வீரான்குட்டி கவிதைகள்-2

தண்ணீர் மூன்று கவிதைகள் -வீரான்குட்டி

வீரான்குட்டி கவிதைகள்- 1

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி

கடவுளுக்குத் தெரியும்

கடவுளுக்குத் தெரியும்
நட்பை எப்படி பேணுவதென்று
கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது
பரஸ்பரம் பரிமாறி
நாம் அதனை
ஒளிரும் பொன்னாக்குவோம்.

இடையில் எப்போதாவது
தொலைந்துபோனால்
கவலை எதற்கு?
திரும்பக் கிடைக்கும்போது
ரத்தினமாகியிருக்கும் அது
கடவுளுக்குத் தெரியும்
அன்பை எப்படி
வலுவாக்குவதென்று.

***

நடனம்

நூல் கோக்கும்போது
லேஸ் கட்டும்போது
முடி பின்னும்போது
உன் கைவிரல்கள் புரிகின்ற
நடனம் போலொன்றை
கண்டதில்லை நான்
இன்றுவரை.

***

இளகிய மனது

அன்று நீ
எறும்புகள் போய்ச் சேரும்வரை காத்திருந்தாய்
தேநீர்க்கோப்பையைக் கழுவுவதற்கு
காலின் அடியில்
ஏதேனும் பிராணிகள் நசுங்கிவிடுமோ என
மெல்ல அடிகள் வைத்தாய்
பூவினைக் காம்புடன் விட்டுவைத்தாய்.
புறாக்கூண்டு திறந்து வைத்தாய்

இல்லையென்றாலும்
அன்பு தட்டி
இளகிய மனதை
யாரால் எளிதில்
ஒளித்துவைக்க முடியும்!

 ***

படம் வரைதல்

நீலம் கொண்டு வானும்
கடலும் வரைந்தாள்.
அடர்கருப்பால் யானையை.
சிவப்பும் மஜந்தாவும் மட்டுமே
தேவைப்பட்டன
வீடு கட்டுவதற்கு.
வெள்ளையில் புள்ளிகள் நிரம்பின
பசுவிற்கு.
எல்லாம் வரைந்து முடிந்ததும்தான்
நினைவுக்கு வருகிறது
பச்சையை என்ன செய்வது?
வரைவதற்கில்லை
சுற்றியெங்கும் மரங்கள்
பிறகு புற்கள், பச்சைக்கிளி
பாவம்!
பெரும் சங்கடமாகிவிட்டது அவளுக்கு
அதனால்
தன்னை வரையத் தொடங்கினாள்
பச்சையில் பாவாடை
பச்சை வளையல், ரிப்பன்
பச்சை நிற வாட்ச்
பச்சை செருப்பு, குடை
அவளே
பச்சையில் நிறைந்து
திளைத்தாள்
கைகள் உயர்த்தி ஆடுகிறாற்போல்
நிற்கும் தன்னை
யாராவது குட்டி மரமாக
நினைத்தால் அதுபோதும்
என்றுதானோ என்னவோ!

***

தமிழாக்கம் சுஜா

முந்தைய கட்டுரைச.து.சு.யோகியார்- மர்மயோகி
அடுத்த கட்டுரைசுழற்சி – ரம்யா