அறம் – கதைகள் ஒருகடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

டீகுடிக்க இறங்கி பேருந்தை தவறவிட்டவன் அல்லது மேலெழுந்து சுழலும் காற்றிடம் பனத்தை பிடிநழுவவிட்டவன், கைகளை விரித்து உயர்த்தி ஒடிச்சென்று பிடிக்கமுற்படுவான். அதுபோல, சிறிய இடைவெளி ஏற்பட்டாலும் குவிந்துவிடும் உங்கள் படைப்புகளை வாசிக்க அலைமோதுவேன். அந்தமுனைப்பில்கடிதம் எழுதப் பின்தங்கிவிடுகிறேன்.

ஒவ்வொரு கதைக்குப்பின் வெளியாகும் வாசகர் கடிதங்கள், உங்களது விளக்கங்கள் நல்ல வாசிப்பு பயிற்சியினை தொடர்புரிதலைத் தருகிறது. கதைமாந்தர்களும், கதைக்களனும் விலகி கதை உச்சம்கொள்ளும் இடத்தினைப் புரியவைக்கின்றன.

தங்களின் ஒவ்வொரு படைப்பும் மனதின், இந்த உலகின் ரகசியங்களை சொல்லித்தருகின்றன. தன்னம்பிக்கை ஊட்டுகின்றன.வரிசைக்கதைகள் அத்துனை உணர்ச்சிகளையும் பிதுக்கிவிட்டன.

*————-*
தாயார்பாதம் கதையில்…..

//ஆமா, பாட்டி இருந்தாள்//

இந்த வரியில் ஆரம்பித்து…….

//அப்டி ஒருத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.//

இந்த வரி படிக்கும்போதே…. நொறுங்கிப்போய்விட்டேன் (சமீபத்தில் என் பிரியமான அம்மச்சி தவறியபோதும் நான் இயல்பாகத்தான் இருந்தேன்). தொன்றுதொட்டு மனைவியாகத் தாயாகப் பாட்டியாக இருந்து ஆணாதிக்கச் சித்திரவதைகளைக் கடமையாகத் தியாகமாக அனுபவித்த மூதாதைபாட்டிகளின் ஒட்டுமொத்த பிம்பம்தான் தாயார்பாதம் பாட்டி. காட்டிலே ஆதிமனுஷிகள் வாழ்ந்ததைவிட, நவமனுஷிகளுக்கு வீடு என்பது சிறைச்சாலைதான். பிணைக்கும் சங்கிலிகள்தாம் குழந்தைகள். வதைகளுக்குடி.வி சீரியல்கள்.


//ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய் நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு.//

தாயார்பாதம் கதையின் ஒரு திருப்பமாகவும், பாட்டிக்கு புத்தி பேதலிப்பின் ஒரு காரணமாகவும் இந்த வரிகளை பார்க்கிறேன்.

பெண்ணைப்பெற்ற சிலர் சொல்வதுண்டு. இவள ஒருத்தன் கையில புடிச்சுகொடுத்தா நம்மகடமை முடிஞ்சுரும்பின்ன அவளாச்சு அவபுருஷனாச்சு அவவாழ்க்கையாச்சு’. சிலர் இதை உவமையாக நாற்றங்காலிலிருந்து பிடுங்கன நாற்று வயலில்தான் விருத்தியடையனும்என்றும் சொல்வதுண்டு.முன்புபொத்திப் பாதுகாத்து வளர்க்கப்பட்டு கிராமங்களில் வாழ்க்கைப்பட்ட பெண்கள், கடுமையான் விவசாய வேலைகளில் கணவர்களால் ஈடுபடுத்தப்படுவதுண்டு. 24 மணிநெரமும் வேலை வேலை. அதனால்தான் என்னவோ தற்ப்போது விவசாயிகளுக்கு வரன் கிடைப்பதில்லை. வாத்தியார்களுக்கும் மென்பொறியாளர்களுக்கும்தான் கிராக்கி. புகுந்தவீட்டிலும் வரதட்சனையை சாக்காக வைத்துக்கொண்டு பெண்ணைப் பிறந்தவீட்டிலிருந்து துண்டிக்கும் கொடுமையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது பெண்களை எவ்வளவு மனச்சிதைவிற்கு ஆளாக்கும் என்று தாயார்பாதம் பாட்டிமூலம் விளக்கியிருக்கிறீர்கள்.

*———*
அறம் கதையில்…….

தனக்கு நீதிவேண்டித்தான் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் அறம் ஆச்சி ஒரு ஏழை எழுத்தாளனுக்காகத் தன்னையே பொசுக்கிக்கொண்டு தன் குடும்பத்தாரிடமே உக்கிரத்துடன் நியாயம் கேட்கிறாள். உண்மைதான். ஆச்சிகள் போன்ற தாய்மைதான் காலங்காலமாக தியாகம் அறம்போன்ற விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. இல்லையேல் எப்போதோ நல்ல விஷயங்கள் காலாவதியாயிருக்கும்.

*————*
நூறு நாற்காலிகள் கதையில்…….

//அவர் என் பின்னால் வந்து ‘ஓடினால் சோறு இல்லைஓடினால் சோறு இல்லை என்றார். நான் திகைத்து நின்றேன். மேலே கால் எடுத்துவைக்க என்னால் முடியவில்லை. ‘ காப்பய்க்கு சோறு வேணுமே.. சோறூ என்று அங்கே நின்று அழுதேன். பல இடங்களில் அமர்ந்தும் நின்றும் மீண்டும் ஆசிரமத்தை நெருங்கி வந்து திண்ணையைப்பற்றிக்கொண்டு நின்று ‘தம்றா சோறு தா .. தம்றா சோறு தா.. தம்றா…’ என்றேன்.//

//சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. என் வயிறு பெரிய கலயம்போல பளபளவென்றிருந்தது. மீசைக்காரர் ஒருவர் ‘லே, தாயளி உனக்க வயறும் நிறைஞ்சு போச்சேலே வயற்றிலே பேனு வச்சு நசுக்கலாம்ணு தோணுதே…’ என்றார்//

இந்த வரிகள் 2005சுனாமிசம்பவத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எங்குபார்த்தாலும் ஒரே பிணக்குவியல்கள்.ஒரு வண்டியில் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள்... கூட்டம் சூழ்ந்துகொண்டு முண்டியடிக்கிறது. ஒரு சட்டைபோடாத சிறுவன் இருகைகளையும் உயர்த்தி அண்ணே… அண்ணே’ என்று உணவுக்காக பரிதவிக்கிறான். துக்க ஓலங்களைவிட அண்ணேஅண்ணே என்ற உயிர்த்துடிப்பின் அலறல் என்னை வெடித்து அழச்செய்துவிட்டது.

வீட்டில்என் மனைவி, கொஞ்சம் மறுசோறு போட்டுக்குங்க என்றாலே இதயத்தில் ஒரு அதிர்வுடன் தம்றாசோறுதா .. தம்றாசோறுதா.. தம்றா…’அண்ணேஅண்ணே.. என்ற மனசாட்சியின் கூவல்கள்.

காப்பன் அம்மாவுடைய தாய்ப்பாசம் உருகவைக்கிறது. எளியவர்களிடமுள்ள ஒரே மகிழ்ச்சியான விஷயம் பாசம்தானே. காப்பனின் தாய் ஒவ்வொருமுறை தம்றா…வேண்டாம் தம்றா என்று சொல்லும்பொழுது, நல்ல பழுக்ககாய்ச்சிய கம்பியை சொருகியதுபோன்ற உணர்வு வந்துபோனது.

*———–*

இந்த வரிசைக்கதைகள் படித்துகொண்டிருந்த சமயத்தில், என் அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பேச்சுனூடே ஏன் சுரத்தில்லாமல் பேசுகிறாய். வேலையில் ஏதாவது பிரச்சினையா? பேசாம ஊருக்கு வந்துரு என்றார்’. நான் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றேன். பிரிதொருநாள் எதை வைத்து அப்படி கேட்டாய்’என்றேன். என் அம்மா சொன்னாள் நீதான் பேசப்பேச இடையிடே மூனுதடவை நல்லாயிருக்கியான்னு’ கேட்டையே என்றார்கள். நான் உங்களின் வரிசைக்கதைகள் பாதித்த விவரத்தை கூறினேன். ஆச்சரியப்பட்டார்கள்.

*————–*

இன்னொரு விஷயத்தையும் நினைவிலிருந்து மீட்டெடுக்கிறேன்…. கிளி சொன்ன கதையில்

//
பெண்ணடிகளுக்கு இருக்கே, வைப்பு கழுவல் வைப்பு கழுவல்ணுட்டு….சூரியன் உதிக்கதும் மறையதும் மாதிரி…. செத்து தெக்கோட்டு எடுத்தாலும் பாவிகள் நாலு கலமும் சட்டியும் கொண்டுவந்து சேத்து குழியில வைப்பாக. மேல போயி அங்க உள்ள தேவன்மாருக்கும் கெந்தர்வன்மாருக்கும் அரிவச்சு வெளம்புண்ணு…. //

இதைப்படித்த இரவு என் மனைவி இரு பெண்குழ்ந்தைகளும் தூங்கியபிறகு, அவர்கள் அருகில் அமர்ந்து மணிக்கணக்காக பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். மேற்சொன்ன மனதில் ஒடிக்கொண்டிருந்த உங்கள் வரிகளுடன்.

சகமனுஷிகளைப்பற்றிய சரியான புரிதலும் ஒரு தரிசனப்பார்வையும் கிளி சொன்ன கதையில்நீங்கள் மேற்சொன்ன ஒரு வரியில்தான் எனக்கு கிடைத்தது. ஆம், என் முந்தைய தலைமுறைக்கு இந்தப்புரிதலில்லை.வரிசைக்கதைகள் மூலம் புரிதல்களை மேலும் விசாலமாக்கியிருக்கிறீர்கள்

*—————*

மற்றகதைகளும் என்னில் பலதாக்கங்களை தைத்தது. ஆனால் கிணற்றில் விழுந்த காசு ஆடிக்கொண்டே சென்று ஆழத்தில் புதைவதுபோல என்னில் புதைந்துவிட்டது. கைதவறிக் கிணற்றில் விழும் பொருளை கீழே சென்று அமிழ்வதற்குமுன் எடுத்துவிடவேண்டும் என்பார்கள். அது ஏனோஎன் விஷயத்தில் நெசந்தான்.

கதைகளின் உச்சங்கள் புரிந்தாலும் அதை வெளியே எடுத்து விவாதிக்கமுடியவில்லை. என்னுடைய கடிதம் கதைகளை விட்டு டிராக்மாறி போய்விட்டதாகவும் உணர்கிறேன்.

பணிவான வணக்கங்களுடன்,

கதிரேசன், ஒமன்.

 

 

அன்புள்ள கதிரேசன்

நன்றி

தொழில்முறை விமர்சகர்கள் கூட ஒரு படைப்பின் எல்லா நுட்பங்களையும் நிறைவளிக்கும்படியாகச் சொல்லிவிடமுடியாது. சொல்லுவதென்பது நம் சொந்தப் புரிதலை அதிகரிக்கவும் மேலும் புரிந்துகொள்ளவும் உதவும், அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைகடல்புரத்தில்
அடுத்த கட்டுரைஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்