ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து ‘மெறாசுக்கு’ வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு உள்ளறைகளில் வாழ்க்கையை அறிந்து, சமையலறைகளில் ருசிகளை உணர்ந்து, முதிர்ந்து தளர்ந்து அதே திண்ணைகளில் விழுந்து ஒடுங்கியிருக்கின்றன. மச்சுவீடுகளைக்கூட அவனது முன்னோர்தான் கட்டியிருக்கிறார்கள்

சென்னைக்கு கிளம்பும்போது மாயாண்டிக்கொத்தன் தன்னுடைய ரசமட்டத்தைத்தான் முக்கியமாக எடுத்துக்கொண்டான். அவனது அப்பன் தாத்தன்கள் பயன்படுத்திய ரசமட்டம். அதை வைத்துத்தான் அவர்கள் மண்ணின் சமநிலையை அறிந்தார்கள். வானத்துடன் மண்ணை சரியாக பொருத்தி வைத்தார்கள். அந்த அளவுகளின் மீதுதான் அவனது சொந்த கிராமமே நின்றுகொண்டிருந்தது. ஊருக்குள் பஞ்சம் வந்து ஒவ்வொருவராக கிளம்பிச்சென்றுவிட்டார்கள். கைவிடப்பட்ட வீடுகள் உப்பரித்து நின்றுகொண்டிருந்தன. அவற்றின் மீது கோடைவெயில் இரக்கமில்லாமல் பெய்து எரித்துக் கொண்டிருந்தது. மாயாண்டிக்கொத்தனும் கிளம்ப வேண்டியவன்தான். ஆனால் அவனுக்கு கையில் ரசமட்டம் இருந்தது. மண்ணுக்கும் விண்ணுக்குமான சரிவிகிதத்தை காட்டும் அளவுகோல். மாயாண்டிக்கொத்தனுக்கு கையில் திசைகள் இருந்தன

மாயாண்டிக்கொத்தன் சென்னைக்கு வருகிறான். எத்தனை ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள். ஒன்றுக்கு மேல் ஒன்றாக பற்பல வீடுகளை கட்டியதுபோல. மொத்த கிராமத்தையே தூக்கி அடுக்கி வைத்ததுபோல. வானம் முட்டும் கட்டிடங்கள். மாயாண்டிக்கொத்தனுக்கு மனம் பூரித்தது. ஒரு கொத்தனாக அவனது வற்க்கம் சாதித்தவை அல்லவா அவை? அந்த கட்டிடங்களில் அவனுக்கும் நிறைய வேலை இருக்கும் அல்லவா?

அவன் நினைத்தது போலவே அவனுக்கு வேலை கிடைத்தது. நகரத்தை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நகரத்தைக் கட்டிக் கட்டித் தீரவில்லை. எத்தனை கட்டினாலும் நகரத்தில் கட்டப்படாத நிலமும் வானமும்தான் மிச்சம். மாயாண்டிக்கொத்தனும் அந்த கொத்தனார்களில் ஒருவனாக ஆனான். ஆனால் இங்கே நகரத்தில் கொத்தன்கள் வீடுகளைக் கட்டுவதில்லை என்று அவன் புரிந்துகொண்டான். அவற்றை கட்டுபவர்கள் சட்டையும் பாண்ட்டும் அணிந்த எஞ்சினியர்கள். அவர்கள் நீலத்தாள்களில் கட்டிடங்களின் கணக்குகளை வரைந்தார்கள். எங்கே எதை வைக்கவேண்டுமென அவர்கள் சொன்னார்கள். கொத்தனார்கள் அந்த எஞ்சீனியர்களின் ஏவலாட்கள் அன்றி வேறல்ல.

மாயாண்டிக்கொத்தனுக்கு ஆச்சரியம். மண்ணை தொடாத இந்த மனிதர்கள் எப்படி கட்டிடத்தை கட்டமுடியும்? அவன் மண்ணில் அளைந்து மண்ணில் நீந்தித்தான் கட்டிடங்களின் ரகசியங்களைக் கற்றுக்கொண்டான். இவர்கள் செருப்புகூட அழுக்குபடாமல் கட்டிடங்களை கட்டுகிறார்கள். மண்ணை இவர்களும் மண் இவர்களையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்? மாயாண்டிக்கொத்தனுக்கு அவர்களை நம்ப முடியவில்லை. அவனே ரகசியமாக அளவுகளைச் செய்து பார்க்கிறான். தன் ரசமட்டத்தால் அவன் அந்த கட்டிடங்களை சரி பார்க்கிரான்

ஆச்சரியம், நகரத்தின் கட்டிடங்கள் அனைத்துமே சரிந்திருக்கின்றன. மாயாண்டிக்கொத்தன் மீண்டும் மீண்டும் பார்க்கிறான். தரை சரிந்திருக்கிறது. கூரை சரிந்திருக்கிறது. சட்டங்கள் சரிந்திருக்கின்றன. கட்டிடம் விழுந்துவிடும் என்று அவனுக்கு தெரிகிறது. அவன் ஓடிப்போய் எஞ்சீனியர்களிடம் சொல்கிறான். அவர்கள் ஏளனம் செய்கிறார்கள். ‘கொத்தா போ போ… உன் அளவுகளெல்லாம் பழசாகிவிட்டன. இன்று எல்லா அளவுகளும் வேறு. இப்போது இயந்திரங்கள் அளவெடுக்கின்றன…எங்களுக்கு தெரியும்”

மாயாண்டிக்கொத்தன் மன்றாடுகிறான். கைகூப்பி கோருகிறான். ‘சாமிகளே கட்டிடங்கள் எல்லாமே சரிந்துவிழப்போகின்றன. அளவுகள் சரிகிடையாது. கொத்தன் சொன்னதை நம்பவேண்டாம். ஆனால் எங்க அப்பன் பாட்டன் வைத்திருந்த ரசமட்டம் சொல்வதை கேளுங்கள்’ ஆனால் அவனை கிறுக்கன் என்கிறார்கள். ‘சொன்ன வேலையைச் செய்யடா கொத்தா’ என அதட்டினார்கள். கொத்தனுக்கும் அதற்கேற்ப கொஞ்சம் சித்தப்பிரமைபோலத்தான் ஆகிவிட்டது. எல்லா வீடுகளையும் அவன் அளந்து பார்க்கிறான். எல்லா கட்டிடங்களையும் அளக்கிறான். ஆம், மொத்தந்கரமெ சரிந்துதான் இருக்கிறது!

ஒருநாள் அவனுக்கு அந்த ரகசியம் பிடிகிடைக்கிறது. பிரச்சினை அவனுடைய ரசமட்டத்தில்தான். அதன் கணக்குகள் நகரத்தில் சரியாக வரவில்லை. அது கிராமத்தில் ஈரம் நிறைந்த செம்மண்ணால் ஆன சுவர்களை அளந்து அளந்து அமைந்த ரசமட்டம். நகரத்துச் சுவர்களுக்குள் ஈரமே இல்லை. ஈரமற்ற சிமிண்ட் சுவர்களை அளக்கும்போது ரசமட்டம் அலைபாய்கிறது. தப்பாக காட்டுகிறது. மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டத்தில் நகரமே ஆகாயத்தில் கோணலாக தொங்கிக்கிடக்கிறது.

தன் ரசமட்டத்தை தூக்கி வீச எண்ணுகிறான் மாயாண்டிக்கொத்தன். ஆனால் அவனால் முடியவில்லை. அப்பனும் பாட்டனும் செய்த கணக்குகள் கொண்ட ரசமட்டம் அல்லவா? அதை மார்போடணைத்துக்கொண்டு நகரத்தை விட்டு ஓடுகிறான் மாயாண்டிக்கொத்தன்

தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளின் ஒருவராகிய கோணங்கி எழுதிய ‘மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டம்’ என்ற கதை இது. இந்தக்கதைக்குள் புகுந்து எதையுமே நான் விளக்கப்போவதில்லை. ரசம் என்ற சொல்லுக்கு சாரம் என்ற பொருள் உண்டு என்பதை மட்டும் கவனப்படுத்த விரும்புகிறேன். நமது ரசமட்டங்களை செல்லாதவையாக ஆக்கும் ஒரு பிரம்மாண்டபுது உலகம் நம் கண்முன் உருவாகி வந்து கொண்டிருக்கிறதா என்ன? ஈரமற்ற உலகம். ஈரத்தின் கணக்குகள் அனைத்துமே தவறாக ஆகும் உலகம்?

நெடுநாள் முன்னர் நானும் நண்பர் வசந்தகுமாரும் ஒருநாள் பிந்திய இரவு திருவல்லிக்கேணி சாலையில் செல்லும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. ஒரு பிச்சைக்காரத்தாய் தன் பிச்சைக்காரக் குழந்தைக்கு சூடம் கொளுத்தி கண்ணேறு கழித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் பேருந்துகள் கூடும் சந்திப்பின் தகிக்கும் வெயிலில் அரைநிற்வாணமாக நின்று பலநூறு பேரிடம் கையேந்தும் பரட்டைத்தலைக்குழந்தை. ஆனால் அது அதன் அன்னைக்கு ஆருயிர்தானே? ஒரு கணம் என் மனம் பொங்கியது.

அந்த மாபெரும் நகரத்தின் தெருமுனையில் அவர்கள் ஒரு கிராமத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்று தோன்றியது. சென்னையின் சேரிகள் வழியாக செல்லும்போதெல்லாம் அந்த எண்ணம் ஏற்படும். அது ஒரு குக்கிராமம் என்று. கிராமத்துப்பேச்சுகள் கிராமத்துச் சிரிப்புகள் கிராமத்து சண்டைகள். கிராமம் என்பது பல்லாயிரம் வருடத்துப் பெரும் பண்பாடு ஒன்றில் முளைத்த கடைசி இலை. நகரம் ஒரு ராட்சத மிருகம். அந்த இலைகள் தான் அதன் உணவு. இரவுபகலாக அது கிராமங்களை உண்கிறது.

சென்னை என்ற நகரம் ஒவ்வொரு நாளும் எத்தனை கிராமங்களை உண்கிறது என நினைத்துக்கொண்டேன். ஆலைக்குள் கொட்டுவதுபோல சென்னை செண்டிரல் ரயில்நிலையமும் எழும்பூர் ரயில்நிலையமும் சென்னைக்குள் கிராமத்து மனிதர்களைக் கொட்டிக்கொண்டே இருக்கின்றன என்று எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஒவ்வொரு நாளும் நிராசையுடன் எதிர்பார்ப்புடன் திகைப்புடன் மக்கள் வந்து இறங்கி மறைந்துகொண்டே இருக்கிறார்கள். புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும் தானும் எல்லாம் அவ்வாறு வந்தவர்கள் என்கிறார்.

சென்ற வருடம் அமெரிக்கா சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்த நியூயார்க் நகரத்துக் கட்டிடங்களின் வாசல்களிலும் மாயாண்டிக்கொத்தன்களைக் கண்டேன். அவர்களின் கணக்குகள் அந்நகரில் தவறிவிட்டன. அவர்கள் காணும் நியூயார்க் அபாயகரமாக சரிந்திருக்கிறது. அங்கே அவர்களுக்கு பலவகையான செல்லப்பெயர்கள். டிராம்ப், ஹிப்பி. ஆனால் ஹோம்லெஸ் என்ற சொல்லே அர்த்தபூர்வமானது. ஹோம் என்றால் கட்டிடம் மட்டுமல்ல. இளைப்பாறும் இடம், உறவுகள்கூடும் புள்ளி. அதுதான் அவர்களுக்கு இல்லை.

அவர்களில் பலர் போதை அடிமைகள். பலர் கிறுக்கர்கள். பலர் பிடிவாதமாக அந்த மாபெரும் நகரப்பண்பாட்டை நிராகரிப்பவர்கள். அவர்களை புறத்தார் எனலாமா? நாம் உருவாக்கும் பண்பாட்டுக் கட்டுமானத்துக்கு புறத்தே எப்போதும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மாயாண்டிக்கொத்தனைபோல கணக்குகள் தவறிப்போனவர்கள் பலர் உண்டு. நாம் போடுகின்ற கணக்குகளுக்கு அப்பால் நிற்பவர்களும் உண்டு. பலநூறு நுண்ணிய இயந்திரங்களால் நகரம் கட்டப்படலாம். ஆனால் ஈரத்தை அறிவது மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டம் மட்டுமே

எந்த ஒரு பண்பாட்டுக்கும் அதற்கு வெளியே நிற்பவர்களின் குரல் மிகமிக முக்கியமானது. அந்தக்குரலுக்குச் செவிசாய்க்காத பண்பாடுகள் ஏற்கனவே சரிய ஆரம்பித்துவிட்டன. உங்கள் கணக்குகள் உங்கள் மாபெரும் கட்டுமானங்கள் என் அளவுகோலில் மையம்பிழைத்தவை தவறானவை என்றுசொல்லும் புறத்தானின் குரல் இருக்கிறதே அதுவே அறத்தானின் குரல்

அறம் என்றும் அதிகாரம் உருவாக்கிய கட்டுமானங்களுக்கு வெளியேதான் நின்றிருக்கும். அது வேறு கணக்குகள் கொண்ட ரசமட்டத்துடன் வந்து நம் மாளிகைகளின் வாசலில் நின்று ‘ சுங்கக்காரர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ’ என்று கூவும் ‘நீ கட்டும் இந்த கட்டிடங்கள் எல்லாம் ஒருகல்மேல் இன்னொரு கல் நில்லாமல் சரியுமென நான் திண்ணமாகவே சொல்கிறேன்’ என்று அறைகூவும். பலசமயம் நாம் உடனே அதை பிடித்து சிலுவையில் அறைந்தும் விடுவோம்.

ஆனால் அறத்தின் குரல் அழிவதில்லை. ஒரு கதை. மகாபாரதப்போர் முடிந்து விட்டது. தருமன் மணிமுடி சூடும் நாள். பொன்னும் பொருளும் அஸ்தினபுர அரண்மனைமுற்றத்தில் குவிக்கப்படுகின்றன.குருதிக்கறைகளை கழுவி விதவைகளை நிலவறைகளுக்கு தள்ளி நகரம் கொண்டாட்டங்களுக்கு தயாராகிவிட்டது. எங்கும் காமம் கண்விழித்த குதூகலம்.

ஒருவனால் மட்டும் அதில் இணைய முடியவில்லை. அவன் பெயர் தீஷணன். அவன் கற்ற நூல்களில் இருந்து கூரிய கண்கள் அவனை வந்து தீண்டி நிம்மதியிழக்கச் செய்கின்றன. அவன் நகர் முற்றத்துக்கு செல்கிறான். அங்கே சக்ரவர்த்தி தருமனின் கையில் இருந்து பொன்னும்பொருளும் பரிசிலாகப் பெற வேதியரும் பிறரும் கூடி பிதுங்குகிறார்கள். எங்கும் ஒரே கூச்சல். அந்த கூட்டத்தில் அவன் ஒரு முதியவனைப்பார்க்கிறான். சடைமுடிகளும் நீண்ட தாடியும் கையில் யோக தண்டும் கொண்ட சார்வாகன். உடம்பெல்லாம் சாம்பல்பூசி பெருச்சாளித்தோல் கோவணம் அணிந்து வந்து நின்றிருக்கிறான்

அவனை அங்கிருந்தவர்கள் அஞ்சுகிறார்கள். அவனை எப்போதும் நகரத்துக்குள் அனுமதிப்பதில்லை. சுடுகாட்டில்தான் அவன் தங்குவான். அங்கே பிணமெரிக்க வருபவர்களிடம் சார்வாக ஞானத்தை பரப்புவான். பிணத்துக்கு போடும் வாய்க்கரிசியை உண்டு வாழ்வான். இன்று நகர் விழாக்கோலம் கொண்டிருப்பதனால் அவனுக்கு உள்ளே அனுமதி உண்டு. அது மரபு

தன் ஞானதண்டத்தை தெருமுனையில் ஊன்றி நின்று சார்வாகன் அறைகூவுகிறான். ‘கடவுள் இல்லை. மோட்சம் இல்லை. அறம்பொருள் இன்பம் வீடு என்ற நான்குவகை அறங்களும் பொய். உலக இன்பங்கள் என்னும் காமம் மட்டுமே ஒரே புருஷார்த்தம். இல்லாத மோட்சத்துக்காக இருக்கும் வாழ்க்கையின்பங்களை இழக்காதீர்கள்.வாழ்க்கையை அனுபவியுங்கள். கூடிவாழுங்கள்’

அவனை அஞ்சி அனைவரும் தப்பி ஓடுகிறார்கள். அவன் சிம்மம் போல தருமனின் அரண்மனை முற்றத்துக்கு வருகிறான். அங்கே நிற்கும் இரவலர் கூட்டத்தில் அவனும் இணைகிறான். வரிசை முன்னகர்கிறது. தருமனின் முன்னால் சென்று நிற்கிறான் சார்வாகன். ஒளிரும் மனிமுடி சூடி நிற்கும் தருமன் தன் கை நிறைய பொன்னை அள்ளி சார்வாகனின் கையில் போடுகிறான். அவற்றை அவன் முகர்ந்து நோக்கிவிட்டு கீழே போட்டுவிடுகிறான்.

தருமன் கொஞ்சம் அயர்ந்தாலும் மீண்டும் அள்ளி கொடுக்கிறான். மீண்டும் அவற்றைக் கொட்டிவிடுகிறான். இம்முறை கடும் சினத்துடன் அர்ஜ்ஜுனன் முன்வந்து ‘என்ன வேண்டும் உனக்கு?’ என்கிறான். ‘இந்த பொன்னில் குருதிவாடை வீசுகிறது’ என்கிறான் சார்வாகன். அர்ஜுனன் காண்டிபத்தை எடுத்துவிட்டான். தருமன் அர்ஜுனனை அடக்கிவிட்டு ‘சார்வாகரே வேறு பொன் வாங்கிக்கொள்ளும்’ என்கிறான்.

‘தருமா , குருதி வீச்சமில்லாத பொன் உன் களஞ்சியத்தில் உண்டா?’ என்று கேட்கிறான் சார்வாகன். உறைந்துபோய்விடுகிறான் தருமன். அர்ஜுனன் கடும் சினத்துடன் கூவ அங்கே கூடி நிற்கும் வைதிகர்கள் கொதித்தெழுந்து நெய்யை ஊற்றி அந்த சார்வாகனை உயிருடன் எரித்துவிடுகிறார்கள். ஒரு பந்தம்போல அதிகார முற்றத்தில் எரிந்தழிகிறான் சார்வாகன்

அனைவரும் சென்றபின் அந்த முற்றத்தில் நின்று தீஷணன் உடல் நடுங்க எண்ணிக்கொள்கிறான். ‘காமமே ஒரே அறம் என்பவன் எதற்காக அதிகார முற்றத்தில் வந்து நின்று அறைகூவினான்? எதற்காக உயிர்துறந்தான்?’ அவன் காலில் ஒரு குச்சி தட்டுபடுகிறது. பாம்பு என எண்ணி ஒரு கணம் உடல் பதறுகிறான். அது சார்வாகனின் யோக தண்டு. அவன் அதை எடுத்துக்கொள்கிறான்.

இருபதாண்டுகள் முன் நான் எழுதிய திசைகளின் நடுவே என்ற கதை இது. அதிகாரத்தின் கோபுரங்கள் முன் வந்து நின்று அறைகூவும் புறத்தானின் குரலே என்றும் அறத்தின் குரல். அதுவே கலையின் இலக்கியத்தின் குரல். அவன் தனித்தவனாக கைவிடப்பட்டவனாக துரத்தவனாக இருக்கலாம். அவனுடைய குரல் மிக மென்மையாக ஒலிக்கலாம்

ஆனால் மனசாட்சியின் முரசுப்பரப்புகளை தொட்டு அதிரச்செய்ய அது போதும். உங்கள் அஸ்திவாரங்களில் ஈரமில்லை, உங்கள் கோபுரங்களெல்லாம் சாய்ந்திருக்கின்றன என்று சொல்ல அந்த குரலே போதும்

கடந்த ஐம்பதாண்டுகளாக நம் கலாச்சாரச் சூழலில் கலையிலக்கியம்சிந்தனை ஆகியவை மிகச்சிறிய வட்டத்திலே உருவாகி வளர்ந்துள்ளன. அந்த வட்டத்துக்கு வெளியே நம் நுகர்வுப்பண்பாடும் நம் அரசியலும் பூதாகரமாக கிளைவிரித்திருக்கின்றன. பூமியெங்கும் வேரோடியிருக்கின்றன. அந்த பெரும் சக்தியுடன் இந்தச் சிறு குரல் சலிக்காமல் போராடிக்கொண்டிருக்கிறது.

அதையே நாம் சிற்றிதழ் என்கிறோம். கேரள கவிதா வும், அன்வேஷணமும், ஜயகேரளமும், சமீக்‌ஷாவும் மணிக்கொடியும் கசட்தபறவும் போன்ற சிற்றிதழ்களின் ஆக்கமே இன்று நாம் நம்முடையதென பெருமைகொள்ளும் அனைத்தும்.மந்த முன்னோடிகளை இன்று எண்ணிக்கொள்வோம்.

ஆகவேதான் தமிழில் எழுதும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் அவனே ஒரு சிற்றிதழ் நடத்தவேண்டுமெந்ற கனவு இருக்கிறது. நானும் சொல்புதிது என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன். சிற்றிதழ்மரபு என்ற பெருக்கில் என்னையும் ஒரு துளியாக ஆக்கிக்கொள்ளும் துடிப்பன்றி வேறல்ல அது.

ஒரு சிற்றிதழைச்சூழ்ந்து ஒரு நண்பர்குழு உருவாகிறது. அந்தக்குழுவின் தீவிரம் செயல்படும்வரை அது வெளிவரும். அந்த தீவிரமே அதன் செயல்பாடாகும். ஆம் சிற்றிதழ் என்பது தீவிரத்தின் ஒருவகை புறவடிவம். எந்த தீவிரம் கலையை இலக்கியத்தை சிந்தனையை உருவாக்குகிறதோ அதன் பருவடிவம்

இங்கே ஒரு சிற்றிதழின் ஆண்டுவிழாவை நாம் கொண்டாடுகிரோம். சிற்றிதழாக விடாப்பிடியாக வந்துகொண்டிருக்கிறது. தனித்த குரல். புறத்தே தள்ளப்பட்ட குரல். ஆனால் அதுவே எப்போதும் சமரசமில்லா அறத்தின் குரல். இலக்கியத்தின் அழியாத குரல்

அதுவெல்க

[12-03 -2011 அன்று கொல்லம் அன்வேஷி சிற்றிதழ் வெளியீட்டுவிழாவில் நிகழ்த்திய உரை]

மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைகோ.வடிவேலு செட்டியார்
அடுத்த கட்டுரைஒளிப்படக்கலைஞர் கே.ஜெயராம் : அஞ்சலி