அன்புள்ள ஜெ
குமரித்துறைவியில் வரும் “திருடன் மூத்தால் திருவுடை அரசன்” என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவ்வரியை இந்நாள்வரை ஒரு பழமொழி என்றே நினைத்துவந்தேன். இன்று தன்மீட்சி படித்துக்கொண்டிருந்தேன். அதில் “செயலின்மையின் இனிய மது” என்ற பகுதியில் இப்படி எழுதியிருந்தீர்கள்
“என்னுடைய புனைவுலகில் உள்ள பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், வழக்காறுகள் எல்லாமே நான் புதியதாக உருவாக்குபவை” என.
அதனை படித்த பிறகு, “திருடன் மூத்தால் திருவுடை அரசன்” என்ற வரி ஒரு பழமொழியல்ல, அது நீங்கள் உருவாக்கியது என்று புரிந்துகொண்டேன். நான் புரிந்துகொண்டது சரிதானே?
– மணிமாறன்
***
அன்புள்ள மணிமாறன்,
அது உண்மை. நான் எழுதிய பழமொழிதான் அது. என் படைப்பில் மிக அரிதாகவே வெளியே இருந்து பழமொழியோ கவிதைகளோ நாட்டார்பாடல்களோ எடுத்தாளப்பட்டிருக்கும்.
பழமொழிகள் என்பவை பழைய மொழிகள் அல்ல. ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட பழமையான ஒரு பார்வைக்கு உரிய சொற்கள் அமையும்போது பழமொழி உருவாகிறது.
அப்படி என்னால் உருவாக்கப்பட்ட ஏராளமான பழமொழிகள் ஏற்கனவே மக்கள் வாயில் புழக்கத்திலுள்ளன. பெரும்பாலும் எல்லா பழமொழித் தொகுதிகளிலும் என்னுடைய பழமொழிகள் உள்ளன.
ஜெ
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307