பட்டாம்பூச்சியும் இன்னொரு பட்டாம்பூச்சியும் -கடிதம்

ரா.கி.ரங்கராஜன்

பட்டாம்பூச்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களுடைய ஒரு கட்டுரையை மீண்டும் வாசிக்க நேர்ந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள்.

அந்தக்  கட்டுரையை முதல் வாசிப்பு செய்யும் போது நானும் அவ்வாறே நினைத்து இருந்தேன் – ஹென்றி ஷரியாரின் பாபிலோன் நாவல்தான் ரா. கி. ரா அவர்களின் மொழி பெயர்ப்பான பட்டாம்பூச்சி தொடர், என்று.

குமுதத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் அத்தொடரை வாசித்து இருந்தேன். கல்லூரி காலத்தில் ஹென்றி ஷரியாரின் பாபிலோன் வாசிக்கக் கிடைத்தது. இரண்டின் வேறுபாடும் கேள்விகளை எழுப்பினாலும் மொழிபெயர்த்தவரின் சுதந்திரமோ என எண்ணி வாசித்து ரசித்து முடித்தேன்.

ஒன்று இரண்டு ஆண்டிற்கு முன் ஹென்றி ஷாரியார் காலத்திலேயே வேறு ஒரு பிரெஞ்சு தீவாந்திரக் கைதி அதே சிறையில் இருந்ததும் அவர் ஒரு ‘ஆட்டோ பிக்ஷன்’ ஷாரியார் போலவே எழுதி இருந்ததும் பற்றி  அறிந்தேன். அவர் பெயர் Felix மிலானி. அந்த புத்தகம் ‘தி கன்விக்ட்’

அப்போது எனக்கு உறைத்தது,  ரா.கி.ராவின் நாயகனும் பெலிக்ஸ் மிலானி என்பது. மற்றும் அவரது மொழிபெயர்ப்பின் தலைப்பு இன்னொரு பட்டாம்பூச்சி என்பது.

பலரும் நினைப்பது போல ரா.கி.ரா மொழி பெயர்த்து ஷரியாரை அல்ல, பெலிக்ஸ் மிலானியை.

மிலானியின் நாவலின்  கேப்ஷன்  – “ஒன்ஸ் தேர் வாஸ் எ பாபிலோன், நவ் தேர் இஸ்  எ கன்விக்ட்”. ராகிரா அதனால்தான் இன்னொரு பட்டாம்பூச்சி என்று தலைப்பிட்டார் போலும்.

தமிழ் விக்கியில் ராகிரா கட்டுரையிலும் இதே தகவல் (சாரியார்- ராகிரா-பட்டாம்பூச்சி). அவர்களுக்கும் நான் கன்விக்ட்  பற்றி மெயில் அனுப்பி உள்ளேன்.

நன்றி.

அன்புடன்
ஆனந்த ராஜ்குமார். கே

அன்புள்ள ஆனந்த் ராஜ்குமார்

ரா.கி.ரங்கராஜன் முதலில் மொழியாக்கம் செய்தது ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான். பட்டாம் பூச்சி என்றபெயரில். இது 1972-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. அதன்பின் பத்தாண்டுகள் கழித்து 1983-ல் மிலானியின் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்ற பெயரில் குமுதத்திலேயே மொழியாக்கம் செய்து தொடராக வெளியிட்டார். ஆனால் அது அவரால் முடிக்கப்படவில்லை. போதிய வரவேற்பு இருக்கவில்லை. எழுதியவரைக்கும் நூலாக்கினார்.

தமிழ்விக்கியில் உள்ள செய்தி சரியானதே. பட்டாம்பூச்சி என்னும் பதிவை பார்க்கவும்.

ஜெ

முந்தைய கட்டுரைஆர்.சண்முகசுந்தரம், கடிதம்
அடுத்த கட்டுரைநமது குழந்தைகள்