கடந்த இரண்டுவாரங்களாக தொடர்ந்து அண்ணா ஹசாரே பற்றிய கேள்விகளாகவே நண்பர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிகழ்வனவற்றை, மக்கள் எதிர்வினையாற்றுவதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அதைப்பற்றி நம் அறிவுஜீவிகள் பல கோணங்களில் பேசிய எவற்றையும் வாசிக்கவில்லை.முக்கியமான காரணம் எனக்கு நம் செய்தித்தாள்களில் எழுதிக் குவிக்கும் இதழியல் அறிவுஜீவிகளைப் பற்றி மிகமிகக் சாதாரணமான மதிப்பீடே உள்ளது. பெரும்பாலானவர்கள் உயர்குடிப் பிறந்ததனால் மேலைநாட்டுக் கல்வி பெற்று ஆங்கிலம் எழுதத்தெரிந்த, அதைத்தவிர வேறெந்த தகுதியும் இல்லாத, மேம்போக்காளார்கள்.
இவர்கள் தேசத்தைப்பற்றி எழுத அந்த தேசத்தை நேரில் அறிந்திருக்க வேண்டும், அந்த நாட்டில் கொஞ்சமேனும் பயணம் செய்திருக்க வேண்டும் என்ற எளிய நம்பிக்கைகூட இல்லாதவர்கள். இந்த நாட்டின் வரலாறோ, இலக்கியமோ, இங்குள்ள உண்மையான வாழ்க்கைச் சூழலோ, அடித்தட்டு யதார்த்தங்களோ அவர்களுக்கு தெரியாது. இந்த நாட்டில் நடுத்தரவர்க்கத்துக்கு ஆங்கிலம் மீதுள்ள அடிமைத்தனமான மோகம் காரணமாகவே இவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் உருவாகிறது. அந்த முக்கியத்துவத்தால் இந்தியாவுக்கே ஆலோசனைகூறவும், இந்தியாவை கண்டித்து வழிநடத்தவும் தங்களுக்கு தகுதியிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை வாசித்து அதைத் திருப்பி தமிழில் எழுதும் ஒரு கூட்டம் உள்ளது. அந்தக் கட்டுரைகளில் உள்ள தகவல்கள் மட்டும் அல்ல தர்க்கங்களும் அரசியல்நோக்கும்கூட இவர்களால் அள்ளி விழுங்கப்படுகின்றன, திருப்பிக் கக்கப்படுகின்றன. இவர்கள்தான் நம் சிற்றிதழ்ச்சூழலில் நீண்ட கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள். இந்தக்கட்டுரைகளை முற்றாகத்தவிர்த்துவிட்டாலே பெரும்பாலான குழப்பங்கள் இல்லாமல் சிந்திக்கமுடியும் என நினைக்கிறேன்
என்ன சொல்கிறார்கள்?
அண்ணா ஹசாரே பற்றி தமிழகத்தில் மிக அதிகமாகப் பேசியவர்கள் தி.மு.கவினர். என்னிடம் பேசிய கடலூர் சீனு, அண்ணா ஹசாரே ஒரு மாபெரும் ஊழல் பேர்வழி என்றும், அவருக்கு ஒரு பெரிய தொகையுள்ள சர்வதேச விருது கிடைக்கப்போகிறது என்றும், அதற்காகவே இந்த வித்தையை காட்டுகிறார் என்றும் உள்ளூர் திமுக பேச்சாளர் மேடையில் சொன்னார் என்றார். இயல்புதான். திருடன் என்றைக்காவது நீதிமன்றத்தை ஒத்துக்கொள்ள முடியுமா என்ன?
அடுத்தது இடதுசாரிகள். அவர்களின் எதிர்ப்பு இருவகை. கட்சிமார்க்ஸியர்கள் சொல்லிய எதிர்தரப்புகளை சுருக்கமாக இரு கருத்துகளாக ஆக்கலாம். ஒன்று, இந்தமாதிரியான சாத்வீக அகிம்சை போராட்டங்கள் எந்த பலனையும் தராது, பெரிய மக்கள்போராட்டம் தேவை. இரண்டு, ஒட்டுமொத்தமாக அமைப்பில், அரசில் உள்ள ஊழலை எதிர்ப்பதற்குப் பதிலாக ஒரு கண்காணிப்பு அமைப்பை மட்டுமே உருவாக்குவதற்காக இந்த போராட்டத்தை நடத்தவேண்டியதில்லை. ஆனாலும் அவர்கள் பொதுவாக இந்த போராட்டத்தை ஆதரிக்கவே செய்தார்கள்.
இடதுசாரிகளில் தீவிரவாதிகள் என தமிழ்நாட்டில் ஒரு நாற்பது ஐம்பது பேர் உண்டு. இவர்கள் கிட்டத்தட்ட நூறு புனைபெயர்களாக பரவலாக்கம் பெற்று இணையத்திலும் இதழ்களிலும் எழுதி ஒரு தரப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த தரப்பின்படி அண்ணா ஹசாரே உண்மையான மக்கள் போராட்டத்தை திசை திருப்பக்கூடிய போலி. ஊழலுக்கு அடிப்படையாக அமைவது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு. அதை நிகழ்த்தும் பெருமுதலாளிகளும் அவர்களுக்குச் சேவை செய்யும் அரசியல்வாதிகளும் அடங்கிய இன்றையதேசியக்கட்டமைப்பு. அதை எதிர்க்காமல் ஊழலை ஒழிப்பதைப்பற்றி பேசுவது பித்தலாட்டம். மேலும் இதேபோல சத்தியாக்கிரகப்போரில் ஈடுபட்டுள்ள ஐரோம் ஷார்மிளாவை கண்டுகொள்ளாத இந்திய ஊடகங்கள் ஏன் அண்ணா ஹசாரேவை பெரிதுபடுத்துகின்றன என்று இவர்கள் கேட்கிறார்கள்.
அதே அளவு தீவிரத்துடன் இந்துத்துவர்களும் எதிர்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அண்ணா ஹசாரே நல்லவராக இருந்தாலும் அவருடன் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. அண்ணா ஹசாரே ஊழலை மேம்போக்காக ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறார். உண்மையில் ஊழலின் ஊற்றுக்கண்ணும் ஊழலின் மொத்த வடிவமும் சோனியா-மன்மோகன்சிங் அரசுதான். அவர்களைப் பெயர்சொல்லிச் சுட்டிக்காட்டி, அவர்களை அகற்றும் நோக்குடன் போராடாத எந்த போராட்டமும் அரைகுறையானதே. இந்தப் போராட்டத்தைத் தாங்களும் ஆதரிப்பதாக காட்டிக்கொண்டு காங்கிரஸ் தன் மேலுள்ள ஊழல்பழியை மழுப்பமுயற்சிக்கும். அண்ணா ஹசாரே பாரதிய ஜனதாவின் ஆதரவை மறுத்தது அவரது நோக்கம் மேல் ஐயத்தை உருவாக்குகிறது
பொது ‘நோக்கர்களால்’ இந்தமாதிரி ஒரு அமைப்பால் என்ன பயன், இதுவும் இன்னொரு அரசாங்க நிறுவனமாகத்தானே ஆகும், இதன் மூலம் ஊழல் ஒழியுமா, இந்த போராட்டமெல்லாம் வேலைக்காகுமா, இது ஒரு விளம்பர உத்தி மட்டுமே- போன்ற சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டன.
அண்ணா ஹசாரே
அண்ணா ஹசாரேவின் தனிப்பட்ட நேர்மை மற்றும் நோக்கம் பற்றி பேசியவர்களிடம் நான் விவாதிக்கவே போவதில்லை. ‘ யார் நீ?’ என்று மட்டும் தான் கேட்பேன். வயிற்றுப்பிழைப்பு இதழாளர்கள், வாய்ப்பந்தல் முற்போக்காளர்கள், புனைபெயரில் அனல்கக்கும் நடுத்தரவர்க்கத்து கூட்டுப்புழுக்கள்தான் அவரை குற்றம்சாட்டிப்பேசுகின்றன. தன் வாழ்நாளை, முழுக்கப் பொதுச்சேவைக்காக அர்ப்பணித்து பதிலுக்கு எந்த லாபத்தையும் பெறாத அந்த மனிதரை கையில் இருக்கும் நான்கு பொரிகடலையைக்கூட சகமனிதர்களுக்காக இழக்க மனம்வராத இந்த அற்பமனிதர்கள் விமர்சனம் செய்வதே ஒரு அபத்தம்.
அண்ணா ஹசாரே வெறுமே சொல்லிக்கொண்டிருப்பவரல்ல. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி வாழ்ந்தவர். அவரது கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியவர். இதற்கு முன்பும் ஊழலுக்கு எதிரான அமைப்பை (BVJA] உருவாக்கி ஊழலுக்கு எதிராக பல தளங்களில் போராடியவர், பலமுறை வெற்றி கண்டவர். இங்கே தங்களை முற்போக்காளர்களாக முன்வைக்கும் பெருங்கும்பல் சொந்தவாழ்க்கையில் எப்படிப்பட்டவர்கள் என்று நமக்கு தெரியும். கோழைகளும் பிழைப்புவாதிகளுமான எளிய மனிதர்கள் இவர்கள். இவர்களை முன்வைத்து அவரைப்பற்றி பேச நேர்வதே துரதிருஷ்டவசமானது.
இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், இப்போது அண்ணா ஹசாரேவை மட்டம் தட்டுவதற்காக அவரைப்போல அல்லது அவரைவிட மேலான பல காந்தியர்கள் இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதுதான். அந்த காந்தியர்களின் வழிகளும் சேவைகளும் இந்த சொற்பெருக்காளர்களால் இன்றுவரை கண்டுகொள்ளப்பட்டதில்லை. அவர்களும் கிறுக்கர்களாகவே இவர்களுக்கு பட்டிருக்கிறார்கள். இன்று அண்ணாவை மட்டம் தட்ட இவர்களுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள்.
காந்தி என்றுமே தனிமனிதராக இருந்ததில்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் காந்திக்கு நிகரான பலநூறுபேர் காந்தியால் கவரப்பட்டு தூண்டப்பட்டு பல்வேறு தளங்களில் செயல்வீரர்களாக ஆகி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். காந்தியை மகாத்மா என்று சொல்வது அவர் மகாத்மாக்களை உண்டுபண்ணினார் என்பதனால்தான். ஜெ.சி.குமரப்பா முதல் லாரி பேக்கர், நெல்சன் மண்டேலா வரையிலான எல்லா காந்தியர்களும் அவர்கள் அளவில் மகாத்மாக்களே.
சமகால இந்தியாவில் பற்பல தளங்களில் மகத்தான விஷயங்களைச் சாதித்த காந்தியர்கள் இருக்கிறார்கள். நம்முடைய சுயநல அரசியலிலும் லாபநோக்குள்ள அன்றாட வாழ்க்கையிலும் அவர்களுக்கு இடமில்லை. ஆகவே அவர்களின் சாதனைகளும் நம் கண்களுக்கு வருவதில்லை. அத்தனைபேருக்கும் இரண்டு பேர் முன்னுதாரணங்களாக இருந்தார்கள். ஒருவர், பாபா ஆம்தே. இன்னொருவர் அண்ணா ஹசாரே. இந்தியாவின் நவீனயுக காந்தியர்களுக்கு அவர்கள்தான் முன்னுதாரணங்கள்.பிற காந்தியர்களை சுட்டிக்காட்டி ஆகவே அண்ணா ஹசாரே முக்கியமே அல்ல என்று சொல்வதன் அபத்தத்தை என்ன சொல்லி விளக்குவது?
சத்யாக்கிரக போராட்டம் என்பது என்ன?
அண்ணா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றி புரிந்துகொள்வதில் நம் சூழலில் இருக்கும் பெருங்குழப்பத்தைப் பார்க்கும்போதுதான் காந்தியை இவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிகிறது. அதற்குக் காரணம் ஜனநாயகத்தை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஜனநாயகத்தை கட்டமைக்கும் மக்களின் பெருந்திரள்மனநிலையை உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு வகையில் இவர்கள் இருபதாம் நூற்றாண்டை நோக்கி வரவேயில்லை, பத்தொன்பதாம்நூற்றாண்டின் சாகசவாதங்களில், சர்வாதிகார அரசியல்கோட்பாடுகளில் மனம் சிக்கிக் கிடக்கும் பழமைவாதிகளே நம்மிடம் அதிகம். அவர்களே இங்கே முற்போக்கு என சொல்லிக்கொள்கிறார்கள்.
இந்தவிவாதங்களை கவனிக்கையில் முக்கியமாக ஒன்று தெரிகிறது, நம்மில் சிந்தனையாளர் என்று நினைத்துக்கொள்பவர்களுக்குக் கூட சத்யாக்கிரகப் போராட்டம் என்றால் என்ன என்று தெரியாது. ஒரு தனிமனிதரோ அல்லது அவரது ஆதரவாளர் சிலரோ அரசாங்கத்தையோ அல்லது வேறு அமைப்புகளையோ உணர்ச்சிகரமான மிரட்டலுக்கு ஆட்படுத்தி வற்புறுத்தி பணியவைப்பதுதான் சத்யாக்கிரகம் என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் மேலான அவநம்பிக்கை பெரும்பாலும் இந்த அடிப்படையில்தான் எழுகிறது.
அரசதிகாரம் என்பது தனிமனிதர்களைச் சாராது ஒட்டுமொத்தமாகச் செயல்படும் ஒரு ஆற்றல். புறவயமான ஒரு பொருண்மைச்சக்தி அது. அதற்கு தனிமனித உணர்ச்சிகள் ஏதும் இல்லை. ஆகவெ தனிமனித உணர்ச்சிகளோ நியாயங்களோ அங்கே செல்லுபடியாவதில்லை. அதை எதிர்ப்பதற்கு அதே போன்ற புறவயமான பொருண்மைச்சக்திதான் தேவை. தனிப்பட்ட உணர்ச்சிகளை கொண்டுபோய் அரசதிகாரத்தின் முன்னால் வைப்பதென்பது முட்டாள்தனம்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்ததுதான் பிரிட்டிஷ் அரசு. உலகப்போரை நடத்தியது அது. அதன்முன் நூறுபேர் சென்று பட்டினி கிடந்தால் அது ஒன்றும் ஆடிப்போய்விடாது. வேறெவரையும் விட திட்டவட்டமாக அதை அறிந்திருந்தவர் காந்தி. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி நிகழ்த்திய போராட்டங்கள் எவையும் அந்த வகையான உணர்ச்சிகர போராட்டங்கள் அல்ல. பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருக்கவில்லை, இருக்க ஆணையிடவும் இல்லை என்ற உண்மை நம் முன் இருக்கிறது. அவர் உண்ணாவிரதமிருந்தது தன் தரப்பை தொகுத்துக்கொள்ளவும் அதில் இருந்த முரண்பாடுகளை களையவும் தன் பக்கத்து ஆற்றலை திரட்டிக்கொள்ளவும்தான்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி முன்வைத்த எல்லா போராட்டங்களும் பொருளியல் உள்ளடக்கம் கொண்டவை. பொருளியல் ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசு இங்கே நீடிக்கிறது என அவர் அறிந்திருந்தார். இந்திய மக்களின் பெரும்பான்மை அந்த பொருளியல் சுரண்டலுக்கு அளிக்கும் ஆதரவே அவர்களை நிலைநிறுத்தியிருக்கிறது என அவர் உணர்ந்தார். அந்த மக்களாதரவை படிப்படியாக இல்லாமலாக்குவதற்காகவே அவர் அந்தப் போராட்டங்களை நடத்தினார்
அன்னியப்பொருள் புறக்கணிப்பு, உப்பு காய்ச்சுதல், வரிகொடாமை, ஒத்துழையாமை ஆகியவை இந்திய மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அளித்துவந்த பொருளியல் ஆதரவை இல்லாமலாக்குபவை. அவற்றை பிரிட்டிஷ் அரசு எதிர்கொண்ட முறை மூலம் அவ்வரசின் பொருளியல் உள்நோக்கம் மேலும் மேலும் அம்பலப்பட்டு அது இந்திய குடிமைச்சமூகத்தின் [சிவில் சொசைட்டி] ஆதரவை இழந்தது. அவ்வாறுதான் அது இங்கே நீடிக்கமுடியாத நிலை உருவானது.
அரசின் அதிகாரம் என்பது மக்களின் கூட்டான அங்கீகாரம் மூலம் வருவது. அண்டோனியோ கிராம்ஷியை மேற்கோளாக்கிச் சொல்லப்போனால் அதிகாரம் குடிமைச்சமூகத்தில் கருத்தியல் வடிவில் உறைகிறது. ஆகவே அரசின்அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது அந்தச் சமூகத்தின் பொதுக்கருத்தியலுக்கு எதிரான போராட்டமே ஆகும். காந்தி போராடியது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுத்திருந்த இந்திய குடிமைச்சமூகத்தின் கருத்தியலுக்கு எதிராகத்தான் . சத்தியாக்கிரக போராட்டம் அதற்கான கருவிதான்.
1900 முதல் இந்தியாவில் எழுதப்பட்ட புனைகதை நூல்களை அல்லது நாளிதழ்களை வாசிக்கும் ஒருவருக்கு இந்திய குடிமைச்சமூகம் எந்த அளவுக்கு பிரிட்டிஷ் ஆதரவு மனநிலையுடன் , பிரிட்டிஷ் வழிபாட்டு மனநிலையுடன் இருந்தது என்பதைக் காணமுடியும். இங்கே பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த அராஜகநிலைக்கு மாற்றாக வந்தவர்கள் பிரிட்டிஷார். வந்ததுமே உறுதியான நீதி நிர்வாகத்தை உருவாக்கி மக்கள் நம்பிக்கையை பெற்றார்கள். சீரான கல்விமூலம் அந்நம்பிக்கையை உறுதிசெய்தார்கள்
அந்த நம்பிக்கையை பயன்படுத்தி இந்நாட்டின் ஒட்டுமொத்த உபரியையும் சுரண்டி இதை மாபெரும் பஞ்சங்களின் நாடாக ஆக்கினார்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் செத்துக் குவிந்தபோதுகூட உணவுத்தானியங்களை இங்கிருந்து கொண்டு சென்றார்கள். அந்த சுரண்டலின் கொடுமையை கல்விகற்ற மிகச்சிலரே உணர முடிந்தது. அந்த சிலர் எழுப்பிய குரல் பெரும்பான்மையை சென்றடைய முடியவில்லை. காந்தி காங்கிரஸில் நுழையும் வரை அந்நிலை நீடித்தது. சத்யாக்கிரக போராட்டமே அந்த சிலரின் குரலை கோடிக்கணக்கான மக்களின் குரலாக ஆக்கியது. காங்கிரஸை வெகுஜன இயக்கமாக ஆக்கியவர் காந்தி. அதற்கு அவர் உருவாக்கிக்கொண்ட வடிவமே சத்தியாக்கிரகம்.
ஒரே வரியில் இப்படிச் சொல்லலாம். சத்யாக்கிரகபோராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்த கருத்து செல்வாக்கு பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
’இந்தக்கருத்தை நான் நம்புகிறேன், இதை நான் முன்வைக்கிறேன், இதற்காக நான் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன்’ என ஒர் அரசியல்செயல்பாட்டாளர் குடிமைச்சமூகத்துக்கு தெரிவிக்கும் வழிமுறை அது. சிவில் சமூகம் அவருக்களிக்கும் ஆதரவின் மூலம் அவரது கருத்து ஒரு திட்டவட்டமான ஆற்றலாக ஆகிறது. அதை எதிர்ப்பது அரசுகளுக்கு எளிதல்ல. ஏனென்றால் அந்த அரசே அந்த சிவில்சமூகத்தின் ஆதரவின் மேல்தான் நின்றுகொண்டிருக்கிறது
இன்று உலகமெங்கும் சத்தியாக்கிரகம் பல்வேறு வழிகளில் வெற்றிகரமான அரசியல் போராட்ட வழிமுறையாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் லெ வலேசா முதல் நெல்சன் மண்டேலா வரை , ஐரோப்பிய பசுமை இயக்கங்கள் முதல் ஆங் சான் சூகி வரை, டியானன் மைன் சதுக்கம் முதல் எகிப்தின் மக்களியக்கம் வரை அது உலகமெங்கும் ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் விரிவாக நிகழும்.
மக்களில் சிலர் மட்டும் அரசியல் விழிப்பு பெற்று, ஆயுதம் ஏந்தி அதிகாரத்தை எதிர்த்து போராடி, அதைக் கைப்பற்றி, மக்களின் சார்பில் தாங்கள் ஆண்டு, மக்களுக்கு நன்மை புரிவது என்ற பழைய பாணி அரசியல் இன்று ஓட்டைப்பானையாக ஒன்பது இடங்களில் உடைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது. அந்தவகையான அதிகார மாற்றம் என்பது யானைக்காலை ஒருகாலில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றிக்கொள்வது மட்டுமே என தெளிவாகி விட்டிருக்கிறது
அதிகாரம் என்பது உண்மையில் மக்களிடமே உள்ளது என நினைத்தால், அதிகாரப்போர் என்பது மக்களால் நடத்தப்படவேண்டும் என எண்ணினால் சத்தியாக்கிரக வழிமுறைகள் அன்றி வேறு எதுவுமே இன்று மிச்சமில்லை.