கரசூர் பத்மபாரதி, ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

தமிழ் விக்கி தூரன் விருது

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் தான் வரலாறு, கலை, தொன்மம் பேணப்படுகிறது என எனக்கு ஒரு மனப்பதிவு இருந்தது. அதற்கு முதன்மையான காரணம் இங்கிருந்து வந்த வரலாற்று ஆசிரியர்கள். கால்டுவெல், ஹெக்.ஆர்.பெட் தொடங்கி, நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை, கே.கே. பிள்ளை, ஆறுமுகப் பெருமாள் நாடார், கா. அப்பாதுரை, நா. வானமாமலை என நீளும் பட்டியல் அ.கா. பெருமாள் வரை வருகிறது. அதற்கு பின்னால் வரும் தலைமுறையினரை ஒரு தனி பட்டியல் போடலாம்.

எழுத்தாளர்களும் இதே போல் தான் அவர்கள் எழுதி எழுதி இரு மாவட்டங்களின் மண்ணையும் அதன் வரலாற்றையும் நிறுவியிருக்கின்றனர். மாறாக தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளைப் பற்றிய தகவல் என் வரை பெரிதாக வந்து சேரவில்லை (தஞ்சை விதிவிலக்கு). இதனை எழுதும் போது சோதனை செய்ய உங்கள் வரலாற்று நூல்களை வாசிக்க பதிவை எடுத்துப் பார்த்தேன். என் மனப்பதிவு சரியே என அது சொல்லியது.

எனக்கு தமிழ் விக்கி எழுத வரும் வரை கொங்கு மண்டலத்தில் ஒரு ஆய்வாளர் நிறையும், நாட்டார் சடங்குகள் கொட்டிக் கிடப்பதையும் பற்றி தகவல் தெறிந்திருக்கவில்லை. தக்கை ராமாயணம் சங்ககிரியில் இயற்றப்பட்டது என இப்போது தான் தெரியும். நீங்கள் எழுதிய பின்னே கு. அருணாச்சலக் கவுண்டர், தி.அ. முத்துசாமி கோனார், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் என கொங்கு மண்டலத்தின் ஆய்வாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. அ.கா.பெருமாளின் தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் மூலமே வடதமிழகத்தில் கதைப்பாடல், தெருக்கூத்து, திரௌபதி விழா, பெரிய மேளம் வாசாப்பு நாடகம் என கலைகள் இன்றளவும் செழிப்புடன் வழக்கிலிருப்பதை அறிந்தேன்.

இந்நேரத்தில் தான் உங்களிடமிருந்து பெரியசாமித் தூரன் விருது அறிவிப்பு வந்தது. இன்று அவரின் கூத்தாண்டவர் திருவிழா குறுஆய்வேட்டை தமிழ் விக்கியில் பதிவேற்றிய போது ஒரு வித பெருமிதம் உண்டானது. அக்குறு ஆய்வேடு சந்தேகமே இல்லாமல் தமிழ் நிகழ்த்தப்பட்ட ஆய்வு சாதனைகளுள் ஒன்று. நாட்டார் ஆய்வுகளில் உள்ள மிகப் பெரிய சவால் என நான் நினைப்பது ஒரு சடங்கு அல்லது தொன்மக் கதை ஒன்றாக இருப்பதில்லை. அவை ஒன்றிலிருந்து வேறொரு வடிவம் கொண்டு வளர்ந்திருக்கும். நீங்கள் அனந்தாயி கதையை பற்றி என்னிடம் சொன்னீர்கள். அது சமணக் கதையில் உள்ள கீரிப்பிள்ளையைக் கொல்வதிலிருந்து எப்படி ஸ்ரீவைகுண்டம் வந்தது என. தமிழக நாட்டார் வழக்கில் மகாபாரதக் கதைகளும் அவ்வண்ணம் ஒவ்வொரு கதை பல தனி வடிவம் கொண்டவை.

உதாரணமாக பத்மபாரதி ஆய்வு செய்த கூத்தாண்டவர் கதையில் வரும் மகாபாரதக் கதாபாத்திரம் அரவான். அரவானின் கதை வியாச பாரதத்திற்கும், வில்லிபுத்திர பாரதத்திற்கும் கூட வித்தியாசம் உள்ளது. வியாச பாரதத்திலிருந்து மணியாட்டி மகாபாரதமும், இசை நாடகமும் முற்றிலுமாக வேறுபடுகிறது. மணியாட்டி மகாபாரதத்தில் திரௌபதியே அரவானை பலியிடுகிறாள். அரவான் எனத் தெரிந்ததும் கிருஷ்ணன் மேல் கோபம் கொண்டு கிருஷ்ணனைக் கொல்லச் செல்கிறாள். இதிலிருந்து திரௌபதியை ரேணுகா தேவியாக, காளியாக வழிபடும் வழக்கம் தக்காண பீடபூமியில் இருக்கும் வழக்கத்திற்கு ஒரு கோடு இழுக்க முடிகிறது. வில்லுப்பாட்டு கதைகளில் கிருஷ்ணனின் மோகினி அவதாரம் வருகிறது. அதிலிருந்து திருநங்கையர் தங்களை கிருஷ்ணனின் அம்சமாக காணும் கதை விரிகிறது.

கோமுட்டி செட்டியாருக்கும் ஜமத்கினி முனிவர், பரசுராமருக்கும் என்ன தொடர்பு என்பதை பத்மபாரதியே வரலாற்று, தொன்ம தகவல்கள் மூலம் விளக்குகிறார். திருவிழாவில் ஒரு சின்ன சடங்கு கூட விடுபடாமல் மொத்தமாக தொகுத்து எழுதியிருக்கிறார். இது பத்மபாரதி தன் முனைவர் பட்டத்திற்காக செய்த முதல் ஆய்வு இதில் இத்தனை நேர்த்தி, கச்சிதம், இறங்கிய செயலில் முழுமையாக தன்னைக் கொடுக்கும் தீவிரம் என பிரமிக்க வைக்கிறது.

அவரது திருநங்கையர் சமூக வரைவியல் நூல் மேலே சொன்ன குறு ஆய்விலிருந்து விரிகிறது. திருநங்கையரின் அன்றாட வாழ்க்கை முறையில் தொடங்கி அவர்களின் சமூக பொருளாதார அமைப்பைச் சொல்லி அவர்களின் விழாக்கள், மருத்துவ முறை வரை ஒவ்வொன்றாகத் தொகுத்துள்ளார். அனைத்து தகவல்களும் தமிழ் சூழலில் அதிகம் பேசப்படாதவை, முற்றிலும் புதியவை, சுவாரஸ்யமானவை.

இன்று உங்கள் தளத்தில் வந்த ‘இலக்கியமும் சமூகமும்’ கட்டுரையில், “நண்பர்களே, நாம் தமிழகத்தில் பயணம் செய்தால் இங்குள்ள அத்தனை ஏரிகளும் கரையிடிந்து கிடப்பதைக் காணலாம். பாழடைந்து குப்பைமேடாகக் கிடக்கும் ஏரிகள் போல ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்பண்பாடும்.எங்கோ சிலர் அந்த ஏரிக்கரைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அந்த ஏரிக்கரைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். அவர்களை நாம் அறிவதே இல்லை.அப்படிப் போராடுபவர்கள் தான் நவீன எழுத்தாளர்கள் அவர்களுக்கு புகழ் இல்லை. பணம் இல்லை. அவர்களை நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். பத்மபாரதியின் இன்றைய பொருளாதார நிலை நீங்கள் சொல்லி அறிந்தேன். கூடவே ஒன்றைச் சொன்னீர்கள், “ஆனால் அதைப் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. அடுத்தடுத்து என தங்கள் பணியிலேயே மூழ்கி இருக்கிறார்” என்றீர்கள்.

உண்மை தான், பத்மபாரதி போன்றவர்கள் இச்சமூகத்திற்கு முற்றிலுமாக கொடுக்கப் பிறந்தவர்கள் கொடுப்பது ஒன்றே அவர்களின் கொடையாக இருக்க  முடியும். பிரதி எதிர்பாராமல் அவர்கள் அடுத்த பணியை நோக்கி தங்களை திருப்பிக் கொள்கின்றனர். மொத்த பாரதத்திற்காகவும் அரவான் எந்த தயக்கமும் இன்றி மறுசிந்தனையில்லாமல் தன்னைக் கொடுத்தான். பத்மபாரதி போன்றவர் இந்நூற்றாண்டின் அரவான். அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்பாண்பாட்டிற்கு தங்களை முற்றளிப்பது ஒன்றையே அவர்கள் செய்கின்றனர்.

விஷ்ணுபுரம் தூரன் விருது முதலாம் ஆண்டு கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்படுவதில் நாம் கௌரவிக்கப்படுகிறோம் என நினைக்கிறேன். பத்மபாரதிக்கு வணக்கங்கள்.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

கு. அருணாச்சலக் கவுண்டர்

தி.அ. முத்துசாமி கோனார்

வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்

முந்தைய கட்டுரைஅமெரிக்கா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசயாம் மரண ரயில்பாதை – ஒரு பெருங்கதை