தமிழ் விக்கி விழா- கடிதம்

தமிழ் விக்கி இணையகலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெ,

வணக்கம், நலமறிய ஆவல்.

சௌந்தர் அண்ணா தமிழ் விக்கி தொடக்க விழா மே 7 தேதிக்கு பத்து நாட்களுக்கு  முன்னர், நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்று குறுஞ்செய்தி அனுப்பிய போது,  தமிழ் விக்கியில் மிகச்சிறு பங்களிப்பு செய்து கொண்டு வருவதால், நடக்க இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, வட கரோலினாவில் இருந்து ஐந்து மணி நேர கார் பயணம் மட்டுமே என்பதால், கண்டிப்பாக கலந்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தமிழ் விக்கியில் பெரும் பங்கேற்றி  வரும் நண்பர்கள், இந்த நிகழ்வில் நேரடியாகக்  கலந்து கொள்ள முடியாமல் எல்லாத் தடைகளையும் தாண்டி இந்த விழா நல்ல விதமாக நடக்க வேண்டுமென்ற அவர்களின் ஆர்வமும், அக்கறையும் கலந்த உணர்வுகளை நன்றாகவே அறிவேன்.

2019 -ல் சந்தித்தது, மூன்று வருடம் கழித்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு. இந்தத் தடவை அருணா அக்காவுடன். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வாஷிங்டன் டிசி நோக்கித் தனி கார் பயணம். அருணா அக்காவின் பனி உருகுவதில்லை ஆடியோ நூலை கேட்டுக்கொண்டு வந்தேன். பயணக் களைப்பேத்  தெரியவில்லை. அக்கா இணையத்தில் எழுத எழுத வாசித்திருந்தாலும், மறு வாசிப்பு செய்யயுதவியது. அக்காவுக்கும், கதை ஓசை தீபிகா அருணுக்கும் நன்றி.

சரியாக 9:40 க்கெல்லாம் விழா நடக்கும் ஆஷ்பர்ன் நகர் பிராம்பிள்டன்  நடுநிலை பள்ளிக்கு வந்து சேர்ந்தேன். காரிலிருந்து இறங்கிய உடன், பழனி ஜோதி நியூசெர்சி நண்பர்கள் அறிமுகம். பள்ளி, கட்டிடம், உள்ளே வசதிகள் எல்லாம் புதிதாக, நல்ல தரத்தோடு அமைந்திருந்தது விழாவுக்கு தனிக் களையைக் கொடுத்தது.

10 மணியில் இருந்து விருந்தினர் வருகை. கூடுகை அரங்கில் ராஜன், சௌந்தர், பழனி ஜோதி, சுவர்ணா, ரவி, விஜய் சத்தியா, வேல்முருகன், நிர்மல், ராஜி, ராதா, மகேஸ்வரி, ஜெயஸ்ரீ, அவர் கணவர், புளோரிடா அண்ணாதுரை, சார்லட் பிரகாசம் குடும்பத்தினர், ஆனந்த், மோகன் அனைவரையும் சந்திக்க முடிந்தது. விழா ஏற்பாடுகளுக்கு வாஷிங்டன் டிசி நண்பர்களோடு சேர்ந்து சிறுஉதவி செய்து கொண்டிருந்தேன். விழா நடக்கும் போது ஓரிரு தடவை வெளியில் சென்று கவனித்துக் கொள்ளுமாறு ராஜன் கேட்டுக் கொண்டார். சௌந்தர் அண்ணா, சுவர்ணா, விஜய் சத்தியா, ரவி நிகழ்ச்சி நிரலை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

சௌந்தர் அண்ணா மாற்று ஏற்பாடுகள், புது விருந்தினர்கள், அவர்களின் பெருமைகள்  பற்றி என்னிடம் எடுத்துச் சொன்னார்.

சரியாக 10 மணிக்கு முன்னரே நீங்களும், அருணா அக்காவும் விழா அரங்கில் பெருமிதத்தோடு நுழைந்தனர். நண்பர்கள் அனைவரும் உங்கள் இருவரையும் நோக்கி வந்து அறிமுகம் செய்து கொண்டனர், நானும். நண்பர்களிடம் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்ததை சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அருணா அக்காவிடம் மகேஸ்வரி சுக்கிரி குழு கதை விவாதத்தில் முத்து கலந்து கொள்வார் என்று அறிமுகப் படுத்தினார். சுக்கிரி குழு நண்பர்கள் மது, கணேஷ், விஜய ராகவன் சார், ராஜேஷ், விக்னேஷ் மற்ற நண்பர்கள் அனைவரையும் நன்றாக இரண்டு வருடங்களாகத் தெரியும் என்றேன். அக்காவுக்கு அப்படியா என்று ஆச்சரியம்.

தமிழ் விக்கி தொடக்க விழாவில் இத்தனை பேரைச் சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது என்றும், கல்யாணத்துக்கு கூடுவது மாதிரி இருக்கிறது என்று சந்தோஷப்பட்டார். முதன் முறையாக கொஞ்சம் கூட அகத் தடையில்லாமல் அக்காவிடம் உரையாட முடிந்தது. அவர் சொன்ன மாதிரியே நண்பர்கள் குடும்பம் குடும்பமாக அரங்கு நிறைந்து  அமர்ந்து இருந்தது நிறைவான தொடக்கமாக இருந்தது.

அடுத்து விருந்தினர்கள் பிரெண்டா பெக், தாமஸ் ஹிட்டொஷி புரூக்ஸ்மா, பேரா வெங்கட்ரமணன், நூலகர் சங் லியு அனைவரும் வர ஆரம்பித்தவுடன், மேடையில் அமர வைக்கப்பட்டனர். விருந்தினர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், பெருமிதமும் பார்க்க சந்தோசமாக இருந்தது.

ஒவ்வொரு விருந்தினர்களையும், பேச்சாளர்களையும் வரவேற்று பேசும் பணியை சுவர்ணா பார்த்துக் கொண்டார். கல்யாண மண்டபம் வரவேற்பறையில் இன்முகத்தோடு வரவேற்கும் தோரணையில் இருந்தது அவர் விருந்தினர்களை பேச வரவேற்ற விதம்.

முதலில் இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது.

விருந்தினர்களை வரவேற்று சௌந்தர் அண்ணா பேசினார்கள். இணைய வழி தகவல் கற்றல் எவ்வளவு  முக்கியம், தமிழ் விக்கி உருவாக்குத்துக்கான தன்னார்வளர்களின் உழைப்பு, தமிழ் விக்கி பதிவுகளின் தரம், எல்லாத் தடைகளயும் தாண்டி இந்த விழாவை வெற்றிகரமாக, திட்டமிட்டபடி நிகழ்த்த முடிந்த சந்தோசம் அவர் உணர்ச்சிவசக் குரலில்.

ஒவ்வொரு விருந்தினர்களையும் பேச அழைக்கும்போது மேடையில் அவர்கள் அமர்ந்த முனையிலிருந்து பேசும் மேடைக்கு அழைத்துச் செல்ல, பேசி முடித்தவுடன் அவர்கள் இருக்கைக்கு உடன் செல்வது வரை கூடச் செல்வது என்று நண்பர்கள் ராதா, விஜய் சத்தியா, ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி, அருண்மொழி அக்கா முறை கடைபிடிக்க பார்க்க அழகாக இருந்தது.

முதன்மை விருந்தினர் பெக் தமிழ் விக்கி இணைய தளத்தை ஆரம்பித்து வைத்தார். தமிழ் நாட்டில் தங்கி தமிழ் கற்றுக் கொண்டதை அனுபவங்களை எடுத்துச் சொன்னார். ‘பச்சை மனசு’ சொல்லாட்சி குறித்து, நேரடியாக மொழிபெயர்த்தால் ‘Green Heart’  என்று வருகிறது, ஆனால் அதன் அர்த்தம் குறித்து வியந்து பேசினார். அதே மாதிரி ‘கார் மேகம்’ என்ற வார்த்தை கொடுக்கும் நேரடி அர்த்தம் ‘Black Cloud’, தமிழில் இந்த பெயர்க் காரணத்தை பற்றி அவர் ரசித்து சொன்ன விதம் அருமை. தமிழ் விக்கிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்து திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தாமஸ் பேச்சுத் தமிழ் கற்றுக்கொண்ட அனுபவங்களை, தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி ஆத்மார்த்தமாக பேசினார். அயல் நாட்டவர் நல்ல உச்சரிப்பில் தமிழை பேசும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. விழாவுக்கு வேட்டிக் கட்டி வர விரும்பியவர்.

விழாவில் அ.முத்துலிங்கம், தமிழாய்வாளர் டேவிட் ஷூல்மான், ஹார்வார்ட் தென்கிழக்காசிய ஆய்வுமைய தலைவி மார்த்தா ஆன் செல்பி, கமல்ஹாசன் ஆகியோரின் வாழ்த்துரைகளை நண்பர்கள் வேல்முருகன், ரவிக்குமார், விஜய் சத்தியா வாசித்தனர்.

அ.முத்துலிங்கம் அய்யா வாழ்த்து செய்தியை நண்பர் வேல்முருகனே வாசிக்கட்டும் என்று முத்துலிங்கம் அய்யா சொன்னதாக சௌந்தர் அண்ணா சொன்னார்.

அடுத்து பேராசிரியர், ஒளியியல் அறிவியலாளர் வெங்கட்ரமணன் தன் துறை சார்ந்து சமூகத்துக்கு, கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் மக்களுக்கு தான் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பேசினார். வரும் காலத்தில் தமிழ் விக்கிக்கு பங்களிக்க விரும்பினார். அறிஞர்கள் பங்களிப்பால் தமிழ் விக்கி பல துறைத் தகவல்களோடு எதிர்காலத்தில் மிகச் சிறப்பான தளமாக நிச்சயமாக அமையும்.

அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு தமிழ் பேச ஆசை, ஆனால் தெரியாது என்ற போதமையை எடுத்துச் சொல்லி நூலகம் எல்லோருக்குமானது, பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்த விழாவுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நீங்கள் பேசும்போது விருந்தினர்களை வரவேற்று, பல அறிவியக்கங்கள் நிகழ்ந்த அமெரிக்க மண்ணில் தமிழ் விக்கி தொடக்க விழா நிகழ்வது குறித்து பெருமிதம் அடைந்தீர்கள். உங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் ஆசிகளை கோரி, இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்திய அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களையும் பெற்று நீங்கள் பேசிய உரை உணர்வுபூர்வமாக இருந்தது. தமிழ் விக்கி முதன்மை தளத்திலோ, வேறு எங்குமோ உங்களை முன்னிறுத்தி எனக்கு தெரிந்து எந்த பதிவுமில்லை.

பழனி ஜோதியின் நன்றியுரையுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக, எளிமையாக நடந்தேறிய விழா. அவர் சொன்ன மாதிரி ஒரு பெரிய ஆல விருட்சமாக வளரப் போகும் தமிழ் விக்கிக்கான ஒரு விதை விதைக்கப்படும் நாளிது.

விழா சிறப்புற நடைபெற ஏற்பாடுகள் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்

முத்து காளிமுத்து

முந்தைய கட்டுரைஉடையாள், கடிதம்
அடுத்த கட்டுரைபடைப்பாளியின் தவமும் படைப்பின் உணர்வுத்தீவிரமும் – பி.கே.பாலகிருஷ்ணன்