தெணியான்- கடிதம்

இனிய ஜெயம்,

எங்கள் கூட்டுக்குடும்பம் மொத்தமும் கூடும் ஒரு இல்ல நிகழ்வு, தொடர்ந்து சுற்றுலா என கடந்து போயின ஒரு 10 நாட்கள். தளத்தில் விட்டுப்போனவை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து வருகையில் எழுத்தாளர் தெணியான் இயற்கை எய்திய செய்தி கண்டேன்.

தெணியான் அவர்களை மிக முன்னர் டேனியல் ன் பஞ்சமர் நாவல் வாசிக்க கிடைக்கயில் அதனுடன் இணைந்து வாசிக்க கிடைத்த மற்றொரு நாவல் வழியே அறிந்தேன். இரண்டு நாவலுமே அன்று என்னைக் கவரவில்லை. மிகப் பின்னர் அலெக்ஸ் அண்ணன் அவரது எழுத்து பதிப்பகம் வழியே தெணியான் அவர்களின் வாழ்வனுபவங்களின் தொகுப்பான _ இன்னும் சொல்லாதவை _ நூலை வெளியிட்டிருந்தார்.

விழா ஒன்றில் அந்த நூலை கையில் எடுத்து என் பெயர் இட்டு கையெழுத்து போட்டு “வாசிச்சு பாருங்க ச்சீனு நல்லா இருக்கும்” என்று சொல்லி எனக்கு பரிசளித்தீர்கள். அ.முத்துலிங்கம் வழியே கொக்கு வில் கொக்கு வில் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே திரிந்ததைப் போல, இந்த இன்னும் சொல்லாதவை நூலுக்குப் பிறகு வடமராச்சி என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு திரிந்தேன். யாழ் நிலத்தின் வடமராச்சி கிராமத்தில் பிறந்து வேலையில் அமைவது வரையிலான காலத்தின் தெணியான் அவர்களின் வாழ்வனுபவங்களே இந்த நூல்.

மொத்த நூலிலும் என்னைக் கவர்ந்த சித்திரமாக இப்போதும் மனதில் இருக்கும் காட்சி, பாலகன் தெணியான் வீட்டின் தோட்ட வழி யில் ‘பெரியாச்சி’ வந்து நிற்கும் காட்சி. பெரியாச்சி உயர்ந்த சாதி என்பதால் இந்த வீட்டில் உள்ள யாரையும் அவள் தொட மாட்டாள்.  பெரியாச்சி  வீட்டில் தலைச்சனை பெற்ற தாய் இறந்து அவள் குழந்தை பாலுக்கு தவித்து கொண்டு இருக்கிறது. தெணியானின் அம்மா இறுதி பெண் குழந்தைக்கு அப்போது பாலூட்டிக்கொண்டிருக்கும் பருவம். ஊரில் வேறு எங்கும் தாய்ப்பால் கிடைக்க வழி இல்லை. தீண்டாமை கொண்ட உயர்ந்த சாதி பெரியாச்சியின்  பேரனுக்கு ஒரு சிரட்டையில் தனது தாய்ப்பாலை பிழிந்து கொடுத்து அனுப்புகிறார் தெணியானின் அம்மா. ஆச்சி அதை  ஏந்தி செல்லும் அந்த சித்திரம்.

தெணியானின் அந்த உயர்ந்த சாதி சகோதரர் யாரோ, இன்னும் இருக்கிறாரோ, சகோதரர் தெணியான் இயற்கை எய்தியதை அவர் அறிவாரோ அறியேன்.

தெணியான் அவர்களுக்கு அஞ்சலி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபெருங்கனவின் தொடக்கம்
அடுத்த கட்டுரைஇலங்கையர்கோன், தொடராத தொடக்கம்