ஒரு கலைக்களஞ்சியத்தில் வணிகநிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறக் கூடாது. புத்தகப் பிரசுரம் என்பது ஒரு வணிகம். ஆனால் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பெயர் இல்லாமல் தமிழ் கலைக்களஞ்சியம் நிறைவடைய முடியாது. ஏனென்றால் அது ஒரு பெரும் பண்பாட்டு இயக்கம். மறைமலையடிகள் தொடங்கி வைத்த தனித்தமிழியக்கத்தை அறிவுலகில் நிலைநாட்டியதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய செந்தமிழ்ச்செல்வி இதழ் தமிழாய்வில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியது.
பெயர் குறிப்பிடுவதுபோல சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு மதநூல் வெளியீட்டு நிறுவனம் அல்ல. அதன் செயல்பாடுகளுடன் தேவநேயப் பாவாணர் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். பெயர் சுட்டுவதுபோல அது நெல்லை சார்ந்த நிறுவனமும் அல்ல. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் சென்னையை மையமாக்கியவை. மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழிகாட்டியாகச் செயல்பட்டார்