மதாரில் இருந்து எமர்சனுக்கும் தேவதேவனுக்கும்- சக்திவேல்

மதார் விக்கி

அன்புள்ள ஜெ

சென்ற வாரம் நடந்த விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவின் கவிதை அமர்வுகளுக்காக கவிஞர் மதாரின் வெயில் பறந்தது தொகுப்பை மீள் வாசிப்பு செய்தேன். வெயில் பறந்தது கவிதைகள் அழகிய புன்னகையை வரவழைப்பவை. அவற்றில் இந்த கவிதை இன்று காலை சற்று முன்னர், “ஒரு தனித்த பொருள் பிரம்மாண்டத்தின் எழிலைக் குறிப்புணர்த்தும்போது மட்டும் தான் அழகாக இருக்கிறது.” என்ற எமர்சனின் வரிகளை திறக்க செய்தது.

கட்டையாகவும் நெட்டையாகவும்
ஒரு திருமணப் பந்தல் ஜோடி

ஜோடியரின் உயரம்
ஏணிப்படியின் ஏறுபடிகள் போல் இருந்தது.
ஒரு உயரத்திலிருந்து
இன்னொரு உயரத்திற்கு
காற்று தாழ்வாக ஏறியது.
ஒரு உயரத்திலிருந்து
இன்னொரு உயரத்திற்கு
மகிழ்ச்சி சென்று வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

ஒரு உயரம் இன்னொரு உயரத்தை
காதலோடு பார்த்தது

ஒரு உயரம் வானமாகவும்
இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது
மழையும் பறவைகளும் ஒளியும்
அதனை நிரப்பிக்கொண்டிருந்தன

வாசிக்கும் போதே பரவசத்தை உண்டு பண்ணுவது, இக்கவிதை தொகுப்பு குறித்த பலராலும் கட்டாயம் குறிப்பிடப்படுவது, அதிலும் தவறாமல் ஒரு உயரம் வானமாகவும் இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது என்ற வரிகள். இவ்வரிகளுக்கு வரும்போது தான் நாம் கவிதையை கண்டு கொள்கிறோம். எமர்சனின் வரிகள் ஒரு சாரம்சமாக மட்டுமே மனதில் இருந்தன, நினைவில் கொள்ளவும் உங்களுக்கு எழுதுவதன் பொருட்டும் இணையத்தை சொடுக்கி திறந்து படிக்கையில் அவரது, “சிறந்த சிந்தனைகள் சிறந்த கனவுகளை விட மேலானவையல்ல என்ற உண்மையை நமக்கு கற்பிப்பதற்குதான் எந்த அளவு சிரமமான பயிற்சி தேவைப்படுகிறது” என்ற சொற்களும் முதல் முறையாக பொருள் புரிந்தன. ஏனெனில் அழகு குறித்த எமர்சன் சொல்லும் தன்னுணர்வை அவரது சொற்கள் மூலமாக அல்ல, கவிதையெனும் கனவு வழியாகவே வந்தடைந்தேன். அவரது சொற்கள் கவிதையனுபவத்திற்கு பின் ஒரு தெளிவை உறுதிப்படுத்தி கொள்ள உதவின.

சிலநாட்களுக்கு முன் தோன்றிய மதாரின் கவிதை குறித்த மற்றொரு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

துக்கம் ஒரு பரிசுப்பொருள்
நெடுநாள் என் மேசை மீது கிடக்கிறது
ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன்
சரிகை முடிச்சிடுகிறேன்
தூங்கச் செல்கிறேன்
அது அங்கேயே கிடப்பதில்
சந்தோஷந்தான் எனக்கு
பிறந்த குழந்தை போல
அது அங்கேயே கிடக்கிறது
அது தவழ்வதில்லை
நடக்கவும் செய்யாது
அது ஒரு எளிய அற்புதப் பொருள்
அதன் தொனி மௌனம்
அதன் பணி பிணியறுப்பு

இக்கவிதை அண்மையில் அரூ இதழில் வெளியான தேவதேவனின் இன்னொரு கவிதையை நினைவூட்டியது,

இழப்பு

நான் உன்னைக் கண்டுகொண்ட
நாள்தான்
இப்படி விரிந்து கிடக்கிறதோ ?
அந்த அமைதியை
யார் விரும்புகிறார்கள் ?

குழந்தைகள் மட்டும்தான்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் !

பார்த்துக் களித்துக் கொண்டிருக்கும்
பெற்றோர்களும்
கண்டுகொள்ளவில்லை.

இசை முதலாம் எல்லாக் கலைகளும்
தோற்றுவிட்டன.

பெரும் புதையலை தனக்குள்
கொண்டிருக்கும்
இந்த அமைதியை
அகழ்ந்து பார்க்க தெரியாத
அச்சமும் ஆர்வமின்மையாலும்தான்
அகலாது
நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
நம் துயர்களும் போர்களும் ?

துக்கம் என்பது ஒரு இழப்பன்றி வேறென்ன? இருகவிதைகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். முந்தையது குழந்தையின் குரலில் சொல்கையில் அடுத்தது புத்தனின் குரலில். அவர்கள் ஒன்றின் இரு தோற்றங்களே.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைஎழுத்தாளனும் நண்பர்களும் -கடிதம்
அடுத்த கட்டுரைஜெகசிற்பியன், நகுபோலியன்