பொன்னியின் செல்வன் 3, பார்வையாளர்கள் எவர்?

பொன்னியின் செல்வன் பற்றி…

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

பொன்னியின் செல்வன் ஏன் சினிமாவாக ஆகவேண்டும், அவ்வாறு சினிமாவாக ஆகும்போது நாவலில் இருந்து அது எவ்வகையில் வேறுபடும் என எழுதியிருந்தேன். பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை,  பொன்னியின் செல்வன் – 2, சினிமாவும் நாவலும்.

சில மேலதிக நடைமுறைச் சிக்கல்கள் நாவலை சினிமாவாக ஆக்குவதில் உள்ளன. அதிலொன்று, நடிகர் தேர்வு. ஏற்கனவே வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கதாபாத்திரத்தை அறிமுகமான நடிகர் நடிக்கலாம். மிக இயல்பாக பார்வையாளர்கள் அந்நடிகரை அக்கதாபாத்திரமாக எண்ணிக்கொள்வார்கள். புகழ்பெற்ற நடிகர்கள் கதையை மீறிய தனியாளுமை கொண்டவர்கள். அந்நிலையில் அவர்களுக்கு ஏற்ப கதையும் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆகவே அதுவும் சரியாகத் தெரியும். ஆனால் ஏற்கனவே வரலாற்றில், வாசக மனதில் நிலைபெற்றுவிட்ட ஒரு கதாபாத்திரத்தை எந்த நடிகர் நடித்தாலும் முதல்பார்வைக்குப் பொருந்தாமல்தான் தோன்றும்.

முற்றிலும் புதுமுகங்களை நடிக்கச் செய்யலாம். கதாபாத்திரத்துக்குரிய தோற்றம் கொண்டவர்களை தேர்வு செய்து நடிக்கச் செய்யலாம். ஆனால் பொதுரசனைக்குரிய சினிமாக்களில் அது அனேகமாக சாத்தியம் அல்ல. முதல் விஷயம், நடிகர்கள் ஏற்கனவே நடிப்புக்கு பயிற்சி எடுத்தவர்கள், சினிமாவில் பழகியவர்கள். பெரிய படங்கள் குறித்த செலவில், குறித்த நாட்களுக்குள் எடுக்கப்பட்டாகவேண்டும். ஆகவே தேர்ந்த நடிகர்கள் இன்றியமையாதவர்கள். மிகச்சிறு வேடங்களுக்குக்கூட நல்ல நடிகர்கள் தேவை. ஐநூறுபேர் கலந்துகொள்ளும் காட்சியின் படப்பிடிப்பில் ஒரு நடிகர் சரியாக நடிக்காமல் நேரம் கடத்தினால் அவர் ஐநூறுபேரின் நேரத்தை வீணடிக்கிறார். ஆகவே நடிகர்கள் அல்லாதவர்களை வைத்து பெரிய படங்களை எடுக்கவே முடியாது.

அத்துடன் இன்று உலகமெங்கும் சினிமா என்பது வணிகரீதியாக நடிகர்களின் கலைதான். நடிகர்களின் பங்களிப்பே படத்துக்கான நிதியை கொண்டுவருகிறது. அரங்கில் பார்வையாளர்களையும் கொண்டுவருகிறது. Starcast தான் படத்தின் தயாரிப்பையே தீர்மானிக்கிறது. அப்படி நட்சத்திரங்களை நடிக்க வைக்கும்போது பல சிக்கல்கள். அந்த நட்சத்திரங்களின் தேதிகள் இணையவேண்டும். ஊதியம் உட்பட பல நடைமுறைச் சிக்கல்கள்.

நான் பார்த்தவரை ஒரு சினிமாவின் மிகமிகச் சிக்கலான பணி என்பது நடிகர்தெரிவுதான். மண்டைகாயும் நாட்கள் அவை. பல்வேறு கணக்குகள், பல்வேறு சிக்கல்களை கடந்து எப்படியோ ஒருவழியாக நடிகர் தெரிவு முடிவடைகிறது. நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு, அது கல்யாண ஜோடி பார்ப்பதுபோலத்தான். இவருக்கு இவர் பொருத்தம் என்றெல்லாம் பேசலாம். ஆனால் கடைசியில் யாருக்கு யார் என எழுதி வைத்திருக்கிறதோ அதுவே நடக்கும்.

ஆகவே சமூகவலைத்தளங்களில் இந்தக்கதாபாத்திரத்துக்கு இவர் என்றெல்லாம் பேசுவது எளிது. ஒரு நட்சத்திரத்தெரிவு நடந்தபின் அதற்கேற்ப நம் கற்பனையை வளர்த்துக்கொள்வதே சினிமா பார்வையாளர் செய்யக்கூடுவது. என் மனதிலிருந்த முகம் அல்லாமல் எதையுமே ஏற்கமாட்டேன் என்று சொல்வதெல்லாம் நடைமுறையில் ஒரு கலையை நிராகரிப்பது மட்டுமே.

எந்தக் கலைவடிவும் ஓர் ஏற்புமனநிலையை அதன் ரசிகனிடம் கோருகிறது. நிராகரிப்பு மனநிலையுடன் ஒருவன் அணுகினால் எந்த மாபெரும் படைப்பும் எந்த அனுபவத்தையும் அளிக்காமலாகிவிடும். நம்மில் மிகச்சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வாமைகள் மற்றும் புரியாமைகளை கடந்து ஒரு சினிமா ரசிகனுக்குரிய இயல்பான மனநிலையை அடைவதெப்படி என்பதற்காகவே இந்த மூன்று பகுதிப் பதில்.

பொன்னியின் செல்வனைப் பார்ப்பதில் தமிழகத்துக்கு வெளியே உள்ள ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் இயல்பாக சராசரி சினிமா ரசிகனின் மனநிலையுடன் அரங்குக்கு வருவார்கள். தமிழகத்தில் அந்நாவலை வாசித்த ஒரு சிறுவட்டத்துக்குத்தான் பிரச்சினை. அவர்களில் பலருக்கு உண்மையிலேயே நாவல் என்னும் கலைவடிவில் இருந்து சினிமா என்னும் இன்னொரு கலைவடிவுக்கு தங்களை திருப்பிக் கொள்வதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாங்கள் ஒரு படி மேலானவர்கள், நாவல் எல்லாம் வாசிக்கும் ‘எலைட்டுகள்’ என காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். அவர்கள்தான் பெரும்பாலும் ‘நாவல கெடுத்திருவாங்க’ என சொல்லி அலைபவர்கள்.

இப்போது தேசிய அளவிலுள்ள ஒரு டிரெண்ட் பற்றி சொல்லவேண்டும். ஓடிடி தளங்கள் வந்து சினிமா அதன் திரையரங்க எல்லைகளை கடக்கிறது. தெலுங்கு, மலையாள சினிமாக்களின் ரசிகர்கள் அம்மொழிகளில் வெளிவரும் பெரும்பாலான படங்களைப் பற்றி ஊடகங்களில் ஆகா, ஓகோ என எழுதி தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேசிய அளவிலும் அவற்றுக்கு பலமடங்கு ரசிகர்களை உள்ளே கொண்டுவருகிறார்கள்.சர்வ சாதாரணமான மலையாளப் படங்களெல்லாம்கூட அந்தப் பிரச்சாரத்தால் நினைத்தே பார்க்கமுடியாத பொருளியல் வெற்றியை அடைந்துள்ளன. தெலுங்குப் படங்கள் ’பான் இன்டியன்’ படங்களாகவே ஆகிவிட்டன.

நேர் எதிரான மனநிலை தமிழில் நிலவுகிறது. இங்கே ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் எழுதுபவர்கள் தங்களை பார்வையாளர்களாக நினைத்துக் கொள்வதில்லை, தங்களையும் சினிமாக்காரர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அதாவது சினிமா எடுக்க வாய்ப்பு கிடைக்காத சினிமாக்காரர்களாக. ஆகவே சினிமாக்களை ஒருவகை போட்டிமனநிலையில் அணுகி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். ஒரு பொழுதுபோக்குப் படம் அதற்கான தன்மையுடன் இருக்கும். அதற்கு கலைப்படங்களுக்கு அளவுகோல்களை போட்டு நையாண்டி செய்கிறார்கள். சரி, கலைப்படமாக எடுக்கப்படும் படங்களை பாராட்டுகிறார்களா என்றால் அவற்றை கண்டுகொள்வதே இல்லை. பெரும்பாலும் எல்லா படங்களுக்கும் எதிர்மறையான, நையாண்டியான பதிவுகள்தான். விளைவாக தமிழ்ப் படங்கள் தங்கள் வழக்கமான வணிக எல்லையை விட்டு மீறிச்செல்லவே முடியவில்லை.

பொன்னியின் செல்வன் ஒரு கலைப்படம் அல்ல. ஒரு வணிகக் கேளிக்கைப் படம். ஒரு துடிப்பான இளைஞன், அவனுக்கு உதவிசெய்யும் வேடிக்கையான வைணவ அடியார், அவர்கள் சென்று சிக்கிக்கொள்ளும் அரசியல் சூழ்ச்சிகள், சிறு சிறு சாகசங்கள் என ஓடும் கதை. சிறுவர்களுடன் குடும்பமாக மகிழ்ந்து பார்ப்பதற்குரியது. மிக விரிவான காட்சியமைப்புகள், போர்க்களக் காட்சிகள் என ஒரு கனவு நிகர் அனுபவம் அது. கொடூரமான கொலைவெறித்தாண்டவமோ, உணர்ச்சிக்கொந்தளிப்போ, சடார் சடார் திருப்பங்களோ அதில் இல்லை. கண்ணை நிறைக்கும் ஓர் அனுபவம்.

அந்த அனுபவத்துக்காக பார்வையாளர்கள் வரவேண்டும். உலகம் முழுக்க அவ்வண்ணம் வந்து அமர்பவர்களிடம் தமிழகத்தின் ஒரு பொற்கால வரலாற்றைச் சொல்லப்போகிறோம். ஓர் எளிய ரசிகனாக படத்தை குழந்தைகளுடன் கொண்டாடிப் பாருங்கள்.

நீங்கள் அறிவுஜீவி என உங்களை நினைத்துக் கொண்டிருந்தால், படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசும் உங்கள் குழந்தைகளிடமோ, அல்லது அயல்பண்பாட்டைச் சேர்ந்தவரிடமோ சோழர்கள் யார் என்று சொல்லுங்கள். ராஜராஜசோழன் யார், சோழர்கள் எப்படி இந்தியாவின் நேர்ப்பாதியை ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள், எப்படி உலகம் வியக்கும் மாபெரும் கலைக்கோயில்களை உருவாக்கினார்கள், எப்படி கலையுச்சம் எனப்படும் உலோகச்சிற்பங்களை அவர்களின் காலகட்டம் உருவாக்கியது, எப்படி உலகின் மாபெரும் காவியமான கம்பராமாயணம் அவர்களின் காலகட்டத்தில் எழுதப்பட்டது, எப்படி அவர்களின் காலகட்டத்தில் மொத்த தமிழிலக்கியமும் உரைகளுடன் தொகுக்கப்பட்டது, எப்படி பண்ணிசை என்னும் மரபு அதன் உச்சத்தை அடைந்தது, எப்படி அவர்கள் காலத்தில் உருவான பக்திக்கவிதை இயக்கம் அடுத்த ஆயிரமாண்டுக்காலம் இந்தியாவையே ஆட்கொண்டது என்று விளக்குங்கள்.

ஓர் அரைமணி நேரம் பேசுமளவாவது கற்றுத் தெரிந்துகொள்ளுங்கள். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார், கே.கே.பிள்ளை, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற வரலாற்றாசிரியர்களை தெரிந்துகொள்ளுங்கள். குடவாயில் பாலசுப்ரமணியம் என்னும் சோழப்பண்பாட்டு ஆய்வாளரை பற்றி எடுத்துச் சொல்லுங்கள். பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா போன்று சோழர் காலத்தை ஆராய்ந்த ஐரோப்பியரைப் பற்றி சொல்லுங்கள்.

வெறுமே பாவ்லாக்கள் காட்டி, செயற்கையாகச் சலித்துக்கொள்வதெல்லாம் எவரும் செய்யக்கூடியது. மட்டம்தட்டுவது, ஏளனம் செய்வதெல்லாம் அறிவின் அடையாளம் அல்ல. தமிழர் என சொல்லிக்கொள்கிறோம், தமிழ்வரலாறு பற்றி அரைமணிநேரம் பேசுமளவுக்காவது தெரிந்து வைத்திருக்கலாம். தப்பில்லை.

ஜெ

***

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார்
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலாவுக்கும், நல்லதம்பிக்கும் விஜயா விருது