மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா

மைத்ரி நாவல் இணைய தளம்

மைத்ரி வாங்க

நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”

நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.

அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.

பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.

அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.

ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.

இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.

மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.

இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.

நாவலில் புறப்பயணத்துக்கு நிகராகவே அகப்பயணம் ஒன்றும் நிகழ்கிறது. புறமும் அகமும், இயற்கையும் காதலும், துடைத்துவைத்த கண்ணாடிகளைப்போல் துல்லியமாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன.

மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.

அந்த நாவல்களிலிருந்து ‘மைத்ரி’ எங்கு வேறுபடுகிறது? ஒன்று, கற்பனாவாத நாவல்களின் முற்றிலும் ஒற்றைப்படையான உணர்வெழுச்சி இதில் இல்லை. உணர்வெழுச்சியை கதைசொல்லியின் அகக்குரலில் வெளிப்படும் தத்துவார்த்தமான மதிப்பீடு சமன்செய்கிறது. அனுபவங்களிலிருந்து சிந்தனைக்கும் இவை இரண்டிலிருந்தும் தரிசனத்துக்குமான  ஒரு பாய்ச்சல் இந்த நாவலில் நடக்கிறது. இரண்டு, இந்த நாவலின் இயல்புவாத யதார்த்தம் இதன் கற்பனாவாதத்திற்கு ஒரு தளத்தை அமைக்கிறதே ஒழிய கற்பனாவாதத்திற்கு எதிராகவோ அதை குலைக்கும் வகையிலேயோ முன்வைக்கப்படவில்லை. ‘கற்பனாவாதத்திற்கு யதார்த்தத்தில் இடம் என்ன’ என்ற கேள்வியை கேட்கவில்லை. நாவல் கற்பனாவாதம், யதார்த்தம் இரண்டையும் தாண்டிய ஒரு ஆன்மீக உன்னதத்தையே எட்ட முயல்கிறது.

அந்த அடிப்படையில் ‘மைத்ரி’யில் ஒரு செவ்வியல் பயண இதிகாசத்தின் தன்மையே மேலோங்கி இருக்கிறது. முக்கியமாக புறப்பயணத்தின் வழியே அகப்பயணத்தை உணர்த்துதல் எனும் அம்சம். இதுவே தொன்மங்களிலிருந்து நவீன கலைஞன் பெறும் படைப்பாற்றல். நோசிகாவை சந்திப்பதன் வழியாக ஒடீசியஸ் உளம் மாறி அமைந்தான். பியாட்ரிஸின் துணையுடன் தாந்தே இன்ஃபெர்னோவில் இருந்து பாரடைஸோவுக்கு எழுந்தார். இந்த நாவலில் மைத்ரியின் இடம் நோசிகாவையும் பியாட்ரிஸையும் ஒத்ததாக இருக்கிறது. நம்முடைய தொன்மங்களில் அர்ஜுனன் இப்படியான பயணங்கள் மேற்கொண்டவன். சௌகந்திக மலரை பெற சென்ற பீமன் மேலும் நெருக்கமானவன். நாவலில் அந்த தொன்மம் ஒரு விதத்தில் மறுஆக்கம் பெறுகிறது. காதலின் பரிசாக நிகழும் அந்த தருணம் நாவலின் உச்சங்களில் ஒன்று.

பயண இதிகாசங்களின் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன் அகத்தின் ஓர் அம்சத்துடன் போராடி வென்றால் மட்டுமே மேலே செல்ல முடியும். அது தான் காவிய நியதி. நாவலின் முகப்பாக அமைந்திருக்கும் காஷ்மீரி சைவ கவிஞர் லல்லேஷ்வரியின் வரிகளிலும் அந்தக் கூற்று இருக்கிறது. ஹரன் கதாபாத்திரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புப் புள்ளியான அவனது இளம் அகத்தின் பற்றிக்கொள்ளும் தன்மையே அவன் போராடி வெல்ல வேண்டியதும் கூட. நாவலின் கடைசி பகுதியில் அது நிகழ்கிறது.

“இமயமலையை காண்கையில் கங்கையில் நீராடுகையில் நம்முடைய பாபங்களெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை வெறும் ஆசாரமல்ல. மலையையும் நதியையும் காணும் போது அதன் விரிவை உள்வாங்க நம் உள்ளமும் விரிகிறது. அப்படி விரியும் உள்ளத்தால் பரம்பொருளை எளிதாக உணர்ந்துவிட முடியும்” என்கிறார் நடராஜ குரு.

ஓரளவுக்கு மேல் இந்த இடங்கள் நாவல் தரும் அனுபவமாகவே எஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன். புறவயமாக வகுத்துக் கூறுவது கடினம். சில சாத்தியங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

தேவபூமி என்று அழைக்கப்படும் அந்த நிலத்தில் வேரூன்றிய சைவம் சார்ந்த படிமங்களும் தரிசனமும் நாவலில் வெகு இயல்பாக அமைந்துள்ளன. முக்கியமாக லல்லேஷ்வரியில் ஆரம்பித்து இதில் இடம் பெரும் காஷ்மீரி சைவத்தின் தாக்கம். ஹரனின் பயணத்தை மனிதனுள் உறையும் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயா ஆகியவற்றை களையும் பயணமாக வாசிக்க சாத்தியம் உள்ளது. காஷ்மீரி சைவத்தின் ‘திரிகா’ தரிசனம் போல அதன் படிநிலைகள் அமைந்துள்ளது. ‘அபரம்,’ ‘பராபரம்,’ ‘பரம்’ என இந்நாவலின் மூன்று பகுதிகளை வாசிக்கலாம். ஆணவ மலமும் கர்ம மலமும் ஒருவனால் சுயமாக கடக்க முடியும், ஆனால் மாயா மலம் கடக்க சக்தியின் அருளாலேயே முடியும் என்கிறது காஷ்மீர சைவம். நாவலில் ஹரன் அதை எதிர்கொள்ளும் தருணம் ‘சப்ளைம்’ஆன பேரனுபவம். அந்த அனுபவத்துக்கு முன் ஒரு சுயமிழப்பு நிலையை எய்துகிறான், அது தன்முனைப்பான சுயம் அழிப்பும் கூட. பனிமலை உச்சியில் ஹரன் கண்டுகொள்வது காஷ்மீர சைவத்தின் ‘பிரத்யபிக்ஞா’ (மறுகண்டடைவு/Re-cognition) என்ற நிலைக்கு மிக நெருக்கமானது. சிவன் தன்னை தான் கண்டடைதல்.

இந்திய நிலத்தின் தொன்மையான தத்துவ தரிசனமான சாங்கியத்தில் தொடங்கி காஷ்மீரி சைவம் வரை நீளும் ஒரு கருத்து உண்டு. அது ‘பிரகிருதி’ என்று சொல்லப்படும் இயற்கையின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் அது மனிதனுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. இதை போகம் என்கிறார்கள். மறுபக்கம் அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் சுகதுக்கங்களை நிவர்த்தி செய்து வீடுபேறுக்கு வழி வகுக்கிறது. இதை அபவர்கம் என்கிறார்கள். சாங்கியத்தை பொருத்த வரை போகம்-அபவர்கம், அனுபவம்-மோட்சம், இரண்டையுமே அருள்வது இயற்கை தான். காஷ்மீரி சைவத்தில் பிரத்யபிக்ஞா நிலைக்கு இட்டுசெல்வது சக்திபாதை எனப்படுகிறது. இந்த நாவலின் சக்தி தரிசனம் இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத இந்த இருமைநிலையை ஒரு பேரனுபவமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாவலின் இறுதியில் ஹரன் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எந்த ஆன்மீக அகப்பயணமும் சென்று அடையும் கேள்வி அது. தேடல் அங்கு முடிகிறது. மற்றொன்று துவங்குகிறது.

இந்த உயர்தளத்தில் ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு அமைவதென்பது சற்று அபூர்வமானது. அஜிதனுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இந்த அழகிய படைப்பின் ஆசிரியரான என் நண்பனை மகிழ்ச்சியும் பெருமிதமுமாக எண்ணிக்கொள்கிறேன். அஜிதன் மென்மேலும் சிறந்த கலை ஆக்கங்களை படைக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சுசித்ரா

பாசல், சுவிட்சர்லாந்து

28.04.2022

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைகுருதிப்புனல்- வாசிப்பு
அடுத்த கட்டுரைஆனந்த் குமார் – கடிதம்