அஜிதனின் கட்டுரை – கடிதம்

சியமந்தகம்

ஜெ

சியமந்தகம் இதழில் வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அருமை. வெவ்வேறு கோணங்களில் உங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் உணர்ச்சிகரமானவை.இத்தனை உணர்சிகரமான ஈர்ப்பு உங்களுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியம். வழக்கமாக வாசகர்கள்தான் இப்படி கடிதங்கள் எழுதுவார்கள்.அப்போது சில அரசியல்காரர்கள் இதெல்லாம் பொய் என்பார்கள். இப்போது எழுத்தாளர்கள் அத்தனை உணர்ச்சிகரமாக எழுதுவதைப் பார்த்து என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு விஷயத்தைச் சொல்வதற்காகவே இதை எழுத ஆரம்பித்தேன். அஜிதன் எழுதிய கட்டுரை. மிக அபூர்வமான கட்டுரை அது. தந்தை, ஆசிரியர், எழுத்தாளர் என மூன்று நிலைகளில் உங்களை மதிப்பிட்டு வகுத்துச்சொல்கிறது அந்தக் கட்டுரை. உங்கள் எழுத்துக்களை அழகியல் சார்புடனும் தத்துவச் சார்புடனும் மதிப்பிட்டுச் சொல்கிறது. அதிலும் செவ்வியல் இலக்கியங்கள் மனிதனின் அடிப்படையான துக்கத்தை எப்படியெல்லாம் கையாள்கின்றன, அதிலுள்ள வகைமாதிரி என்ன என்று விவாதிக்கும் பகுதி அற்புதமானது. பற்றின்மையின் விளைவாக வரும் சமநிலைதான் இலக்கியம் அளிக்கும் விடுதலை என்பது மிக அசலான ஒரு தரிசனம்.

ஜெ, குட்டி பதினாறடி தாவிவிட்டது. இந்த அளவுக்கு அழகுணர்வும் தத்துவ ஆழமும் கொண்ட ஒரு கட்டுரையை நீங்கள் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். (தமிழில் நீங்கள்தான் இந்த தரத்திலான கட்டுரைகளை எழுதும் ஒரே எழுத்தாளர்) .உங்கள் முப்பது வயசுக்குள் நீங்கள் எழுதிய கட்டுரைகளுடன் ஒப்பிட்டால் இந்தக் கட்டுரை மிகமிக உயரத்தில் உள்ளது. ’சான்சே இல்லை’ என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். மிக நுட்பமான, ஆழமான விஷயங்கள். ஆனால் நல்ல ஓட்டமுள்ள மொழி. சிந்தனையில் தெளிவுடன் எழுதப்பட்ட கட்டுரை.

ஸ்ரீனிவாஸ்.எஸ்

பற்றுக பற்று விடற்கு – அஜிதன்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

உண்மை, என் முப்பது வயதில் அந்தக் கட்டுரைக்கு இணையான ஒன்றை எழுதியிருக்க முடியாது. இன்று எழுதும் மிகச்சிறந்த கட்டுரை மட்டுமே அஜிதனின் அக்கட்டுரையின் தரிசனம், தீவிரம் கூடவே தெளிவை அடைய முடியும்.

அதற்கு அவனுடைய தனித்தன்மை, உழைப்பு ஆகியவை காரணம். ஆனால் மேலும் சில சொல்லவேண்டும். என் இளமையில் நான் ஒரு நூலை கண்டு பிடிக்க ஏழுமணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏராளமான குப்பைகளை வாசித்து நானே ஒரு நல்ல நூலை அடையாளம் காணவேண்டியிருந்தது. அத்தனைக்கும் மேலாக என் வாழ்க்கையில் பெரும்பகுதி பிழைப்புக்கான கல்வி, பிழைப்புக்கான வேலையிலும் செலவாகியது.

அஜிதனுக்கு, அவன் தலைமுறைக்கு தொழில்நுட்பம் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. வேண்டிய நூல் கைசொடுக்கும் நேரத்தில் கிடைக்கும். உரிய நூல்களை இணையவெளி சரியாக அறிமுகம் செய்கிறது. ஒரு நூலின் குறிப்பை, சுருக்கத்தை வாசித்துவிட்டு முழுமையாக வாசிக்கலாம். கையிலேயே ஒரு மாபெரும் நூலகத்தை வைத்திருக்கலாம்.

அந்த மாபெரும் வசதியை எவ்வகையிலும் பயன்படுத்தாமல் இணையவெளி அளிக்கும் அரட்டைகளுக்கான வாய்ப்பில் மூழ்கி தன்னை சிதறடிப்பவர்கள் தான் இங்கே மிகப்பெரும்பான்மையினர். காட்சியூடகங்களின் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்து பொழுதை அழிப்பவர்கள். எந்த தொழில்நுட்பம் கற்பதற்கு இவ்வளவு வாய்ப்பை அளிக்கிறதோ அதே தொழில்நுட்பமே ஒவ்வொரு தனிமனிதனைச் சுற்றியும் வெற்று அரட்டைகள் மற்றும் எளிய கேளிக்கைகளை கொண்டு குவித்து அவனை ஒருகணம்கூட சிந்திக்கவிடாமலும் ஆக்குகிறது.

அஜிதன் அதிலிருந்து முழுமையாகவே தப்பித்துக்கொண்ட இளைஞன். வாழ்க்கைக்காக கற்பது, வாழும்பொருட்டு வேலை செய்வது இரண்டையும் அஜிதன் செய்ய நேரவில்லை. அவன் விரும்பியதை மட்டுமே செய்யும் நிலையில் இருக்கிறான். ஆகவே முழுநேரமும் கற்பனவனாக வாழ முடிகிறது. இதுவும் இன்றைய சூழல் அளிக்கும் கொடைதான்.

ஜெ

முந்தைய கட்டுரைடல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
அடுத்த கட்டுரைஆர். சண்முகசுந்தரம்- அழியாக்குரல்