அன்புள்ள ஜெ
பாரதி பாஸ்கர் சொல்லியிருக்கும் அம்பையின் கதை இது. இது மகாபாரதக் கதை அல்ல, வெண்முரசு அளிக்கும் கதை. எல்லா நுண்ணிய தகவல்களும் அப்படியே உள்ளன. அதில் வெண்முரசின் பெயர் சொல்கிறார். ஆனால் கீழே கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பெரும்பாலும் அது மகாபாரதக் கதை எனவே நினைக்கிறார்கள். ஒரு லட்சம் பேர் அதை கேட்டிருக்கிறார்கள். அவர்களில் எவருக்கும் வெண்முரசு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (ஆனால் பாரதி ஒரு நுட்பமான விஷயத்தை விட்டுவிட்டார். அம்பையிடம் பேசும் பீஷ்மரின் முகத்தில் அவரை அறியாமலேயே ஒரு கணம் எழும் ஆண்மையின் திமிர்கொண்ட சிரிப்புதான் அம்பையை எரியச்செய்தது) மற்றபடி பாரதி சிறப்பாகவே கதையைச் சொல்லியிருக்கிறார்.
சரவணன் குமார்
***
அன்புள்ள சரவணன்,
இப்படி ஒரு நூலின் கதை நிகழ்த்துகலைகள், பேச்சுக்கள் வழியாக சென்றுகொண்டே இருப்பது எப்போதும் நிகழ்வதுதான். மகாபாரதம் இப்படிச் சொல்லிச் சொல்லிப் பெருக்கிக்கொள்ளப்பட்ட கதைதான். காலந்தோறும் அதில் விழுமியங்கள் ஏற்றப்படுகின்றன, அது மறுபடி பிறந்தெழுகிறது. ஏனென்றால் மகாபாரதம் என்பது ‘கதை’ அல்ல. அது ஆழ்படிமங்களின் தொகை. நம் தொல்குடி நினைவுகளில் உள்ளது அது. ஆழ்படிமங்களில் இருந்தே அன்றாடப்படிமங்கள் உருவாகின்றன. ஆழ்படிமங்கள் மண்ணுக்குள் இருக்கும் வேர்த்தொகை போல.
ஜெ