அருண்மொழி பேட்டி- கடிதம்

இலக்கியவாதியெனும் மனைவி

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

அருண்மொழி  அவர்களின் “சியமந்தகம்” தளப் பதிவுகள் ‘பெருந்தேன் நட்பு’  முகிழ்த்து வளர்ந்த நாட்களின் தொடக்கத்தை வெகு அழகாக கண்முன் நிறுத்துகின்றன. அவர் திருமதி. ஜெயமோகனாக நின்றே இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார் என்று தெரிந்தே வாசித்த போதும் கூட, ‘காதல் கைகூட வேண்டும்; அனைவரும் ஏற்கும் வகையில் திருமண வாழ்வு அமைய வேண்டும்; பெரியவர்கள் சம்மதிக்க வேண்டும்’ என ஒருவித பதற்றத்துடன் தான் வாசிக்க முடிந்தது. அந்தக் காலகட்டத்திற்கே வாசகரைக் கொண்டு சென்ற அருமையான பதிவுகள்.

‘வாழ்க்கைத்துணை’ என்று இணையராகப் பயணிக்கும் வாழ்வின் இனியதொரு மைல்கல்லைத்  தங்களின் ‘இலக்கியவாதியெனும் மனைவி’ பதில் சொல்லிச் செல்கிறது. அன்பெனும் பெயரில் அழுத்தங்களுக்கு ஆட்படுத்தாமல் இடைவெளியுடன்,  இருக்கவும்  வளரவும்  வெளியினைத்(space) தரும் உறவுப்புரிதல் கனிந்து, கணவன் மனைவி இடையே பரஸ்பர மதிப்பாக மலர்வதை வெகு அழகாக தொட்டுக் காட்டுகிறது இப்பதிலின் கடைசிப் பத்தி.

“எழுத்தாளனுக்கு மனைவியோ, குழந்தைகளோ சுமை ஆகிவிடக் கூடாது” என்று அருண்மொழி சொல்வதும், “அருண்மொழி மிகுந்த நுட்பமும் ரசனையும் கொண்டவள் என தெரியும். அவளுடைய படைப்பூக்கம் மேலும் பிரியத்தை உருவாக்குகிறது.” என்று தாங்கள் சொல்வதும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என வெளிப்படுகின்றன. அருமை!

அன்புடன்

அமுதா

***

அன்புள்ள ஜெ

தீராநதி இதழில் அருண்மொழி நங்கையின் பேட்டி சிறப்பாக இருந்தது. நேர்த்தியான உற்சாகமான பதில்கள். உங்களிடம் எப்போதும் நான் காண்பது சோர்வுறாத இயல்பு. அது அருண்மொழி நங்கையின் படங்களிலேயே கூட தெரிகிறது. சிறப்பு

எம்.மகேஷ்

முந்தைய கட்டுரைசுழற்சி – ரம்யா
அடுத்த கட்டுரைஆர்.சண்முகசுந்தரம், கடிதம்