அண்ணா ஹசாரே, கடிதங்கள்

அண்ணா ஹசாரே 1

அன்புள்ள எழுத்தாளருக்கு!
அண்ணா ஹசாரேயின் நேர்மையை கேள்விக்குறி ஆக்குபவர்களின் நோக்கம், எந்த வித பயனுமில்லாத மேட்டிமையை வெளிப்படுத்துவது என்பது மிகச்சரியானதே. ஞானி அதை ஆரம்பித்து வைத்தவர். நேரடி அனுபவம் ஏதுமின்றி, கருத்தியலை முன் வைப்பவர்கள். ஒரு  செடியை நட்டு மரமாக்க வக்கில்லாதவர்கள், கணினி முன் அமர்ந்து கொண்டு, விவசாய பிரச்சினைகளை பேசுவது போன்றது. இளைஞர்கள்
சிந்திப்பது, அதன்படி செயலாற்றுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை.
இவர்களால் சமுகத்திற்கு என்ன பயன்? உடல் உழைப்பும் இல்லாமல், நுண்கலை சார்ந்த படைப்பாளியாகவும்  இல்லாமல், மேம்போக்காக எழுதும் இவர்கள் சமுகத்திற்கு என்ன பயன்?
நீங்கள்எப்போதும் சம நிலை (un biased) மாறாமல், எழுதுவதுதான் உங்கள் சிறப்பியல்பு. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் எதிர் நிலை தன்மை கொண்டவர்கள் (biased and negative). நன்றி!
தண்டா

அன்புள்ள தண்டா
எழுத்தாளர்களின் எதிர்மறைத்தன்மை என்பது பெரும்பாலும் ஒரு மோஸ்தர். நவீனத்துவ காலகட்டத்தில், இருத்தலியல் சார்ந்து எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்கக்கூடிய ,நம்பிக்கை இழப்பின் குரலில் பேசக்கூடிய, ஒரு கோணம் உருவாகியது. அதை எல்லாரும் அறியாமலேயேப் பிரதிபலிக்கிறார்கள் . நவீனத்துவம் மறைந்தாலும் பழைய பழக்கம் நீடிக்கிறது, அவ்வளவுதான்
ஜெ
அன்புள்ள ஜெ
அன்னா பற்றிய கட்டுரை அருமை.  ஸ்டார் ஹோட்டல் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து விட்டு கட்டுரை எழுதுவது சுலபம்.பொதுவாக நம் நாட்டில் ஒருவர் எந்த முயற்சி எடுத்தாலும் அவர்களைக் குறை கூறுவது வழக்கம்.திருவள்ளுவர் ஓரினச்சேர்க்கையைப் பற்றி எழுதவில்லையே;பாரதியார் க்ளோனிங்க் பற்றி எழுதவில்லை என்பது போல் அன்னாவைக் குறை கூறுகிறார்கள்.ஊழல் என்பது ஏதோ அரசு,அரசியல்வதிகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது மக்களிடமும் இரண்டறக் கலந்துள்ளது.ஆளும் வர்க்கம் அதன் பிரதிநிதிதான்
காந்தியில்லை என்றாலும் நம்மையெல்லாம் விட நிச்சயம் மேலான மனிதர்.
அன்புடன்
ராமானுஜம்
திரு ஜெயமோகன்
மும்பைத் தாக்குதலை ஒட்டி அன்ணா போராட்டம் போன்று ஒரு விழிப்பு வந்தது. அது என்ன பலனைத் தந்தது? இப்போது இங்கு பெருகும் ஆதரவு என்ன பலனைத் தரப் போகிறது? பவார் மீது நேரடியாகக் குற்றச்சாட்டு கூறுபவர் மற்றவை பற்றி ஏன் வாயே திறக்கவில்லை? இவை இயல்பான நியாயமான ஐயங்களே. அவற்றை அரசியல் என்றோ கூறுபவர்களுக்கு முத்திரை மட்டும் இடுவோம் என்றால், எந்த வாதம் தான் முழுப் பெரும்?
நட்புடன்
ராம்கி
அன்புள்ள ராம்கி
நீங்கள் கேட்டவற்றுக்குத்தான் கட்டுரையிலேயே மிகமிக நீளமான விளக்கமான பதில் உள்ளது, ஒரு தற்காலிக அலையாக எழும் மக்களின் உணர்வுகளை எப்படி நிலையான மனநிலை மாற்றமாக ஆக்குவது என்பதைப்பற்றித்தான் கட்டுரை பேசுகிறது
அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போர்கள் அவர்  பணியாற்றிய களமான ராலேகான் சித்தியின் ஆரம்பித்து மகாராஷ்டிர மாநில ஊழல்களுக்கு எதிராக விரிந்து அதன்பின் தகவலறியும் உரிமைக்கான போராட்டம் வழியாகவே தேசிய அளவுக்கு வந்தன. அந்த போராட்டத்தில் அங்கே அவருக்கு நேரடி எதிரியாகப் பல நீதிமன்ற வழக்குகளிலும் இருப்பவர் பவார். மற்ற ஊழல் அரசியல்வாதிகளுடன் அவருக்கு இப்போது நேரடிப்போர் இல்லை. இன்று அவர் முன்வைப்பது லோக்பாலுக்கான கோரிக்கையை. அதில் அவர் எந்த ஊழல் அரசியல் வாதியையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அந்த கோரிக்கையை மட்டும் முன்வைக்கிறார். அவர் ஏன் இந்தியாவில் உள்ள அத்தனை ஊழல் அரசியல்வாதிகளையும் பெயர் சொல்லவில்லை என்று கேட்பதன் அபத்தம், கொஞ்சம் யோசித்தாலே போதும், புரியக்கூடியதே
ஐயங்களை விவாதிக்கலாம். ஆனால் ஒரு  நல்ல நோக்கமுள்ள,  நல்ல தலைமை உள்ள போராட்டம் கொஞ்சம் மக்கள் ஆதரவையும் கவனத்தையும் பெற ஆரம்பித்ததுமே, அடித்துப்புரண்டு சென்று அதன் மேல்  ஐயங்களை அள்ளி வீசி, சேறு வாரி வீசி , குழப்பியடித்து அதன் இலக்கைத் தோற்கடிக்க முனைவதில் நல்ல நோக்கம் உள்ளது என்று எனக்கு தோன்றவில்லை
தன் நேர்மையையும் தன் தகுதியையும் அரைநூற்றாண்டுக்கு மேலாக நிறுவிக்கொண்ட ஒருவரை ஒரு கூச்சமும் இல்லாமல் இழிவுசெய்து முத்திரைகுத்துவது ஜனநாயகம் என்றும் கருத்துரிமை என்றும் எண்ணுகிறீர்கள். அப்படி முத்திரை குத்துவதின் உள்நோக்கம் பற்றி கேட்டால் உடனே அது ஜனநாயக விரோதம் என்றும் முத்திரைகுத்துதல் என்றும் சொல்லி மனமுடைகிறீர்கள்
வேடிக்கைதான்
ஜெ
அன்புள்ள ஜெ.
ஜனநாயகம் மற்றும் சத்தியாகிரகம் பற்றி, அசை போட வைக்கும் சிந்தனைகள். ஊடகங்களில் எழுத படுவதிலிருந்து ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒருபுறம் மிக மிக உயர்த்தி அல்லது, இவரும் மற்றவர் போன்றே என்கிற அவநம்பிக்கை பரப்பி.. வீட்டில் வளரும் இரு சிறுமிகளுக்கு பெரிய ஆச்சர்யம் (மானசா – ஏழாவது படிக்கிறாள் – வைஷ்ணவி – நான்காவது படிக்கிறாள்).. நிஜமாகவா.. என்று. சத்தியாகிரகம் மூலம் இது போல நடக்கலாமென.
அதிகம் புரியவில்லை எனினும், உற்சாக ஊற்றாக ஒரு விஷயம் அவர்களை கவர்ந்து, அவர்கள் மேலும் விஷயங்களை தேடி கண்டு பிடித்து கொள்கிறார்கள்.. மிக மகிழ்ச்சியான நிகழ்வே.
அன்புடன்
முரளி