சமணம்-கடிதம்

வணக்கம் ஜெயமோகன்

இவ்வலைச்சுட்டியில் (http://thamilarthookkam.wordpress.com) தமிழர் நினைவிலிருந்து இருட்டடிக்கப்பட்ட தமிழ்ச்சமண வரலாறு பற்றிய தகவல்கள் சில இருக்கின்றன. இவை எதுவும் உங்களுக்குப் புதிதாக இருக்க மாட்டாது என்பது என் எண்ணம். ஆனால் பெரும்பான்மையான தமிழருக்கு இவை புதிய தகவல்களே. உங்கள் இணையதளத்திலும் இது பற்றிய சில குறிப்புகள் வாசித்துள்ளேன். அவையும் இருட்டடிக்கப்பட்ட இவ்வரலாற்றின் மேல் பரவலான வெளிச்சத்தைப் பரப்புகின்றன. நான் இத்தளத்தை உருவாக்கியதன் நோக்கம் இவ்விருட்டடிக்கப்பட்ட வரலாற்றின் மேல் குவிமையப்படுத்தப்பட்ட ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்கேயாம். உங்கள் கருத்துக்கள்?

குந்தகுந்த ஆசாரியாரையும் வள்ளுவரையும் இணைக்கும் ஜைனர்களின் நம்பிக்கை ஆய்வுரீதியாக இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்வில்லை. குந்தகுந்த ஆசாரியாரின் மிகச்சிறந்த தத்துவ ஆக்கங்கள் பிராகிருத மொழிலேயே எழுதப்பட்டன. மேலும் இவர்கள் வேவ்வேறு காலத்தவர் என்பதும் இதுவரையான ஆய்வுகளின் முடிவு. சர்ச்சைக்குரிய இத்தரவை முன்வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏராளமான தமிழ்ச்சமண சரித்திர விவரங்களையும் தமிழர்கள் நிராகரிப்பதற்கு ஏதுவாகும்.

அன்புடன்
மு நமதன்

குறிப்பு:
உங்களுடைய தளத்திலுள்ள சமணத்தைப் பற்றிய இவ்வலைச்சுட்டியின் (http://www.jeyamohan.in/?p=1290) அமைப்பைச் செம்மை செய்ய வேண்டியுள்ளது போல் தெரிகிறது.

அன்புள்ள நமதன்

அந்தத் தளத்தை வாசித்தேன். ஏராளமான விஷயங்கள் எனக்குப் புதியவையே. முக்கியமான முயற்சி.

தமிழில் சமணம் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. சொல்லப்போனால் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே நின்றுவிட்டன. பிராகிருத மொழியில் உள்ள சமணநூல்களுடனும் வரலாற்றுக்குறிப்புகளுடனும் குறள் உட்பட உள்ள நீதிநூல்களை ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் நிறையத் தெளிவுகள் சாத்தியமாகலாம்

நன்றி

ஜெ