வேதங்கள், இதிகாசங்கள், திருக்குறள், மதச்சடங்குகள் உள்ளிட்ட அலகுகளில் மற்றும் கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இம்மின்நூல்.
இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இத்தனை சொற்கள் நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடுகின்றன என்றவாறு பெரும் வியப்பை ஏற்படுத்தும் சொற்களின் ஊற்று இக்கட்டுரைகளில் நிறைந்துள்ளன.
தலைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளோ அல்லது கடுமையாக விமர்சிக்கப்படும் கேள்விகளுக்கான எதிர்வினைகளோ எதுவாயினும் ஆழ்ந்த சொற்களைக் கொண்டு உருக்கொள்ளும் ஜெயமோகனின் அல்புனைவு வடிவங்கள் வாசகனை மலைக்க வைப்பவை.
‘அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறிக் கஞ்சிக்குப் பறந்த ஒரு நீண்ட காலகட்டம் உண்டு. அன்று பட்டினியால் பரிதவித்தலைந்த மக்களுக்கு இந்திய ஞானமரபின் தத்துவ உச்சங்கள் எப்படிப் பொருள்பட்டிருக்கும்? வறட்டு வேதாந்தம் என்பதில் உள்ள கசப்பு அப்போது உருவானதாகவே இருக்க வேண்டும்’
ஜெமோவின் மேற்கண்ட வரிகள் ஞானம்,தத்துவம் உள்ளிட்ட வகைமைகளில் சாமானிய மக்களின் தொடர்புகள் அறுந்தமைக்கான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது.
ஊரைவிட்டு விலகுதலை அக்காலச் சமூகம் இழிவாக கருதி இருந்ததை அறிய முடிகிறது.
‘ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீய ஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிட முடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிட முடியுமா? அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்ப துன்பங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எதிர்விளைவுகளை அனுபவிக்கும்’.
மணம் செய்த செயலுக்கு மெய் தண்டிக்கப்படுவதன் நிதர்சனத்தை உணர்த்திய வரிகள் மேற்கண்டவை.
திருக்குறளை முழுமையான நீதியாகவும், எக்காலத்துக்கும் உரிய நீதியென்றும், உலகப் பொதுமறை என்றும் குறிப்பிடுவதை மிகைக் கூற்றுகள் என்கிறார் ஜெமோ.
எல்லா நீதி நூல்களும் காலாவதியாகும் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.
‘இந்த மக்கள் நம்மை மதிக்கிறார்கள், நம்மைப் பிரியமாக வரவேற்கிறார்கள், நாம் சொல்வதை கவனமாகக் கேட்கிறார்கள். ஆனால் நம் கருத்தை மட்டும் ஏற்றுக் கொள்வதே இல்லை’
பெரும்பாலான மதப் பரப்புரையாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் இடம் பெறுகிறது. எல்லா காலங்களுக்குமான உண்மைகள் இவை.
பிற்கால பௌத்த சமய கூற்றாக இடம்பெறும் கீழ்க்கண்ட வரியும் சிந்திக்கத்தக்கது.
‘மனிதனின் அறிவு தன்னளவில் உண்மையை குறைபடுத்தி மட்டுமே அறியும் இயல்பு கொண்டது. ஆகவே அவன் தன் அறிவால் உணரக்கூடிய எல்லாமே அவனால் திரிக்கப்பட்ட உண்மையே’.
கேட்கப்படும் எந்த ஒரு கூற்றுக்கும் எப்போதும் இது போன்ற நிலைதான் நீடிக்கிறது.
நேர்மறையான அணுகுமுறைகளைக் காட்டிலும், வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைத்து விடுவதாகவும், அதுவே மிக முக்கியமான அரசியல் ஆயுதமாக நீடிப்பதாகவும் ஆதங்கப்படுகிறார் ஜெமோ.
தியானத்தின் வழிமுறைகளாக மனதைக் குவியச் செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரைய வைத்தல் என்று மூன்று படிகளில் எளிமையாக விளக்குகிறார்.
பல நேரங்களில் செழுயான இக்கட்டுரைகளின் பக்கங்கள் நகர மறுக்கின்றன. பெரும் மாயம்போன்று ஒரு வார்த்தை ஒரு நொடியை விடக் குறைவான கால அளவில் பிரக்ஞையை மீட்டெடுத்து மிக வேகமான வாசிப்பை முன்னெடுத்துச் செல்கிறது.
‘நமது கணித ஆசிரியரை நம்மிடமிருந்து மறைப்பது அவர் நமக்கு கற்பிக்கும் கணிதமே’
மீண்டும் மீண்டும் வாசித்து பெரிதும் மகிழ்ந்தேன் மேற்கண்ட வரியை.
அறிவியலில் மேம்பட்ட மெத்தப்படித்த நபர் ஒருவர், அறிவியல்-தத்துவம் குறித்த கேள்வி ஒன்றை வலுவாக எழுப்புகிறார். அதற்கான ஜெமோவின் நீண்ட எதிர்வினையும், தொடர்ச்சியான அவருடனான உரையாடல்களும் இந்நூலின் பிற சிறப்புகள்.
மிக வேகமாக, மிக அதிக பக்கங்கள் படைத்து விடும் திறமை மட்டும் பெற்றவர் அல்ல ஜெயமோகன், தனது எழுத்துக்களை, வாசிப்பவரின் சிந்தனைக்குள் மிக எளிதாக நுழைத்து, அறிந்தவற்றை நுட்பமாக கேள்விக்குள்ளாக்கி, நீண்ட விவாதங்களை தோற்றுவிக்கும் அசாத்தியமான ஆற்றலும் கைவரப் பெற்றிருக்கிறார்.
நல்லதொரு வாசிப்பனுபவத்தை அளித்துவிட்ட மற்றுமொரு நூல் இது.
சரவணன் சுப்ரமணியன்