பிறந்தநாள்

 

நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று  உரிமைகோரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்தது.

 

பிறந்தநாட்களில் எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை. என் அம்மா இருந்தவரைக்கும் பிடிவாதமாக இந்த நாளைக் கொண்டாடுவார்கள். தேவிகோயிலுக்கு ஒரு வழிபாடு. அனேகமாகச் சர்க்கரைப்பொங்கல். குளத்தில் குளித்து கோயிலில் கும்பிட்டுவிட்டு வந்தால் வீட்டிலும் ஏதாவது பாயசம் செய்திருப்பாள். அந்த பாயசத்தையும் பொங்கலையும் சின்ன சருவங்களில் எடுத்துக்கொண்டு வீடுவீடாகச் செல்வேன். நாலைந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மீள்வேன். அம்மா நான் சரஸ்வதிகடாட்சம் உள்ள அனைவரின் ஆசியையும் பெற்றாகவேண்டும் என்பதில் குறியாக இருப்பாள்.

 

அதன்பின் நீண்ட அலைச்சலில் எப்போதும் பிறந்தநாளை நினைவுகூர்ந்ததில்லை. திருமணத்திற்குப் பின் கொஞ்சநாள் அருண்மொழி நினைவுகூர்ந்து சிறிய கொண்டாட்டங்கள் செய்வதுண்டு. பாயசம் வைப்பது, புத்தாடை எடுப்பது. பிள்ளைகள் பிறந்தபோது அந்த முக்கியத்துவம் இல்லாமலாயிற்று. இப்போதெல்லாம் பிறந்தநாள் சிலநாட்கள் கழித்து நினைவுக்கு வந்தால்தான் உண்டு.

 

2009க்குப்பின் பிறந்தநாளின் அர்த்தமே மாறிப்போய்விட்டிருக்கிறது. மொத்த ஏப்ரல்- மே மாதங்களும் நிழல்போல வந்து நிறையும் நினைவுகளின் மாதங்கள். பிரியத்திற்குரிய பலர், முகம்கூட அறியாமல் அகம்நிறைந்த நட்புகளாக இருந்தவர்கள், கொல்லப்பட்ட நாட்கள் இவை. அவர்களில் சிலர் தமிழின் சிறந்த இலக்கியவாதிகளாக வந்திருக்கக் கூடியவர்கள். சிலர் இன்னும் என்னென்னவோ ஆகியிருந்திருக்கக் கூடியவர்கள்.

 

அரசியல் பிழைகள், மூர்க்கத்தனமான பிடிவாதங்கள், ஆழமான பரஸ்பர ஐயங்கள் என திரிந்து திரிந்து சிதைந்து ஒரு வரலாறு கண்முன் அபத்தநாடகமாக நிகழ்ந்து துக்கமான நினைவாக எஞ்சியிருக்கிறது.  அந்த கடைசி அழிவின் கணங்களில் அதிலிருந்த அர்த்தமின்மை மட்டுமே பெரிய மலைபோல முன்னால் நின்றது. பின்னர் அமெரிக்காவில் யோசிமிட்டியில் பலகிலோமிட்டர் உயரத்திற்கு செங்குத்தாக மேலே எழுந்து நின்ற ஒற்றைக் கரும்பாறை மலையைக் கண்டபோது சட்டென்று இந்த நாட்கள்தான் நினைவில் எழுந்தன.

 

அன்று இதன் முடிவு மார்ச்சிலேயே நன்றாக தெரிந்துவிட்டிருந்தமையால்  ஒட்டுமொத்தமாக இந்த வரலாற்றையே கண்ணைமூடிக்கொண்டு தாண்டிவிடலாமென்ற எண்ணம் இருந்தது. எரிந்துகொண்டே இருந்த மனக்கசப்பையும் வெறுமையையும் சொற்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அரசியல்கொந்தளிப்புகள். உணர்ச்சிக் கொந்தளிப்புகள்.  மௌன்ம ஒரு பெரிய திரையாக உதவியது. நீண்டகாலமாக இந்த அலையுடன் தொடர்புடையவர்களாக நானறிந்த அனைவருமே மௌனத்தில்தான் மூழ்கிக்கிடந்தார்கள்

 

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல முகங்கள் இன்னும் தெளிவாக ஆகின்றன. மறைந்தவர்கள் இன்னும் துலங்குகிறார்கள். அவர்களின் அருகாமை இன்னமும் கனக்கிறது. அதற்கடுத்த வருடம் கவனித்தேன். முந்தைய வருடத்தின் ஒட்டுமொத்த உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் பொய்யாய் பழங்கதையாய் மாற அன்று கண்ணீரையும் சொற்களையும் குழைத்துக்கொண்டிருந்தவர்கள் உலகத்தமிழ் மாநாட்டின் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தார்கள்.  இணையத்தில்கூட நினைவுகூரல்கள் மிகச்சிலவே

 

அதற்கடுத்த வருடம் அவையெல்லாமே பழைய வரலாறாக ஆகிவிட்டிருந்தன. அப்போது வந்த என்னுடைய கவிதை ஒன்றை வாசித்துவிட்டு ஈழநண்பர்  எழுதியிருந்தார், நினைவுகூர்வது சிலரே என்று.  இங்கே வந்த கல்பற்றா நாராயணனிடம் இரவெல்லாம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நாம் மட்டும் ஏன் நினைவுகளைக் கரைக்கமுடியாத கற்சிலைகள் போல ஆழத்தில் நிறைத்து வைத்திருக்கிறோம் என்று கேட்டேன்

 

‘எனென்றால் சமூகம் மறதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புனைகதை என்பது அந்த மறதிக்கு எதிரான கலகம்’ என்றார். ‘நினைவுகளை மறக்கமுடியாதவையாக ஆக்குவதே இலக்கியத்தின் வேலை’ என்றார். ஆம் , இருக்கலாம். நான் எழுதுவதெல்லாமே நினைவுகளைத்தானோ?

 

இந்த பிறந்தநாளின் ஒரே இனிய விஷயம் காலையில் கோதாவரியை நிறைத்து மூடிப்பெய்து குளிர்காற்றாக மாறிய முதல் மழைதான்.

 

 

 

ஜெ

யாரும் திரும்பவில்லை


வன்னி

 

எங்கே இருக்கிறீர்கள்

முந்தைய கட்டுரைகுடி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே, கடிதங்கள்