ஆண்களின் கண்கள்…

அன்புள்ள …

எண்பதுகளில் நானும் சில மாதங்கள் மும்பையில் இருந்திருக்கிறேன். அப்போது மிக நெரிசலான, ஆனால் மிக நட்பார்ந்த, தங்குமிடம் தவிர எல்லாமே மலிவான, ஊராக இருந்தது அது. நான் தாராவியில் இருந்தேன்– வேலை ஏதும் இல்லாமல்.  திரும்பத்திரும்ப முகங்களைப் பார்த்துக்கொண்டு ஊரைச்சுற்றிவருவதே அன்றெல்லாம் வாழ்க்கையாக இருந்தது.

பொதுவாக நகரங்களை நாம் விரும்பவேண்டுமென்றால் மனிதர்களை விரும்பவேண்டும். சென்னையில் அதன் தூசியும் இரைச்சலும் பலருக்குப் பிடிக்காமல் ஆகும்போதே அங்கே கொப்பளிக்கும் வாழ்க்கை பெரும் மோகத்தை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன். குறிப்பாக டிசம்பர் ஜனவரி இரு மாதங்களும் சென்னை ஒரு பெரிய கொண்டாட்ட வெளியாக இருக்கிறது. இசை, புத்தகம், நாட்டுப்புறக்கலைகள். நல்ல பருவநிலையும் அப்போது இருக்கும்.

பொதுவாக ஒரு நிலப்பகுதியில் ஒருகுறிப்பிட்ட வாழ்க்கைமுறை இருந்தாலே நமக்கு அதன்மீது மோகம் உருவாகிவிடும். மெல்ல மெல்ல நாமும் அதில் ஈடுபட்டு மூழ்கிவிடுவோம். காசியைப்போல அழுக்கான நெரிசலான நகரம் ஒன்று இல்லை. ஆனால் காசிக்கு ஒரு வரலாறும் தனித்தன்மையும் உண்டு. அதனாலேயே எனக்கு காசிமீது ஒரு மோகம் அணையாமல் இருந்துகொண்டிருக்கிறது.

*

சென்னையைப்பற்றிச் சொல்லும்போது சென்னையில் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் பார்வையைப் பற்றிச் சொன்னீர்கள். இதில் எனக்கு ஒரு தரப்பு உண்டு. பல பெண்களிடம் இதனைச் சொல்லியிருக்கிறேன். ஆண்கள் பெண்களை உற்றுப்பார்ப்பது தமிழ்நாட்டில் — தென்னகத்தில் பொதுவாக– அதிகம் என்றும் இது ஒரு பெரும் தொல்லையாக இருக்கிறது என்றும் பல பெண்கள் சொல்வார்கள். என் மனைவி கூட சலித்துக்கொள்வதுண்டு. பெண்கள் அந்த சலிப்பை கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்கிறார்களோ என்றுதான் எனக்குப் படுகிறது.

பெண்கள் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கும் ஒரு காலகட்டம் நம்முடையது. மேலைநாடுகளைப் போல அல்லாமல் பலவகையான தோற்றமுள்ள பெண்கள் உள்ள தேசம் இது. தன் உறவிலும் சுற்றத்திலும் ஒரேயொரு அழகான பெண்கூட இல்லாத ஆண்கள் ஏராளமாக இருக்கலாம். ஏன் ஆண்கள் பெண்களைப் பார்க்கக் கூடாது? பெண்களை  தொடுவது, தொந்தரவுசெய்வது என்ற அளவுக்குப் போகாதது வரை ஏன் அதை அவ்வளவுபெரிய பிழையாக எடுத்துக்கொள்ள வேண்டும்? இதில் எனக்கு வள்ளுவருடன் வேறுபாடு உண்டு– பிறன் மனை நோக்கா பேராண்மை கொண்டவனுக்கு அவ்வளவு அழகுணர்ச்சி இருக்க வாய்ப்பில்லை.

ஆண்களின் இயல்பான பெருமகிழ்ச்சிகளில் ஒன்று பெண்களைப் பார்ப்பது. மிக இளம் வயதிலேயே இந்த ரசனை ஆரம்பமாகிறது. என் கருத்தில் எப்போது சுயநினைவு உருவாகிறதோ அப்போது முதலே. ஒன்றாம் வயது முதலே பார்த்த பெண் முகங்கள் பெரும்பாலும் என் நினைவில் இருக்கின்றன. இது முதுமை வரைக்கும், நூறு வயதில் நோயில் நொந்து பாயில்படுத்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும்போதுகூட, அவ்வாறே தொடர்வது. என் நோக்கில் முற்றிலும் அழகே இல்லாத பெண்களை நான் எங்காவது பார்த்தேனா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது வாழ்க்கை மீதான ஈடுபாட்டில் இருந்து உருவாவது. அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. சுந்தர ராமசாமி இதை ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் – என் கண்சுற்றத்தில் வந்த எந்த அழகான பெண்ணையும் நான் பார்க்காமல் விட்டதில்லை என்று. இதை விவேகானந்தரும் சொல்லக்கூடும். 

ஆண்களின் பார்வையை எப்போதும் காமத்துடன் தொடர்பு படுத்த வேண்டியதும் இல்லை. உண்மையில் பெரும்பாலான நேரங்களில் அழகான பெண்களை ரசிக்கும்போது அது காமம் சார்ந்ததாக இருப்பதும் இல்லை என்பதை ஆண்கள் அறிவார்கள். நேற்று முன்தினம் ஒரு அப்பா தன் மூன்று பெண்களுடன் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டேன். மூத்தவள் பதினைந்து இரண்டாவது பன்னிரண்டு கடைசி பத்து. ஒரே மாதிரி பட்டுப்பாவாடை, ரெட்டைச் சடை. ஒரேமாதிரி பாசிமணி வளையல் மாலை. எனக்கும் பெண் இருக்கிறாள். அவளை கொஞ்சிக் கொஞ்சி செல்லப்புழுக்கையாக ஆக்கி வைத்திருக்கிறேன். ஆனாலும் அப்போது அந்த அப்பா மீது கடுமையான பொறாமை ஏற்பட்டது உண்மை.

சாமியார்கள் அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் காமத்துக்கு அப்பால் சென்று பூவை ரசிப்பதுபோல பெண்மையையும் ரசிக்க கற்றவர்களாக இருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நித்ய சைதன்ய யதி பெரும் கூட்டத்தில் சாதாரணமாகச் சொல்வார், அழகிய பெண்ணிடம், ”இப்படி முன்னால் வந்து உட்கார் நான் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்” என்று.. அப்படி பார்க்கப்படுவதை ஓர் இழிவாக பெண் நினைத்தால் அது இயல்பான உணர்வல்ல என்றுதான் எண்ணுகிறேன்.

பெண் உடல் பார்க்கப்படுவதற்கானது என்றே என் எண்ணமாக இருக்கிறது. ஆம்,அதில் எல்லைகள் உள்ளன. அது ஒழுக்கத்தின் வரம்புக்குள் நிற்கவேண்டும். அதெல்லாம் உண்மையே. ஆனாலும் அது மனிதனின் இயல்பான இன்பங்களில் ஒன்று. நம் நாட்டில் நூற்றாண்டுக்காலமாக அப்படித்தான் இருந்திருக்கிறது. இஸ்லாமிய யுகமும் பின்னர் விக்டோரிய யுகமும் உருவாக்கிய ஒழுக்கக் கெடுபிடிகளை நம்முடைய பாரம்பரியமாக எண்ணிக்கொள்கிறார்கள் பலர்.

நான் பெண்களை அவர்கள் தோற்றத்தை மட்டும் வைத்து மதிப்பிடுபவன் அல்ல. அவர்களின் நுண்ணுணர்வே என் அளவுகோலாக இருக்கிறது. ஆனால் நான் தோற்றத்தைப் பார்க்கக் கூடாது என்று ஏன் என் இயல்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. அதுதான் மிகச் செயற்கையானது என்று படுகிறது. ஒரு பெண்ணுடன் நாம் பேசும்போது ஒவ்வொரு கணமும் கவனமாக இருந்தாகவேண்டும் என்றால் என்ன பேசுவது? மூச்சுத்திணறும் அல்லவா?

தன்னைப்பார்க்கக் கூடாது, பார்த்தால் அவமதிப்பாக உணர்வேன் என்று சொல்லும் ஒரு பெண்ணுடன் எப்படி பேசமுடியும் என்றே ஆச்சரியமாக இருக்கிறது. கண்களைக் கட்டுப்படுத்துவதிலேயே முழுக்கவனமும் இருக்கும்நிலையில் சம்பிரதாயமான ஒரு புன்னகை சில சொற்கள் மட்டும்தானே சாத்தியம். உண்மையில் நம்முடைய பெண்கள் அப்ப்டி எண்ணுவதனால் அவர்கள் எவரிடமும் நட்பார்ந்த ஒரு பழக்கத்துக்கு வாய்ப்பே இலலமல் இருக்கிறது. விதிவிலக்குகளாக இருப்பவர்கள் சிலரே. 

நான் பிற பெண்களுடன் பழகாத சூழலில் வளர்ந்தவன். பெண்கள் இல்லா கல்லூரியில் படித்தேன். பின்னர் காசர்கோடுக்கு வேலைக்குச் சேர்ந்தபோது என்னைச் சுற்றி அழகான பெண்கள். என்னால் கண்களை தூக்கவே முடியாது. எனக்கு சீனியராக அடிபப்டைப்பயிற்சி அளித்த வசந்தகுமாரி பேரழகி. அவள் சொல்லச் சொல்ல நான் பிரமித்து கண்களை கட்டுப்படுத்த முயன்றபடி இருந்தேன். ”இதோபார் என்னை ஒரு அரைமணிநேரம் நன்றாகப்பார்த்துக்கொள். அதன் பின் நான் சொல்வதை கவனித்துக்கேள். மீண்டும் மீண்டும் சொல்ல என்னால் முடியாது” என்றாள். நான் சிரித்துவிட்டேன். எல்லாம் சகஜமாக ஆகியது. பத்து வருடம் எனக்கு அங்கே நல்ல தோழிகள் இருந்தார்கள்.

பார்க்கப்படுவதை சாதாரணமாக, இயற்கையின் ஒருபகுதியான அன்றாட நிகழ்வாக, எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை என்பதே என் எண்ணம். இதையே நான் எனக்குத்தெரிந்த பெண்களிடம் சொல்வது. பார்க்கப்படுவதனால் உங்களை பிறர் வெறும் உடலாகக் குறுக்குகிறார்கள் என்ற எண்ணம் ஒருவகை முதிராதபெண்ணிய நோக்கு. பார்க்கப்படுவதன் மூலம் இயற்கை பெண்ணுக்கு அவள் அறிவுடன் நுண்ணுணர்வுடன் மேலதிகமாக அளித்துள்ள அழகையும் அங்கீகரிக்கும் ஒரு சந்தர்ப்பமே வாய்க்கிறது

உடனே கேட்கப்படும் கேள்வி நீ உன் பெண்ணையும் மனைவியையும் பிறர் பார்ப்பதை ஒப்புக்கொள்வாயா என்பது. கண்டிப்பாக என்பதே என் பதில். அது எனக்குப் பெருமை என்றுகூடச் சொல்வேன். அவர்கள் தொந்தரவு தரப்படாதவரை, அவமதிக்கப்படாதவரை அது இயல்பாக நிகழும் ஒரு சமூகச்செயல்பாடு மட்டும்தான்.

ஆகவே சென்னையின் கண்களை மன்னியுங்கள். அங்கீகரியுங்கள். குறைந்தபட்சம் புறக்கணிக்கவாவது பழகிக்கொள்ளுங்கள்.

ஜெ

[மறுபிரசுரம்/ முதல்பிரசுரம்- 2011]

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

முந்தைய கட்டுரைவெண்முரசு – நிறம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39