யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
எம்.யுவன் என்றும் யுவன் சந்திரசேகர் என்றும் நண்பர்களால் யுவன் என்றும் நண்பரைப்போன்றே தோற்றமளிக்கும் சுரேஷ் கண்ணன் போன்றோரால் சந்துரு என்றும் அழைக்கப்படும் சந்திரசேகரன் ஸ்டேட் வங்கி ஊழியர். காலைமுதல் மாலைவரை ஒன்றுமுதல் பூஜ்யம் வரை சலிக்காமல் எண்ணும் கேஷியர். கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான். அதில் ஒன்றைப்படித்துவிட்டு கவுண்டரில் சின்னத் துளை வழியாக எட்டிப்பார்த்த ஒரு பெண் ”உங்க கதை படிச்சேன் சார். சூப்பரா இருந்திச்சு…” என்று சொல்லிப் பணம் வாங்கிப்போக உடனே கதைக்கு மாறியவன்.
நன்றாக உடையணிவதில் மோகம் உண்டு. வார இதழ்களில் பேட்டி என்றால் பித்தான்களைக் கழற்றி செயினை வெளியே எடுத்துப் போட்டுப் புல்லில் சரிந்து படுத்துக் கொள்வான். இருந்தாலும் தமிழ்ப் பண்பாடு பற்றிய புல்லரிப்புகள் ஏதும் அவனுக்கு இல்லை. ”என்னோட கதைகளிலே மாற்றுமெய்மைய ஊடுபிரதித்தன்மையோட சொல்றச்சே அதுல ஜெகெ சொல்ற பிறனோட தன்மைகள் கூடியும் கூடாமலும் இருக்கிறதனால அதுக்குப் பல்குரல்தன்மை வந்துடறதுண்ணு சொல்லலாம்னாக்க..” என்று பேசி பேட்டியெடுத்த இளம்பெண்ணை பீதியடைய வைப்பான்.
இலக்கியக் கூட்டங்களில் பெர்முடாஸ் அணிய விழைவான். காற்றோட்டமாக இருக்குமாம். ஆத்மா சிட்டுக்குருவிபோல விட்டுவிடுதலையாகி நிற்கும் நிலை. மேலே டி ஷர்ட். அக்குளில் செண்ட் அடித்து பவுடர் போட்டு, முளைத்த கீரைவிதை போல நரைத்த தலையும் முகவாயில் ‘முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்’ போல தாடியுமாய் ‘சிண்ணப்பொண்ணுங்க இருக்காய்யா இங்க?’ என்பது போன்ற பார்வையும் சிரிப்புமாக வரும் யுவனை அவரது படைப்புகளைப் படிக்காத பெண்களுக்குப் பொதுவாகப் பிடிக்கும். அவரது பிளேபாய் [விளையாட்டுப்பிள்ளை] தோற்றத்தைப் பார்த்து மலையாளக் கவிஞர் பி ராமன் வடித்த கவிதை ஒன்று இப்படி
‘எவன் அவன்?
இவன்? யுவன்!!!’
இருபதுவருடம் முன்பு சந்திரசேகரை நான் குற்றாலத்தில் சந்தித்தேன். சோடாப்புட்டி அணிந்திருந்தான், அதை இப்போது அறுவைசிகிழ்ச்சை செய்து கழற்றிவிட்டான். ஆனால் அப்போதிருந்த பார்வையும் பாவனையும் அப்படியே தொடர்கிறது. சந்தித்த ஐந்தாவது நொடியில் என் தோளை ஆதரவாக அணைத்து ”மோகன் இப்ப நீ இத கவனிச்சேன்னாக்க..”என்று ஆரம்பித்துக் கவிதை பற்றி பேசினான். ”இப்ப ஒரு கவிதையிலே இப்டி வரதுன்னு வை ,’இந்தக் காலை நேரத்தில் நான் விடிந்து கொண்டிருக்கிறேன்’. இது எந்தக்காலம்?”
”விடியக்காலை”
”மடையா.அது இறந்தகாலமா நிகழ்காலமா?”
”அத அவன் எழுதறப்ப நிகழ்காலம்…” என்றேன் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று.
யுவன் கவிதை விவாதங்களில் ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பவனின் பாவனையில் நின்று கூர்ந்து நோக்குவது வழக்கம். பிடி கிடைத்ததும் ஒரு சிரிப்பு. ”அப்ப படிக்கிறப்ப?”
”படிக்கிறவங்களுக்கு அப்ப நிகழ்காலம்”
”அதான்யா சொல்றேன். கவிதை அதை எழுதறவனுக்கும் வாசிக்கிறவனுக்கும் நடுவிலே ஒரு நித்யமான நிகழ்காலத்துல இருக்கு. ஏன்னா…”
அவனை நண்பனாக்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். பேச்சைப்பார்த்தால் எப்படியும் ஒரு இருபதுவருடம் அப்படியே பேசுவான் போலப் பட்டது. நமக்கும் ஒரு கவிஞன் நண்பனாக இருப்பது ஆத்திர அவசரத்துக்கு ஏந்தல்தானே? அவனது கவிதைகளை வாங்கிக் கொண்டுபோய்ப் படித்துப் பார்த்தேன். சந்தேகம் தீரட்டும் என அப்போது காதலியாக இருந்த அருண்மொழியிடமும் காட்டினேன். அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை ”என்னமோ கவிதைன்னு நினைக்கிறேன் ஜெயன்”என்று சந்தேகமாகச் சொன்னாள். பரவசமாக உடனே ‘கனவு’ சுப்ரபாரதி மணியனுக்கு அனுப்பினேன். அவருக்கும் புரியவில்லை போலும், உடனே பிரசுரமாயிற்று
ஆனால் யுவனுக்குக் கடும் சினம். அவை பொன்மொழிகளாகப் பிரசுரமாகியிருந்தன– பக்கங்களின் அடியில் நீளவாட்டில். சிந்தனையாளர் பிளேட்டோ, பெர்னாட் ஷா வரிசையில் வருவதில் இவனுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை. ”மடையா, நான் செத்துப்போயிட்டேன்னு எல்லாரும் நெனைச்சிருவாங்கள்ல?”என்றான் ”அப்றம் நான் நேரடியா அனுப்பினாக்க போடமாட்டாங்க. இன்னொருத்தர் அனுப்பணும்ணு நெனைப்பாங்க…எல்லாக் கவிதையையும் நீயே அனுப்ப முடியுமா சொல்லு”
”ஆனா பிரேமா பிரசுரத்துல உனக்கு புக் போடுவாங்களே” என்றேன்
குற்றாலத்தில் அருவியில் குளிக்கக் கண்ணாடியைக் கழற்றிய யுவனை நான் கையைப்பிடித்துக் கூட்டிச்செல்வேன். ”பாத்து வா…பாறை இருக்கு…”
”அங்கதானே பாறை?”’
”அது கோணங்கி… நீ இந்தால வா…”
அருவியில் குளித்துவிட்டு நீளக்கூந்தல் அடர்தாடியுடன் வந்த பெங்களூர் மகாலிங்கம் ஒரு சிலுப்பு சிலுப்பி துளிதெறித்தார். ”ஏன் மோகன் இப்பல்லாம் அருவியில தண்ணி கொறைவாத்தான் இருக்கு இல்ல?”
”அது மகாலிங்கம் சார் தல தொவட்டினது…அருவி இனிமேத்தான் வரும்…” சிலசமயம் அவனை அப்படியே ஓடையில் விட்டுவிட்டுக் குளிக்கச் சென்றுவிடுவோம் ”இதை அப்டியே செங்குத்தா நெனைச்சுக்கோ அதான் அருவி… ”
மொழிவளம் உண்டு. தேவதச்சன் ஏதோ கோபத்தில் ”அருவியிலே போய் விழுய்யா”என்றதுக்கு சுடச்சுட ”அருவியில் நீர் விழும்”என்றவன்தான். ஆனால் கவிதையில் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டுதான் எழுதுவான். கவிதையை இரு கட்டங்களாக எழுதுவான் என நினைக்கிறேன். வேகமாக எழுதி , பின் நெளிந்து ஆசுவாசம் கொண்டு ‘..மற்றபடிக்கு…’ என்று மீண்டும் தொடங்குவான். எல்லாக் கவிதையும் இரு பகுதிகளாக இருக்கும். பெருமூச்சுக்கு முன் பெருமூச்சுக்குப் பின். கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்தான். ஆனால் யுவனிடம் அவன் கவிதைகளுக்கு விளக்கம் கேட்பது பொதுவாக அபாயகரமானது.
வட இந்திய ஃபட்படிகளைப் போன்ற கதைகளைப் பிற்பாடு எழுத ஆரம்பித்தான்.பைக்குக்குப் பின்னால் எட்டுபேர் கொள்ளும் பெட்டியில் இருக்கும் நீளமான பெஞ்சில் ஐந்தைந்து பேராக அமரச்செய்தபின் அமர்ந்தவர்கள் மேல் ஆள் ஏற்ற ஆரம்பிப்பார்கள். ஒருமுறை என்னை ஒரு தீதியின் வளப்பமான மடியில் அமரச்செய்து என் மடியில் கடுகெண்னையைத் தலையில் பூசிய ஒரு கல்லூரி மாணவியை அமரச்செய்து அவள் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டார்கள். கடைசியில் ஏறமுடியாமல் தவிப்பவர்களைக் கதவால் அடித்து உள்ளே செருகி ”ரைட் ரைட் சலோ” அதன் பின் யாரும் எதுவும் செய்யமுடியாது. யுவன் கதையில் கதையில் கதையில் கதை உட்கார்ந்து கதையைக் கையில் வைத்திருக்கும்.
இருபது ரூபாய்க்கு அஜிதன் கணக்கு சொன்னான். ”…எங்க கணக்கு சார் ஆளுக்கு அஞ்சு ரூபா கொடுக்கணும்ணு சொன்னதனாலே… அஜய் பாலப்பன் என்னோட நோட்டைக் கிழிச்சுட்டான்மா. புது நோட்டு வாங்கப் போனப்ப டியூஷன் போயிட்டிருந்தோம்ல. நீதான் சொன்னியே டியூஷன் போறப்ப வேணுமானா மசாலா தோசை சாப்பிடுண்ணு…” அருண்மொழி கொதிப்புடன் ”போரும் போரும்…யுவன் கதை மாதிரி ஒண்ணுகேட்டா ஒம்போது விசயம் சொல்லிட்டிரு… மிச்சம் எவ்ளவுடா?”. ” இல்லம்மா…அப்பதான் சமீர் சொன்னான்…” ”போரும் போ…வந்து வாச்சிருக்கு”
யுவனுக்குப் போதிய வாசகர் இல்லாதது பற்றிய மனக்குறை உண்டு. நான் விடாமல் இருபதுவருடங்களாக அவனை வாசித்து வருகிறேன். எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஆகவே தைரியமாகப் பிறருக்கும் நான் பரிந்துரைத்து நிறைய கட்டுரைகள் குறிப்புகள் எழுதியிருக்கிறேன்.
மாலைநேரத்தில் ஃபோன். ”மோகன், உனக்கு நான் ஒரு கொரியர் அனுப்பியிருக்கேன். அது உனக்கு நாளைக்கு எப்ப கிடைக்கும்?”
”ஏன், பன்னிரண்டுமணிக்குக் கெடைக்கும்”
”கெடைச்ச ஒடனே ஒரு எஸ்.எம்.எஸ் குடு என்ன. அர மணிநேரம் கழிச்சு நான் உன்னைக் கூப்பிடுறேன்…”
வயிற்றில் பதற்றத்துடன் ”ஏன் என்ன ஆச்சு?”
”இல்ல உனக்குக் கொஞ்சம் கவிதைகள் அனுப்பியிருக்கேன். படிச்சு சொல்லு…”
நான் ”எவ்ளவு கவிதைகள்” என்றேன் பலவீனமாக
”இருபத்திமூணு. இருபத்திமூன்று கவிதைகள்னு பேரு வைக்கலாம்னு ஐடியா”
”ஏன் ரவுண்டா வச்சுக்கிடறது?”
”மடையா, நான் பத்தொம்பதுதான் எழுதினேன். ரவுண்டா ஆக்கலாம்னு போய்த்தான் இருபத்தி மூணு ஆயிருக்கு. பேசாம மறுபடியும் ரவுண்ட் ஆக்கிரலாம்கிறியா?”
”இல்லல்ல நான் மூணை வெட்டிடலாமேன்னுதான் சொன்னேன்’ என்றேன் பதறி.
”செரி படிச்சிரு.நாளைக்குப் பேசுவோம்”
தன் கவிதைகளைப் பற்றிப் பேசத்தான் இப்படி ஃபோன் அழைப்பு. மற்றபடி சிக்கனத்தில் அவன் அருண்மொழிக்கு அண்ணா. [என்னை ஏன் சொல்லவேண்டும்? நான் செல் பேச அருண்மொழி அனுமதிப்பதில்லை] எனக்கு அவன் மிஸ்டு கால் அனுப்பினால் நான் பதில் மிஸ்டு கால் அனுப்பி அவன் நாண நன்னயம் செய்தபோது கூப்பிட்டான். ”ஒரு ரூபா செலவுபண்ணிக் கூப்பிட மாட்டியா?”
”ஏன் நீ கூப்பிட்டா என்ன?”
”இது நான் உன்னைப்பத்திப் பேசத்தானே கூப்பிடறேன்?”
இந்தத் தர்க்கம் எனக்குப் புரிவதேயில்லை. ஆகவே ஒன்றுசெய்தேன். சுரேஷ் கண்ணனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அறிமுகம் நடந்த நாலாம் மாதம் யுவன் சொன்னான் ”உமக்கு ஒரு பிளசண்ட் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்யா”
சுரேஷ் என்னை நிராதரவாகப் பார்த்துவிட்டு ”என்ன?” என்றார்
”நூத்தியெட்டு கதைகள்னு ஒண்ணு எழுதியிருக்கேன்.படிச்சு சொல்லும்”
நான் உற்சாகமாக ”சுரேஷ¤க்கு ஜாலிதான்….ஏன் யுவன் ஆயிரத்தெட்டுதானே நம்ம டிரெடிஷன்? எழுதிக் குடுத்திடறது? காசா பணமா?”என்றேன்
சுரேஷ் பரிதவிப்புடன் சுவர்களைப் பார்க்க யுவன் ”இல்லல்ல. இது நூத்தெட்டுதான்…”என்றான்
யுவன் டாய்லெட் போனதுமே ”மோகன் நூத்தெட்டுல நின்னிருவார்தானே?” என்றார் சுரேஷ்
”என்ன சுரேஷ் நீங்க? யுவனோட நூத்தெட்டு கதைண்ணா முதலில நூத்தெட்டு கதைன்னு பேரு. உள்ள இருக்கிற கதைகளுக்கு வேற கணக்கு”
சுரேஷ் வெளுத்துப் போனார். யுவன் வெளியே வந்து ”…அதுக்குப்பிறகுதான்யா நான் ஒரு நாவலை எழுதணும்ணு நினைச்சிருக்கேன்…மகாபாரதத்தப் பின்னணியா வச்சு. எப்டியும் ஒரு ஆயிரம் கத இருக்கும்னு நெனைக்கிறேன்” என்றான்.
”மகாபாரதத்த வச்சு ஆயிரம்கதைதானா ? அப்ப அதுக்குக் குறுநாவல்னுதான் பேரு…சுரேஷ் ஒரே ராத்திரியிலே படிச்சிருவார்…”என்றேன்
சுரேஷ் ரகசியமாகக் கண்ணீர் மல்கினார்.
யுவன் என்றாலே நெகிழ்ச்சி என்றுதான் பொருள். சும்மா நெகிழ்வதைவிடக் காரணத்தோடு நெகிழலாமே என்று இந்துஸ்தானி இசை கேட்பான். ”மோகன் இன்னிக்குக் காலையிலே ஜோஷி பாட்டு ஒண்ணு கேட்டேன் .அப்டியே கரைஞ்சு அழ ஆரம்பிச்சுட்டேன்…நான் அழறதப்பாத்துட்டு உஷா அழ ஒரே அழுகைதான் போ…உனக்குத்தான் தெரியுமே நான் என்னிக்குமே இந்தமாதிரி அழக்கூடியவன் இல்ல…”
”ஆமாமா..நேத்துகூட மல்லிகார்ஜுன் மன்சூர் பாட்டுக் கேட்டு அழுதியே”’
”அடாடா அது பாட்டு…அப்டியே கரைஞ்சிட்டேன்….ஆனா இவனை விட இன்னொருத்தன் இருக்கான். அவன் பாட்ட நீ கேட்டேன்னு வச்சுக்கோ அப்டியே கண்ணில ஜலம் வந்திரும்… உஷாவும் நானும் கேட்டு அழுதோம் பாரு அப்டி ஒரு அழுகை”
காலையில் இப்படி அழும் குடும்பத்தைப்பற்றி அவரது பக்கத்துவீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்கள்? அதுவும் அவர்கள் சங்கீதமறியா நாயர்களாக இருந்தால்?
யுவனுக்கு இசையை அறிமுகம்செய்தது தண்டபாணி. மதுரையில் வேலைபார்க்கிறார். யுவன் கதைகளின் சுகவனம் அவர்தான். யுவனுக்கு முழுக்க முழுக்க ஆதரவு கொடுப்பவர். யுவன் படைப்புகளின் ரசிகர். யுவன் நிழலாகவே கூட்டங்களுக்கு வருவார். ஒரே நெகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து நெகிழ்வார்கள்.
பிள்ளைகளைப் பற்றிப் பேசும்போதும் நெகிழ்ச்சி. யுவனுக்கும் வேதசகாயகுமாருக்கும் வசந்தகுமார் வைத்த பேர் ‘பாசமலர்கள்’. ”நான்?”என்று வசந்தகுமாரிடம் கேட்டேன். ”நீங்க மலர்ந்தும் மலராத பாதி மலர்போல ஜெயன்”. யுவன் அதில் ”ஆயிரம் இதழ்கொண்ட தாமைரைப்பூ..” வகை. ”நேத்திக்கு அரவிந்தா வந்திருந்தான். உஷா வத்தக்கொழம்பும் சுட்ட அப்பளமும் செஞ்சிருந்தா…இன்னும் கொஞ்சம்னு கேட்டு வாங்கி சாப்புடுறான் … வத்தக்கொழம்பு மோகன், புள்ளை ஆ… ஆசையா அப்- அப்- டியே…” கண்ணில் தண்ணீர், தொண்டை கரகரப்பு.
இந்த சீரில் குவார்ட்டர் அடித்தால் சுத்தமான பாகுதான். ”நேத்து நானும் உஷாவும் ரோட்ல போறச்ச அவ வா பஸ் வருதுன்னு என் கையப் புடிச்சா பாரு மோகன் அப்டியே…” விசும்பி விசும்பி அழுபவனை நான் தோளில் சாய்த்துக் கண்ணீர் துடைத்து ”போகட்டும்…போ நான் அவட்டே சொல்றேன். ஏதோ தெரியாம பண்ணியிருப்பா”
யுவன் வீட்டில் மது அருந்துவதில்லை. அவன் குடிப்பான் என்பது வீட்டுக்குத் தெரியாது என்ற பாவனை. சென்னையில் பரமசுத்தம். வெளியூர் வந்தால் மிணுமிணுவென அதே நினைப்பாக இருப்பான். உடம்பெங்கும் ஒரு கிளுகிளுப்பு. நான் நடத்தும் இலக்கிய விவாதக் கூட்டங்களில் குடிக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. ஆனால் எல்லா அரங்குகளிலும் யுவன் என்னைக் கெஞ்சி மிரட்டிக் கண்ணீர் மல்கி என் கண்முன்னாலேயே குடித்திருக்கிறான். இருமுறை என்னிடமே பணம் வாங்கி.
குடித்ததுமே சற்று கூன் போடுவான். தண்டபாணிக்குப் புருவம் மேலேறிவிடும். கீழே வரவே வராது. ‘வில்லெனப் புருவம் வளைத்தனை வேலவா அங்கோர் வெற்பு பொடிப்பொடியாயிற்று வேலவா’ .யுவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘பின்னே?’ என்பதுபோல தண்டபாணி புருவம் வளையும். சிரிப்பு தெய்வீகமாக வெளிப்படும்.
முதல் கட்டம் பழைய பாடல்கள். சி.எஸ்.ஜெயராமன் குரலில். ”அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்…” அந்தத் ‘தங்க’த்தை ஏன் டம்டம் என்பதுபோலத் தனியாகச் சொல்ல வேண்டும்? சரி இசையில் என்னமோ செய்கிறார்கள் நமக்கென்ன அதில். எம்.கெ.டி.பாகவதர் தொண்டையைத் தீட்டிப் பாடும் ‘சியாமளா என் ஜீவப்பிரியே சியாமளா” கண்டசாலா கத்திமுனையில் மிரட்டப்பட்டவர் போலக் கண்ணீர்தளும்பப் பாடும் ‘எங்குமே ஆனந்தம்…” யுவன் பாடும்போது பெரும்பாலும் சுருதி வகையறாக்கள் சரியாக இருக்கும். மிச்சத்தை பாவத்தை வைத்து சமாளித்துவிடுவான். செட்டி முறுக்குதானே சரக்கு முறுக்கு? அடுத்த கட்டத்தில் பாரதியார் பாடல்கள். நாட்டுப்புறப் பாடல்கள். கடைசிக்கட்டத்தில் ”மழபெஞ்சு ஊரெல்லாம் தண்ணி”
யுவனுக்குக் காலில் ஒரு சிக்கல் உண்டு. தோலுக்கு அடியில் உள்ள மென் தோலில் செல்கள் சரியாக வளராது. அது ஒரு பிறவிக் குறை. சற்று நடந்தாலே கால்கள் பெரிதாகக் கொப்பளிக்கும். கடும் வலி. வெயிலில் நடக்கவே முடியாது.ஆனாலும் அவனைப் பல பயணங்களுக்குக் கூட்டிச்சென்றிருக்கிறேன். ஒரு பயணத்தில் அவன் கால்களை நான் தடவி விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சந்தேகம்.
”ஏன் யுவன், இப்ப என்னை யாராவது பார்த்தா பார்ப்பன அடிவருடீண்ணு சொல்லிர மாட்டாங்க?”
”சொல்லீட்டுப் போறாங்க…. நான் கைபர் கணவாய், நீ ஆரல்வாய்மொழிக் கணவாய்…. சரியாப்போச்சு”
ஒருநாள் நான் யுவனிடம் பேசிக் கொண்டிருந்தபின் செல்லை ஆஃப் செய்தேன். ”முடிச்சாச்சா? என்னதான் அப்டி பேச்சோ?”என்றாள் அருண்மொழி
”அப்பா உன்னைய யுவன் மாமாவும் பெரியப்பாவும் மட்டும்தான் டேய்னு கூப்பிடறாங்க” என்றான் அஜிதன்.
ஆமாம். யோசித்தபோது அது வியப்பாக இருந்தது. நான் ஒருமையில் குறிப்பிடும் ஒரே நபரும் அவன்தான்.
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Apr 5, 2010 @ 0:02