டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமா? உங்களையும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களையும் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸில் நடந்த வாசகர் சந்திப்பில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியையும், மன உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. பூன் முகாம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்போதிருந்த மனநிலையில் என்னால் அங்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியாமல் போகும் என்பதால் அப்போது பதிவு செய்யவில்லை. பூன் முகாமில் கலந்துகொண்ட நண்பர் திரு.ஜெகதீஷிடம் பேசியதிலிருந்தும், அது தொடர்பான கடிதங்களைப் பார்க்கும் போதும் அந்நிகழ்வு நான் எதிர்பார்த்தது போல மிகச் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது மகிழ்ச்சி.

டல்லாஸில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து முதல் நாளே அங்கு வந்திருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் அன்று டல்லாஸிலிருந்த நூலகத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நானும் என் நண்பன் திரு.சிவா துரையும் வந்து காத்திருந்தோம். அன்று காலையிலிருந்தே ஏதோ ஒரு பதட்டம் இருந்தது. சொல்லுக்குண்டான அர்த்தம் தெரிந்தவுடன் மனம் அதனை விரித்துப்பார்ப்பதுபோல, அந்த பதட்டம் உங்களை நான் முதன் முதலில் பார்க்கப்போவதால் தான் என்று உணர்ந்த தருணம் மனம் அந்த பதட்டத்தை இரட்டிப்பாக்கியது. அது, என்னுடன் வந்த என் நண்பன் ஒரு வித தவிப்புடன் நின்றுகொண்டிருந்த என்னை உற்றுநோக்கி வித்தியாசமாகப் பார்க்க வைத்தது. என் அருகில் நின்றுகொண்டிருந்த சிறுமி பல வண்ணங்களில் ஒளிவிடும் மலர்க்கொத்தைக் கையில் ஏந்தி உங்களிடம் கொடுக்க நின்றுகொண்டிருந்தாள். என் நண்பன், “யாருக்கு? ஜெ சாருக்கா?” என்றான். அவள் புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தாள். எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஊர் இது. என் நாற்பது வயதில் உங்களைப் பார்க்க எனக்கிருந்த அந்த ஆர்வம் எட்டு வயது கொண்ட அந்த சிறுமியிடமும் இருந்தது பொறாமையாகவே இருந்தது. என் நண்பன், “நாமும் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கலாம். இல்ல?” எனக் கேட்டான். ஏற்கனவே அந்த சிறுமியின் ஆர்வத்தைக் கண்டு திகைத்து நின்ற நான் ஒரு மலர்க்கொத்து கூட வாங்காமல் வந்த என்னை நொந்து கொண்டேன். அதனைச் சமாளிக்கும் விதமாக  “அவர் வந்ததும் விஷ்ணுபுரம் நாவலிலிருந்து ஒரு சில வரிகளைச் சொல்லி வரவேற்கலாம்”. என்றேன். அவன் என்னை முறைத்தான் . அந்த நூலகமும் திறந்துவிட, என் நண்பன் “வா லைப்ரரி உள்ள போய் புத்தகங்களைப் பார்க்கலாம்” என்றான். நான், “வெயிட் பண்ணு இன்னும் கொஞ்சம் நேரத்தில் வெளியே ஒரு நூலகம் வரும் பார்க்கலாம்” என்றேன். அவன் பொறுமையிழந்து நின்றான்.

சிறிது நேரத்தில் நீங்களும் வர அந்த சிறுமியிடம் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டு நின்ற உங்களிடம் வந்து கை கொடுத்தேன். அந்த சிறுமியிடம் காட்டிய அதே புன்னகையை என்னிடமும் செலுத்திவிட்டு ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு முன் நகர்ந்தீர்கள். நான் பதட்டத்தில் அனைத்தையும் மறந்து போய் பேச்சற்று நின்றுகொண்டிருந்தேன்.  தேர்வில் கேள்வித்தாள் வாங்கி பார்த்தவுடன் எல்லாம் தெரியும் என்று நினைத்து பேனாவைத் திறந்தவுடன் அனைத்தும் மறந்துபோய் எதிரில் இருக்கும் வெள்ளைக் காகிதம் நம்மை ஏளனமாய் பார்த்துச் சிரிக்குமே, அதுபோலவே என் நண்பன் நான் செயலற்று  நிற்பதைப் பார்த்துச் சிரித்தான். இதனை எழுதும்போது தவறவிட்ட அந்த தருணத்திலிருந்த அந்த பதட்டத்தைப் பற்றி யோசித்துப்பார்க்கிறேன். அமெரிக்கக் குடியேற்றம் பெரும்பாலும் என் வயதொத்த இந்தியர்களுக்கு ஒரு தட்டையான வாழ்க்கையின் அனுபவத்தையே கொடுக்கிறது. பெரிய போராட்டமற்ற (அதிகபட்சமாக இந்திய மளிகைக் கடையில் தள்ளுமுள்ளு இருக்கும்) இந்த அமெரிக்க வாழ்க்கையில் இந்திய வாழ்வின் அனுபவத்தையும், பண்பாட்டையும் முற்றிலும் இழப்பது மிக எளிது. அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் முற்றிலும் பின்பற்றாமல் ஏதோ ஒன்றை ஒழுகி அடையாளமற்ற ஒரு கூட்டமாக வாழ்ந்து மடியாமல், என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு இலக்கிய புனைவுகளின் வழியே பலதரப்பட்ட அனுபவங்களைக் கைகொடுத்து வாழ்க்கையின் மகத்தான ஒரு பெரும் வெளியில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பல முறை தனிப்பட்ட முறையில் உணர்ந்தவன் நான். அதுவே சோர்ந்துபோகும் தருணங்களில் வாழ்க்கையின் சங்கிலியை கட்டறுத்து கொள்ளாமல் உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறது. இந்த மாபெரும் வாழ்வியல் மாற்றத்தைப் பலருக்கு இலக்கியத்தின் மூலம் ஏற்படுத்தும் உங்களைக் காணப்போகிறேன் என்ற எண்ணம் கொடுத்த உணர்வு தான் ஒரு பந்தென மேலெழும்பித் தளும்பி விளிம்பில் என்னை நிற்கவைத்திருக்கிறது அன்று.

பூன் முகாமில் நீண்ட உரையாடல்கள் கேள்வி பதில்கள் எனத் தொடர்ந்து இயங்கிருந்தாலும் டல்லாஸில் அதனுடைய அயர்ச்சி என எதுவும் இல்லாமல் இருந்தீர்கள். அன்றைய அந்நிகழ்வு திருமதி. விஷ்ணுபிரியா கிருஷ்ணகுமார் அவர்கள் திரு. ராஜன் சோமசுந்தரம் அவர்கள் இசையமைத்த வெண்முரசு பாடலிலிருந்து தொடங்கியது அருமை.  உங்களுடனான கேள்வி பதில் உரையாடல் ஆரம்பிக்கும் முன்னரே, திரு. ராஜன் அவர்கள் “என் குழந்தை ஆக்ஸ்போர்டு போகுமா?” என்ற ஆருட கேள்விகளைத் தவிருங்கள் என்று சொல்லி நிம்மதியாக அமர்ந்த அடுத்த வினாடி, “தமிழ்நாட்டில் தமிழ் வாழுமா?” என்ற கேள்வி வந்ததும் சற்று ஆடிப்போய்விட்டார். ஆனால் நீங்கள் அளித்த பதில் அந்த கேள்வியையும் முக்கியமானதாக மாற்றிவிட்டது. தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளையும், அதன் அவசியத்தையும் நீங்கள் தொடர்ந்து  எழுதிவருவது மிகப்பெரிய புரிதலை இலக்கியத்திற்குள் வரும் புதியவர்களுக்கு உதவியாக இருக்கிறது, இது போல உங்களுக்கு முன்னால் இருந்த இலக்கிய எழுத்தாளர்கள் அவர்களின் இலக்கிய புனைவுகள் வழியாக மட்டுமே இதனைப் புரிய வைக்க முயற்ச்சித்தர்களா? என்ற கேள்விக்கு நீங்கள் உ.வே.சா மற்றும் தன் சொத்துக்களையே இதற்காக அர்ப்பணித்த கா.நா.சு அவர்கள் இலக்கியத்துக்காகச் செய்ததைவிட தாங்கள் குறைவாகவே செய்வதாகக் கூறினீர்கள். இலக்கியத்தின் அவசியத்தைத் தொடர்ந்து சொல்லாமல் விட்டால் நம் பண்பாட்டின் தொடர் அறுந்துவிடும் என்று சொல்லியது சிறப்பாக இருந்தது. மேலும், சமஸ்கிருதம் எப்படி ஒரு இணைப்பு மொழியாக இருந்தது என்பதை உதாரணத்துடன் விளக்கியது பயனாக இருந்தது. மேலும், பதிப்பகங்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இன்றைய நிலையில் பதிப்பகங்கள் ஒரு குடிசை தொழிலென நடப்பது பற்றி விளக்கினீர்கள்.

நண்பர் திரு. பிரதீப் அவர்கள் உங்கள் புனைவுகளில் வரும் பலதரப்பட்ட காட்சிகளைப் பற்றிய கேள்வி எனக்குள்ளும் இருந்தது. நுண்ணிய விவரணைகள் அடங்கிய ஒரு காட்சியைப் புனைவில் படிக்கும் போது மிகுந்த உணவெர்வெழுச்சியுடன் இருக்கும். ஆனால் அதனைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சி முன்னிருந்ததை விட மேலெழுந்து மனதில் வியாபித்திருக்கும். இப்படிப் பல காட்சிகளைக் கடந்து வரும்போது எவை மனதில் தங்குகிறது, எப்படி இதனைத் தக்க வைத்துக்கொள்வது என்ற ஐயம் எனக்குள் இருந்தது. உங்களின் அழகான அந்த நீண்ட விளக்கத்தில் நான் உணர்ந்துகொண்டது காட்சிகளும் அதன் உள் விவரணைகளும் நம் ஆழ்மனதில் பதியக்கூடியவை. அவைகள் நீங்கள் எதிர்பாரா தருணங்களில் வெளிவந்து உங்களை இணைக்கும். வலுக்கட்டாயமாகக் காட்சிகளைத் திணித்துக்கொள்ளமுடியாது. ஆதலால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆழ்ந்து அந்த காட்சிகளை உள்வாங்கிப் படிப்பது மட்டுமே என்ற விளக்கம் எனக்கு  நான் உங்களைக் காண வருவதற்கு முந்தைய நாள் எங்கள் ஊரிலிருந்த ஓர் கோவிலில் நடந்த  கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டிருந்த போது  நடந்த ஒரு திறப்பை ஞாபகப்படுத்தியது. ஒரு பக்கம் அவிசுகளைத் தின்று பட படவெனக் கிளைவிட்டு எரியும் யாகங்களிலிருந்து வரும் அதன் மணம் எங்கும் நிறைந்தும், மறுபக்கம் பலதரப்பட்ட உணவுகளைச் சமைத்து அனைவருக்கும் கொடுக்க பெரிய பெரிய பாத்திரங்களில் எடுத்து வந்து கொட்டும் காட்சியும் மனதுக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தது. பின்பு, கலசத்தில் ஊற்றிய நீர் அந்த கோபுரத்திலிருந்த சிலைகளின் வழியே வழிந்து என் மேல் விழுந்த அடுத்த கணத்தில் சட்டென நான் விஷ்ணுபுரத்தில் இருந்தேன்.

மேலும், அமெரிக்காவில் இருக்கும் வாழ்க்கை முறையையே மையமாக வைத்து இலக்கியத் தரத்துடன் புனைவுகளை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கான களங்கள் இங்கு நிறைய இருக்கிறது என்று சொல்லி உங்கள் அமெரிக்கப் பயணத்தில் நீங்கள் பார்த்த ஒரு சம்பவத்தை (ஒரு சிறுமி அவளின் பெற்றோர்கள் துணையில்லாமல் அமெரிக்காவிற்கு அடிக்கடி தனியாக வந்துசெல்வதை) சொல்லி விளக்கியது எனக்குப் பெரிய திறப்பாக இருந்தது. ஒரு எழுத்தாளரிடம் கேள்விகளை எப்படிக் கேட்கவேண்டும் என்று ஒரு வகுப்பே எடுத்தீர்கள். அடுத்த வருடம் நீங்கள் அமெரிக்கா வரும்போது பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள் என்றே நினைக்கின்றேன்.

இரண்டு மணி நேர உரையாடலில் உங்களிடம் வந்த கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில்களை அளித்தீர்கள். பல கேள்விகள் உங்கள் தளத்திலேயே நீங்கள் விரிவாக எழுதியிருந்தாலும் மீண்டும் எடுத்துரைத்ததுக்கு நன்றிகள். இதுபோன்ற முகாம்களும், வாசகர் சந்திப்புகளும் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உங்கள் தளத்தில் வரும் கடிதங்கள் நிரூபணம். இதனைச் சாத்தியமாக்கிய வட அமெரிக்கா விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

வெங்கடேஷ்

முந்தைய கட்டுரைபூன்முகாம், கவிதை -கடிதம்
அடுத்த கட்டுரைஅஜிதனின் கட்டுரை – கடிதம்