பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?

பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் பற்றி சொல்லியிருந்தீர்கள். பொன்னியின் செல்வன் எப்படி, மூலத்தைச் சிதைக்காத சினிமாவாம வெளிவருமா? நாவல் படித்த அனுபவம் அமையுமா? ஏனென்றால் நான் உட்பட பலருக்கும் இந்த பயம் இருந்துகொண்டிருக்கிறது. நாவல் ஒரு கிளாஸிக். அதை சிதைத்துவிடுவார்களோ என்று சமூகவலைத்தளங்களில் பலரும் பேசுவதைக் கேட்க முடிகிறது.

விஜய் சேஷகிரி

அன்புள்ள விஜய்,

இந்தவகையான கடிதங்கள் எனக்கு பொன்னியின் செல்வன் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே வந்துகொண்டிருக்கின்றன. நான் எதற்கும் பதில் சொன்னதில்லை. இது ஒரு பொதுவான பதில். (உங்கள் கடிதத்தின் சாராம்சத்தை மட்டுமே கருத்தில்கொண்டிருக்கிறேன்)

சில அடிப்படைக்கேள்விகளுக்கு முதலில் விளக்கம் அளிக்கிறேன்.

அ.பொன்னியின் செல்வன் நாவலை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்?

ஐயத்துக்கு இடமில்லா ஓர் உண்மை, பொன்னியின் செல்வன்தான் தமிழிலேயே அதிகமாக வாசிக்கப்பட்ட நாவல். சரி, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இதுவரை பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் எவரெவர் என. கதையாவது கேட்டவர்கள் எத்தனை பேர் என? திகைப்படைவீர்கள். மிகமிகக்குறைவாகவே அதை வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது.

பொன்னியின் செல்வன் இதுவரை ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கும். பத்துலட்சம் பேர் படித்திருப்பார்கள். தமிழக மக்கள் தொகை பத்துகோடிக்கும் மேல். உலகளவில் பன்னிரண்டு கோடி. ஆகவே அந்நாவலை படித்தவர்கள் தமிழ்மக்களிலேயே மிகமிகச்சிறுபான்மையினர்தான்.

இது தமிழகத்தின் கதை. தமிழகத்துக்கு வெளியே ராஜராஜ சோழன் என்ற பெயர், சோழ அரசகுடி என்ற பெயர் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது. அது மிக இயல்பானது. ஏனென்றால் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்குரிய பல பேரரசுகள் உள்ளன. ராஷ்டிரகூடப் பேரரசு அல்லது கீழைச்சாளுக்கியப் பேரரசு பற்றி நமக்கு என்ன தெரியும்?

பள்ளி, கல்லூரிகளில் பெயர்கள் மட்டும் அறிமுகமாகின்றன. அவ்வாறு பிற அரசுகள் பற்றிச் சொல்வதில் நமக்கு துணைத்தேசியம் சார்ந்த உளத்தடைகள் பல உண்டு. சோழர்கள் இருநூற்றைம்பது ஆண்டுக்காலம் ஆட்சி செய்த நிலம் கேரளம். கேரளத்தில் பின்னாளில் உருவான ஐம்பத்தாறு அரசுகள் (நாடுகள்) என்னும் அமைப்பு சோழர்காலத்தில் உருவானது. அதன் சிற்றரசர்கள் நாடுவாழிகள். அவர்களின் கூட்டமைப்பே சோழர்களுக்குப் பின் திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு அரசுகளாகியது. சோழர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள், வெட்டப்பட்ட ஏரிகள் பலநூறு கேரளத்தில் உள்ளன

ஆனால் கேரளத்தில் பொதுவாக வரலாறு பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட சோழர்கள் பற்றி தெரியாது. கேரள பாடநூல்களில் சோழர்கள் பற்றி பெரிதாக ஏதுமில்லை. கேரள வரலாற்றையே பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சோழர்களின் வரலாற்றை தவிர்க்க நினைக்கிறார்கள். நாம் தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொதுப்போக்காகத்தானே அறிந்து வைத்திருக்கிறோம். நாயக்க மன்னர்கள் வெட்டிய ஏரிகளும், உருவாக்கிய சாலைகளும் சந்தைகளும்தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை. நான் தமிழகத்துக்கு வெளியே எவரிடம் பேசினாலும், அறிஞர்களிடமும் இலக்கியவாதிகளிடமும் பேசும்போதுகூட, சோழர்கள் என்று சொன்னால் மேலும் கூடுதலாக ஒரு ஐந்து நிமிடம் அவர்கள் எவர் என விளக்கவேண்டியிருக்கிறது.

இச்சூழலில் வருகிறது பொன்னியின் செல்வன். ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றால் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கூட பலகோடி பேருக்கு சோழர்களை, தமிழ்வரலாற்றின் ஒளிமிக்க பகுதியைக் கொண்டுசென்று சேர்த்துவிடும். நாம் அதன்பின் விளக்கவேண்டிய தேவையே இருக்காது. பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட சோழநாடு என ஒரு வரி சொன்னாலே போதும். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும்.

ஆங்கிலம் வழியாக கல்விகற்று, உலகமெங்கும் சிதறிக் குடியேறிக்கொண்டிருக்கும் நம் அடுத்த தலைமுறைக்கு பொன்னியின் செல்வன் என்னும் ஒரு படம் ஒட்டுமொத்த சோழர் வரலாற்றையும் அறிமுகம் செய்துவிடும். தேவை என்றால் அவர்கள் நாவலை படிக்கலாம். மேலும் வரலாற்று நூல்களை வாசிக்கலாம். நீங்களே கவனியுங்கள், நம் அடுத்த தலைமுறை இன்று தமிழுடன் கொண்டிருக்கும் ஒரே தொடர்பு சினிமாதான். புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் தமிழ்ப்பேச்சை காதில் வாங்குவதே சினிமா வழியாகத்தான். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும்.

ஏன் திரைப்படமாக எடுக்கவேண்டும்? தொலைத்தொடராக எடுக்கலாமே? சினிமாவாக எடுத்தால், எப்படி எடுத்தாலும் அத்தனை பெரிய நாவலை சுருக்காமலிருக்க முடியாது. தொலைத்தொடராக எடுக்கலாம். ஆனால் அதற்கு முதலீடு கிடைக்காது. வெறும் ‘காஸ்ட்யூம் டிராமா’வாகவே எடுக்க முடியும். சினிமா தவிர எந்த ஊடகத்திற்கும் சோழர்காலத்தை சித்தரித்துக் காட்டும் அளவுக்கு முதலீடு அமையாது.

மேலும், ஏற்கனவே பொன்னியின் செல்வன் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தொலைத்தொடரோ, காமிக்ஸ் வடிவமோ ஈர்ப்பை அளிக்கும். இன்னமும் பொன்னியின் செல்வன் அல்லது சோழர்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களை சினிமா மட்டுமே ஈர்க்க முடியும். பிற ஊடகங்கள் பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் புகழை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவை. சினிமா மட்டுமே பொன்னியின் செல்வன் என்னும் நாவலுக்கு தன் புகழை அளிப்பது.

எண்ணிப்பாருங்கள், பொன்னியின் செல்வன் நாவலின் புகழ் என்பது தமிழகத்துக்குள் மட்டுமே. அதிலும்கூட தமிழகத்தில் பெரும்பான்மையினருக்கு அந்நாவலை பற்றி ஒன்றுமே தெரியாது. பொன்னியின் செல்வன் சினிமா பலகோடி ரூபாயை விளம்பரத்துக்காகச் செலவிடுகிறது, இன்னும் பலகோடி செலவிடப்படவிருக்கிறது. உலகம் முழுக்க. அது நாவலை ஆயிரம் மடங்கு மக்களிடையே கொண்டுசெல்கிறது. அது சினிமாவால்தான் இன்றைய சூழலில் முடியும்.

சோழர்காலப் பெருமையைச் சொல்கிறோம், ராஜராஜனின் புகழைச் சொல்கிறோம் என்றால் தமிழகத்திலேயே அடுத்த தலைமுறையினர் பொருட்படுத்த மாட்டார்கள். தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் அப்படி ஒரு பேச்சையே எடுக்க முடியாது. அகன்ற காட்சிகள், நாடகீயத்தன்மை, சாகசங்கள் ஆகியவை கொண்ட ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற அளவிலேயே பொன்னியின் செல்வன் மக்களிடையே தன்னை முன்வைக்க முடியும். அதன்பொருட்டு வந்து அமர்பவர்களிடமே அது சோழர்களின் உலகை விரித்துக் காட்டமுடியும்.

ஏன் சினிமா தேவைப்படுகிறது? இது காட்சியூடகத்தின் உலகம். நாம் இளமையில் பார்த்ததை விட பத்து இருபது மடங்கு இன்றைய தலைமுறை காட்சியூடகங்களை பார்க்கிறது. நாம் மாதம் ஒருமுறை திரையரங்கு சென்று சினிமா பார்த்தோம். கைபேசியில் சினிமா ஓடும் காலம் இது. இன்று எந்த ஒன்றும் காட்சியூடகமாக ஆகவில்லை என்றால் பொதுப்பிரக்ஞையில் நீடிக்காது. நேற்றைய தலைமுறையில் அச்சு ஊடகமே முதன்மையானது. தொடர்கதைகளை முண்டியடித்து வாசித்த காலம் அது. அது போய்விட்டது. ‘எதுவானாலும் காட்டு’ என்பதே இன்றைய தலைமுறையின் கோரிக்கை. ஆகவே பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆகியே தீரவேண்டும்.

ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் இறந்தகாலம் பற்றிய கனவு தேவைப்படுகிறது. அந்தக்கனவு மிக இளமையிலேயே அச்சமூக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. அது அவர்களின் ஆழத்தில் வளர்கிறது. அந்தக் கனவையே இலக்கியங்கள் உருவாக்குகின்றன. அவை அக்கனவின் வழியாகவே தலைமுறைகளை இணைத்து பண்பாட்டுத் தொடர்ச்சியை உருவாக்குகின்றன. பண்பாடு என நாம் சொல்வதே நம் முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நினைவுகளையும் கனவுகளையும்தான். வரலாறு, தொன்மம் ஆகியவை இதன்பொருட்டே உருவாக்கப்படுகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்கச் சமூகங்களையே பாருங்கள். அவர்கள் அதிநவீனச் சமூகம். ஆனால் தங்கள் கிரேக்க, கெல்டிக், நார்ஸ் பாரம்பரியத்தை குழந்தைக்கதைகளாக, சினிமாக்களாக, காமிக்ஸ்களாக அடுத்த தலைமுறைக்கு அளித்தபடியே இருக்கிறார்கள். தோர் (Thor) என தேடிப்பாருங்கள். அது ஒரு நார்ஸ் தொன்மம். இடிமின்னலின் கடவுள். நம்முடைய இந்திரன் போல. உங்கள் குழந்தைகளிடம் அவர் யார் என்று கேளுங்கள். அவர்களிடமே பொம்மை இருக்கும். அவ்வளவு சினிமாக்கள், அத்தனை காமிக்ஸ் படங்கள்.

ஐரோப்பாவின் தொல்காலகட்டம் முழுக்க சினிமாக்களாக அந்த மக்களிடையே சென்றுகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வ வளத்தால், ஊடக வல்லமையால் உலகம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். இந்திரன் எவர் என்று தெரியாத நம் குழந்தைக்கு தோர் வைத்திருக்கும் சுத்தியலின் பெயர் என்ன என்று தெரிந்திருக்கும். உலகம் முழுக்க உள்ள குழந்தைகள் ஐரோப்பியப் பண்பாடு நோக்கி அந்தச் சினிமாக்களால் ஈர்க்கப்படுகிறார்கள். கொஞ்சம் கல்வி கற்றதும் அங்கே சென்றுவிடத் துடிக்கிறார்கள்.அச்சமூகத்துடன் மிக எளிதாக இணையவும் அவர்களால் முடிகிறது. ஐரோப்பியச் சமூகத்தை, அமெரிக்கச் சமூகத்தை இன்று ஒருங்கிணைத்து வைத்திருப்பது, உலகமெங்குமிருந்து மக்களை அதைநோக்கி ஈர்த்து அதை மேலும் வல்லமையானவையாக ஆக்குவது அவர்களின் இந்த வரலாறும் தொன்மமும் உருவாக்கும் கனவுதான்.

இன்று உலகவல்லமையாக எழுந்து வரும் சீனா முதலில் செய்வது அவர்களின் வரலாற்றையும் தொன்மங்களையும் மாபெரும் சினிமாக்களாக எடுத்து அவர்களின் குழந்தைகளுக்கும், உலகம் முழுக்கவும் கொண்டுசெல்வதுதான்.கோடிக்கணக்கான செல்வத்தை அதன்பொருட்டு சீனா செலவிடுகிறது. உலகம் முழுக்க படையெடுப்பாளனாக, பேரழிவாளனாக அறியப்பட்ட ஜெங்கிஸ்கானை ஒரே சினிமா வழியாக சீனா  கதாநாயகனாக ஆக்கிவிட்டது. ஜெங்கிஸ்கானின் வரலாற்றைச் சொல்லும் சீனப்படமான மங்கோல் Mongol (film) உலகமெங்கும் பெருவெற்றி அடைந்த மாபெரும் சினிமா.

சீனா தன்னுடைய வரலாற்றையும் தொன்மங்களையும் சினிமா வழியாக உலகமெங்கும் கொண்டு செல்கிறது. அதற்காக ஹாலிவுட் இயக்குநர்களை கொண்டுவந்து, கோடிக்கணக்கான முதலீட்டை இறக்கி, சினிமா எடுக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் ரெட் கிளிஃப் Red Cliff (film)  ஹாலிவுட் இயக்குநர் ஜான் வூ வை கொண்டுசென்று அப்படத்தை இயக்கினர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், உலகமெங்கும் கொண்டுசென்றனர். அந்த படம் உலக சினிமாவின் மாபெரும் திரைநிகழ்வுகளில் ஒன்று.

அதன் நோக்கம் மூன்று. ஒன்று சீனமக்களிடையே, அவர்களின் அடுத்த தலைமுறையில், சீனா பற்றிய பெருமிதத்தை உருவாக்குவது. சீனா பெரும்பேரரசாக இருந்தது என ஆழமாக அவர்களின் உள்ளத்தில் நிறுவுவது. அந்த பொதுக்கனவே சீனாவை ஒருங்கிணைக்கும் ஆற்றல். இரண்டாவது, சீனா பற்றிய ஒரு மதிப்பை ஐரோப்பிய, அமெரிக்கச் சூழலில் உருவாக்குதல். எப்படி ஹாலிவுட் படம் பார்த்து நாம் ஐரோப்பியப் பண்பாடுமேல் பிரமிப்பு கொள்கிறோமோ அதே பிரமிப்பை அவர்களிடம் சீனா பற்றி உருவாக்குதல்.

அனைத்தையும் விட முக்கியமானது, கிழக்கு முழுக்க பரவியிருக்கும் மஞ்சளின மக்களிடம் சீனப்பெருமிதத்தை நிறுவுதல். அவர்களுக்கு ஏற்கனவே ஐரோப்பியப் பண்பாடு பற்றி பிரமிப்பும் தாழ்வுணர்ச்சியும் உண்டு. இந்த படங்கள் அதற்கு மாற்றாக அமைகின்றன. நாமும் குறைந்தவர்கள் அல்ல என எண்ணச் செய்கின்றன. சீனாவை தங்கள் இனத்தின் மையமாக எண்ண செய்கின்றன.

உண்மையில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பலநூறு ஆண்டுகளாக சீனா மேல் இளக்காரமோ வெறுப்போதான் இருந்தது. அங்கு வாழும் பல லட்சம் பேர் சீனாவில் அரசியல் காரணங்களுக்காக தப்பி வந்தவர்கள். பல நாடுகள் சீன ஆக்ரமிப்பில் இருந்த வரலாறு  கொண்டவை. ஆனால் இன்று அந்த இளக்காரம் அகன்றுவிட்டிருக்கிறது. இன்று சீனா அவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு ஏற்கக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு சீன சினிமாவுக்கு உண்டு.

இந்தப்போட்டியில் எங்கும் நாம் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த அளவுக்குச் செல்வாக்கும் இல்லை. ஆனால் நமக்கும் ஒரு பொற்கால வரலாறு இருந்தது, நாமும் வெற்றிபெற்ற சமூகமாக இருந்தோம் என நம் இளையதலைமுறைக்கும், இந்தியாவுக்கும், உலகுக்கும் சொல்வதற்கான ஒரு முயற்சி பொன்னியின் செல்வன். இதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு சமூகமாக நீடிக்க, ஒரு பொதுக் கனவை நம் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க. நம் முன் உள்ள பெரும் சவால் அது.

ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படவேண்டும். உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டாகவேண்டும்.

(மேலும்)

முந்தைய கட்டுரைதகடூர் புத்தகப் பேரவை ,நூல் அறிமுகம்
அடுத்த கட்டுரைஅம்பை- ஒரு கதை