பொன்னியின் செல்வன்- 2, சினிமாவும் நாவலும்

பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….

பொன்னியின்செல்வன் ஏன் சினிமாவாக எடுக்கப்படவேண்டும் என்று சொன்னேன். பொன்னியின் செல்வன் பற்றிய அடுத்த வினாவே பொன்னியின் செல்வன் சினிமா எப்படி இருக்கும் என்பது. பொன்னியின் செல்வன் நாவல் ஒரு பெரிய சினிமாவாக எடுக்கப்பட்டு இந்தியாவெங்கும், உலகமெங்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்காகவே மேலே பேசமுடியும்.

பொன்னியின் செல்வன் ஒரு தூய கிளாஸிக், அதை தொடவே கூடாது, அது எவருக்கும் தெரியாமலேயே இருந்தால்கூட பரவாயில்லை, தமிழர்களின் ஒரு பொற்காலகட்டம் எவர் கவனத்துக்கும் வராமலிருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்பவர்கள் சிலர் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனோ, ராஜராஜ சோழனோ, தமிழர் பண்பாடோ முக்கியமே இல்லை. அவர்கள் தங்கள் இளமையில் வாசித்து அடைந்த ஒரு கனவு அந்நாவல். அக்கனவை அப்படியே பொத்தி வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம். அது ஒரு தனிப்பட்ட உளநிலை. ஒரு பெரிய சமூகச் செயல்பாடு அந்த தனிப்பட்ட உளநிலையை கருத்தில்கொள்ள முடியாது. மேலும் இப்படிச் சொல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இளமையில் பொன்னியின் செல்வன் வாசித்தபின் வேறெந்த நூலையும் வாசிக்காதவர்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படும்போது உருவாகும் பிரச்சினைகள் என்ன? எந்த ஒரு நாவலை சினிமாவாக ஆக்கினாலும் சில இழப்புகள், சில பெறுதல்கள் நிகழும். அவற்றைப் பற்றிய புரிதல் நம் சூழலில் விமர்சகர்களுக்குக் கூட இல்லை. அந்தப் புரிதல் இருந்தால் நாவலைப்போல சினிமா இல்லை என்பதுபோன்ற மேலோட்டமான விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை.

உலகமெங்கும் சினிமாவாக ஆக்கப்பட்ட பல இலக்கியப் பெரும்படைப்புகள் உள்ளன. அவற்றிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுரசிகர்களுக்குரிய பிரபல சினிமாவாக எடுக்கப்பட்டவை. இன்னொன்று, கலைப்படமாக எடுக்கப்பட்டவை.

சினிமா நிபுணர்களுக்காக அல்ல, என்னைப்போன்ற ஆரம்ப சினிமா ரசிகர்களுக்காக சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். பிரபல சினிமாக்களில் நாவல்கள் மிக வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவை சில உண்டு. என் பார்வையில் சிறந்த உதாரணங்கள் டாக்டர் ஷிவாகோ(Doctor Zhivago), கான் வித் த விண்ட் (Gone with the Wind), இங்க்லீஷ் பேஷண்ட் The English Patientபோன்றவை. இலக்கியங்கள் கலைப்படங்களாக ஆவதன் சிறந்த உதாரணங்கள் அகிரா குரசோவாவின் ரான் (Ran) (ஷேக்ஸ்பியரின் கிங் லியர் ) சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலி.

இரண்டாவது வகை கலைப்படங்களில் இயக்குநருக்கு பெரிய சுதந்திரம் உண்டு. அவர் தன்னுடைய படைப்பை எடுக்க மூலநூலை பயன்படுத்திக் கொள்கிறார். மூலநூலுக்கு அவர் மறுவிளக்கம் அளிக்கிறார். மூலநூலில் தனக்குத்தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார். மொத்த கதையின் களத்தையே மாற்றி எடுக்கப்பட்ட சிறந்த சினிமாக்களும் உண்டு. அந்தக் களத்தில் மூலநூலாசிரியர் முக்கியமல்ல, இயக்குநரே முக்கியமானவர். அவை நூலின் சினிமாச் சித்தரிப்புகள் அல்ல, அவை நூலில் இருந்து உருவான தனிக் கலைப்படைப்புகள்.

பொதுரசிகர்களுக்காக எடுக்கப்படும் முதல்வகை சினிமாக்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். அவை ஏதேனும் ஒரு திரைக்கதை உத்தி வழியாக மிகப்பெரிய நாவலை சுருக்கமான அடர்த்தியான ஒரு வடிவத்துக்குள் கொண்டுவருகின்றன. டாக்டர் ஷிவாகோ சிறந்த உதாரணம். அப்படித்தான் நாவலை சினிமாவாக எடுக்கமுடியும். ஏனென்றால் சினிமா நாவலைச் சுருக்கியே ஆகவேண்டும்.

அவ்வாறு சுருக்கியபின் அந்நாவலின் மிக உச்ச தருணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அந்நாவலின் கதையோட்டத்தையும், உணர்வுநிலையையும் சொல்ல சினிமாக்கள் முயல்கின்றன. அப்போது காட்சிகள்கூட சுருங்கும். ஏனென்றால் நாவலில் ஒரு காட்சி பத்துபக்கம் இருக்கும். வர்ணனைகள், உணர்ச்சிநிலைகள், உரையாடல்கள் என அது நீளும். வாசித்து முடிக்கவே அரைமணிநேரம் ஆகும். சினிமாவில் ஒரு காட்சி அதிகம்போனால் நான்கு ஐந்து நிமிடங்களே ஓடமுடியும். ஒரு நல்ல சினிமா இயல்பாக வெறும் அறுபது காட்சிகளாலானது. ஆகவே காட்சிகளும் சுருங்கும். நாவலில் விரிந்து விரிந்து செல்லும் நிகழ்ச்சி சினிமாவில் காட்சிவடிவில் சுருக்கமாக சில நிமிடங்களில் நிகழ்ந்து மறையும்.

ஆகவே, சினிமா நாவலின் காட்சியை குறைக்கிறதா? ஆழமற்றதாக ஆக்குகிறதா? இல்லை. சினிமாவின் அழகியலே வேறு. அது வெறும்காட்சி வழியாக ஓர் ஆழத்தை உருவாக்குகிறது. நான் எழுதிய நான் கடவுள் சினிமாவுக்கு தாண்டவன் அறிமுகக் காட்சிக்கு திரைக்கதையில் இரண்டே இரண்டு பக்கம்தான் எழுதியிருந்தேன். அது சினிமாவில் ஆறு நிமிடம் ஓடியது. ஒரு பயிற்சிக்காக அந்தக் காட்சியை திரும்ப நாவல் வடிவுக்கு எழுதிப்பார்த்தேன். நம்ப மாட்டீர்கள், ஏறத்தாழ நாற்பத்தைந்து பக்கம் வந்தது. தாண்டவனின் அந்த வருகை, கெத்து, அவன் அந்த பாதாளக்கோயிலுக்குள் நுழைய நுழைய அவனுடைய மனநிலை  மாறிக்கொண்டே இருப்பது, உள்ளே இருக்கும் சிதைந்த மனிதர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருடன் உள்ள உறவு, அவர்கள் தாண்டவனை கண்டதும் அடையும் விதவிதமான மனநிலைகள்… அதை வாசிக்க ஒரு மணிநேரம் ஆகும்.

சினிமா அளிப்பது அந்த காட்சியின் விரிவையும் ஆழத்தையும்தான். சுந்தரசோழர் படுத்திருக்கும் படுக்கையறையை கல்கி மிகச்சில சொற்களில் வர்ணித்துச் செல்கிறார். தரவுகளே அளிப்பதில்லை. நாம் நமக்குத் தெரிந்த வகையில் அதை கற்பனைசெய்து கொள்கிறோம். ஆனால் சினிமா ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கிறது. அந்த கட்டில், அந்த அறை, அதற்குள் இருக்கும் ஏவலர்கள், அவர்களின் ஆடைகள், அவர்களின் உடல்மொழி என அது அளிக்கும் நுணுக்கமான செய்திகளுக்கு அளவே இல்லை.

சினிமாவில் அந்த ஒரு நிகழ்வை, 3 நிமிடம் மின்னிப்போகும் ஒரு காட்சியை அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். பல நிபுணர்கள் கூடி, ஆராய்ந்து, வரைந்து, செட் போட்டு, வரைகலையில் விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு முகத்துக்கும் நடிகர்கள் தெரிவுசெய்து, அவர்களுக்கு ஒப்பனை செய்து, உடையலங்காரங்கள் செய்து, நடிக்கச்செய்து, வண்ணம் சரிபார்த்து, வெட்டி ஒட்டி, ஒலி சேர்த்து முழுமை செய்யவேண்டும். ஒரு முழுநாவல் எழுதும் உழைப்பு அந்த ஒரு காட்சிக்கே தேவைப்படும்.

ஒருவர் கல்கியின் நாலைந்து வரிகளில் இருந்து, அவருடைய கற்பனைக்கேற்ப உருவாக்கி வைத்திருக்கும் சுந்தர சோழனின் படுக்கையறையையே சினிமாவிலும் எதிர்பார்ப்பார் என்றால் அவர் சினிமா ரசிகரே அல்ல. சினிமா காட்டும் அந்தப் படுக்கையறையை மிக நுட்பமாக பார்த்து, அது காட்டும் அக்காட்சியில் இருந்து மிக விரிவாக மேலும் கற்பனை செய்பவரே சினிமாவுக்கு ரசிகர். அவருக்காகவே சினிமா எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அப்படித்தான் சினிமாவைப் பார்க்கின்றன. அந்தக் குழந்தைகள் சோழர்காலம் பற்றி, நம் கடந்தகாலம் பற்றி ஒரு கனவை அடைவதற்காகவே பொன்னியின் செல்வன் எடுக்கப்படுகிறது. எண்ணிப்பாருங்கள், நாமும் நம் சின்னவயசில் பார்த்த சினிமாக்களில் இருந்தே நமது மனச்சித்திரங்களை அடைந்திருக்கிறோம்.

சினிமாவை ‘குறைத்தலின் கலை’ (Art of minimalism) என்பார்கள். நாவல் என்பது ‘விரித்துரைத்தலின் கலை’ (Art of elaboration) என்பார்கள். இரண்டும் முற்றிலும் வேறுவேறு திசைகளில் செல்லும் கலைகள். நாவல் அனைத்தையும் விரித்து விரித்துச் சொல்லிச் செல்கிறது. ஒவ்வொன்றையும் வரலாறு, தத்துவம், நினைவுகள் எல்லாவற்றுடனும் இணைக்கிறது. நாவல் வாசிக்கும் அனுபவம் என்பது நாம் நமக்குள் விரிந்துகொண்டே செல்வதுதான்.

இன்றைய யுகத்தின் முதன்மைக்கலை நாவல் என்பது என் எண்ணம் – ஆகவே நான் நாவல் எழுதுகிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது துளித்துளியாக உடைக்கப்பட்ட உலகில். அலுவலகம், வீடு, தெரு, அரசியல் எல்லாமே நமக்கு தனித்தனி அனுபவ உலகங்கள். நாவல் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது. நாவல் மிகப்பெரிய ஒரு வலைபோல நம்முள் உள்ள சிந்தனைகள், கற்பனைகள், நினைவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக தொகுக்கிறது.

சினிமா நாவல் அல்ல. அது ஓர் அளவுக்குமேல் விரிந்தால் உடனே நாம் சலிப்படைவோம். யோசித்துப்பாருங்கள், அரைமணிநேரம் ஒருவர் பேசினால் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்துநிமிடம் சினிமா சரியாக நம்மை ஈர்க்கவில்லை என்றால் நெளிகிறோம். அதை சினிமாவில் Filmi time என்பார்கள். அது வெளியே உள்ள அதே காலம் அல்ல. அது மிகமிகச் செறிவூட்டப்பட்ட காலம். அதன் அடர்த்தி மிக அதிகம். சினிமாவில் பத்து நிமிடம் என்பது மிக மிக நீளம்.

ஏனெனில், சினிமா கனவுகளின் தர்க்கமுறை கொண்டது. கனவு சில கணங்களே நீடிக்கக்கூடியது. நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்து இன்றும் நினைவில் நீடிக்கும் சினிமாக்காட்சி ஒன்றை நினைவுகூருங்கள். மீண்டும் சென்று அந்தக்காட்சியைப் பாருங்கள். அது மிகமிகச் சிறிதாக, சில நிமிடங்களே மின்னி மறைவதாக இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் காட்சி உங்கள் நினைவில்தான் அவ்வளவு பெரியதாக ஆகியிருக்கும். அதுவே சினிமாவின் கலை.

நீங்கள் அந்தக் காட்சியை எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் அது அந்த சிறிய பொழுதிலேயே உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும். ஆனால் அதை ஒரு நாவலில் அல்லது நாடகத்தில் அந்தக்காட்சியை ஏற்கனவே நீளமாக பார்த்து, அது அப்படித்தான் என்று உறுதிசெய்துவிட்டு, அந்த சினிமாக்காட்சியை பார்த்தால் அது மிகச் சுருக்கமாக மின்னி மின்னி சென்றுவிட்டது என்றும், விரிவாக இல்லையே என்றும் தோன்றும்.

நாவல்களை சினிமாவாகப் பார்க்கும்போதுள்ள பெரிய சிக்கல் இதுவே. நாவலை வாசித்தவர்கள் பலர் அந்நாவலின் சினிமா வடிவைப் பார்த்து ‘சட் சட்னு முடிச்சிட்டான். நாவல்ல இன்னும் டீடெயிலா இருக்கும்’ என்பார்கள். அது சினிமா என்னும் கலைவடிவை அறியாததனால் சொல்வது.

சினிமாவை அறிந்தவர்கள் நாவலின் அந்த காட்சி சினிமாவில் எந்த அளவுக்கு காட்சிவடிவ செய்திகளை செறிவாகக் காட்டுகிறது என்பதையே கவனிப்பார்கள். வந்தியத்தேவன் கடம்பூர் கடைவீதி வழியாக குதிரையில் சென்றான் என்பது நாவலில் ஒரு வரி. ஆனால் சினிமாக்காட்சியில் அந்த கட்டிடங்கள், அந்த தெருவின் வியாபாரிகள், அந்த குதிரை என பலநூறு நுண் செய்திகள் உள்ளன. நல்ல சினிமா ரசிகன் முடிவே இல்லாமல் அவற்றை பார்க்கமுடியும்.

ஆகவே ஒரு நாவல் சினிமா ஆகும்போது அதன் நாவல் தன்மையை இழக்கிறது. அது இழப்பு. சினிமாத்தன்மையை அடைகிறது. அது பெறுமானம். நாவல் சினிமாவடிவில் விரிவையும் நீளத்தையும் இழக்கும். விவாதத்தன்மை இருக்காது. நீண்ட உரையாடல்கள் இருக்காது. மன ஓட்டம் இருக்காது. ஆனால் காட்சிவடிவ செய்திகளை பலமடங்கு கூடியிருக்கும். அவற்றிலிருந்து மேலும் கற்பனை செய்ய ஆரம்பித்தால் நாம் ஏற்கனவே வாசித்த நாவலே பலமடங்கு வளர்ந்திருப்பதை உணர்வோம்

(மேலும்) 

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கு.சின்னப்ப பாரதி