ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது மணிப்பூரின் போராளியான ஐரோம் ஷர்மிளா சானு இங்குள்ள சில இடதுசாரிகளால் அண்ணா ஹசாரேக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டார். அண்ணாஹசாரேவின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்த சர்மிளா பெயரைப் பயன்படுத்தினார்கள். ஆச்சரியம்தான், அவர்கள் இருவரும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஒரே மனிதரை, காந்தியை, ஆதர்சமாகக் கொண்டவர்கள். ஒருவரின் போராட்டத்துடன் இன்னொருவரின் போராட்டம் இணைத்து அல்லவா பேசப்பட்டிருக்க வேண்டும்?

என்ன காரணம் என்றால் ஐரோம் ஷர்மிளா எ தற்காக போராடினாலும் இங்கே இந்தியாவின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் எதிரான நசிவுசக்திகளால் தங்களுக்கு ஆதரவானவராக பார்க்கப்படுகிறார். அவரை அப்படி இங்கே சித்தரித்து, அண்ணா ஹசாரே கவனிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை முன்வைத்து, தங்கள் நசிவுப்பிரச்சாரத்தை முன்னெடுக்க நினைக்கிறார்கள். இந்தியாவை உடைக்கவும் சிதைக்கவும் எண்ணும் சீன கைக்கூலிகளால் முன்வைக்கப்படும் ஒருவராக ஆகிவிட்டது ஷர்மிளாவின் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஊடகங்கள் முன்வைப்பது யாரை?

மிக அதிகமாகப் பேசப்பட்ட வாதம், அண்ணா ஹசாரே ஊடகங்களால் கவனிக்கப்படும்போது ஐரோம் ஷர்மிளா கவனிக்கப்படவேயில்லை என்பது. அது உண்மையா? நாற்பது வருடங்களாக அண்ணா ஹசாரே காந்திய வழியில் கிராம மேம்பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறார். ஊழலுக்கெதிரான மக்கள் இயக்கத்தை ஒருங்கிணைத்து பல வெற்றிகரமான போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவரது போராட்டத்தால் அமைச்சர்கள் பதவியிழந்திருக்கிறார்கள். அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் தமிழில் அண்ணா ஹசாரே பற்றி இன்றுவரை ஒரே ஒரு நல்ல கட்டுரை கூட எழுதப்பட்டதில்லை.

ஆனால் ஐரோம் ஷர்மிளா பற்றி தமிழில் என் பார்வைக்கே நான்கு நூல்கள் வந்துள்ளன. மலையாளத்தின் பன்னிரண்டு நூல்கள் உள்ளன. நான்கு இதழ்கள் அட்டைப்படச் சிறப்பிதழ்கள் போட்டுள்ளன. இந்திய ஆங்கில இதழ்களில் அவரைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகள், சிறப்பு பகுதிகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 2004ல் அவரது டெல்லி பயணம் ஒரு பெரிய அரசியல் நிகழ்வாக நம் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு அளிப்பதற்கான பெரும் பிரச்சாரத்தில் இந்திய ஆங்கில ஊடகங்கள் உள்ளன, இருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, கிடைக்கவும் கூடும். கிட்டத்தட்ட பர்மிய ராணுவ அரசுக்கு எதிராக போராடும் ஆங் சான் சூகி போல இந்திய அரசு ராணுவத்துக்கு எதிராகச் போராடும் தியாகியாக அவர் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு சர்வதேச மனித உரிமைப்போராளிகளும் பிறரும் அளிக்கும் ஆதரவு தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகிறது. ரவீந்திரநாத தாகூர் அமைதி விருது போன்ற விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அண்ணா ஹசாரே பற்றி வெளிவந்துள்ள செய்திகளில் பெரும்பகுதி அவதூறுகளும் திரிபுகளும்தான். அவரால் எதிர்க்கப்பட்ட காங்கிரஸ்,பாரதிய ஜனதா இதழ்களால் முன்வைக்கப்பட்ட அவதூறுகள். அவரை நிராகரிக்க விரும்பும் இடதுசாரிகளின் ஏளனங்கள், வசைகள். எளிமையான காரணம்தான், அண்ணா ஹசாரே இந்தியாவின் பெரும்பாலான மக்களை பிரதிநிதிகரிக்கும் பெரிய அரசியல் இயக்கங்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் எதிராகச் செயல்படுகிறார். மாறாக ஐரோம் ஷர்மிளா நம் ஊடகங்களில் பெரும்பகுதியை நிறைத்துள்ள இந்திய எதிர்ப்பாளர்கள், பிரிவினைவாதிகள், தீவிர இடதுசாரிகளுக்கு சாதகமான முகமாக இருக்கிறார்.

ஐரோம் ஷார்மிளா பெற்ற ஊடக ஆதரவில் பாதியைக்கூட அண்ணா ஹசாரே பெறவில்லை என்பதே நடைமுறை உண்மை. இன்று அண்ணா ஹசாரே பெற்றுள்ள ஓரளவு ஊடக ஆதரவுகூட இணையம் மூலம் இளைஞர்கள் நடுவே அவர் பெற்ற ஆதரவை தங்கள் வணிகத்துக்கு பயன்படுத்திக் கொள்ள விழையும் ஊடகங்களினால்தான். அந்த ஆதரவும்கூட சர்ச்சைகள், விவாதங்கள் என்றபேரில் உடனடியாக எதிர்க்குரல்களைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட்டது. ஐரோம் ஷர்மிளா பற்றி ஒரு மாற்றுக்கருத்து, எளிய ஐயம்கூட பதிவு செய்யப்படவில்லை. அது பற்றிய விவாதமே அரசியல் சரி மனநிலைகளால் ஒதுக்கப்படுகிறது.

இருந்தும் ஏன் அண்ணா ஹசாரே அளவுக்கு ஐரோம் ஷர்மிளா சாமானியர்களால் பேசப்படவில்லை? எளிமையான விஷயம்தான். அண்ணா ஹசாரே போராடுவது இன்று ஒவ்வொரு இந்தியனையும் ஏதேனும் வகையில் பாதிக்கக்கூடிய, அவன் உள்ளூர கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பொது விஷயத்துக்காக. ஐரோம் ஷார்மிளாவின் போராட்டம் அப்படிப்பட்ட ஒன்று அல்ல. இந்த எளிய விஷயத்தின் மேல் தான் நம் அரசியலெழுத்தாளர்களின் வாய்சாலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

ஐரோம் ஷர்மிளாவின் பின்னணி

இந்திய மொழிகளில் எல்லாம் ஐரோம் ஷார்மிளா பற்றி இடதுசாரிகளால் மிகையுணர்ச்சி சார்ந்த ஒற்றைப்படையான ஒரு வரலாற்றுச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் தகவல்களின் பின்னணியில் உணர்ச்சிகரமாக இப்பிரச்சினையைப் பார்ப்பவர்களே அதிகம். விரிந்த தளத்தில் பின்னணியை புரிந்துகொண்டு நடைமுறை உணர்வுடன் பேசுபவர்கள் அனேகமாக இல்லை.

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக பேசுவதும் செயல்படுவதும் முற்போக்கு என்று சித்தரிக்கப்பட்டுள்ள சூழல் இங்குள்ளது. பல இனங்கள் கலந்து வாழும் இந்த நிலப்பகுதி ஒரே அரசியலமைப்பாகவே இருக்க முடியும் என்றும், பிரிவினை என்பது பேரழிவையே உருவாக்கும் என்றும் உணர்ந்து அதைச் சொல்பவர்கள் இங்குள்ள இன்றைய அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் சுரண்டல்வாதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒருவர் சொல்லும் கருத்து அவர் தன்னை பிறர் எப்படி கருதவேண்டும் என நினைக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே உள்ளது. எல்லாரும் விரும்புவது முற்போக்கு முகம்தான்.

சென்ற சில ஆண்டுகளாக ஒட்டுமொத்தமாக நம் அறிவுலகமே இந்தக் கருத்தியல் கெடுபிடிகளால்தான் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அஞ்சி பெரும்பாலானவர்கள் பேசாமலிருப்பதனால் நம் ஊடகங்கள் முழுக்க இந்திய எதிர்ப்பாளர்களின் ஒற்றைக்குரல்கள் மட்டுமே ஒலிக்க நேர்கிறது ஆகவே இவ்விஷயத்திலும் ஒற்றை தரப்பு மட்டுமே இன்றுவரை பதிவாகியிருக்கிறது.

அடுத்த மாதம் வரவிருக்கும் தமிழ் அறிவுஜீவி இதழ்களை பாருங்கள். காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, உயிர்எழுத்து, அமிர்தா– இவற்றுக்கிடையே என்னென்ன அடிதடிப் பிரச்சினைகள் இருந்தாலும் கருத்துத்தரப்பு ஒன்றே. அவையனைத்துமே அண்ணா ஹசாரேவை சந்தேகப்பட்டு இழிவு செய்தும் ஐரோம் ஷர்மிளாவை கொண்டாடியும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் அமைந்த கட்டுரைகளை வெளியிடும். அனைத்தும் ஒருவரே எழுதும் கட்டுரைகள் போல் இருக்கும்

சமீபத்தில் பாடபேதம் என்ற கேரள இடதுசாரி இதழ் சார்பில் ஐரோம் ஷர்மிளாவை சந்திக்க சென்ற குழுவில் இருந்த மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் இங்கே கோதாவரிக்கு வந்தபோது மணிப்பூர் சிக்கலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் எண்ணிய சித்திரமே அவராலும் அளிக்கப்பட்டது. மணிப்பூரின் அரசியல் வரலாறு குறித்து நான் தனியாகவே எழுதவேண்டும். அதைப்பற்றி ஓரளவு ஆராய்ந்திருக்கிறேன். இங்கே ஒரு கோட்டுச்சித்திரம்.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் பழங்குடிகள் நிறைந்தவை. உலகமெங்கும் பழங்குடிகள் வாழும் நிலப்பரப்பில் ஜனநாயகம் செயல்படுவதற்கு அடிப்படையான தடை உள்ளது. பழங்குடி மனநிலை ஜனநாயகத்துக்கு எதிரானது. ஜனநாயகம் என்பது பழங்குடிச்சமூகம் முதிர்ந்து நிலவுடைமையும் அதன்பின் முதலாளித்துவமும் வந்த பிறகுள்ள ஒரு அரசமைப்பு. பழங்குடிகளைப் பொறுத்தவரை அவர்களின் இனக்குழு சார்ந்து மட்டுமே அவர்களால் சிந்திக்கமுடியும். அந்த இனக்குழுவுக்கு வெளியே உள்ளவர்கள் அவர்களுக்கு அன்னியர்கள், எதிரிகள். ஆகவே அவர்களுக்குள் வன்முறை ஓய்வதே இல்லை. அது ஆப்ரிக்காவாக இருந்தாலும் சரி, வடகிழக்கு இந்தியாவாக இருந்தாலும் சரி.

உண்மையில் இது இன்று உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினை. ஒரு ஜனநாயக அமைப்புக்குள் பழங்குடிகளை எப்படி கொண்டு வருவதென்று இன்னும் தெளிவு இல்லை. ஆப்ரிக்க நாடுகளை கவனித்தால் இப்பிரச்சினையின் பல முகங்கள் தெரிய வரும். நான் பார்த்தவரை தென்னாப்ரிக்கா முதலிய சில தேசங்களைத்தவிர வேறெங்கும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு அரசியல் வழிமுறைக்கான முயற்சியே செய்யப்படுவதில்லை.

நடைமுறையில் பெரும்பாலான நாடுகள் ராணுவ ஆதிக்கம் மூலம் ஒட்டுமொத்த பழங்குடி இனக்குழுக்களையும் அடக்கி வைத்திருக்கின்றன. பழங்குடிப் பிரச்சினைகள் உள்ள நாடுகளில் எப்போதும் ராணுவ ஆட்சியே உள்ளது. இரண்டு வகை முன்னகர்வுகளே இங்கே சாத்தியமாகின்றன. நீண்டகால அளவில் பொருளாதார காரணிகளால் நவீனத்துவ வாழ்க்கைமுறை உருவாகி பழங்குடிப் பண்பாடும் இனக்குழு வெறுப்புகளும் இல்லாமலாகி சமூக கட்டுமானத்தில் அடுத்த கட்ட நகர்வு உருவாகும். அல்லது ஒரு பழங்குடி மட்டும் நவீனமயத்துக்கு உள்ளாகி அதிகாரத்தை கைப்பற்றி பிறபழங்குடிகளை முழுமையாக தன் கட்டுக்குள் கொண்டு வரும்.

இந்த மைய ராணுவ அதிகாரம் வலுவிழக்கும்போது பழங்குடிகளின் ராணுவங்கள் உருவாகி அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு மொத்த நாட்டையே நாசம் செய்கின்றன. பல ஆப்ரிக்க நாடுகளில் முப்பது நாற்பது ஆண்டுகளாக பழங்குடிச் சண்டைகள் நிகழ்கின்றன. அவற்றில் பல உள்நாட்டுப் போர்களாக மாறி, அந்த மக்களை மாபெரும் பஞ்சங்களில் மூழ்கடித்து, லட்சக்கணக்காக சாகவிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த மரணக்களத்திலும் பழங்குடிப் போர் முடிவில்லாமல் நீள்கிறது.

வடகிழக்கு அரசியல் சிக்கல் என்பது தேசியஇனப் பிரச்சினை அல்ல, பழங்குடி இனக்குழுக்களின் பிரச்சினை. இந்த அடிப்படையான விஷயத்தை தொடர்ந்து மறைத்து பிரம்மாண்டமான கருத்தியல் மோசடி ஒன்றை நம் இடதுசாரிகள் இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசிப்பவர்கள்கூட இந்த இடதுசாரிகள் உருவாக்கும் தவறான வழிகளிலேயே இதைப்பற்றி சிந்திக்கிறார்கள். வடகிழக்கு மாகாணங்கள் முழுக்க இருப்பவை உபதேசிய கோரிக்கைகள் கொண்ட ராணுவங்கள் அல்ல. பழங்குடிகளின் இனக்குழு ராணுவங்களே. அதில் எந்த அரசியல் மர்மமும் இல்லை, அவற்றின் பெயர்களேகூட அதைத்தான் சொல்கின்றன.

உதாரணமாக நாகா மக்களின் இனக்குழு ராணுவங்கள் போராடுவது நாகாலாந்து என்ற நாட்டுக்காக அல்ல, நாகர்கள் வாழும் ஒட்டுமொத்த நிலமும் தங்களுக்கு தேவை என்று. அதில் மணிப்பூர் மேகாலயா பகுதிகளின் நிலங்களும் உண்டு. அந்த நிலத்துக்குள்தான் மேய்ட்டிகள் பங்கால்கள், அங்கமிகள், குக்கிகள் உடபட எழுபதுக்கும் மேற்பட்ட முக்கியமான இனக்குழுக்களும் வாழ்கின்றன.

அதாவது ஆயுதமேந்தி போராடும் நாகாக்கள் கோரும் அதே பூர்விகநிலம்தான் குக்கிகளும் கோரும் நிலம். அதற்குள்தான் அங்கமிகளின் பூர்வீக நிலமும் இருக்கிறது. அங்கே தான் பொதுநிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் வந்துவிட்ட அதிகமும் கிறிஸ்தவர்களான மேய்ட்டிகள் வாழ்கிறார்கள். இந்த இனக்குழு ராணுவங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான சுதந்திர நாட்டை ஒரே நிலத்தில் கோருகின்றன. இதை ஒரு தேசிய இனப்போராட்டம் என்று சொல்வது மோசடி மட்டுமே.

தேசிய இனம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் வாழும் மக்கள் அனைவரும் தங்களை ஒரு நவீன தேசியமாக உணர்வதாகும். பழங்குடி இனக்குழு ராணுவங்களின் நிலக்கோரிக்கைக்கும் அதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. வடகிழக்குப் பகுதியில் மணிப்பூரிலோ, நாகாலாந்திலோ, மிசோரத்திலோ மக்கள் தங்களை ஒரு பிராந்திய தேசியமாக திரட்டிக்கொண்டு இந்தியாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக போரிடவில்லை, அவை தங்களை இனக்குழுக்களாகவே திரட்டிக்கொண்டிருக்கின்றன என்பதில் இருந்தே நாம் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இப்படிச் சொல்லலாம். திருநெல்வேலியை தங்கள் பூர்வீக நிலமாக சொல்லி தேவர்களும் நாடார்களும் வேளாளர்களும் தனித்தனியாக தங்களுக்கு தனிநாடு கோருவதை போல. அது தனித்தேசியக் கோரிக்கையே அல்ல. அதை இந்திய எதிர்ப்பு காரணமாகவே ஆதரித்து தனித்தேசிய கோரிக்கை என்று சொல்பவர்களின் மனத்திரிபு கற்பனைக்கும் அப்பாற்பட்டது

சென்ற அரைநூற்றாண்டில் அந்த இனக்குழு ராணுவங்கள் பிற இனக்குழுக்கள் மேல் நிகழ்த்திய கொடூரமான வன்முறைகள் பற்றி இங்குள்ள இடதுசாரிகள் பேசுவதில்லை. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பெரும்பான்மை இனக்குழுவான நாகாக்கள் பிற இனக்குழுக்கள் மேல் முந்நூறுக்கும் மேற்பட்ட கூட்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்பதை இந்த இனக்குழு ராணுவங்களின் பிரசுரங்களிலும் அரசு ஆவணங்களிலும் காணலாம். மணிப்பூரில் மட்டும் சென்ற இருபதாண்டுகளில் நான்கு சிறு இனக்குழுக்கள் நாகாக்களாலும் குக்கிகளாலும் மொத்தமாகவே அழிக்கப்பட்டுள்ளன.

தொண்ணூறுகளில் மணிப்பூரில் பயணம் செய்த காலத்தில் அங்கே ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவின் வண்டிகளில் ஏறுவதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். இங்கே வந்து ஓட்டல்களில் வேலை செய்யும் மணிப்பூரிகளேகூட தனித்தனி இனக்குழுக்களாக ஒருவரோடொருவர் தொடர்பில்லாமல்தான் இருக்கிறார்கள். என் மகன் படிக்கும் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் வடகிழக்கு மாணவர்கள் இனக்குழுக்களாகவே திரண்டு பிறருடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் மொழிகளும் வேறுவேறு. இந்த விஷயத்தை அஜிதன் சொன்னபோது அவனிடமிருந்த அதிர்ச்சியை நினைவுகூர்கிறேன்.

வடகிழக்கில் வரலாறெங்கும் இனக்குழுக்கள் தனித்தனியாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் மொழிகளும் வேறுவேறு. இந்த பேதம் உலகமெங்கும் பழங்குடி மனநிலைகளில் ஒன்று. அதுவே பழங்குடிகளை தனிமைப்படுத்தி இத்தனை காலம் பழங்குடிகளாகவே வைத்திருக்கும் அம்சம். அந்த ’அன்னியர் விலக்கை’ கைவிட்டு வணிகத்திற்கும் பிற தொடர்புகளுக்கும் வரும் பழங்குடிகள் சில தலைமுறைகளுக்குள்ளாகவே பழங்குடித்தன்மையை இழந்து நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்குள் வந்துவிடுவதை நாம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் காணலாம்

பிற இனக்குழுக்களின் இருப்பையும் உரிமைகளையும் ஒவ்வொரு இனக்குழுவும் அங்கீகரித்து ஒரு பொதுப்புரிதலுக்கு வரும்போதே அங்கே குடிமைச்சமூகம் உருவாக முடியும். என்னதான் சொன்னாலும் இது மேல்கீழ் அடுக்கு உருவாவதன் மூலமே நிகழ்கிறது. அவ்வாறு ஒரு அடுக்கதிகாரம் உருவாகி அதிகாரச் சமநிலை பிறந்த பிறகே உண்மையான ஜனநாயகம் உருவாகும். அது வடகிழக்கில் இன்றுவரை முழுமையாக நிகழவில்லை, சர்வதேச அரசியலால் நிகழ அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு நிகழாதபோது அந்த ஒட்டுமொத்த இனக்குழுக்களையும் ஒரேசமயம் ஒடுக்கி கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ராணுவ ஆட்சியே அங்கே நிகழமுடியும்.

மன்னராட்சிக் காலத்தில் மணிப்பூரின் மிகச்சிறிய அளவு நிலமே மன்னர் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவம் ஒட்டுமொத்த வடகிழக்கு பழங்குடி நிலங்களையும் ராணுவ அடக்குமுறை மூலம்தான் ஆண்டது. சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசும் அதையே செய்கிறது.

வடகிழக்கில் எல்லா பெரிய இனக்குழுக்களும் பிற இனக்குழுக்களுக்கு எதிராக போரிட்டுக் கொண்டுதான் இருந்தன. தங்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்கும் அரசுக்கும் எதிரான வன்முறைப் போக்கை வளர்த்துக்கொண்டன. இந்நிலையில் சீனாவும் மியான்மரும் [பர்மா] இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத நோக்கு ஓங்கியிருக்கும் வங்கதேசமும் அங்கே ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஆயுதங்களும் பணமும் அளித்து வளர்த்துவிட ஆரம்பித்தன. ஆகவே இனக்குழுக்கள் ராணுவ அமைப்புகளாக மாறி ஒருவரோடொருவர் போரிடுகின்றன. அவர்களை ஒடுக்கும் இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் போரிடுகின்றன. இதுவே அங்குள்ள யதார்த்தம்

இந்நிலையில் எந்த அரசும் மூர்க்கமான ராணுவ நடவடிக்கைகளையே மேற்கொள்ளும். ஏனென்றால் எந்த அரசும் ’சமரசம்- அடக்குமுறை’ என்ற இரட்டை முகத்துடன் செயல்படக்கூடியதே. சமரசம் பலனளிக்காத போது அரசுகள் நேரடி வன்முறையில் ஈடுபடும். சொந்த மக்களை கொன்று குவிக்காத அரசு இருக்கும் நாடுகள் எவையும் இன்றைய உலகில் இல்லை. மணிப்பூரின் அதே நிலைமை தமிழகத்திலோ ஹரியானாவிலோ வந்தாலும் அதே போலத்தான் இந்திய அரசு செயல்படும். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்களை காணலாம்

ஒருவேளை நாளை மணிப்பூர் சுதந்திர நாடாக ஆகி இம்பாலில் ஒரு தனி அரசு அமைந்தால் அந்த அரசும் மணிப்பூரின் மக்கள் மேல் இதே போன்ற அடக்குமுறையை உள்ளடக்கமாகக் கொண்ட சமரச அரசாங்கத்தையே அளிக்கும். இன்று தமிழகத்தில் உள்ள அரசும் அப்படிப்பட்ட ஒன்றே. எந்த அரசும் அப்படித்தான்.

இன்று தன் எல்லைக்குள் சீனா மிகப்பெரிய அளவில் பழங்குடிகளை ஒடுக்கி வருகிறது. சீனாவின் அதிகாரபூர்வ செய்திகளின்படி பார்த்தால் கூட மிகமிகக் கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகள் அங்கே உள்ளன. பழங்குடிகள் ஒரு வட்டாரத்தை விட்டு இன்னொன்றுக்கு செல்லவே அங்கே பாஸ்போர்ட்- விசா முறை உள்ளது. மியான்மரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. ஐரோம் ஷர்மிளாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்களோ அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், என்றாவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா என்று நாம் பார்க்க வேண்டும்

வடகிழக்கின் பழங்குடி ராணுவக் குழுக்களுக்கு சீனாவும் மியான்மாரும் அளிக்கும் ராணுவ உதவிகள் வெளிப்படையாகவே அந்த குழுக்களால் அறிவிக்கப்பட்டவை. ஒரு பேச்சுக்குச் சொல்வோம். ஒட்டுமொத்த இந்திய ராணுவமும் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டால் என்ன ஆகும்? சீனாவும் மியான்மரும் அந்த நிலங்களை ஜனநாயகம் தவழும் சிறுதேசியங்களாக, பழங்குடி நாடுகளாக வாழ விட்டுவிடுமா என்ன? அதற்காகவா அவை இந்த ஆயுத உதவியை அளிக்கின்றன?

சீனாவிலும் மியான்மரிலும் அங்கமிகளும் குக்கிகளும் உள்ளனர். அங்குள்ள பூர்வீக நிலத்தை சுதந்திர மணிப்பூரில் சேர்த்துக் கொள்ள விடுவார்களா? அங்கே வாழும் பழங்குடிகள் சுதந்திர மக்களாகவா இருக்கிறார்கள்? இந்த வினாவை மணிப்பூரின் பழங்குடி இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் கேட்டேன். ‘நாங்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்ற பதிலைச் சொன்னார். மணிப்பூர் விடுதலைக்காகப் பேசும் எந்த இந்திய இடதுசாரிகளும் திபெத்தைப் பற்றிப் பேசுவதில்லை என்பதை மட்டும் கொண்டே இவர்களின் எஜமான் யாரென்பதைச் சொல்லிவிடமுடியும்.

ஒருவேளை இந்திய ராணுவம் முற்றாக விலக்கப்பட்டால் ஒரே நிலத்தில் பங்குகோரி ஆயுதமேந்தி போராடும் பதிநான்கு பெரிய இனக்குழு ராணுவங்கள் உள்ளனவே அவை என்ன செய்யும்? அந்த பழங்குடி ராணுவங்களுக்கு ஒத்துப்போகாத, அல்லது அவ்வாறு ராணுவ ரீதியாக திரட்டப்பட்ட மக்களின் எதிர்காலம் என்ன? அந்த மக்களை அழிவுக்கு விடுவதையா இவர்கள் ஜனநாயகம் என்கிறார்கள்?

இந்நிலையில் எந்த அரசும் செய்வதையே இந்திய அரசும் செய்கிறது. ஒட்டுமொத்த பழங்குடிக் கலகபூமிக்கு மேலே ராணுவம் என்ற கம்பிளியை போட்டு மூடி வன்முறை மூலம் உருவாக்கும் ஒருவகை மயான அமைதியை நிலைநாட்டி வைத்திருக்கிறது. இப்படி நிலையாக நிறுத்தப்பட்ட ராணுவம் என்ன செய்யும் என நாம் அறிந்ததே. எந்த ராணுவமும் ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்ப்போலீஸ் என்ன செய்தது என வீரப்பன் வேட்டையின்போது பார்த்தோம்.

சீருடை அணிந்த ராணுவம் என்பது வன்முறைக்காக உருவாக்கப்பட்ட வன்முறையால் மட்டுமே நிலைநிற்கக்கூடிய ஒன்று. இதில் புரட்சி ராணுவம், அரசு ராணுவம், இடதுசாரி ராணுவம், வலதுசாரி ராணுவம் என்ற பேதமே இல்லை. சாதாரண மக்கள் மேல் ஆதிக்கம் அளிக்கப்பட்டால் எந்த ராணுவமும் அநீதியைத்தான் இழைக்கும். இந்திய ராணுவத்தின் அனைத்துவகை அத்துமீறல்கள் அங்கே எப்போதும் உள்ளன. ஆனால் அதற்கிணையாக, அதைவிட மேலாக பழங்குடிகளின் ராணுவங்கள் பிற இனக்குழுக்கள் மேல் செய்யும் கொள்ளையும் கற்பழிப்பும் கொலைகளும் நிகழ்ந்துகொண்டுள்ளன.

ஐரோம் ஷர்மிளாவை இந்த பின்னணியில் வைத்துத்தான் பார்க்கவேண்டும்

ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்

ஐரோம் ஷர்மிளா ராணுவ அத்துமீறலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பின்னணி என்ன? 2000 த்தில் இந்திய ராணுவம் மணிப்பூரின் சாதாரண மக்களுக்கு எதிராக இழைத்த மாலோம் படுகொலைகள் அவரை அந்த போராட்டத்திற்கு தூண்டுகிறது. 28 வயதான ஐரோம் ஷர்மிளா இந்திய அரசுக்கும் ராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். வடகிழக்கு முழுமைக்கும் இன்று அமலில் உள்ள சிறப்பு ராணுவச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.

அந்த உணர்ச்சிகளும் அந்த போராட்ட வேகமும் வணங்கத்தக்கவை. அதற்கு ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள இந்தியனின் ஆதரவும் இருக்கத்தான் வேண்டும். இந்த கட்டுரையை நான் எழுதும்போது ஒன்றை தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். ஐரோம் ஷர்மிளாவின் கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்திய ராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக வெளிப்படையான திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். வடகிழக்கு மக்கள் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள் என்றால் அது களையப்படவேண்டும்.

ராணுவ சிறப்புரிமைச்சட்டம் களையப்படவேண்டும் என்று நீதியரசர் ஜீவன் ரெட்டி குழு அறிக்கை அளித்திருக்கிறது. அது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் பொருளியல் ரீதியாக நவீனத்துவம் நோக்கி வருவதன் காரணமாக அங்கே இன்று வன்முறை குறைகிறது. இச்சட்டம் விலக்கப்பட்ட இடங்களில் வன்முறை நிகழவில்லை. ஆகவே இச்சட்டத்தை படிப்படியாக நீக்கிக்கொண்டு ராணுவத்தை பின்வாங்கச்செய்வது நல்லதே. அந்த விலக்கத்தை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொள்ளாதபடி கவனமான கண்காணிப்புடன் இதை செய்யலாம். அங்குள்ள மக்களுடன் எல்லாவகையான சமரசங்களுக்கும் பேச்சுகளுக்கும் எப்போதும் அரசு தயாராக இருக்கவேண்டும். சமரசமே அரசின் மிகச்சிறந்த முகம்.

மேலும் இவ்விஷயங்களில் ஒருபோதும் அரசு அதிகாரிகளின் கூற்றுக்களை நம்பவோ முழுமையாக அவர்களின் ஆலோசனைகளை ஏற்கவோ கூடாது. இந்தியா அதன் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளில் சமீபத்தில் செய்து வரும் மாபெரும் முட்டாள்தனங்கள் அதிகாரிகளால் முடிவுகள் எடுக்கப்படுவதனால் விளைபவை. அதிகாரிகளுக்கு ஓர் எல்லை உண்டு. அதிகாரம் ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளிடமே இருக்கவேண்டும். அந்த அரசியல்வாதி ஜனநாயகவாதியாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கலாம்.

மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மக்களின் வாழ்க்கையை முழுக்க முழுக்க ராணுவத்திடம் விட்டுவிட்டு இந்திய அரசு வாளாவிருப்பதுபோல் உள்ளது. அந்நிலை மாறியாகவேண்டும். கடைசியாக, ராணுவமும் சிவில் சட்டத்திற்கு உட்பட்டதே என்றும் கட்டற்ற அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அதற்கு உணர்த்தப்பட்டாக வேண்டும்

ஐரோம் ஷர்மிளாவின் அறவுணர்ச்சியும் அவரது தீவிரமும் ஒரு சாமானியனாகிய என்னை உத்வேகப்படுத்துகின்றன. தனிமனித அறவுணர்ச்சி என்பது எத்தனை பெரிய ஆற்றல் என்று அவரை பார்க்கையில் நான் உணர்கிறேன். அந்த வணக்கத்துடன்தான் இதை எழுதுகிறேன். நான் இங்கே பேசுவது அவரது போராட்டத்தின் இயல்பைப்பற்றியும் எல்லைகளைப்பற்றியும் மட்டுமே.

ஷர்மிளாவின் போராட்டத்தின் மறுபக்கம்

ஐரோம் ஷர்மிளாவின் கோரிக்கை என்பது மணிப்பூரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இனக்குழு ராணுவக் குழுக்களை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் கொண்ட ராணுவச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே. அப்படி விலக்கிக் கொள்வதை இந்திய ராணுவம் ஏற்கவில்லை. ஐரோம் ஷர்மிளாவின் கோரிக்கையை ஏற்று பல மாவட்டங்களில் அந்த சட்டத்தை அரசு விலக்கிக்கொண்டது. அப்படி விலக்கப்ப்பட்ட பகுதிகளில் தாங்கள் பணியாற்ற முடியாது என்று ராணுவம் மறுத்துவிட்டது.

சென்ற அரைநூற்றாண்டில் இந்திய ராணுவத்தில் மிக அதிகமானவர்கள் கொல்லப்பட்டது வடகிழக்கு மாகாணங்களில்தான் என்கிறது ராணுவம். சீனாவால் மிக உயர்தர ஆயுதங்கள் அளிக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இந்தக்குழுக்கள் அந்தந்த இனக்குழுக்களால் ஆதரிக்கப்படுபவை. பழங்குடிகளின் கிராமங்களை தளமாகக் கொண்டவை. ஆகவே பழங்குடிகளின் கிராமங்களை முன்னெச்சரிக்கை இல்லாமல் சோதனையிடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டால் ராணுவம் வெறும் பலியாடாக ஆக நேரும் என்கிறார்கள்.

மேலும் ஷர்மிளாவும் அவரது சகோதரரும் மனித உரிமைகளுக்கான போராளிகள் அல்ல என்பதே ராணுவத்தின் தரப்பு. அவர்களின் சொந்த இனக்குழுவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக போராடும் இனக்குழுராணுவத்தின் ஆதரவாளர்கள் அவர்கள், அவர்கள் கோருவதுபோல ராணுவச்சட்டத்தை பின்னெடுத்துக்கொண்டால் அந்த இனக்குழுவின் ராணுவம் பிற இனக்குழுக்கள் மேல் ஆதிக்கம் பெற வழிவகுக்கும் என்கிறார்கள்.ஐரோம் ஷர்மிளா சார்ந்திருக்கும் மீய்ட்டி பழங்குடியினர் பிற பழங்குடியினருக்கு எதிராக தொடர்ச்சியான கலவரங்களில் ஈடுபட்டவர்கள்.

முழுக்கமுழுக்க ராணுவத்தையே நம்பி இங்கே செயல்படக்கூடிய ஓர் அரசு ராணுவத்தின் தரப்பை அப்படியே எடுத்துக்கொள்வதில் வியப்பில்லை. அதற்கு அப்பால் சென்று யோசிக்க தனிப்பட்ட அரசியல் செல்வாக்கும் தனிப்பட்ட தொலை நோக்குப்பார்வையும் கொண்ட துணிச்சலான அரசியல் தலைமை தேவை. அது இன்று இல்லை.

நாம் யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு. ஐரோம் ஷர்மிளா இந்த போராட்டத்தை ஆரம்பித்து பத்தாண்டுகள் தாண்டிவிட்டன. அவரது இந்த போராட்டம் ஏன் மாபெரும் விளைவுகளை உருவாக்கவில்லை? அங்கே தேர்தல்கள் நிகழ்ந்தன, ஆட்சி மாற்றம் வந்தது. பொருளியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. உண்மையில் அங்கு சென்ற சில வருடங்களாக பிரிவினை இயக்கங்களின் செல்வாக்கு சரிந்து வருகிறது. சிறப்பு ராணுவச்சட்டங்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களில்கூட வன்முறை குறைந்துவிட்டது என்பதை அச்சட்டத்தின் எதிர்ப்பாளர்களே சொல்கிறார்கள்.

நம் ஊடகங்கள் ஐரோம் ஷர்மிளாவை தொடர்ந்து முன்னிறுத்தியும், சர்வதேசக் கவனத்திற்கு கொண்டுவந்தும் பெருமுயற்சி எடுக்கின்றன. ஆனால் ஏன் மணிப்பூரில் அவரது அந்த மகத்தான தியாகம் அலைகளை கிளப்பவில்லை? ஏனென்றால் அவரது கோரிக்கை என்பது சிக்கலான ஒன்று. அந்த தரப்பை மணிப்பூரில் சாதாரணமாக பயணம் செய்து மக்களிடம் பேசினாலே கேட்க முடியும் என்றும், கேரளத்தில் இருந்து சென்ற குழுவில் பலரும் அவர்கள் எண்ணியதற்கு மாறான யதார்த்தமே அங்கிருப்பதை உணர்ந்து அமைதியானதாகவும் கல்பற்றா நாராயணன் சொன்னார்.

கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் பொருளியல் மாற்றங்களால் ஒரு நடுத்தர வர்க்கம் சீராக உருவாகி வருகிறது. அவர்களுக்கு பழங்குடிச் சண்டைகளில் அக்கறை இல்லை. அரைநூற்றாண்டாக நிகழும் ஆயுதக்கலகங்களில் சலித்துப்போய் பாதுகாப்பான வாழ்க்கையை ஏங்கும் நம்மைப் போன்ற மக்கள் அவர்கள். சென்னையில் தங்கும் விடுதிகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மணிப்பூர் இளைஞர்களிடம் பேசினால் அதை அறியலாம். நானே சிலரிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் ராணுவப் பாதுகாப்பு நீடிப்பதையே விரும்புகிறார்கள். அதேசமயம் ராணுவத்தின் அதிகாரத்தை வெறுக்கிறார்கள்.

மெல்ல மெல்ல மணிப்பூரின் பழங்குடி ராணுவங்களுக்கு அந்த பழங்குடிகள் மேல் உள்ள கட்டுப்பாடு தளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கிலும் முன்பிருந்த பழங்குடி ராணுவ ஆதிக்கம் இன்றில்லை. அதற்கு மக்கள் செல்வது குறைகிறது. இந்த பழங்குடி ராணுவங்களின் கடுமையான வரிவசூலாலும் அவர்களின் உள்குழுச்சண்டைகளாலும் அங்கே பொதுச்சந்தைகளும் வணிக அமைப்புகளும் சிதைந்து கிடக்கின்றன. ஆகவே மணிப்பூரின் பொருளியலே தாறுமாறாகக் கிடக்கிறது. ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களில் மட்டுமே இன்றும் சுமுகமான பொருளியல் நடவடிக்கைகள் உள்ளன.

இதன் விளைவாக இன்று மணிப்பூரின் இளைஞர்கள் ஆணும் பெண்ணும் கூட்டம் கூட்டமாக பிற இந்திய பகுதிகளுக்கு வேலைதேடி கிளம்பியிருக்கிறார்கள். சென்னையில்கூட மிகக்குறைவான ஊதியத்திற்கு பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். மும்பையிலும் பெங்களூரிலும் இதைவிட பலமடங்கு அதிகம். மணிப்பூரின் இளைய தலைமுறையின் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் இப்படி இன்று பிற இந்திய நகரங்களில் பணியாற்றுகிறது. இன்று இந்தியாவில் மிக அதிகமாக இடப்பெயர்வு கொண்டுள்ள இளைய சமுதாயம் மணிப்பூர் மக்களே.

இவர்களே மணிப்பூரின் பொருளியலை தீர்மானிக்கிறார்கள். அவர்களிடம் பேசினால் அவர்கள் தெளிவாகவே இனக்குழுச்சண்டைகளுக்கும் இனக்குழு ராணுவங்களுக்கும் இருக்கும் வெளிநாட்டு பின்னணியை தெரிந்து வைத்திருப்பதை அறியமுடிகிறது. அந்த அரசியல் ஆட்டத்தில் மணிப்பூர் அழிந்து விட்டது என நினைக்கிறார்கள். அவர்கள் ஏங்குவது சட்டம் ஒழுங்கு பேணப்படும் ஒரு மாநிலத்துக்காக. சேமித்த பணத்தை முதலீடு செய்வதற்கான உறுதிக்காக. அதை அளிக்கும் வலிமையான அரசுக்காக.

இணையதளத்தில் நாம் மணிப்பூர் போராளிக்குழுக்களின் தளங்களுக்குச் சென்றால் மணிப்பூர் வளார்ச்சி இழந்து பின்தங்கி கிடப்பதை சுட்டிக்காட்டுவதை காணலாம். ஆனால் அதற்குக் காரணம் அன்னிய நிதியுதவியுடன் அரைநூற்றாண்டாக தாங்கள் நடத்தும் ஆயுதக்கலகமும் பரஸ்பரப்போராட்டமும் அல்ல, இந்திய அரசின் ராணுவமே என்கிறார்கள். அதை விலக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். [எதியோப்பியாவையும் காங்கோவையும் பட்டினிக்காடாக ஆக்கி முப்பது நாற்பதாண்டுகளாக உள்நாட்டுப்போர் புரியும் இனக்குழுராணுவங்களும் இதையே சொல்கின்றன. தேசிய ராணுவம் அல்லது ஐநா ராணுவம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என. அவர்கள் இல்லாவிட்டால் பிற இனக்குழுக்களை வென்று அரசு அமைத்து பிரச்சினைகளை தீர்ப்போம் என!]

மணிப்பூருக்குச் சென்று சாதாரண மணிப்பூரி குடிமகனிடம் பேசினால் வரும் சித்திரம் அங்குள்ள மக்கள் எந்த இனக்குழுராணுவத்தின் மேலாதிக்கத்தையும் விரும்பவில்லை, ஒரு சாதாரண ஜனநாயக அரசையே விரும்புகிறார்கள் என்பதுதான் என்றார் கல்பற்றா நாராயணன். ராணுவச் சட்டம் ஒவ்வொருநாளும் வாழ்க்கையை கடுமையாக ஆக்குகிறது. ராணுவத்தின் அராஜகப்போக்கு ஆத்திரத்தை கிளறுகிறது. ஆனால் ராணுவச் சட்டம் விலக்கப்பட்டால் அதைவிட மோசமான பழங்குடிக் கலகம் நடைபெறும் என்ற அச்சம். அந்த பிசாசுக்கு இந்த பூதமே மேல் என்ற நிலை. ‘எங்கள் பழங்குடிகள் கலகங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்று உங்களுக்கு தெரியாது’ என்று சந்தையில் ஒரு பெண் சொன்னாளாம்.

மக்கள் உழைத்து சம்பாதித்து லௌகீக சுகங்களை அடைந்து வாழ விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு இன்னும் கொஞ்சம் மேலான வாழ்க்கையை அமைக்க முடியுமா என்று நினைக்கிறார்கள். எங்கும் எக்காலமும் மக்கள் அப்படித்தான். இலட்சியவாதங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையாக ஒருபோதும் அமைய முடியாது. எந்த இலக்குக்காகவும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை இழக்க அவர்கள் தயாராக மாட்டார்கள். மதவெறியும் இனக்குழுசார்ந்த வெறுப்புகளும் அவர்களை வன்முறையை நோக்கி தள்ளலாம். ஆனால் அதுகூட தற்காலிகமாகத்தான். தலைமுறைகளாக நீளும் ஒரு போராட்டம், அதன்மூலம் சூம்பிப்போன ஒரு வாழ்க்கை என்பது மக்கள் நாடும் யதார்த்தம் அல்ல.

இந்த எளிய உண்மையை ஐரோம் ஷர்மிளா புரிந்துகொண்டிருக்கவில்லை. அவருக்குப் பின்னணியில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளவில்லை. ஐரோம் ஷர்மிளா உயிரைப்பணயம் வைத்து முன்வைக்கும் கோரிக்கை என்பது மக்கள் கோரிக்கை அல்ல. அது மக்கள் நாடும் தீர்வு அல்ல. அது இன்னும் சிக்கலானது, பலதளங்கள் கொண்டது. இந்த இடைவெளியே அவரை மக்களிடம் இருந்து அன்னியமாக்கி அவரது உக்கிரமான தியாகத்தைக்கூட அர்த்தமில்லாததாக ஆக்கிவிட்டிருக்கிறது.

தொடர்ச்சி – அண்ணா ஹசாரேவும் ஐரோம் ஷர்மிளாவும் 2

தேசிய சுயநிர்ணயம்

முந்தைய கட்டுரைஐரோம் ஷர்மிளாவும் அன்னா ஹசாரேவும்- 2
அடுத்த கட்டுரைகடல்புரத்தில்