குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது, ஜூன் 11 அன்று.
நிகழ்ச்சி நடத்துவதையே பாதி மறந்தது போல் இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். இம்முறை முந்தைய ஆண்டுகளில் விருது பெற்ற வேணு வேட்ராயன், மதார் இருவருக்கும் இரண்டு அரங்குகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர்கள் படைப்புகள் இணையதளம் வழியாக இவ்விருதின் மூலம் கவனப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட நேரில் பாராட்டப்படுவது விமர்சிக்கப்படுவது என்பது கவிஞர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
விருது விழாவுக்கு மறுநாள் இயக்குநர் கௌதம் மேனனுடன் பேசிக்கொண்டிருக்கையில் இளம் கவிஞர்களுக்கான விருது எந்த வகையில் முக்கியமானது என்று சொன்னேன். இளம் எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்கு விருதுகள் முக்கியமோ அதைவிட ஒருபடி மேலாகவே கவிஞர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஏனெனில் கவிதை அடிக்கோடிடப்பட்டால் மட்டுமே அர்த்தம் கொள்ள ஆரம்பிக்கும் ஒரு கலை வடிவம்.
ஒரு கவிதையை எந்த உணர்ச்சியுமில்லாமல் வேகமாக உரையாடல் போல சொல்லிப்பாருங்கள், அது சர்வசாதாரணமாக ஆகிவிடும். அதன் வரிகள் தோறும் நிறுத்தி சரியான அழுத்தத்துடன் சொல்லும்போது கவிதையும் ஆகும். ஏனெனில் கவிதை என்பது அர்த்தமல்ல, மேலதிக அர்த்தம். அர்த்தம் சாதாரணமாகவும் மேலதிக அர்த்தம் வாசகனுக்குள் வளர்வதாக இருக்கும்போதுதான் நல்ல கவிதை உருவாகிறது.
ஆகவே எவரோ கவிதையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு மேல் ஒரு வெளிச்சத்தை அடித்துக்காட்ட வேண்டியிருக்கிறது. அவ்வாறு வெளிச்சம் அடிக்கப்படவில்லை எனில் பலசமயம் இளம் கவிஞர்கள் நெடுங்காலம் கவனிக்கப்படாமலேயே இருந்துவிட வாய்ப்புண்டு. அரிதாக அப்படியே மறைந்துவிடவும்கூடும்.
சென்ற சிற்றிதழ்க் காலகட்டங்களில் நல்ல கவிதை உடனடியாக சிற்றிதழ் சூழலுக்குள் கவனிக்கப்படும். அதற்குரிய வாசகர்கள் வந்து அமைவார்கள். சுந்தர ராமசாமி, பிரமிள், ஞானக்கூத்தன், தேவதச்சன் என தொடர்ச்சியாக கவிதையை கண்காணித்துக்கொண்டும், வாசித்த நல்லகவிதையை பிறருக்கு அடையாளப்படுத்திக்கொண்டும் இருந்த முன்னோடிகள் இருந்தனர்.
இன்றைய முகநூல் சூழலில் அவ்வாறு கவனிக்க முடியாதபடி கவிதை பெருகி பரந்து கிடக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கவிதைகளாவது இணையத்தில் அச்சேறுகின்றன. ஓரிரு மணி நேரங்களே மின்னி மறைந்துவிடுகின்றன. மூன்றுமாத இதழ்களில் கவிதை வந்த காலம் இருந்தது, மூன்று மாத காலம் கவிதை எப்படியேனும் கவனத்தில் நிற்கும். நன்றெனில் நீடிக்கும். பின்னர் அது மாதஇதழாகியது. வார இதழாகியது. இணைய தளங்களில் ஒருநாள் மட்டுமே நீடிப்பதாகியது. இன்று முகநூலில் சிலமணி நேரங்களே அது மேலே நிற்கிறது. ஒரு மலரைவிட குறைவான ஆயுள் கொண்டதாகிவிட்டது கவிதை.
கவிதையை ஒரு முகநூல் பதிவென்ற அளவிலேயே பார்த்து எதிர்வினையாற்றுகிறார்கள். சைக்கிள் பற்றி கவிதை எழுதினால் ‘உண்மைதான் இப்படியெல்லாம் சைக்கிள் ஓட்டக்கூடாது’ என்றோ ‘சைக்கிளை பூட்டி வைத்துப்போவது நலம் தோழர்’ என்றோ போகிற போக்கில் எதிர்வினையாற்றுபவர்களே அங்கே அதற்கு வாசகர்களாக அமைகிறார்கள். கவிதையை ஊதி அணைப்பது இந்த அணுமுறை.
இச்சூழலில் தான் அமைப்பு சார்ந்து கவிதைகளை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. கவிதைகளை சுட்டிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் இதை ஒரு பொறுப்பாக, முன்னோர்கள் விட்டுச் சென்ற பணியின் தொடர்ச்சியாக செய்கிறேன். ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். தங்கள் நோக்கில் தங்கள் ரசனையில்.
கௌதம் மேனனிடம் சொன்னேன். வீரான்குட்டியின் ஒரு கவிதையை சொல்லி இது எதைக்குறிக்கிறது என்றேன். அவர் அதன் மேலோட்டமான பொருளை மட்டும் சொன்னார். அடுத்த கட்டமாக அதை அழுத்தி வேறுவிதமாக சொன்ன உடனேயே ’ஆம் இது மேலும் அரசியல் தன்மை கொண்டது’ என்றார். இரண்டு பண்பாடுகளின் முரண்பாடு அதிலே இருக்கிறது என்றார்.
அந்த மேலதிக அழுத்ததை கவிதைக்கு அளிக்கவே விருதுகள் தேவையாகின்றன. கவிஞன் மேல் கவனம் விழுந்ததுமே அவன் சொற்கள் அடிக்கோடிடப்பட்டு விடுகின்றன. அப்படிக் கவனிக்கப்படுகையில் தகுதியான கவிஞன் மேலெழுகிறான், சிலர் தயங்கி அழியவும்கூடும்.
நான் 10-ம் தேதியே திரைவேலைகளுக்காக சென்னை வந்துவிட்டேன். அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு தொடர்ச்சியாக பயணங்கள். மூன்றாம்தேதி இந்தியா வந்தேன். நான்காம் தேதி காசர்கோடு சென்றேன். ஏழாம் தேதி காசர்கோடிலிருந்து வந்தேன். ஒன்பதாம் தேதி கிளம்பி சென்னை.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் ரெயின் ட்ரீயில் எனது அறை விசாலமானது. தனிப்பட்ட முறையில் மிகப்பிடித்த அறைகளில் ஒன்று. அதன் வரவேற்புப் பகுதி இரண்டு பக்கமும் முற்றிலும் கண்ணாடிகளால் திறந்து வானத்தை நோக்கி திறந்திருக்கும். வெட்ட வெளியில் இருக்கும் உணர்வும் வானில் இருக்கும் உணர்வும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். ஏழாவது மாடியில் இருக்கும் அந்த அறை விண்ணில் மிதப்பதுபோல உணரச்செய்வது.
நீண்ட நேரம் விடுதி அறைகளுக்குள்ளேயே இருக்கும் சலிப்பை போக்கக்கூடியவை கண்ணாடிச் சாளரங்கள். கண்ணாடிச் சாளரம் எந்த அளவுக்குப் பெரிதோ அந்த அளவுக்கு அறையை நான் விரும்புகிறேன். அழகிய அறைகளுக்குள் பாதுகாப்பாகவும் ஒருவகை சொகுசாகவும் உணர்கிறேன்.
11ம் தேதி காலை முதலே அமர்வுகள் தொடங்கின. குமரகுருபரனை நேரில் அறியாத ஒருவர் அவர் கவிதைகளைப்பற்றி மட்டுமே பேசவேண்டும் என கவிதா சொர்ணவல்லி விழைந்ததன் பேரில் இம்முறை கவிஞர் ச.துரை குமரகுருபரனின் கவிதைகளைப்பற்றி பேசினார்.
கவிஞர் ச.துரை குமரகுருபரன் விருது வழியாக குமரகுருபரனை அறிந்தவராக இருக்கலாம். மிக இளைஞராக அவர் எழுதிய மத்தி என்னும் தொகுப்புக்கு குமரகுருபரன் விருது அளிக்கப்பட்டது. எங்கள் கண்டடைதல் வீண்போகவில்லை என நிரூபிக்கும் ச.துரையின் இரண்டாவது தொகுதி சங்காயம் தமிழில் வெளிவந்த முக்கியமான கவிதைத்தொகுதிகளில் ஒன்று.
ச.துரையின் உரை கவிஞர்களுக்குரிய அடங்கிய குரல், தயக்கம், மின்னிச் செல்லும் அரிதான படிமங்கள், நுண்ணிய அவதானங்கள் ஆகியவற்றாலானதாக இருந்தது.
அதன் பின் கவிஞர் வேணு வேட்ராயனின் அமர்வு. வேணு கோவிட் காலத்தில் வெறிகொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது. விருதளிக்கச் சென்றபோது கோவிட் பற்றிய படிமங்களாலேயே பேச நேர்ந்தது என்று காளிப்ரசாத் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
முத்துக்குமார் வேணுவேட்ராயன் கவிதைகளைப்பற்றி பேசினார். தன்னம்பிக்கையும் அதன்விளைவான நிமிர்வும் கொண்ட குரலில் அகரமுதல்வன் வேணுவேட்ராயன் கவிதைகளைப்பற்றி பேசினார். அதிலிருக்கும் மெய்யியல் கூறுகளைத் தொட்டு சிறப்பான உரை.
வேணு ஏற்புரையில் அவ்வப்போது சொல் மறந்து சில கணங்கள் உறைந்து நின்றிருந்தபோது அவை அவரை நோக்கி அமர்ந்திருந்தது. விந்தையானதோர் அனுபவம் அது. ஒரு கவிஞனும் அரங்கும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவற்று அமைதியாக அமர்ந்திருப்பது ஒருவகை கூட்டு தியானம் போல் தோற்றமளித்தது. இந்த நிகழ்வில் நினைவில் நிற்கக்கூடிய அம்சங்களில் ஒன்று வேணுவின் அந்த அமைதி என்று தோன்றியது.
மதார் தயக்கமும் குழப்பமும், நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட இளம் கவிஞர். அவருடைய கவிதைகளைப்பற்றி கவிதாவும் அதன்பின் சுரேஷ் பிரதீப்பும் பேசினார்கள். சுரேஷ் பிரதீப்பின் குரலில் இருந்த தன்னம்பிக்கையும் சொற்களில் இருந்த கச்சிதமும் தொடர்ந்து சிந்திப்பவர்களுக்குரியவை. சிந்தனையை தங்களுக்குள் சொற்களாக ஓடவிடுபவர்களுக்கு மட்டும் அமையும் நாத்தயக்கமின்மை அவருடையது. முதிராச் சிறுவன் போல அவர் வாசகர் கடிதம் எழுதி எனக்கு அறிமுகமான நாட்களை நினைத்துக்கொண்டேன்.
மதிய உணவிற்குப்பிறகு அரங்கில் வீரான்குட்டி வாசகர்களை எதிர்கொண்டார். வாசகர்களின் கேள்விகளுக்கு விரிவாகவே பதில் சொன்னார். வீரான் குட்டியின் உரையாடல் அரங்குகளை முன்னரும் பார்த்திருக்கிறேன். அரசியல் அல்லது இலக்கிய வம்புகள் சார்ந்து எப்போதும் எந்த வார்த்தையும் அவர் சொல்வதில்லை. ஆனால் கவிதை என்பதைப்பற்றி எந்த தயக்கமும் இல்லாமல் தேர்ந்த சொற்களில் முன்பு ஒருமுறையும் கூறாத ஒரு பதிலை ஆனால் மிகப்பொருத்தமான பதிலை அவரால் சொல்ல முடியும்.
இந்த அரங்கிலும் வீரான்குட்டியின் உரையாடல்தான் முதன்மையான நிகழ்வு என்று தோன்றியது. ஒருவினாவிற்கு கூட பொருத்தமற்ற பதிலையோ அல்லது தயங்கிய பதிலையோ அவர் கூறவில்லை. அதே கணம் இது எனது கருத்து இப்போது தோன்றுவது, விமர்சகர்கள் இதை மறுக்கவும் கூடும் என்ற வரியை ஒவ்வொரு முறையும் சேர்த்துக்கொண்டார். அவர் குரல் மென்மையானது. பேசும் முறையும் பெண்மையின் மென்மை கொண்டது.
விடுதிக்குச் சென்று உடைமாற்றி சற்று ஓய்வெடுத்து வந்தேன். என் இருமல் என்னை முந்தைய இரவு சரியாகத் தூங்கவிடவில்லை. வரவேற்பறையில் திறந்த கண்ணாடி பரப்பு வழியாக வானத்தை பார்த்துக்கொண்டு நெடுநேரம் விழித்திருந்தேன். சிறு தூக்கம் உதவியாக இருந்தது.
மாலை ஐந்தரைக்கு விருது வழங்கும் விழா. விஷ்ணுபுரம் விழாக்கள் அனைத்தையும் போல சரியாக ஏழரை மணிக்கு விழா முடிந்தது. ஒவ்வொருவரும் சராசரியாக 25 நிமிடங்கள் பேசினார்கள்.
புதிய வாசகியாகிய கவிஞரும் எழுத்தாளருமான பார்கவி பேசினார். பார்கவிக்கு இலக்கியத்தின் மேலுள்ள பித்து என்பது நான் சில ஆண்டுகளாக கவனித்து வருவது. மேடையிலே அறிமுகம் செய்த காளிப்ரசாத் தனக்கு திருமணமான அன்றே கம்பராமாயணச் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றவர் என்று அவரை அறிமுகம் செய்தார். பார்கவி அவ்வாறு இல்லை என்றால்தான் வியந்திருப்பேன்.
தீவிரமாக ஒன்றை பற்றிக்கொள்வதற்குத்தான் இலக்கியத்துக்குள் வருகிறோம் மேலோட்டமாக அக்கறையற்று புழங்குவதாக இருந்தால் அது இலக்கியத்துக்கு வரவேண்டிய தேவையில்லை என்பது தான் எப்போதும் எனது எண்ணம். பார்கவியின் உரை சங்க இலக்கியம் கம்பராமாயணம் எனத் தொட்டு வந்து ஆனந்தகுமார் கவிதைகளின் எளிமையையும் அழகையும் சுட்டிக்காட்டியது
போகனுடைய உரை விரிவான தயாரிப்புடன் இருந்தது. கவிதை குறித்த பல கேள்விகளுக்கு விடைகளை தொட்டு வந்தார். கள்ளமற்ற எளிமையான ஒரு கவிதை எவ்வண்ணம் தன்னளவில் ஒரு அரசியல் கவிதையாகிறது. ஒரு கவிதை ஆற்றும் பணி என்ன ஆற்ற இயலாதது என்ன என விரிந்த உரை இதற்கு முன் விருது வாங்கியவர்கள் ஒவ்வொருவரையும் மதிப்பிட்டு கூறினார்.
வீரான்குட்டியின் உரை அவருடைய எப்போதைய உரைகளையும்போல சுருக்கமானது கவித்துவமானது. மொழி, பறவை சிறகால் தன்னை விசிறிக்கொள்வது போல தன்னைத்தானே குளிர்வித்துகொள்கிறது கவிதையினூடாக என்றார். மொழியின் சிறகு கவிதை எனக் கேட்டிருப்போம். பறத்தல் அல்ல குளிர்வித்தல் என்ற உவமை அக்கணத்தில் அவருக்குத் தோன்றியிருக்கும். ஆனால் அது நினைவில் நீடிக்கக்கூடியது.
கவிதை பற்றிய அனைத்து வரையறைகளும் நிலையற்றவை. ஆனால் நிலையான உறுதியான ஒரு பக்கவாட்டு கம்பியைப்போல பற்றிக்கொள்வது போல அவற்றைப்பிடித்துக்கொள்கிறேன் என்று சிம்போஸ்கயாவின் வரியை வீரான்குட்டி சொன்னார். கவிதையின் தன்னியல்பான தன்மை எடையற்ற தன்மை இந்த நூற்றாண்டில் அதுவே ஓர் அழகியலும் அரசியலும் ஆக மாறிவிட்டமை பற்றிச் சொன்னார்.
இறுதியாக நான் பேசினேன். சௌந்தர் நன்றியுரை சொன்னார். ஸ்ருதி டிவியின் பங்கேற்பால் இப்போது அந்த உரைகள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. முன்பெல்லாம் உரையின் ஒரு சுருக்கத்தையும் இந்த மாதிரியான குறிப்புகளில் அளிக்க வேண்டியிருக்கும். இப்போது மனப்பதிவுகளை மட்டுமே எழுதினால் போதுமென்று ஆகிவிட்டிருக்கிறது.
காலை பத்திலிருந்து மாலை வரை தொடர்ச்சியாக ஒரு நீண்ட உரையாடல் அதுவும் கவிதை குறித்து என்பது எந்த மொழியிலும் மிக அரிதான ஒன்றுதான். அதிலும் இக்கவிதைகள் அனைத்துமே களியாட்டமும் கொண்டாட்டமும் கொண்டவை. மதார், வீரான்குட்டி, ஆனந்தகுமார் மூவருமே குழந்தைமை களியாட்டு தன்மை கொண்ட கவிதைகளை எழுதுபவர்கள் ஆன்மீகமாக ஒரு காட்சிப்படிமத்திலிருந்து எழுந்து மேலே செல்லும் கவிதைகளை எழுதுபவர் வேணு வேட்ராயன். அவர்கள் கவிதை உலகம் ஒருநாளை முழுமையாகவே நிறைத்திருந்தது.
”நிறைந்தபின் பொங்குவதில்லை இனிய மது, பொங்குதலே நிறைத்தலென நிகழ்கிறது” என்று பீர் பற்றிய ஜெர்மானிய பாடலொன்றில் வருகிறது. பீர் அவர்களுடைய தேசியபானம் கவிதைக்கும் அது பொருந்துமென்று தோன்றுகிறது.
அந்த வரியை நான் அப்போது குமரகுருபரனுடையதாகவே நினைவுகூர்ந்தேன். ஞானம் நுரைக்கும் பீர்போத்தல். அந்த அரங்கும் அவரைப்போன்றது. நிறைதலும் பொங்குதலும் ஒன்றென நிகழ்ந்து சென்றவன். பொங்கியவை அவன் வரிகளென எஞ்சுகிறன.
புகைப்படங்கள் கார்த்திக், அறிவழகன், அம்ரே கார்த்திக், சுருதி டிவி.