அண்ணா ஹசாரே-2

(தொடர்ச்சி] அண்ணா ஹசாரே-1

சத்யாக்கிரகத்தின் வழிமுறைகள்

சத்யாக்கிரகம் மக்கள் போராட்டம். ஆகவே மக்களின் எல்லா பலங்களும் பலவீனங்களும் கொண்டது அது. காந்தியே அதைப் பலவிதமான சோதனைகள் மூலம், பலவகை கசப்பான அனுபவங்கள் மூலம் மெதுவாகத்தான் கற்றுக்கொண்டு வளர்த்தெடுத்தார். காந்தியின் போராட்டங்களைப் பார்த்தாலே அந்த வழிமுறைகளின் எல்லா அம்சங்களும் தெரியவரும்.

எந்த மக்கள் போராட்டத்தையும் தீர்மானிக்கும் மக்களின் இயல்புகள் சில உள்ளன.  அவற்றைக் கருத்தில் கொண்டுதான் சத்தியாக்கிரகம் போன்ற மக்கள் போராட்டங்களை வடிவமைக்க முடியும். அவற்றை மக்களின் பலவீனங்கள் என்று கொள்வதை விட பெருந்திரள் மனநிலைகள் என்று கொள்வதே உகந்தது.

மக்களிடம் உள்ள அரசியல் கருத்துநிலை என்பது அவர்களிடம் அவர்கள் அறியாமலேயே உறைவது மட்டுமே. அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிந்துகொள்வதிலோ, விவாதித்து அறிவதிலோ, மறுபரிசீலனை செய்வதிலோ ஆர்வமில்லாதவர்கள்.

ஆகவே கருத்துக்களின் மிக எளிமையான ஒரு வடிவத்தை  தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மக்களிடையே கொண்டுசெல்வதே மக்கள் போராட்டத்தில் முக்கியமானது. சிக்கலான கருத்து-எதிர்கருத்து வடிவில் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது.  அவர்கள் கோருவது திட்டவட்டமான ஒரு கருத்தை. அக்கருத்து ஒரு குறியீடாக இருக்கும் என்றால் இன்னும் எளிதாக மக்கள் அதை நோக்கி வருகிறார்கள். காந்தி சர்க்கா, கதர், உப்பு என படிமங்களைத்தான் கையாண்டார் என்பதைக் காணலாம்.

கருத்துக்களை வெறும் கருத்துவடிவில் ஒருபோதும் மக்களிடம் கொண்டு செல்லமுடியாது. அவர்கள் அதை கவனிக்கவே போவதில்லை. நடவடிக்கைகளை மட்டுமே மக்கள் கவனிப்பார்கள். மதுவின் தீமைகளைப்பற்றி என்ன பேசினாலும் எவ்வளவு எழுதினாலும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. மதுக்கடை முன் குறுக்கே படுத்து ஒரு மறியல் செய்தால், அதற்காக நூறுபேர் சிறை சென்றால், அது கவனிக்கப்படும்.

மக்களைப்பற்றிய  இந்த இரு அடிப்படை விஷயங்களை காந்தி உணர்ந்திருந்தது போலவே உணர்ந்திருந்தவர் ஹிட்லர். இன்னும் தெளிவாக அவர் இதை அவரது மெய்ன் காம்ப் நூலில் விவரிக்கிறார். கருத்துக்களை எளிமையாக்கி, படிமங்களாக்கி, நடவடிக்கைகளாக மக்களிடம் கொண்டுசெல்வதன் பல நிலைகளை நாம் மெய்ன் காம்ப் நூலில் காணலாம். வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய ஃபாசிசத்தின் ஆள்க்கூட்ட உளவியல் என்ற நூல் ஹிட்லரின் புரிதல்களை இன்னும் விரிவாக ஆராய்கிறது. ஹிட்லர் மக்களை ஏமாற்றி  கையாள நினைத்தார் . காந்தி அவர்களை அரசியல்படுத்த முயல்கிறார் என்பதே வேறுபாடு.

ஆகவே சத்தியாக்கிரக போராட்டம் எப்போதுமே பிரம்மாண்டமான ஒரு பிரச்சார இயக்கம் என்பதை காணலாம். ஒரு கருத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய கோஷமாக ஆக்கி, அதை ஒரு நடவடிக்கையாக முன்வைத்து ,எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி தீவிரமாகச் செய்யப்படும் பிரச்சாரம்தான் சத்தியாக்கிரக போராட்டம். ஒரு சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக மாபெரும் பிரச்சார இயக்கம் ஒன்றை நிகழ்த்துவது காந்தியின் வழக்கம். அதேபோல அந்த போராட்டம் தொடங்கியபின் பின்னணியில் பிரச்சார இயக்கம் தொடர்ந்து நிகழ அவர் கவனம் கொள்வார்

சிறந்த உதாரணம் வைக்கம் சத்தியாக்கிரகம்தான். கிட்டத்தட்ட இரண்டு வருடம் அதற்கான பிரச்சார இயக்கம் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதன் பின் வைக்கம் ஆலயத்துக்கு முன்னால் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது கேரளம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இடைவெளியில்லாமல் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அதற்கென்றே செய்தித்தாள்கள் ஆரம்பிக்கப்பட்டன.

காந்தி அவரது சத்தியாக்கிரக போராட்டங்களை ஊடகங்களின் முன்னால்தான் நடத்தினார். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அவற்றை பார்க்கவேண்டும் என நினைத்தார். வானொலியையும் செய்தித்தாள்களையும் பயன்படுத்தி உலகம் முழுக்க அந்த போராட்டத்தின் செய்தி சென்று சேர முயற்சி எடுத்துக்கொண்டார்.

ஆகவே ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தை ஊடகங்களை கவரும் விளம்பர ஸ்டண்ட் என்று சொல்வதென்பது அறியாமை மட்டுமே. சத்தியாக்கிரகத்தின் நோக்கமே மக்களை நோக்கி பேசுவதுதான். அது சத்தியாக்கிரகம் செய்பவருக்கும் அரசாங்கத்துக்குமான பலப்பரீட்சை அல்ல.

இரண்டாவதாக எந்த மக்கள்போராட்டத்திற்கும் எதிராக நிற்கும் அம்சம் மக்களின் லௌகீக இயல்புதான். மக்கள், அதாவது நாம்,   எப்போதும் தங்கள் லௌகீக வாழ்க்கையிலேயே மூழ்கி இருப்பவர்கள்.  லௌகீக லாபநோக்குகளும் பயங்களும் மட்டுமே அவர்களை ஆள்கின்றன. எந்த வகையான உயர் இலட்சியங்களாலும் அவர்கள் இயக்கப்படுவதில்லை. நம்மைச்சுற்றியுள்ள அன்றாட வாழ்க்கையை ஒருமுறை பார்த்தாலே இது விளங்கும். இலட்சியவாத எழுச்சி அவர்களில் ஏற்படலாம், ஆனால் மிக குறுகிய காலகட்டத்தில் அது மறைந்தும் போகும்.

ஆகவே சத்தியாக்கிரகம் என்பது சாத்தியமான குறைந்தபட்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்துத்தான் நடத்தப்படும். அதுவே மக்களை உள்ளே கொண்டுவரும். காந்தியின் எல்லா சத்தியாக்கிரகப் போராட்டங்களும் சாதாரணமான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்தே நடத்தப்பட்டன. உச்சகட்ட ஒட்டுமொத்த கோரிக்கை ஒன்றை ஒருபோதும் சத்தியாக்கிரகம் இலக்காக எடுத்துக்கொள்ளமுடியாது. உடனடியாக பிரிட்டிஷார் டெல்லியை விட்டு போகவேண்டும் என காந்தி சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கவில்லை, உப்பு காய்ச்சும் உரிமைக்காகத்தான் ஆரம்பித்தார்.

அந்த போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும். உப்பு காய்ச்சும் உரிமை கிடைத்ததும் வெள்ளைஆதிக்கம் போய்விடுமா என்ன? இல்லை. ஆனால் வெள்ளை ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்தமான ஒரு கருத்தியல்திருப்பம் நிகழ்கிறது. அந்த ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தின் அடித்தளம் தகர்கிறது. காந்தி உத்தேசித்ததும் அதுவே.

உண்மையில் அந்த போராட்டம் ஒரு படி மட்டுமே. காந்தியப்போராட்டம் என்பது உடனடியாக அடுத்த படியை நோக்கிச் செல்லும். உப்புகாய்ச்ச வெள்ளையர் அனுமதி கொடுத்ததுமே அடுத்த கட்ட நடவடிக்கையை காந்தி திட்டமிட ஆரம்பிப்பார். வைக்கம் போராட்டமே மீண்டும் உதாரணம். வைக்கத்தில் போராட்டம் வென்று ஒப்பந்தம் கையெழுத்தான ஆறாம் மாதத்தில் செறாயி முதல் குருவாயூர் வரை பிற ஆலயங்களில் போராட்டம் ஆரம்பித்தது. அந்த போராட்டம் வென்ற ஒருவருடத்திற்குள் இந்தியா முழுக்க  அதே போராட்டம் ஆரம்பித்தது

சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான்.  எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது.

ஆகவே ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தை பார்த்து இந்த சின்ன கோரிக்கைக்காகவா போராட்டம், எவ்வளவு பெரிய விஷயமெல்லாம் இருக்கின்றன என்று கேட்பது அசட்டுத்தனம் அன்றி வேறல்ல. அந்த பெரிய விஷயங்களை நோக்கிச் செல்வதற்காகவே இந்த சின்ன போராட்டம்.

பிற போராட்டங்களுக்கும் காந்தியப்போராட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடே இதுதான். இதைப்பற்றி இங்கே கோதாவரிக்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது கல்பற்றா நாராயணன்  சொன்னார். மற்ற போராட்டங்களில்  அந்தக் கடைசி வெற்றி சாத்தியமாகவில்லை என்றால் எல்லாமே தோல்விதான். இழப்புகளும் தியாகங்களும் எல்லாமே வீண் தான். காந்தியப்போராட்டம் அடைந்த ஒவ்வொன்றையும் தக்கவைத்துக்கொண்டு மேலே செல்லக்கூடியது. அதில் தோல்வி என்பது இல்லை. வெற்றியின் அளவு குறையலாம், அவ்வளவுதான்.

அதற்கும் மலை ஏறுவதையே படிமமாக காட்டலாம்.   மலை ஏறுபவர்கள் மேலே ஓர் இலக்கில் கயிறுகட்டி தொற்றும்போது கீழே ஒரு இடத்தில் கயிறை கட்டி வைத்திருப்பார்கள். மேலே உள்ள இலக்கு தவறி கயிறு விழுமென்றால்கூட கீழே உள்ள இலக்கில் தொங்கிக்கொள்வார்கள். அதல பாதாளம் நோக்கிச் செல்வதில்லை. .

மக்களின் அச்சத்தையும் சுயநலத்தையும் கணக்கில் கொள்ளாமல் மக்கள் போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவே முடியாது. மக்கள் இழப்பை அஞ்சுவார்கள். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொன்றும் அவர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி அடைந்தவை. கண்ணுக்குத்தெரியாத ஒன்றுக்காக அவர்கள் அவற்றை உதறவேண்டும், உயிரைக்கொடுக்க முன்வரவேண்டும் என்று கோருவதில் பொருளே இல்லை. உப்புசத்தியாக்கிரகம் அதன் உச்சத்தில் அப்போதுவந்த பண்டிகைகளினால் சட்டென்று அணைந்து போயிருக்கிறது. வைக்கம் போராட்டம் கடும் மழை காரணமாக பலமாதங்கள் இல்லாமல் ஆகியது. அதுதான் மக்களின் இயல்பு

எதிர்மறை காரணங்களுக்காக மக்களை திரட்டுவது மிக எளிது. பொது எதிரி சுட்டிக்காட்டப்பட்டு, அவன் மேல் வெறுப்பு எழுப்பப்பட்டால் மக்கள் எளிதில் திரள்வார்கள். கூட்டமாகச் செயல்பட்டால் ஆபத்தில்லை என்பதனால் அவர்கள் வன்முறைக்கும் தயாராவார்கள்.  இலட்சியவாத காரணங்களுக்காக மக்கள் எளிதில் திரளமாட்டார்கள். உண்மையில் களத்தில் இருக்கும் பல இடதுசாரி நண்பர்கள் மக்களின் இந்த அச்சத்தையும் சுயநலத்தையும் பற்றி மனமுடைந்து சொன்ன பல வரிகள் என் நினைவில் வருகின்றன.

ஆகவே எந்த இலட்சியத்தையும் ஒரு நடைமுறை கோரிக்கையாக ஆக்கி, ஆபத்தும் இழப்பும் குறைவான போராட்டமாக உருவம் மாற்றி, பலபடிகளில் நடைபெறும் நீடித்த சமூக இயக்கமாக ஆக்குவதே சத்தியாக்கிரகத்தின் வழிமுறை.

மூன்றாவதாக, முன்னர் சொன்னதுபோல மக்கள்போராட்டம் என்பது மக்கள்மனநிலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டமே. மக்களிடம் ஓங்கி இருக்கும் ஒரு இயல்பே அந்த மக்களின் அரசாங்கத்திலும் பிரதிபலிக்கிறது. மக்களின் பிரதிநிதித்துவமுகமே அரசு. நம் மக்களிடம் ஓங்கியிருக்கும் ஊழலே அரசின் ஊழல். அதை உருவாக்குவதும் அதன் பலியாடுகளும் அவர்களே. அந்த பெரும்பான்மை கருத்தியலுக்கு எதிராக ஒரு ஆக்கபூர்வ சிறுபான்மையின் குரலே மாற்றத்துக்காக எழுகிறது.

அதாவது சத்தியாக்கிரகம் என்பது பெரும்பான்மைக்கு எதிராக சிறுபான்மையின் போராட்டம். அது பெரும்பான்மையின் மனசாட்சியை தீண்டி எழுப்புவதாக, அவர்களிடம் உண்மையை உடைத்துக்காட்டுவதாக மட்டுமே இருக்க முடியும். சாத்வீகமான கருத்தியல் போராக மட்டுமே நிகழ முடியும்.

‘இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காவாது, கெளம்பி அடிக்க வேண்டியதுதான்’ என்ற வகை பேச்சுகளை நாம் கேட்கிறோம். யார் யாரை அடிப்பது? இங்கே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேரும் ஏதோ ஒருவகையில் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்கள். மிக அடித்தள மக்களில் கூட அமைப்புசார்ந்த ஊழல் இருப்பதை, பெரும்பாலான பஞ்சாயத்துகள் அதன் அடிப்படையில் நிகழ்வதை நானே நேரில் கண்டிருக்கிறேன். ஊழல் இங்கே ஓர் அன்றாட வாழ்க்கைமுறை. அந்த ஊழலுடன் சம்பந்தமே இல்லாமல் வெளியே நிற்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் அடிக்கக்  கிளம்பி என்ன செய்யப்போகிறார்கள்? கைப்பிள்ளை கிளம்பிய கணக்காகத்தான் ஆகும்.

பிரச்சினை ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த கருத்தியல் சார்ந்ததாக இருக்கும்போது அந்தக் கருத்தியலை பிரச்சார நடவடிக்கை மூலம் மாற்றுவதற்கான ஒரு வழிமுறைதான் சத்தியாக்கிரகம் என்பது. அது அல்லாமல் வேறு வழியே இல்லை

அண்ணா ஹசாரே செய்வது என்ன?

அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் செய்து காட்டியது காந்தி கூறிய கிராம நிர்மாணத்திட்டம்.   மும்பையில்  காங்கிரஸ் ஆட்சிகளுக்கு எதிராகச் செய்ததும் சரி, இப்போது டெல்லியில் லோக்பால் அமைப்புக்காகச் செய்வதும் சரி, காந்திய வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்கள். அவற்றின்  வெற்றியும் தோல்வியும் உண்மையில் அவர் கையில் இல்லை. அதற்கு மக்கள் ஆற்றும் எதிர்வினையில் உள்ளது. ஊழலுக்கு எதிராக அவர் ஒரு பிரச்சாரத்தை முன்வைக்கிறார். அதை மக்களில் எத்தனை சதவீதம்பேர் ஏற்றுக்கொள்கிறார்கள், எத்தனை சதவீதம் பேர் எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதைப்பொறுத்தே அவரது வெற்றி அமையும். இந்திய சிவில்சமூகம் ஊழலை தவிர்க்க உண்மையில் விரும்பவில்லை என்றால் அவர் ஒன்றும் செய்யமுடியாது.

இன்று அவரது போராட்டத்துக்கு உருவாகும் ஆதரவும் அதன் மூலம் உருவாகும் சாதகமான விளைவுகளும் இந்திய சமூகத்தில் ஒரு சிறு பகுதி ஊழலுக்கு எதிரான மனநிலையை அடைந்துள்ளது, எதிர்வினையாற்றுகிறது என்பதற்கான ஆதாரங்கள். இந்த ஆதரவு அதிகமும் வட மாநிலங்களில்தான்.  தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மிகமிகக் குறைவான எதிர்வினையே இருந்தது. அதற்குக் காரணம் இங்குள்ள வாய்ச்சேவை இதழாளர்களும் அறிவுஜீவிகளும்  எடுத்த எடுப்பிலேயே அந்த இயக்கத்தின் மேல் அவநம்பிக்கையை உருவாக்கி, அதைப்பற்றி திரித்தும் சுழற்றியும் பேசி குழப்பி விட்டமைதான்.

இப்படி அபூர்வமாக உருவாகும் ஓர் இயக்கம் தோற்றுப்போகவேண்டும் என்ற விருப்பம் ஏன் எழுகிறது என்பது உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. எதையும் தன்னால் உடைக்க முடியும் என்ற அறிவுத்திமிர் மட்டுமே இதில் செயல்படுகிறதா என நான் சந்தேகப்படுகிறேன்.

இவர்களில் சிலர் சொல்லும் வாதம் என்னவென்றால் இந்த கோரிக்கை சின்னதாகப்போய்விட்டதனால் எதிர்க்கிறார்களாம், ஒட்டுமொத்த ஊழலையும் உடனடியாக களைந்து அன்னியநாட்டு வங்கிகளில் உள்ள ஒட்டுமொத்த ஊழல்பணத்தையும் உடனே கொண்டு வர கோரி உண்ணாவிரதம் இருந்திருந்தால் ஆதரித்திருப்பார்களாம். வேடிக்கைதான். இந்த சின்ன கோரிக்கையையே ஒருங்கிணைந்து அழுத்தம் தர முடியாமல் வாய்ப்பந்தல் போட்டு பிளவுபட்டு கிடக்கும் நம் அறிவுஜீவிச்சமூகமா அந்த பெரிய கோரிக்கைக்காக திரளப்போகிறது?

ஒவ்வொரு குற்றச்சாட்டாக பார்ப்போம். நம் கட்சிசார் இடதுசாரிகள் சொல்வது  அவர்கள் செய்வதற்கே நேர் மாறானது. இன்றுவரை அவர்களே அவர்களுடைய பெரும்பாலான கோரிக்கைகளை காந்திய வழிகளான தர்ணா, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் வழியாகத்தான் முன்வைத்து போராடி வருகிறார்கள். இடதுசாரி தொழிற்சங்கவாதியாக நானே அப்படி பல போராட்டங்களில் சத்தியாக்கிரகமும் உண்ணாவிரதமும் இருந்திருக்கிறேன்.

லோக்பால் அமைப்பு இன்னொரு அரசாங்க அமைப்புதான், அதற்காகவா இந்தப் போராட்டம் என்ற கருத்தையும் அவர்கள் யோசித்துத்தான் சொல்கிறார்களா என்று ஐயமாக இருக்கிறது. காந்திய போராட்டமே அவ்வாறு ஒரு அப்பட்டமான நேரடியான உடனடி கோரிக்கைமீதுதான் நிகழ முடியும். அதாவது அதை கேள்விப்படும் அக்கறை இல்லாத சாமானியனுக்கு அது ஒரு எளிய அடிப்படைக் கோரிக்கைதானே என்று தோன்றவேண்டும். உப்பு அள்ளுவதைப்போல!  காந்திய வழிமுறைகள் எப்போதுமே சட்டத்துக்கு உட்பட்ட, அடிப்படை உரிமையான ஒன்றை முன்வைத்தே ஆரம்பிக்கப்படுகின்றன.

உதாரணமாக தமிழகத்தில் இறால்பண்ணைகளுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தைச் சொல்லலாம். அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் குத்துமதிப்பாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். சாலைமறியல் செய்தார்கள். உடனே   தீவிரஇடதுசாரிகள் சிலர்  உள்ளே வந்து ‘இறால்பண்ணை அழிப்பு போர் ’ என்று ஊர் ஊராக சுவரில்  எழுதிப்போட்டு ஒரே ஒருநாள் எழுபதுபேர் கைதாகி விடுதலையாகியதும் அப்படியே போராட்டத்தை அந்தரத்தில் கைவிட்டுவிட்டு அடுத்த போராட்டத்துக்கு சென்றார்கள். பிழைப்புக்காக போராடிய மக்கள் நக்சலைட்டுகள் என முத்திரைகுத்தப்பட்டு அடித்து ஒடுக்கப்பட்டார்கள்.

அந்நிலையில் அங்கே வீடுகட்டும் சர்வோதய இயக்கத்துக்காக வந்த  முதிர்ந்த காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாளும் ஜெகன்னாதனும் அந்த  எளிய மக்களின் கோரிக்கைக்கு இணங்கி அந்த போரில் இறங்கினார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் காந்திய வழிமுறைகளை கொண்டுவந்தார்கள்.  இறால்பண்ணைகள் உருவாக்கும் சூழல் அழிவுகளை விரிவாக தொகுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். சாதகமான  உச்சநீதிமன்ற ஆணை பெறப்பட்டது.  அந்த ஆணையை நிறைவேற்றக்கோரி பலபடிகளிலாக சட்டபூர்வமான போராட்டம் நடத்தப்பட்டது, போராட்டம் வென்றது. நம் தீவிரஇடதுசாரிகள் என்ன செய்தார்கள்? ஜெகன்னாதன் நீதிமன்ற வழக்கு தொடுத்தபோது அவரை  முதலாளிகளின் கைக்கூலி என தெருத்தெருவாக அவதூறுசெய்து சுவரில் எழுதிப்போட்டு அவமதித்தார்கள்.  முதலாளித்துவ நீதிமன்றத்தை அவர் நாடிவிட்டாராம்!

லோக்பால் அமைப்பு ‘வெறும்’ அரசாங்க அமைப்பு என்று சொல்பவர்கள் இந்திய யதார்த்ததை உணர்ந்தவர்கள்தானா? இந்த தேர்தலில் ஒரு அரசு அமைப்பான தேர்தல் கமிஷன் என்ன செய்யமுடிந்தது என நாம் கண்டோமே. தேர்தல் ஊழல்களுக்கு எதிராக நமக்கு இன்றிருக்கும் ஒரே காவல் அமைப்பு அதுதான். அது இல்லையேல் நம் தேர்தலே கேலிக்கூத்தாகி நமது எல்லா ஜனநாயக உரிமைகளும் ரத்தாகிவிட்டிருக்குமே. இந்த வாய்சால இதழாளர்களா நம் ஜனநாயகத்துக்கு காவலாக இருக்கிறார்கள்?

ஏன், இவர்கள் பேசும் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலையே யார் தேசத்துக்கு முன்னால் வைத்தார்கள்? தேசிய கணக்காய கட்டுப்பாட்டு அமைப்புதானே? தகவல் அறியும் உரிமை என்பது ஒரு சட்ட விதி மட்டுமே. அது உருவாக்கும் ஊழல்தடுப்பு எந்த அரசியல் அமைப்பை விடவும் மேலானது அல்லவா. தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்புகளை நம்பி இங்கே எவ்வளவு எதிர்நடவடிக்கைகள் நடக்கின்றன.
இன்றும்  இந்தியாவில் நீதிமன்றங்கள் சுற்றுச்சூழலுக்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பதை அறியாமலா இவர்கள் பேசுகிறார்கள்?

ஆம், ஜனநாயகத்தில் ஊழலுக்கு எதிரான தடுப்பு என்பது அதற்கான சட்டபூர்வ அமைப்புகளை உருவாக்குவதே. அந்த அமைப்புகளை கண்காணித்து சிறப்பாக நடைபெறச்செய்வதே.  அதன்பின் இன்னும் அதைவிட தீவிரமான அமைப்புகளை உருவாக்க முயல்வதே. அதைத்தான் செய்யமுயல்கிறார் அண்ணா ஹசாரே. அவர் உச்சிநுனியில் ஆரம்பிக்க வேண்டும், ஒரே வீச்சில் இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டும் என இவர்கள் சொல்கிறார்கள்.

இடதுசாரி தீவிரவாதிகளை நாசகார சக்திகள் என்று மட்டுமே நான் நினைக்கிறேன். ஆக்கபூர்வ சிந்தனைகள் அவர்களிடம் இருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டில் ருஷ்யா, சீனா , கம்போடியா, வடகொரியா என மாபெரும் மானுட அழிவுகளை உருவாக்கிய அதே நச்சு சிந்தாந்த நம்பிக்கைகள் கொண்ட மானுட விரோதிகள் அவர்கள்.  இவர்கள் பேசும் மாவோயிசம் அதன் தாய்நாடான சீனாவிலேயே கைவிடப்பட்டுவிட்ட ஒன்று. இன்றைய சீனாவின் சீரழிவு முதலாளித்துவம் அதற்கு போட்டியாக எழும் இந்திய முதலாளித்துவத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் அள்ளி வீசும் சில்லறைகளுக்காக இங்கே நாக்கையும் துவக்கையும் ஏந்தும் கும்பல் இது. இவர்கள் இந்திய மக்களைப்பற்றியோ இங்குள்ள வாழ்க்கையைப்பற்றியோ அக்கறையுடன் ஏதேனும் சொல்வார்கள் என நான் நினைக்கவில்லை.

இந்துத்துவர்களின் சங்கடங்கள் வெறும் கட்சிஅரசியல். அவர்களின் இன்றைய அரசியல் என்பது ’சோனியா-மன்மோகன் கூட்டணி ஊழலின் மொத்த உருவம், பாரதீய ஜனதாவே அதற்கு ஒரே மாற்று’ என்ற கோஷம் . இந்த நிலைபாட்டை ஏற்காதவர்கள் எதிரிகள். அதை ஏற்றுக்கொண்டு காவிக்குல்லாவுடன் அண்ணா ஹசாரே அமர வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. பாரதிய ஜனதாவின் முந்தைய ஆட்சியும் ஊழலிலேயே நடந்தது என்பதை எவரும் அறிவார்கள். அது ரஞ்சன் பட்டாச்சாரியா பிரமோத் மகாஜன் என இரு வசூல்ராஜாக்கள் சேர்ந்து நடத்திய ஆட்சி. சமீபத்தில் இந்திய சரித்திரத்தின் சிறந்த ஊழலாட்சிகளில் ஒன்றை சிந்தியா மகாராணி ராஜஸ்தானில் நிறைவுசெய்த வரலாறும் இருக்கிறது. நாளை பிஜெபி ஆட்சிக்கு வந்தால் லோக்பால் அவர்களுக்கும் சிக்கல்தானே?

ஒரு காந்தியப்போராட்டம் என்பது குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் சாத்தியமான எல்லா ஆதரவையும் திரட்டிக்கொள்வதுதான். ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொருவரையும் விலக்கினால் கடைசியில் அண்ணா மட்டும்தான் அங்கே உட்கார வேண்டியிருக்கும். இறால் பண்ணை போராட்டத்தில் சிறுநிலக்கிழார்களும் வந்து சேர்ந்துகொண்டபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஜெகன்னாதன் சொன்னார் ‘நம் நோக்கம் இறால்பண்ணைகளை நிறுத்துவது. அதற்கான ஆதரவு நமக்கு தேவை. அவர்கள் நம்மைப்போல இருக்க வேண்டியதில்லை. அப்படிப்பார்த்தால் இந்த கூட்டத்தில் முக்கால் வாசிப்பேர் குடித்து விட்டு வந்து அமர்ந்திருக்கிறீர்கள். காந்தியனாகிய நான் உங்களிடம் மதுவிலக்கை பற்றி பேச ஆரம்பிக்கவில்லை அல்லவா?’

அதற்காக அண்ணா ஹசாரே பாரதிய ஜனதாக் கட்சியினரை சேர்த்துக்கொள்ள முடியுமா என்ன? உடனே காங்கிரஸ் இதை அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் வழக்கமான நடவடிக்கை என்று முத்திரை குத்தி ஒழித்துவிடும்.

அண்ணா ஹசாரேயின் போராட்டம் மூலம் காங்கிரஸ் நல்லபெயர் தேடிக்கொள்ளும் என்பதெல்லாம் பாரதிய ஜனதாவின் அச்சம் மட்டுமே. உண்மையில் சட்டமன்ற தேர்தல்கள் ஆரம்பித்த சரியான நேரத்தில் தொடங்கிய இந்த போராட்டம் காங்கிரஸை சங்கடப்படுத்தி, அதற்கு உருவான ஆதரவு அதை அச்சுறுத்தி, அதன் விளைவாகவே இந்த ஒப்பந்தம் உருவாகி போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது வெளிப்படை. தகவல் அறியும் உரிமை போன்ற இந்தியாவின் பல முக்கியமான விஷயங்கள் உண்மையில் ஆளும்கட்சி தன்னை ஜனநாயகத் தோற்றத்தில் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதன் விளைவாக உருவானவைதான்

இந்த போராட்டத்தின் விளைவுகள் என்ன?

ஒட்டுமொத்தமாக இந்த போராட்டம் வெற்றியா தோல்வியா? இதன் விளைவுகள் என்ன?   இந்த போராட்டம் இந்த அளவில் ஒரு வெற்றி என்றே நான் நினைக்கிறேன். இது தேசிய அளவில் உருவாக்கிய கவனமும் ஒட்டுமொத்தமாக இளைஞர்களிடம் ஊழலுக்கு எதிராக உருவாக்கிய கருத்தியல்பாதிப்பும் அதன் விளைவாக அவர்கள் அளித்த ஆதரவும் இதை வெற்றி என்றே சொல்ல வைக்கின்றன.

ஆனால் இந்த வெற்றி இன்னும்கூட அதிகமாக இருந்திருக்கலாம். இந்த போராட்டம் இளைஞர்கள் நடுவே பாதிப்பை உருவாக்குவதைக் கண்டதுமே நம் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணைந்து இதைப்பற்றி  தொடர்ந்து அவநம்பிக்கைகளை உருவாக்கி முழுமூச்சாக பரப்பி இதன் வெற்றியை பெருமளவுக்கு தடுத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பலவிதமான அரசியல் சீரழிவுகளைக் கண்டு வந்திருக்கும் நமக்கு அவநம்பிக்கைகள் சட்டென்று உள்ளே சென்றுவிடுகின்றன. குறிப்பாக தென் மாநிலங்களில் நம் அறிவுஜீவிகள் இந்த விழிப்புணர்ச்சியை அவநம்பிக்கையாக மாற்ற தங்கள் முழு ஆற்றலையும் செலவழித்தார்கள்.

இந்த தேர்தலைப்பற்றி முக்கியமான சிலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இந்தமுறை கிட்டத்தட்ட 75 சத வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. கேரளத்திலும் தமிழ்நாட்டிலும்  கணிசமான மக்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்றவகையில் பார்த்தால் கிட்டத்தட்ட வாக்குள்ள அனைவருமே வாய்ப்பிருந்தால் வாக்களித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இது மிகப்பெரிய மாற்றம்.

இருபது வருடங்களுக்கு முன்புவரை வாக்களிக்காமல் இருப்பதே அறிவுஜீவித்தனம் எனப்பட்டது. உண்மைநிலை தெரிந்து அவநம்பிக்கையுடன் இருப்பவன் நான் என்ற பாவனை மிகவும் செல்லுபடியாகியது. வாக்களித்துவிட்டு வருபவனிடம் ‘என்ன சமூகத்த மாத்தியாச்சா? நாளைக்கு விடியறது வேற தமிழ்நாடா?’ என்று கேட்பது வழக்கம். இன்று எப்படி இந்த மாற்றம் வந்தது? புதியதாக வாக்குரிமை பெற்ற இளைய தலைமுறை உருவாகி வந்திருக்கிறது. அவர்கள் தவறாமல் வாக்களிக்கிறார்கள்.

அவர்களில் சிலருக்கு உலக அரசியல் தெரியும். இந்தியாவில் இன்னும் இருக்கும் இந்த வாக்குரிமையின் அருமை தெரியும். பிறநாடுகள் இந்த வாக்குரிமைக்காக சிந்தும் ரத்தத்தையும் தெரியும்.மணிரத்தினத்தின் மகன் நந்தன் வாக்களிப்பதற்காக லண்டனில் இருந்து கிளம்பி இந்தியா வந்திருக்கிறார் என்று கேட்டபோது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.   அதைப்போல அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு வாசகர் போன் செய்தபோது அது பெரும் ஆச்சரியமாக ஆகியது.

இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்ததையும் மீறி திமுக நோட்டு வினியோகம் செய்தது என்றார் மதுரையில் ஒரு மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி நண்பர். ’ஆனால் இந்தமுறை இந்த ஓட்டு விகிதம் இவ்வளவு இருக்கிறது. இளைஞர் படை ஓட்டு போட்டிருக்கிறது.பணம் கொடுத்து வாக்கு வாங்குவது இந்தமுறை பெரிய விளைவை ஏற்படுத்தாது’ என்றார் . ஆம் ஜனநாயகம் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. இந்த தலைமுறையைத்தான் அண்ணா ஹசாரே கவர்கிறார்.

இந்த போராட்டம் இன்று உருவாக்கப்பட்ட அவநம்பிக்கைகளை தாண்டி இன்னும் சில படிகள் முன்னுக்குச் செல்லும் என்றால் மக்கள் மனத்தில் ஊழலை வலுவான பிரச்சினையாக நிலைநாட்டக்கூடும். அது வழியாக  ஓட்டளிக்கும் மக்களில் ஒரு 30 சதவீதத்தினரை ஓட்டளிப்பதில் ஊழலை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வைக்க முடியும். அதுவே நாட்டின் அரசியலில் பிரமிக்கத்தக்க மாறுதல்களை உருவாக்கும் என நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் ஆகச்சிறந்த விளைவாக நாம் எதிர்பார்க்கக்கூடியது அதையே.

இந்திய அரசியலில் ஊழல் அரசியல்வாதிகள் அனைவருமே மீண்டும் தேர்தலில் வென்று வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் கருணாநிதி, ஜெயலலிதா, கேரளத்தின் கருணாகரன், பாலகிருஷ்ணபிள்ளை, கர்நாடகத்தின் குண்டுராவ். கையும் களவுகாக பிடிக்கப்பட்ட அந்துலேவும் சுக்ராமும் வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள். காரணம் சாதி மத கட்சி அரசியல்.  இன்று அதைத்தாண்டி சிந்திக்கும் ஒரு தலைமுறை அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்களிடம் பேசும் எந்த முயற்சியும் வரவேற்புக்குரியதே.

இந்திய அரசியலில் ஊழல் மக்களை கொதிக்கச் செய்வதில்லை. தமிழகத்தில் இந்த தேர்தலில் கணிசமான மக்கள் ஊழல் பணத்தில் ஒருபகுதியை திமுக நன்கொடையாக வழங்கும் என எதிர்பார்ப்பதைக் கண்டேன். அதேசமயம் ஒரு கற்பழிப்பு அல்லது கொலை நம் மக்களை கொதிக்கச் செய்கிறது. அவர்களின் அறவுணர்ச்சியின் அளவுகோல் அந்தவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி  பொதுவாழ்வில் ஊழல் செய்வது என்பதும் அதைப்போன்ற ஒரு பெரும் குற்றமே என்று அந்த மக்களை எண்ணச்செய்வதற்கு இந்த இயக்கங்கள் அனைத்துமே உதவும்.

நம்மில் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்கையில் ஊழலை ஆதரித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஊழலை செய்துகொண்டும் இருக்கலாம். இன்றைய அமைப்பில் வேறு வழி இல்லை. ’என் பிள்ளைகளின் படிப்பு கெட்டாலும் பரவாயில்லை என் வீடு கட்டப்படாமல் பாதியில் நின்றாலும் பரவாயில்லை நான் ஊழலுக்கு ஒத்துப்போகமாட்டேன் என்று சொல்லும் நேர்மையாளர்கள் மட்டும் போராடுங்கள் ’ என்று சொன்னால் இங்கே ஒன்றுமே நிகழப்போவதில்லை. உயர்மட்ட ஊழலை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கும் அமைப்பும் அதை பொறுத்துக்கொள்ள முடியாத வாக்காளர்களில் ஒரு சாராரும் உருவானாலே போதும் உயர்மட்ட ஊழல் இன்றுபோல வெட்கம் மானம் இல்லாமல் ஆட்டம் போடாது.

உயர்மட்ட ஊழல் குறைந்தால் வேறு வழியே இல்லாமல் கீழ் மட்ட ஊழல் குறையும். அது இந்தியாவில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய உதாரணம் பிகார். உயர்மட்ட ஊழல் குறைந்தால் அது நேரடியாக மக்கள்நலப்பணிகளில் வளர்ச்சியை உருவாக்கும். அதற்கு ஐரோப்பிய நாடுகளே உதாரணம். ஊழல் எப்போதுமே நலப்பணிகளில்தான் கைவைக்கிறது. ஏனென்றால் பெருந்திரளாக உள்ள மக்களால் அதை உடனடியாக அடையாளம் காணவோ தட்டிக்கேட்கவோ முடியாது. பெருந்திரளாக வாக்களிக்கையில் அவர்கள் ஊழலை ஒரு விஷயமாக நினைப்பதும் இல்லை. உயர்மட்ட ஊழல் கொஞ்சம் குறைந்தாலே நம் சாலைகள் மேம்படலாம். நாம் நகர்களில் குப்பைகள் குறையலாம்.  நம் கல்வித்துறை சீரமையலாம்…

இன்று உயர்மட்ட ஊழல் குறைந்த நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே ஐம்பதாண்டுகளுக்கு முன் நம்மைவிட ஊழலில் திளைத்த அரசுகளால்தான் ஆளப்பட்டன. அங்கே ஆயுதப்புரட்சியோ ஒட்டுமொத்த புரட்சியோ வந்து ரத்தம் சிந்தப்பட்டு அந்த மாறுதல் உருவாகவில்லை. மாறாக மக்களின் மனதில் மாற்றம் வந்தது. வாக்களிக்கும் முறையில் மாற்றம் வந்தது. அது அரசியலை மாற்றியமைத்தது. ஊழல் குறைந்ததும் சமூகநலப்பணிகள் மேம்பட்டன. அதன்பின் எந்த அரசும் திரும்பிச்செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

நம் தேசிய வாழ்க்கையில் நிறைந்திருக்கும் ஆழமான அவநம்பிக்கையை களைந்து நாம் விழித்தெழ ஒரு வாய்ப்பை இன்றைய இளைய தலைமுறை நமக்கு அளித்திருக்கிறது.  அந்த இளைய தலைமுறையை நோக்கி பேசிய ஒரு வலிமையான அறைகூவல் என அண்ணா ஹசாரேயின் சத்தியாக்கிரகத்தைப் பார்க்கிறேன். அது நம் அவநம்பிக்கைவாதிகளால் திரிக்கப்பட்டாலும்  அதன் விளைவுகள் எதிர்காலத்தில் முளைத்தெழும் என எதிர்பார்க்கிறேன். ஆசைப்படுகிறேன். அதுவன்றி வேறு வழி இல்லை.

 

சே குவேராவும் காந்தியும்

காந்தியின் வழி

ஒரு வரலாற்று நாயகன்

 

 

 

 

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-1
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது