு முன் சோகன்ராம் அந்த வாழைப்பழங்களை கழுவுவான். வாழைப்பழங்களை எதற்குக் கழுவ வேண்டும்? கதைகளில் இவ்விதம் வரும் விநோதமான செய்திகளை அறிந்து கொள்வதே ஆர்வமூட்டுவதாக உள்ளது. அது போலத்தான் உறைந்த மண்ணெண்ணையும்.

சீடன் ஒரு வருடப் பயிற்சியில் மனலயம் பெற்றவன். குருதேவரின் அருகில் அமர்ந்து மலைகளையும், நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு தனக்குள்ளே விரிகிறான். ஆனால் குருதேவரைக் காக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த விசால உணர்வைக் கைவிடுகிறான்.

காற்றின் ஒலிதாண்டி மெல்ல அந்தச் சீறல் ஒலி கேட்கிறது. பல ஜதை மின்மினிப் பூச்சிகள் மின்னுகின்றன. ஓநாய்கள் அவனைச் சுற்றி வளைக்கின்றன.

தமக்குரிய விதியில் இம்மியளவு பிறழாமல் அவை வலம் வந்தன.  எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. என்கிறான் சீடன்.

கொள்ளிக்கட்டை அணைய, ஓநாய் தாக்குகிறது. இவன் கட்டையை வாயில் திணிக்கிறான். குருதேவரின் கம்பளத்தைக் கிழிக்கின்றன. இப்போது அவனையும் இரண்டு மூன்றாகத் தாக்குகின்றன. அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன். என்கிறான்.

இந்த இடத்தைக் கதையின் முதல் உச்சமாகப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன். ஓநாய்களுடன் பொருதும் ஒருவன் ஒரு கணத்தில் ஓநாய்களில் ஒருவனாகவே, தன்னை ஒரு தூய விலங்காகவே உணரும் தருணம். அந்த விலங்கை அவன் தனது இரட்டைச் சகோதரனாகவே நினைக்கிறான். ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். என்கிறான். ஒரு கணத்தில் தன் குருவின் உடலையும் மறந்து ஓநாயைத் துரத்திக் கொண்டு பின் செல்கிறான். ஒரு விலங்கு இன்னொன்றின் மீது வெற்றிகொள்ளத் துடிக்கும் துடிப்பே அவனைச் செலுத்துகிறது. அவனது அந்த வெறியே குருவின் உடலை மறக்கச் செய்து, ஓநாய்கள் அவ்வுடலை இழுத்துச் செல்ல வழிவகுக்கிறது.

சில நாட்கள் முன்பு காரில் சென்று கொண்டிருந்த போது, வலது பக்கம் திருப்புகையில் ஒரு அணில் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. நான் திருப்பிய வேகத்துக்கு என்னால் உடனே வண்டியை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சரியாக நடுச்சாலைக்கு வந்துவிட்ட அணில், நான் வண்டியை மேலேற்றுவதற்குள் சரேலென்று திரும்பி, வந்த வழியே சென்று விட்டது. அன்று நான் அதன் மேல் ஏற்றி விடுவேன் என்றே அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த அணில் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில், அதென்ன சொல்வார்கள், மயிரிழையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு உயிருள்ளும் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான இச்சை பதிந்திருக்கிறது என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரயாணம் கதையில் குரு மரணத்தருவாயில் தன் வாழ்வை இன்னும் சில கணங்களேனும் நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதி இச்சையின் பாற்பட்டுத்தான் அந்த ஓநாயின் காலைப் பிய்த்தெடுக்கிறார். அந்தக் கணத்தில் அவரும் ஒரு விலங்கெனவே திகழ்கிறார். சீடன் ஓநாய்களுடன் பொருதும் கணத்தில், தன்னைத் தற்காத்து, அவற்றை வெல்லும் இச்சை உந்த, தன் குருவின் உடலையும் மறந்து தானும் ஒரு விலங்காகி விடுகிறான்.

இந்த உரைக்கு உங்கள் கருத்துக்களை முன்வைத்தீர்கள். எப்படி வெ.சாவும் (தித்திக்கும் திருட்டு மாங்கனிகள் கட்டுரை), பிரமிளும் கட்டுரைகள் எழுதி இக்கதையின் நம்பகத்தன்மை குறித்து சர்ச்சை எழுப்பினார்கள் என்று விளக்கினீர்கள். குரு இறக்கவில்லை. எனில் எது அத்தனை மணி நேரம் அவரை அசையாது பிணம்போல் வைத்திருந்தது என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அபாரமானது. யோகமரபில் தாம் உடலை விட்டு விடுவோம் என்று உணரும் யோகியர், கடைசிச் சில மணி நேரங்களில் யோக நித்திரை எனும் ஆழ்துயிலுக்குச் செல்வதுண்டு. இக்கதையில் வரும் குருவும் யோக நித்திரைக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் சீடனும், ஓநாய்களும் அவர் இறந்து விட்டார் என்று முடிவு செய்து விடுகிறார்கள். குருவின் கையில் பிய்த்தெடுக்கப்பட்ட ஓநாயின் கால் இருந்ததற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் நான் சிந்தித்திராத கோணத்தில் இருந்தது. குரு செய்தது அதன் காலை இறுகப்பிடித்தது மட்டுமே. மாட்டிக் கொண்ட ஓநாய்தான் தன் காலைப் பிய்த்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கிறது. நம் ஊரில் வயல்களில் வைக்கும் இரும்புப் பொறிகளில் மாட்டும் பன்றிகள் கால் சிக்கியவுடன் அவற்றைப் பியத்துக் கொண்டு சென்று விடுவதைப் போல. காலையில் பார்த்தால் பொறியில் கால் மட்டும்தான் இருக்கும்.

சுயதரிசனம் – ஜெயகாந்தன் – விஜய் சத்யா

ஜெயகாந்தனின் இந்தக் கதையை விஜயை சுவாரசியமாகச் சொன்னார். ஒரு சிறு குறிப்பைக் கூட விடாமல் அவர் சொன்னது வியப்பேற்படுத்தியது. கதை இதுதான். சிவராமனின் தந்தை கணபதி சாஸ்திரிகள் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். சதா நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் அவன் மனைவி ராஜமும், செருப்புக்கடையில் வேலை பார்க்கும் அவன் தம்பியும், ஏன் அவனுமே கூட இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கணபதி சாஸ்திரிகள் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர். கறுப்பாகவும், குள்ளமாகவும் உள்ளவர். பிராமணனுக்கு உரிய தோற்றத்தில் இருப்பவர். ஒன்றரை மாதம் கழித்து அவரிடம் இருந்து சிவராமனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதோடு ஒரு கத்தை எழுதப்பட்ட நோட்டுத்தாள்களும். அதைத் தன் சுயதரிசனமாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.நேரமிருக்கும் போது படிக்கச் சொல்கிறார்.

தன் தந்தையின் பால்ய சினேகிதரான வெங்கிட்டுவையர் அவனிடம் சொல்கிறார். ஒரு நாள் நடுத்தெருவில் வைத்து அவன் தந்தையை அவரது குரு சுந்தர கனபாடிகள் அசிங்கமாகத் திட்டியதாகவும், அதற்கு இப்படிப் பேசுகிறீர்களே நீர் பிராமணரா என்று அவர் கேட்டதாகவும், அதற்கு குரு அவரிடம் காயத்ரி மந்திரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா, தெரியாமலேயே அதைச் சொல்லி, புரோகிதம் செய்து பிழைக்கிறாயே என்று சொல்லி, அர்த்தம் சொல்லவில்லையென்றால் நீ பூணூலைக் கழற்ற வேண்டும் என்று சினத்துடன் கூறுகிறார். திடீரென்று எல்லார் முன்னிலையிலும் தான் பிராமணன் இல்லையென்று கூறி, தன் பூணூலை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பின் தான் அவர் திரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து தந்தையின் எழுத்துக்களை வாசிக்கிறான் சிவராமன். அதில் அவர் தன்னுடைய அவதானிப்புகளைப் பட்டியலிடுகிறார். இருநூறு வருடங்களுக்கு முன் இருந்த எவரும் இப்போது இல்லை. இப்போதுள்ள எவரும் இன்னும் இருநூறு வருடம் கழித்து துளிக்கூட மிச்சமிருக்கப் போவதில்லை. இதில் எவர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர். எந்த வகையிலான வாழ்க்கை மேன்மை வாய்ந்தது? எது தாழ்ந்தது என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்.

 என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம – இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; ‘ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ’ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!… ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது. என்று எழுதுகிறார்.

ஒரு வக்கீல் வீட்டுக்குப் புரோகிதம் செய்யப்போகும் போது அவர் மகன் தட்சிணை குறைவாகக் கொடுக்கிறார். மந்திரமும் குறைந்திருந்ததே என்று சொல்கிறார். அர்த்தம் தெரியாமல் மந்திரம் சொல்லலாமா என்று கேட்கிறார்.

அறுபது வருடங்கள் பொய்யாக வாழ்ந்து விட்டதாக நினைக்கிறார். இப்போது தன் தோற்றத்திலும் மாறி, தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாத நேர்மையான மனுஷனாக இப்போது இருப்பதாகச் சொல்கிறார்.

அவரது எழுத்துக்களைப் படிக்கப் படிக்க, அவரது மகன்களும், மருமகளும் அவற்றில் அவரை மட்டுமா பார்த்தார்கள் என்று கேட்டு முடிக்கிறார் ஜெயகாந்தன்.

பூர்வ மீமாம்சகர்களுக்கும், உத்தர மீமாம்சகர்களும் காலம் காலமாக இருந்து வரும் சண்டைதான் இது. வேதாந்திகளின் பக்கம் நின்று வைதிகர்களைப் பார்த்து ஜெயகாந்தன் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அர்த்தம் தெரியாது மந்திரம் ஓதுவதன் பலன் என்ன? சுந்தர கனபாடிகள் கணபதி சாஸ்திரிகளைப் பார்த்து மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாத நீ பிராமணனா என்று கேட்கிறார். ஆனால் இக்கதை வெளியான காலத்தில் வைதிகர் ஜெயகாந்தனுக்கு பதில் சொன்னதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஒரு புரோகிதனுக்கு அர்த்தம் தேவையில்லை. வேதபாடசாலைகளில் பயிலும் பிராமணர்கள் இன்றும் அர்த்தம் தெரியாமல்தான், மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொருட்டு மட்டுமே கற்கின்றனர். கழுத்துத் துண்டை இறுக்கி இந்தக் கேள்வியைக் கேட்ட சுந்தர கனபாடிகள் கூட அர்த்தம் தெரியாமல்தான் மந்திரங்களைச் சொல்வார் என்று வைதிகர்கள் ஜெயகாந்தனுக்கு பதில் சொன்னதாகக் குறிப்பிட்டீர்கள். அர்த்தம் தெரிந்து பயில்வது என்பது வேதாந்திக்குரியது. வைதிகனுக்குரியது அல்ல.

ஆபரணம் – திருச்செந்தாழை – மதுனிகா

மதுனிகா நேரடியாக கதை குறித்த அவர்களது பார்வைக்குள் சென்று விட்டார்கள். எல்லாரும் இக்கதையை வாசித்திருப்பதால் கதைச் சுருக்கம் சொல்ல அவசியம் இல்லையென்று கருதுவதாகக் குறிப்பிட்டார்கள். ஆபரணம் என்ற தலைப்பே கதையின் உயிர் நாடியைக் குறிப்பிட்டதாகவும், கதைக்குள் திருச்செந்தாழை மனித உணர்வுகளை எப்படித் திறம்படக் கையாண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்கள். அவரது தனித்துவம் வாய்ந்த உவமைகள் குறித்து அவர்கள் குறிப்பிட, பின் கருத்துச் சொன்ன எல்லாருமே அதை பற்றிப் பகிர்ந்தார்கள். திருச்செந்தாழை தன் கதைகளில் கையாளும் வணிகக் களம் இதுவரை எழுத்தாளர்களால் அதிகம் கையாளப்படாதது. அக்களத்தில் தோன்றும் மனிதர்களின் இடையே நிலவும் சூழ்ச்சி, போட்டி, பொறாமை முதலியவற்றை உரத்தகுரலில் சொல்லாமல் காட்சிப்படுத்துவது அவரது இயல்பு. கவித்துவமான படிமங்களைக் கட்டியெழுப்பியபடி ஒரு கதையுலகைச் சமைப்பது அவர் பாணி. அண்மையில் அவர் தமிழினியில் எழுதிய காக்கைப் பொன் அபாரமான அனுபவம் தந்த கதை. நண்பர்களுக்கு அக்கதையைப் பரிந்துரைக்கிறேன்.

அறிவியல் கதைகள்

நைட்ஃபால் – ஐசக் அசிமோவ் – விஸ்வநாதன் மகாலிங்கம்

விசு இக்கதையின் புகழ் குறித்து விஸ்தாரமாகச் சொன்னார். அமெரிக்க அறிபுனை எழுத்தாளர்கள் இக்கதையை ஆகச்சிறந்த அறிபுனைக்கதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அசிமோவ் கொலம்பியா பல்கலைகழகத்தில் மாணவராக இருக்கும்போது, Astounding Science Fiction இதழின் ஆசிரியர் கேம்பல் இவரிடம் எமர்சனின் மேற்கோள் ஒன்றைக் கூறி அதற்கு பதிலாக ஒரு கதை எழுதுமாறு பணித்திருக்கிறார். இக்கதை அசிமோவுக்குப் புகழ் சேர்த்தது. 47 ஆண்டுகள் கழித்து 1990 ல் சில்வெர்பெர்க் இதை நாவலாக விரித்து எழுதினார். இருவர் பெயரிலும் அந்த நாவல் வெளிவந்தது. இருவர் பெயரும் இணையான அளவில் அட்டையில் வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்த பிறகே சில்வர்பெர்க் இந்த நாவலை எழுதச் சம்மதித்திருக்கிறார்.

லகாஷ் என்ற கோள் ஆறு சூரியன்களைக் கொண்டது. ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அஸ்தமனமாவதால் அக்கோளில் முழு இருட்டு என்பதை யாரும் அனுபவித்ததில்லை. தங்களது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் லகாஷ் விரைவில் அழியவிருக்கிறது என்று சில வானவியலாளர்கள் கணிக்கின்றனர். 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கிரகணம் தோன்றும். அப்போது லகாஷ் தொடர்ந்து அரை நாளுக்கும் மேல் இருளில் மூழ்கும். இருளைப் பொறாத மக்கள் பைத்தியம் பிடித்து, ஒளி வேண்டுமென்பதற்காக பொருட்களையும், வீடுகளையும், கட்டிடங்களையும் எரித்து மொத்தக் கோளின் அழிவுக்கே வழி வகுப்பர் என்பது அவர்கள் விளக்கம். லகாஷில் ஒரு கல்ட் குழு இருக்கிறது. லகாஷ் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான குகைக்குள் நுழைந்து செல்வதாகவும், அக்குகைக்குள் தோன்றும் நட்சத்திரங்களே மக்களின் ஆன்மாவை உறிஞ்சி அவர்களைப் பைத்தியமாக்குவதாகவும், நெருப்பைப் பொழிந்து லகாஷை அழித்து விடுவதாகவும் நம்புகிறது. முழு இருட்டில் நட்சத்திரங்கள் தோன்றுவதற்கான காரணமாக உளவியலாளர்கள் குறிப்பிடத்தக்கது. வாழ்நாளில் இருளையே பார்த்தறியாத மக்களின் உள்ளமே அவர்களுக்குத் தேவையான ஒளியை உற்பத்தி செய்து கொள்வதன் மூலமே நட்சத்திரங்கள் தோன்றுகிறது என்கிறார்கள் அவர்கள்.

அறிவியலாளர்கள் கல்ட் குழுமத்தின் தொன்மத்தை எடுத்துத் தங்கள் ஆய்வை விரிவுபடுத்துகிறார்கள். ஆறு சூரியன்களின் ஒளியினால் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும்  நிலவொன்று (அம்ப்ரா), ஆறாவது சூரியன் மட்டும் தனித்திருக்கும் வேளையில் அதை முழுவதும் மறைத்து (அதன் விட்டம் ஆறாவது சூரியனை விடப் பெரிதாக இருக்கும் காரணத்தினால்) முழு கிரகணத்தை ஏற்படுத்துகிறது. இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இருளையே அறியாத லகாஷியன்களுக்கு இருளின் மீது அதீத அச்சம் உண்டு. பதினைந்து நிமிடங்கள் இருளில் கழித்தாலே அவர்கள் மனநிலை பிறழக்கூடும் என்று உளவியல் சோதனைகள் கூறுகின்றன. இறுதியில் லகாஷில் கிரகணம் வரும் நாளன்று வானவியலாளர்கள் அந்த நிகழ்வைப் பதிவு செய்து எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லக் காத்திருக்கின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு குழு பாதுகாப்பான அறையில் இருக்கிறது. கல்ட் குழுவினர்கள் கிளம்பி வானவியல் கூடத்தை அழிப்பதற்காகக் கிளம்பி வருகின்றனர். கடைசிச் சூரியனும் மெல்ல மறைகின்றது. லகாஷின் அழிவு துவங்குகிறது.

மேற்கத்திய அறிவியலாளர்கள், அறிபுனை எழுத்தாளர்கள் ஆகியோர் உலகைக் காக்க அறிவியலால் மட்டுமே இயலும் என்று திண்ணமாக நம்புவதன் எதிரொலியே இக்கதையும் என்று நீங்கள் சொன்னீர்கள். நமது தொன்மங்கள் என்பன காலகாலமாக மனிதகுலத்துக்குக் கடத்தப்பட்டுவரும் அறிவுத்தொகை என்பதை அறிவியலாளர்கள் ஏற்க மறுப்பதனாலேயே தொன்மங்களை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுகிறார்கள். திருவண்ணாமலை என்பது நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் இன்றும் அதன் உச்சியில் தீயேற்றப்பட்டு அண்ணாமலை தீபமென வழிபடப்படுகிறது. இந்த அறிவை இத்தனை லட்சம் ஆண்டுகள் கழித்தும் இம்மனித குலத்திற்குக் கடத்தியது யார்? அண்ணாமலை எரிமலையாக இருந்தபோது ஹோமோசேபியன்கள் கூடத் தோன்றியிருக்கவில்லை. இதையெல்லாம் மேற்குலகம் கருத்தில் கொள்வதில்லை. எப்போதும் அறிவியலே இவ்வுலகைக் காக்கும் ஆயுதம் என்று முன்னிலைப் படுத்துகிறது. மசானபு புகாகோவின் உதாரணத்தைத் தந்தீர்கள். தான் வளர்த்த நெல்மணிகளைவிட அதிக நெல்மணிகள் குப்பை மேட்டில் இயற்கையில் விளைந்த நெல்மணிகள் அதிகம் என்று கண்டு வியக்கிறார். எல்லாவற்றிற்கும் இயற்கையில் ஏற்பாடு இருக்கிறது. உலகத்தின் பேரழிவு, டூம்ஸ் டே என்ற கருதுகோளே கீழைச் சிந்தனையில் கிடையாதென்பதை எடுத்துச் சொன்னீர்கள். நமது மரபில் சொல்லப்படும் பிரளயம் என்பது கூட முற்ற முடிவான அழிவல்ல, ஒரு சக்கரத்தின் சுழற்சியில் ஒரு நிலையே என்பதையும் சொன்னீர்கள்.

ஐந்தாவது மருந்து – ஜெயமோகன் – விவேக்

பொதுவாக விஷ்ணுபுரம் இலக்கிய முகாம்களில் உங்களது கதையை எடுத்து விவாதிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இக்கதையை குழுவில் பெரும்பாலானோர் விவாதிக்க விரும்பினார்கள். கீழைச் சிந்தனைப் பார்வையில் எழுதப்பட்டுள்ள அறிபுனை கதைகளுக்கு உதாரணமாக இக்கதையைக் கொள்ள வேண்டும் என்பதனால் இக்கதை குறித்த விவாதம் முக்கியத்துவம் மிகுந்ததாகிறது.

எய்ட்ஸூக்கு தமிழ் நாட்டில் சித்த மருத்துவத்தின் மூலம் தளவாய் என்பவன் மருந்து கண்டு பிடிக்கிறான். அவனைக் காண அவன் நண்பர்கள் இருவர் அவன் கிராமத்துக்கு வருகின்றனர். சித்தமும், அலோபதியும் அடிப்படையில் வேறு எனினும் இப்போதைய சித்த மருத்துவம் அலோபதியின் கூறுகளை உள்ளிழுத்துக் கொண்டது. நமக்குக் கிடைக்கும் சித்த நூல்கள், ஏற்கனவே அழிந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு உருவானவையே.சித்தத்தின் படி, மனித உடல் சம நிலையை இழப்பதே நோய். நோய்க்கு எதிராக உடலைத் தயாரிப்பதே மருத்துவம்.

எய்ட்ஸ் என்பது உருமாறி வரும் வைரஸால் ஏற்படுகிறது. எனவே சித்தத்தின் ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயன மருந்துகள் இதற்குப் பயன்படாது. 500 ஆண்டுகளுக்கு முன் தென்காசி ராஜ குடும்பம் ஒரு விநோதநோயால் இறக்கிறார்கள். நோயின் குறிகள் அனைத்தும் அது எய்ட்ஸ் என்று சுட்டுகின்றன. வைத்தியர் எழுதி வைத்த குறிப்புகள் தனது தாத்தாவின் அண்ணன் மூலம் தளவாய்க்கு ஓலைச் சுவடியாக வந்து சேருகிறது. மாம்பழச் சித்தர் ஊருக்குள் வந்து நோயாளிகளை ஆராய்ச்சி செய்கிறார். மூலாதார அக்னி வலுவிழப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று கண்டறிகிறார். ஆயிரம் ஆண்டுகள் முன் போகர் கருங்குரங்கு ரத்தம், சிறு நீர் கொண்டு மருந்து தயாரிக்கிறார். இது அந்த நோய்க்குத் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து, ஜீவ மருந்து. பின் மாம்பழச் சித்தர் பஞ்ச பாஷாணம் செய்து நோயைக் குணப்படுத்துகிறார்.

ஆஃபிரிக்க குரங்குகளில் இந்த வைரஸ் இருக்கிறது. ஆஃபிரிக்காவில்தான் மனிதன் முதலில் தோன்றினான். மனிதனுக்குள்ளும் இது உண்டு. ஆனால் அவனை மட்டும் ஏன் இந்த நோய் தாக்குகிறது? அவன் குரங்காக இல்லாமல் ஆன போது அவனை இந்த வைரஸ் தாக்கத்துவங்கியதா? ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயனம் போன்றவை முதல் மூன்று மருந்துகள். நான்காவது மருந்து நுண்கதிர்கள். முதல் மூன்று மருந்துகளிலும் நான்காவது மருந்தைச் செலுத்தி ஐந்தாவது மருந்தைக் கண்டுபிடிக்கிறான் தளவாய். பல வருடம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓமனக்குட்டியும் தாமஸூம் இம்மருந்தால் குணமடைகிறார்கள். இந்த மருந்தை வெளியிடச் சொல்லி நண்பர்கள் கோரும்போது தளவாய் மறுத்து விடுகிறான். அதற்கான காரணத்தையும் சொல்கிறான்.ஒரு தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும்தோறும், அந்த நோயை உருவாக்கும் வைரஸ் தன்னை உருமாற்றியபடியே இருக்கிறது. எனில் இப்போது மருந்து கண்டுபிடித்து அந்த வைரஸை அழித்தாலும் இன்னும் நூறு வருடங்களில் அது உருமாறி மனித குலத்தை வேறு வடிவில் தாக்கி அழிக்கும். அப்போது ஏற்படும் உயிர்ச்சேதம் இப்போதுள்ளதை விடப் பன்மடங்கு இருக்கும். எனவே எதிர்காலத்தில் வரப்போகும் மிகப்பெரிய அழிவொன்றைத் தவிர்க்க, தற்போது ஏற்படும் அழிவை ஏற்றுக்கொள்வதும், எய்ட்ஸோடு வாழப் பழகுவதுமே வழிகள் என்கிறான். மனித குலம் அழியக் காரணமாக இருக்கும் இம்மருந்தை வெளியிட மாட்டேன் என்று தளவாய் சொல்லி விடுகிறான்.

விவேக் இந்தக் கதையின் கூறுகளை தெளிவாக எடுத்து விளக்கினார். பின்னர் விவாதம் துவங்கியது. பல நூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் அழிவு உண்மையில் வருமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாமல் ஏன் நிகழ்காலத்தில் அந்த மருந்து மக்களுக்குச் செல்வதை மறுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலாக, இதுவே மேலை, கீழை அறிஞர்களுக்கிடையேயான வேறுபாடு என்று குறிப்பிட்டீர்கள். கீழைச் சிந்தனையில் அறிவியல் என்பது நெறியையும் (ethics)  உள்ளடக்கியது. ஒரு புதிய கண்டுபிடிப்பு மக்களின் நன்மைக்கு எதிரானது எனில் ஒரு நேர்மையான கீழை அறிவியலாளன் அதை வெளியிட மாட்டான். ஆனால் மேற்கு அதை ஏற்றுக் கொள்ளாது. ஒரு கண்டுபிடிப்பு வெளியிடப்படுவதில் மானுட நன்மை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. டி.டி.டி ஏற்படுத்திய அழிவுகளைக் குறித்துச் சொன்னீர்கள். ஒரு கீழை அறிஞன் அதை வெளியிட்டிருக்க மாட்டான். பண்டைக்காலத்தில் நம் அறிவியலாளர் அனைவரும் ரிஷிகளே. அவர்கள் மானுடகுல நன்மைக்கெனவே இயங்கினர். தீங்கிழைக்கும் எதையும் அவர் மக்கள் நுகர அனுமதிக்க மாட்டார்கள். இந்தக் கதையிலும் தளவாய் இறுதியில் சித்தராக மாறிவிடுவது, அவன் ரிஷி பரம்பரையில் வந்தவன் என்பதையும், மனித குலத்தின் நன்மையே அவன் நோக்கம் என்பதையும் காட்டுகிறது.

தமிழ்க்கவிதைகள் – பாலாஜி ராஜூ

அடுத்த அமர்வில் பாலாஜி ராஜூ தமிழ்க் கவிதைகள் குறித்த தன் பார்வையை முன்வைக்க வந்தார். இந்த இலக்கிய முகாமிலேயே என்னை மிகவும் ஈர்த்த, நான் அதிகமாகக் கற்றுக்கொண்ட அமர்வாக இதைச் சொல்வேன். நண்பர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த அமர்வில் தங்கள் பார்வைகளையும் முன்வைத்தது, அவர்களும் அதேபோலத்தான் எண்ணியிருக்கிறார்கள் என்று காட்டியது. தனிப்பட்ட முறையில் பாலாஜி தமிழ்க் கவிதை மீது கொண்டிருக்கும் ஆழமான காதலை அறிவேன். ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றின் மீது தன் தனித்துவம் மிகுந்த பார்வையை வைப்பவர். கவிதைகள் இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ்க்கதைகளை நான் மொழியாக்கம் செய்யும்போது, அவற்றை வாசித்து, கருத்துச் சொல்லி எனக்குப் பேருதவியாக இருப்பவர்.

நவீன காலகட்டத்திலிருந்து இரு கவிதைகளையும், தற்காலக் கவிதையாக மதாரின் ஒரு கவிதையையும் பகிர்ந்தார். அபியின் உலா கவிதை முதலில் வாசிக்கப்பட்டது. இக்கவிதை குறித்து நானும், பாலாஜியும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். என் பிணங்கள் அங்கே பொறுமையிழந்து கூக்குரலிடுவது கேட்கும் என்ற வரிகளில் எனக்கு கவிதை வேறுருக்கொண்டு விட்டது. இக்கவிதை ஊழ்க நிலையைப் பேசுகிறது என்று பாலாஜி முன்வைத்தார். இந்த நேரத்தில் கவிஞர் அபியுடன் அவரது எண்பதாவது பிறந்ததினத்தன்று அவரோடு அலைபேசியில் உரையாடியதை நெகிழ்வுடன் நினைவுகூருகிறேன். பின் இக்கவிதை நேரடியாகவே தான் சொல்ல வந்ததைச் சொல்கிறது என்று விளக்கி, மீண்டும் கவிதையை வாசிக்கச் செய்தீர்கள். உங்கள் விளக்கத்துக்குப் பின் கவிதையை வாசித்துக் கேட்டபோது, அடடே, கவிதை இவ்வளவு ஈஸியா என்று எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் தோன்றியிருக்க வேண்டும்.

அடுத்த கவிதை தேவதச்சனுடைய தலையில்லாத… இக்கவிதை முதலில் வாசித்த போது மிகுந்த பூடகத்தன்மையுடையதாகத் தோன்றியது. மீண்டும் நீங்கள் அக்கவிதையிலிருந்த ஒரு சிறு முடிச்சை நீக்கியவுடன் கவிதை பொலிந்து மிளிர்ந்தது. மீனாட்சியும், கண்ணகியும் அந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. இக்கவிதை ஆதித்தாயின் நிலை குறித்துப் பேசுகிறது.அவள் கையிலிருந்த தாமரை அசைந்து கொண்டிருந்தது என்ற வரிகள் அளித்த உச்சம் நீங்கள் விளக்கியபின் வந்தது. இந்தக் கவிதையின் சாராம்சமாக நீங்கள் இறுதியில் ஆங்கிலத்தில் கூறிய சொற்கள் நான் என்றும் மறக்கவியலாதவை.

We have done many petty things to our mother. But she is still blooming in our courtyard – Je

என்று மனதில் குறித்து வைத்திருக்கிறேன்.

மூன்றாவது மதாரின் கவிதை. ஊரையே திறந்து மூடும் பூக்கடைக்காரியின் கவிதை. நவீன கவிதையின் உச்சத்திலிருந்து துவங்கி, சின்ன விஷயங்களை கவிதையில் சொல்லத் துணிந்த கவிஞர்களின் நீட்சியாக இசை, ஆனந்த் குமார், மதார் ஆகியோரைச் சொல்லலாம். நவீன கவிதை பாடும் இருண்மையையும், அதில் பொதிந்திருக்கும் ஆழமான ஞானத்தையும் விட்டு மேலெழுந்து இவர்களுடைய கவிதைகள் ஒரு கொண்டாட்ட மனநிலையை முன்வைக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்குக் கவிதைகள் திறந்து கொள்வதில் பெரும் சிரமம் இருந்தது. இந்த ஒரு அமர்வில் கவிதைகள் குறித்து நீங்கள் அளித்த விளக்கமும், அவற்றை அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் விஷயங்கள் பற்றியும் சொன்னது எனக்குப் பேருதவியாக இருந்தது. தற்போது பாலாஜி எனக்காக இந்தியாவிலிருந்து வாங்கி வந்த மதார் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். டெய்ரி மரக்காட்டுக்குள் தொலைந்து விட்டதைப் போல் இருக்கிறது.

இசை ரசனை – ராஜன் சோமசுந்தரம்

ராஜன் சோமசுந்தரம் இந்தக் குழுவில் இருப்பது எங்களுக்கு ஒரு வரம். இந்த முகாம் ஏற்பாட்டுக்கு ஆஸ்டின் சௌந்தர் அண்ணனுடன் சேர்ந்து திட்டமிடல், உங்கள் வருகை, பயண ஏற்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்தல் அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது. அவர்கள் இருவர் முயற்சியுமே இந்த முகாம் நிகழக் காரணமாக இருந்தது. இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு முக்கியமான இசை அமைப்பாளர் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. அவர் இசை அமைத்த சங்கப் பாடல்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். அவர் இசை அமைத்த பாடல்கள் அமெரிக்க டாப் டென்னில் வந்திருக்கின்றன. வெண்முரசு ஆவணப்படத்தில் நீலம் வரிகளுக்கு அவர் அமைத்திருந்த இசையும், அதில் என் பிரியத்துக்குரிய பாடகர்கள்  ஶ்ரீராம் பார்த்தசாரதி, கமல்ஹாசன் (ஞாயிறு ஒளிமழையிலிருந்து), சைந்தவி மற்றும் ராஜன் பாடியிருந்ததும் நினைத்து நெகிழும் தருணங்கள்.

ராஜன் இசைரசனை குறித்து விரிவாகப் பேசினார். நீங்கள் எந்த இசை கேட்டு வளர்ந்தீர்களோ, எது உங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறதோ அதுவே சிறந்த இசை என்று கொள்க என்று அவர் கூறியது தமிழ்திரை இசைதாண்டி எதையும் அறியாத என் போன்றவர்களுக்கெல்லாம் சுவிசேஷச் செய்தியாக வந்திறங்கியது. இந்தியாவின் மனோதர்ம சங்கீதத்திற்கும், மேற்த்திய இசையின் பிசிறற்ற திட்டமிடல் முறைக்கும் உள்ள வேறுபாடுகளை விரிவாக விளக்கினார். எவ்வாறு நம் இசை மேற்கத்தியக் கூறுகளை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம் உலகம் தழுவிய இசையாக மாறமுடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டார்.இசை குறித்தும், குழந்தைகளுக்கு இசை கற்பிப்பது குறித்தும் நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விரிவான பதில்களை அளித்தார்.

வெண்முரசு ஆவணப்படம்

மாலை நடை – ஆசானுடன் என்பது முகாமின் அட்டவணையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும், கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் அற்புதமாகப் பொழிந்து கொண்டிருந்த மழை காரணமாக அது இயலவில்லை. இரவுணவை முடித்து விட்டு ஆவணப்படத்தைக் காண்பதற்காகக் குழுமினோம். அருண்மொழி நங்கை அப்பியர் ஆகும்போது எழுந்த கரவொலி அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்கள் என்று காட்டியது. நான் இப்போதுதான் ஆவணப்படத்தை முதல் முறையாகப் பார்க்கிறேன். எழுத்தாளர்களும், வாசகர்களும், வெண்முரசு உருவாக்கத்தில் துணை நின்றவர்களும் பேசினார்கள். வெண்முரசின் முதல் நான்கு பாகங்கள் வெளியீடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோதே கண்டிருக்கிறேன். அதன் சில பகுதிகள் இந்த ஆவணப்படத்திலும் சேர்க்கப்பட்டிருந்தன. அசோகமித்திரன் பேசுகிறார், “ நான் எவ்வளவோ எழுதிக் குவிச்சிருக்கிறேன். இப்போ பார்த்தா எனக்கே பயமா இருக்கு. ஆனா… இந்த இதிகாச பாத்திரங்கள் வச்சு எதும் எழுதினதில்ல. அதும் மஹாபாரதத்த எழுதி முடிக்கறதுங்கறது மலைப்பான விஷயம். அது இவரால முடியும்.” என்றார். (நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன்.) என்ன ஒரு சொல். அவர் அப்போது எனக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. இப்போது வெண்முரசு எழுதி முடிக்கப்பட்டபின் அதைக் கேட்கையில் எப்பேற்பட்ட ஆசி அன்று வழங்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தபோது என் கண்கள் பனித்துவிட்டன. என்னால் என் கண்ணீரை அடக்கமுடியவில்லை. ஆதிகவியின் ஆசியாகவே அதைப் பார்க்கிறேன்.

தத்துவம் – ஜெயமோகன்

மறுநாள் (14 மே) காலை முதல் அமர்வு தத்துவம் குறித்து உங்கள் உரை. தத்துவம் என்றால் என்ன என்றும் மேலை மற்றும் கீழை தத்துவத்திற்கான விளக்கங்கள், வேறுபாடுகள் இவற்றையும் உள்ளடக்கியதாக உங்கள் உரை இருந்தது. உரை முடித்தபின் எந்தக் கேள்வியையும் அனுமதிக்காமல் (வினாக்கள் நாம் கேட்டவற்றை மனதில் நிலைக்கவிடாது குலைத்து விடும் என்பதால்) ஒரு மூன்று நிமிடங்கள் அமைதியாக, கேட்டவற்றை மனதில் ஓட்டிக் கொள்ளச் சொன்னீர்கள். அந்த கணத்தில் என்னால் நீங்கள் சொன்னவற்றை மனத்துக்குள் வரிசைப் படுத்தி நினைவுகூர முடிந்தது. இப்போதும் அவ்வாறு இயலுமா என்று தெரியவில்லை. முயல்கிறேன். நான் கற்ற சில கருத்துக்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தத்துவம் என்பது எந்தத் துறையிலும் அடியாழத்துக்குச் சென்று அதன் சாரத்தை அறிந்து கொள்ளுதல். பெரிய பஞ்சு மிட்டாயை உருட்டி, உருட்டிச் சிறிதாக்கி அதன் இயல்பை அறிதல். நண்பர் விஜய் சத்யாவின் சொற்களைக் கடன் வாங்கிச் சொன்னால், தத்துவம் என்பதன் விளக்கமாக நீங்கள் சொல்வது, ஆற்றை அதன் ஊற்றுமுகத்துக்குக் கொண்டு செல்வதுபோல, பேராலமரத்தை அதன் விதையில் சென்று தரிசிப்பது போல இது. மேற்கத்தியத் தத்துவமுறை என்பது பெரும்பாலும் இதுவே. பல்வேறு துறைகளின் ஆழம் சென்று அதன் சாரத்தைக் கண்டறிதல். மேலும் பலதுறைகளின் சாரங்களை எங்கனம் ஒன்றிணைத்தல் என்று உசாவுதல் (ஐயா! இந்தச் சொல்லைப் பயன்படுத்திவிட்டேன்.) மேற்குலகில் அமைப்புகளின் தலைவர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற தத்துவக்கல்வியைப் பெற்றவர்களே. அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தத்துவக்கல்வி அவசியமில்லை. அத்தத்துவத்தை எங்கனம் பயன்படுத்துதல் என்ற அறிவு இருந்தாலே போதுமானது. மேலைத்தத்துவத்தின் கூறுகளை அறிய நீங்கள் இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்தீர்கள். 1.History of western philosophy by Russell  2. Pleasures of philosophy by Will Durant ஆகியன.

கீழைத்தத்துவம், குறிப்பாக இந்திய ஞானமரபு, ஒரு தத்துவத்தை அறிய இரண்டு விதமான ஃபலஸ்ருதிகளைக் கோருகிறது. ஒன்று, அத்தத்துவத்தை அறிவதன் மூலம் இன்ன விடுதலை என்ற கிடைக்கும் என்ற உத்தரவாதம். இரண்டு, எத்தத்துவமும் அறத்துக்கு மாறான விஷயத்தை போதிக்காமலும், அறக்கூறுகளை வலியுறுத்துவதாகவும் இருக்கவேண்டும்.

இந்திய ஞானமரபில் ஆறுதரிசனங்கள் கூறப்படுகின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைஷேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம். சாங்க்ய தத்துவம் எல்லாவற்றையும் புருஷன், ப்ரக்ருதி என்று இருமையாகக் காண்பது. யோகம் என்பது சாங்க்ய தத்துவம் காணும் இருமையை தனக்குள்ளேயே காண்பது. சாங்க்யத்தின் செயல்முறையாக விளங்குவது. நியாயம் என்பது தர்க்கமுறை தத்துவம். வைஷேஷிகம் என்பது எல்லாப்பொருட்களையும் அதன் அணுவளவில் சுருக்கி அதன் தனித்தன்மையை நிர்ணயிப்பது. இது மேலைத்தத்துவத்துக்கு அருகில் வருகிறது. பஞ்சு மிட்டாய் உதாரணத்தை நினைவில் கொள்ளவும். பூர்வமீமாம்சம் நால்வேதங்களின் பூர்வ (முன்) பாகத்தை அடிப்படையாகக் கொண்டது. பூர்வபாகத்தின் வைதிக கர்மங்களையும், உபாசனைகளையும் இலக்காகக் கொண்டது. உத்தரமீமாம்சம் என்பது வேதாந்தம் என்றும் கூறப்படுகிறது. வேதங்களின் அந்தத்தில் (இறுதியில்) வருகின்ற எண்ணற்ற உபநிஷத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. முழு முற்றான விடுதலை இதன் குறிக்கோள். நான், இந்த உலகு, இதைப் படைத்த இறை இவற்றுக்கு என்ன தொடர்பு என்று ஆராய்ந்து இறுதி உண்மையைக் கண்டறியும் வழியாக அமைவது. இந்தியத் தத்துவ ஞானம் என்ற வித்துவான் லக்ஷ்மணனின் நூல் மேலும் இது குறித்து அறிய உதவும் என்று பட்டியலிட்டீர்கள். தனிப்பேச்சில் நான் உங்களிடம் கீதைக்கு நல்ல உரை என்று கேட்டேன். நடராஜ குருவின் கீதை உரை என்று பதில் சொன்னீர்கள்.

தனிப்பேச்சிலா, அல்லது ஏதேனும் உரையின்போதா என்று நினைவில்லை. குரு நித்யா உங்களிடம் சொன்னதாக ஒன்று பகிர்ந்து கொண்டீர்கள். எதைச் செய்தாலும் அதை intense ஆகச் செய்யவேண்டும் என்று அவர் சொன்னதாகவும், அதையே எப்போதும் பின்பற்றுவதாகவும் சொன்னீர்கள். இந்தச் சொல் உங்களிடமிருந்து கேட்கப்படுகையில் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுவதாக உள்ளது. இந்த அறிவுரையைக் கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன். நண்பர்களும் சிலர் அவ்வாறே இருக்கப்போவதாகக் கூறிக்கொண்டதைச் செவியுற முடிந்தது.

இந்தக் கடிதம் நீளமாக இருக்கும் என்று அறிந்தே எழுதுகிறேன். ஆனால் இப்போதைக்கு மேலும் வந்த அமர்வுகளைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். மேற்கொண்டு இலக்கிய முகாம் நினைவுளைப் பகிரும் நண்பர்கள் வாயிலாக அவை பற்றி அறிய வாய்ப்புண்டு.

அமெரிக்கப் பண்பாட்டை அறிதல் – ராஜன் சோமசுந்தரம்

The price of Civilization by Jeffrey Sachs மற்றும் Educated by Tara Westover என்ற இரண்டு நூல்களை முன்வைத்து அமெரிக்கப் பண்பாடு மற்றும் கலாசாரம் குறித்து ராஜன் உரையாற்றினார். இந்தியக் குழந்தைகளை அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், ஆஃரோ அமெரிக்கர் மற்றும் காகேஷியன் (வெள்ளை) இனத்தவரிடையே இனப்பாகுபாட்டால் நிலவும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அமெரிக்க நிலம் எப்படி வாய்ப்புகளை வழங்கும் பிரதேசமாக இருக்கிறது என்று விளக்கினார். நண்பர்கள் பலர் அவரிடம் அமெரிக்கச் சூழ்நிலைக்கு இந்தியர்கள் எங்கனம் தகவமைத்துக் கொள்ளுதல் என்ற கேள்விகளைக் கேட்க, அவர் பொறுமையாக பதிலளித்தார்.

English Poetry – Ode to a NIghtingale by John Keats – ரெமிதா

கற்பனாவாதக் கவிஞரான கீட்ஸின் கவிதையை விளக்க ரெமிதா வந்தார். இவரை அறிமுகப்படுத்துகையில் ராஜன் எவ்வாறு இவர் ஒரு ஆவேசத்தில் வெண்முரசு ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாடலை ஒரே இரவில் மொழிபெயர்த்து முடித்தார் என்று குறிப்பிட்டார். மேலும் இவர் ராஜன் இசையமைத்து உலகப்புகழ்பெற்ற பாடகர் ஒருவர் பாடிய பாடலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். உங்களது சிறுகதைகளை இவர் மொழியாக்கம் செய்து இதழ்களில் வெளியாகி இருக்கின்றன.

ஒரு தேர்ந்த ஆங்கிலப் பேராசிரியருக்குரிய உடல் மொழியோடும், குரல் வளத்தோடும் கவிதையின் முதல் இரண்டு ஸ்டான்சாக்களை விளக்கினார். அதற்குமுன் பதின்மத்தின் தான் எவ்வாறு கீட்ஸின் காதலில் விழுந்தேன் என்று பரவசத்துடன் கூறினார். இக்கவிதை நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்வினையாற்றாது ஏற்றுக்கொள்வதற்கான கீட்ஸின் பயணத்தைக் குறிக்கிறது என்றார். அவர் முடித்ததும் நீங்கள் கற்பனாவாதக் கவிஞர் குறித்து சிறிது நேரம் பகிர்ந்து கொண்டீர்கள். தமிழில் கவிஞர்களிடத்து அவர்கள் செலுத்திய ஆதிக்கம் குறித்தும் (பாரதியின் புனைப்பெயர் ஷெல்லிதாசன்) உங்களுக்கு உவப்பான கவி பைரன் என்றும் சொன்னீர்கள். இத்தருணத்தில் அருண்மொழி நங்கை தனக்கு நினைவு வந்த வோர்ட்ஸ்வொர்த்தின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் புனையப்பட்ட கவிதை ஒன்றை வாசித்துக் காட்டினார். யாருமற்ற அதிகாலையில் பாலத்தின் மீது நின்றபடி தேம்ஸ் நதியையும், லண்டன் மாநகரையும் கண்ணுற்றபோது எழுதப்பட்ட கவிதை. முந்தைய மாலை அவர் உள்ளத்தில் எரிச்சலை மூட்டிய அதே நகரம் அதிகாலையில் பரிபூரணமாகப் பொலிவதன் சித்திரம்.

இராமாயணம் – கம்பன் வால்மீகி ஒப்பீடு – விஸ்வனாதன் மகாலிங்கம், செந்தில்

அடுத்த அமர்வு கம்பராமாயணம் வால்மீகி இராமாயணம் ஒப்பீடு. விசு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்கு அறிந்த பெயர். சங்கப்பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அரூ அறிபுனைகதைப் போட்டியில் இவரது சிறுகதை ஒன்று தேர்வாகியிருக்கிறது. அறிவியல் புனைவுகளிலும், கணினி சார் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதிலும் இயங்கி வருகிறார். என் மொழிபெயர்ப்புப் பணியின்போது இவருடன் உரையாடியது மிகுந்த உதவியாக இருந்தது. செந்திலின் திருக்குறள் குறித்த காணொலிகள் மிகுந்த புகழ் பெற்றவை. இருவரும் கம்பராமாயாணத்தின் பல்வேறு பாடல்களை எடுத்து (ராமன், இலக்குவன், தாடகை, ஜடாயு, தாரை போன்றோரது கூற்றாக வரும் பாடல்கள்) அவை எங்கனம் வால்மீகி இராமாயணத்திலிருந்து வேறுபடுகிறது என்று விளக்கினர். கம்பராமாயணத்தை முழுவதும் பயிலவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. (எங்க அப்பாவும் அப்படித்தான் ஆசைப்பட்டாரு என்று சொல்லுமளவுக்கு இது ஆசையாகவே முடிந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்) அந்த ஆசை மீண்டும் துளிர் விட்டது இந்த அமர்வில். இறுதியில் நீங்கள் கம்பராமாயணப் பாடல்களை எவ்வாறு வாசித்துக் காட்டினீர்கள். பாடல்களைப் பதம் பிரித்து எழுதுவதில் பாடலை அனுபவிக்கும் வாய்ப்பு குறைபடுவதைச் சுட்டிக் காட்டினீர்கள்.

போரும் அமைதியும் – லியோ தல்ஸ்தோய் – அருண்மொழி நங்கை

அடுத்த அமர்வுக்கு நாவல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அருண்மொழி நங்கை அவர்களுக்குப் பிரியமான ரஷ்ய இலக்கியம் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த முகாமுக்கு வருமுன் இதில் விவாதிக்கப்படும் எல்லாப் படைப்புகளையும் வாசித்துக் குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தேன். பெரும்பாலானவற்றுக்குச் செய்தும் விட்டேன். போரும் அமைதியும் நாவலை சென்ற ஆண்டுதான் வாசித்திருந்தேன். அதன் அவரது பிற நாவல்களையும். ஆனால் குறிப்புகள் எழுத முனைந்தபோது எதுவுமே நினைவுக்கு வரவில்லை. நினைவுக்கு வந்ததெல்லாம் நீங்கள் கட்டுரைகளில் எழுதியவைகள்தாம். எனவே எதுவுமே எழுதிக்கொள்ளாமல்தான் வந்தேன். ஆனால் அருண்மொழி நங்கை அவர்கள் பென்சிலால் கோட்டுச்சித்திரம் வரைவதைப் போன்று பரபரவென்று நாவலின் முழுமையான சித்திரத்தையே வழங்கி விட்டார். மேலும் நாவலின் உன்னதமான தருணங்களையும் பட்டியலிட்டார். அவர் சொல்லச் சொல்ல என் சித்தத்தில் பதிந்திருந்த நாவல் விரிந்தது. நாவலை இன்னொரு முறை தரிசித்தது போலாகி விட்டது. நாவல் எந்த வரலாற்றுப் பிண்ணனியில் எழுதப்பட்டது என்பதையும், நாவலில் வரும் ஐந்து குடும்பங்களையும், அதன் உறுப்பினர் பெயர்களையும், நெப்போலியன் ரஷியாவுக்குள் படையெடுத்து வந்தபோது, நாவலுக்குள் எந்தெந்த இடங்களில் போர்கள் நடைபெற்றன என்பது குறித்தும் ஒரு சிறு குறிப்பும் கையிலின்றி துல்லியமாக நினைவு கூர்ந்த அவரது நினைவுத்திறன் குறித்து அனைவருமே வியந்தோம். எந்த அளவு தாத்தாவை அவர் நேசிக்கிறார் என்பதற்கு சான்று அது. மேலும் நாவலின் மையக்கதாபாத்திரங்களான பியர், ஆன்ட்ரூஸ், நதாஷா, மேரி ஆகியோர்  மேற்கொள்ளும் பயணத்தையும், தளபதி குட்டுசோவ் போன்றோரின் பாத்திர வடிவமைப்பு குறித்தும் அற்புதமாக விரித்துரைத்தார். அவர்கள் மெதுவாகப் பேச ஆரம்பித்து விட்டார்களா அல்லது நாங்கள் அவர்களது வேகப்பேச்சுக்குப் பழகி விட்டோமா என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் உரை மனதில் ஆடியில் பிம்பமென விழுந்து விட்டது.

கானல் நதி – யுவன் சந்திரசேகர் – பழனி ஜோதி

யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்து வியந்திருக்கிறேன். அப்புறம் அவரது மாய யதார்த்தச் சிறுகதைகள் சில. இந்த அமர்வுக்காக கானல் நதியை வாசித்து வந்திருந்தேன். பழனி ஜோதி யுவனின் வாசகர் மட்டுமல்லர், சாஸ்திரிய இசையை ஆழமாகக் கற்பவரும்கூட. அவரைப் போன்ற ஒருவர் கானல் நதி என்ற இசையை அடிப்படையாகக் கொண்ட நாவலை விதந்தோத முன்வருவது சாலப்பொருத்தம். பழனி கானல் நதி நிகழும் வங்கப்பின்புலத்தைக் கூறி யுவன் எப்படித் தன் எழுத்து வன்மையால் மாமுட்பூர் என்ற வங்க கிராமத்தை நம் கண்முன் காட்டினார் என்று காட்டினார். தனஞ்சய் முகர்ஜி, குருசரண்தாஸ் என்ற இரு இசை ஆளுமைகள் நண்பர்களாகவும், அதே நேரம் எதிரெதிர் துருவங்களாகவும் நாவலில் பயணிப்பதை விவரித்தார். ஹிந்துஸ்தானி இசையின் கூறுகள் நாவல் முழுக்க விரவிக்கிடப்பதையும், தனஞ்சயின் குரு விஷ்ணுகாந்த சாஸ்திரிகள், அவரது நண்பர் சவுகத் அலிகான் ஆகியோர் மூலம் இசையின் மகோன்னதம் பற்றியும், அதைக் கற்பதற்காக அதன் மாணவன் கொள்ள வேண்டிய நியமங்கள் பற்றியும் நாவலில் கூறப்படுகிறது. தனஞ்சய் முகர்ஜி என்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞன் படிப்படியாக தன்னை அழித்துக் கொள்வதைச் சித்தரிப்பதே கானல் நதி.

…ஒவ்வொரு ராகமும் ஒரு மைதானம் மாதிரி. நடுவில் அடிக்கப்பட்டிருக்கும் முளைதான் சுருதி. மாட்டின் கழுத்தில் கட்டிய தாம்புக் கயிறு இருக்கிறதே, அதுதான் ஞானம். கற்பனாசக்தியைப் பசி என்று வைத்துக்கொள்ளலாம். பசியும் ஞானமும் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தூரம் சஞ்சாரம் செய்யக் கிடைக்கும். என்கிறார்.

கழுத்துக் கயிறு அறுந்துவிட்டால், மைதானத்தில் எங்கே வேண்டுமானாலும் புல் தின்னலாம் அல்லவா? என்கிறான் தனஞ்சய்.

கயிறு அறுவதற்குப் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் குரு.

முதல் முறையாகக் கச்சேரி கேட்க குருவோடு செல்கிறான் தனஞ்சய்.

அவசர அவசரமாய்த் திரட்டி வந்த ஸ்வர ரத்தினங்களை வாரிவாரி இறைக்கிறது ஸரோட். விண்மீன்கள்போல மினுங்குகின்றன அவை. செவியின் வழி நுழைந்து உள்ளே ஏதோ ஒரு நுட்பமான இடத்தில் சென்று தொடர்ந்து ஊன்றிக்கொள்கின்றன.

கச்சேரியில் ஷவுகத் அலிகான் வாசிக்கும்போது அவரது ஸரோடின் தந்தி அறுந்து விடுகிறது. அபஸ்வரம் ஏற்படுகிறது. எதுவும் நடவாதது போல அறுந்த தந்தியை மாற்றுகிறார் உஸ்தாத். அழகான பெண்ணுக்குத் தெற்றுப்பல் அழகு என்பது போல, அழகாக இசைக்கப்படும் ராகத்தின் இடையில் நிகழும் அபஸ்வரமும் அழகே என்கிறார்.

தான் பெரியவனானதும் ஒரு ஸரோட் கலைஞனாக வேண்டுமென்றும், ஒவ்வொரு கச்சேரியிலும் அதித்ருத் வாசிக்கும்போது தந்தி அறுகிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுத்துக்கொண்டான் தனஞ்சயன்.

என்று அவனது உள்ளத்தில் உருவாகும் தீர்மானம் இங்கு குறிக்கப்படுகிறது.

மிகுந்த பரவசத்தோடு தன்னுடைய உரையை நிகழ்த்தினார் பழனி. இசையின் மகோன்னதம் குறித்த யுவனின் நாவல் இது என்றார். ஆனால் யுவன் இன்னமும் கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாமோ என்று ஆதங்கப்பட்டார். நான் குறுக்கால பூந்து இந்த நாவல் காமத்தைக் குறித்தும் அதிகம் பேசுகிறதே என்று கேள்வியெழுப்பினேன். தனஞ்சய் காம உணர்வுகள் வழியாகக் கடந்து செல்வதை வயதடைதல் பருவமாகக் காணவும் வாய்ப்புண்டு என்றார் பழனி. நீங்கள் கருத்துச் சொல்லும்போது குருசரண்தாஸ் தாளவாத்தியக் கலைஞன், தனஞ்சய் வாய்ப்பாட்டு. இருவரும் பிரியும்போது ஸ்ருதி தாளத்தையும், தாளம் ஸ்ருதியையும் இழந்து விடுகிறது என்று குறிப்பிட்டீர்கள். இது – குறைந்தபட்சம் – நான் யோசித்திராத கோணம். மேலும் கானல் நதி யுவனின் முக்கியமான நாவல் என்றும் குறிப்பிட்டீர்கள்.

பனி உருகுவதில்லை – அருண்மொழி நங்கை – ஆஸ்டின் சௌந்தர்

இந்தப் புத்தகத்தை வாங்கலாமென்றால் வந்து வைத்த மறுவிநாடியே எனக்கு ரெண்டு, எனக்கு மூணு என்று எல்லாரும் அள்ளிக்கொண்டு விட்டார்கள். அன்று வடகரோலைனா பூன் மலையில் பெஸ்ட் செல்லர் பனி உருகுவதில்லைதான். ஆஸ்டின் சௌந்தர் அண்ணனுக்கு அறிமுகமும் தேவையா? எஞ்சின் சௌந்தர் என்று ஜாஜா அழைத்ததைப் போலவே விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் எஞ்சின் இவரே. (விலைமாறாத) எரிபொருளும் இவரே. பனி உருகுவதில்லை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு இது நாள் வரை கிடைத்திராத தோழியை இந்த நூலை வாசித்ததன் மூலம் அடைந்ததாகக் கூறினார். பெண்கள் ஆண்களுக்கு நிகராக எழுத்துலகில் நிலைத்து நிற்பது அரிது. அருண்மொழி நங்கை தன் எழுத்தாற்றலால் ஒரு புதிய வெளிச்சமாக எழுத்துலகில் நுழைந்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். நீங்கள் பேசும்போது, இளம் வயதில் கண்களில் பரவசத்தோடு இலக்கியத்துக்குள் நுழையும் பெண்கள், திருமணத்துக்குப் பின் மெல்ல, மெல்ல தங்களை விலக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். நாற்பது வயதுக்குமேல் எழுத வந்து சாதிக்கமுனையும் பெண்களுக்கு அருண்மொழி நங்கை அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு என்று நீங்கள் கூறியபோது, ஒரு கறாரான இலக்கிய மதிப்பீட்டாளரின் குரலைத்தான் கேட்டேன்.

இந்த அமர்விலா அல்லது போரும் அமைதியும் அமர்விலா என்று தெரியவில்லை. அருண்மொழி நங்கை பேசிக்கொண்டிருக்கையில், எதிரில் உள்ள மலைச்சிகரத்தில் தெரிந்த இரட்டை விண்விற்களைச் சுட்டிக்காட்டினீர்கள். ஒரு கணம் அவை கலைந்து, மாளிகையின் பிரம்மாண்டமான கண்ணாடிச் சாளரங்களினூடே பார்த்தது. யாரும் தவறவிடக்கூடாத கணம் என்று நீங்கள் கருதியதால், ஒரு எழுத்தாளரின் இலக்கிய உரையையே இடைமறித்து விட்டீர்கள் நீங்கள்.

அருண்மொழி நங்கையிடம் பனி உருகுவதில்லை நூல் குறித்து பல வினாக்கள் தொடுக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் கண்களில் பரவசம் பொங்க பதிலளித்தார். சியமந்தகத்தில் அவர் தன் காதல் குறித்து எழுதிய கட்டுரைகள் இங்கு (அங்கு போலவே) மிகப் பிரபலம். அவை குறித்தும் பல கேள்விகள். அவரிடம் நானும், அனுவும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களது பேச்சிலும், பழகுவதிலும் உள்ள தன்மையை கள்ளமற்றதன்மை என்று சொன்னால் மிக எளிதாக வரையறுத்ததைப் போலாகிவிடும். அவர்களிடம் ஒரு Spiritual Purity ஐத்தான் நாங்கள் கண்டோம். சில நிமிடங்களிலேயே இவர்களோடேயே பழகி வளர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுத்தி விட்டார்கள்.

உங்களோடு என்னால் மட்டுமல்ல, யாராலுமே தனியாக உரையாடியிருக்க வாய்ப்பிருந்திருக்காது என்று எண்ணுகிறேன். எப்போதுமே உங்களைச் சுற்றி பத்திலிருந்து இருபத்தைந்து பேர் சூழ்ந்திருக்க எல்லாருக்குமாக நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பீர்கள். எதிரில் கேட்பவரை இலகுவாக்கும் விதத்தில் மிக அணுக்கமாகவும், அன்பாகவும் உங்கள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, நம் காலத்து நாயகன் ஒருவர் முன்னிலையில் நின்று அவர் சொற்களை, அதுவும் நமக்காகவே கூறப்படும் சொற்களைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபோது உள்ளுக்குள் குறுகுறுவென்றிருந்தது. உணர்ச்சி வசத்தில் நான் எதையாவது வாயைத்திறந்து உளறிவிடக்கூடாதே என்றே அஞ்சிக்கொண்டிருந்தேன். இந்த முகாமில் உங்களைச் சந்திக்கவும், உங்களோடு இரு நாட்கள் நேரம் செலவிடவும் கிடைத்த வாய்ப்பு என் நல்வினை. இதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

இவ்வளவு எழுதியும், இன்னும் சொல்லவிடுபட்டவை என்னுள் ஊறிக்கொண்டே இருக்கின்றன. மெய் நிகர் காட்சிகளிலும், குறுஞ்செய்திகளிலும் மட்டுமே அறிமுகமாயிருந்த பல நண்பர்கள் பலர் இரண்டு நாட்களில் மிகவும் நெருங்கி விட்டோம். சட்டென்று நினைவுக்கு வரும் பெயர்களாக விவேக், முத்துகாளிமுத்து, வெங்கட் பிரசாத், மதன், விசு, பழனிஜோதி, மஹேஸ்வரி, ஸ்வர்ணா, ஷங்கர் பிரதாப், பாலாஜி, போன்றோர் வாழ்நாள் நண்பர்களாக மாறிவிட்டனர்.

மறுதினம் (15 மே) காலையில் வாட்சப்பில் இந்தச் செய்தியைப் பகிர்ந்தேன்.

ஆசானையும், நண்பர்களையும் சந்திக்க வந்தோம். இப்போது சகோதரர்களையும், ஒரு பெருந்தகப்பனையும் பிரிந்து செல்கிறோம்.

ஆம். எனக்கென்னவோ உங்களை நேரில் கண்டபின் நீங்கள் ஆசிரியராகவும், தகப்பனாகவும் உங்கள் வாசகர்களுக்கு இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

உங்கள் உரையில் கூறினீர்கள். வெண்முரசை எழுதி முடித்தபோது உடல் முழுக்க தித்திக்கும் உணர்வொன்று ஏற்பட்டதென்று. இந்த முகாமில் கலந்து கொண்டபின் எனக்கும் அவ்வாறான ஒரு நிலைதான். நேரில் காணாமலேயே உங்களை ஆசிரியராக வரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன். இப்போது நேரில் உங்களோடு இரு நாட்கள் செலவிட்டபின், தத்துவம் குறித்தும், வேதாந்தம் குறித்தும் உங்களுடைய பார்வையை அறிந்தபின், செயலே யோகமென கைக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்வைக் கண்ணுற்றபின், உங்களை கல்லாலின் புடையமர்ந்த ஆசிரியனாகவே காணத் தோணுகிறது.

நன்றி, எல்லாவற்றுக்கும்.

அன்புடன்

 ஜெகதீஷ் குமார்.

முந்தைய கட்டுரைமுத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்
அடுத்த கட்டுரைகல்குதிரை, மதார் கவிதைகள்