அஜயன் பாலா

ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு

http://www.ajayanbala.in/2011/04/blog-post.html

 

அன்புக்குரிய அஜயன் பாலா,

என்னுடைய  இணையதளத்தில் வெளியான ஒரு கடிதத்தில் உங்களைப்பற்றி தவறான தகவல் வெளிவந்தமை குறித்து எழுதியிருந்தீர்கள். எனக்கும் உங்களுக்கும் தெரிந்த நண்பர் சொன்ன தகவல் அது. நீங்கள் உங்கள் மக்கள் தொலைக்காட்சி தொடரில் முன்வைக்கும் காந்தி குறித்த அவதூறுகள் எல்லாமே மிக வெளிப்படையாக தமிழகத்தில் உள்ள கிறித்தவ கல்விநிறுவனங்களில்  இறையியல் நிறுவனங்களில் கற்பிக்கப்படுபவை. நானல்ல, சுந்தர ராமசாமிபோன்றவர்களே இதைப்பற்றி வெளிப்படையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். ஆக உங்கள் செயல்பாடுகளை அந்த ஒட்டுமொத்த போக்கின் பகுதியாகவே என்னால் காண முடிந்தது- இப்போது நீங்கள் உங்கள் மதம் அதுவல்ல என்று சொன்னபிறகும்கூட உங்கள் கருத்துக்கள் அந்த பொது போக்குக்குள் உள்ளவையே என்றே சொல்வேன்

உங்களைப்பற்றிய தவறான தகவலை குறிப்பிட்டமைக்காக வருந்துகிறேன். அதற்காக தனிப்பட்ட முறையில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட்ட கடிதங்களில் எழுதும்போது இத்தகைய பிழைகள் நிகழ்கின்றன, அவை பிரசுரமும் ஆகும்போது பெரியபிழையாக ஆகிவிடுகிறது. தங்களுக்கு உருவான மனவருத்தத்துக்காக மன்னியுங்கள்.

 

ஒரு  தகவல் பிழை உங்களை கொந்தளிக்கச்செய்கிறது. அது நியாயம். காந்தி பற்றி நீங்கள் கொட்டிக்கொண்டிருக்கும் தகவ்ல்பிழைகள் ,அவதூறுகளை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவற்றில் பெரும்பான்மை என்னாலும் உங்கள் ஆதர்சமான அ.மார்க்ஸாலும் கூட ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டவை. அவற்றை நீங்கள் பொருட்படுத்துவதே இல்லை.

மீண்டும் மன்னிப்புகோருகிறேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைபாலிண்ட்ரோம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழி,கம்பன் கடிதங்கள்