இனிய ஜெயம்
ஒரு முறை கவிஞர் தேவதேவனை பேருந்து ஏற்றிவிட்ட தருணம் குறித்து அஜிதன் சொல்லிக்கொண்டு இருந்தான். பேருந்தில் எறிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜனமும் கையில் துணிமணி பையோ, அலுவலக பணிப்பையோ வைத்திருக்க, அந்த கூட்டத்தில் முண்டியடித்து எறிக்கொண்டிருந்த தேவதேவனின் ஜோல்னா பையில் இருந்து எட்டிப்பார்த்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது ஒரு மஞ்சள் மலர். எங்கேயோ சாலையோரம் தனித்துக்கிடந்த அதன் துயர் தீர்க்க அதை தனது வீட்டுக்கு எடுத்துப் போய்க்கொண்டு இருக்கிறார் தேவதேவன்.
மற்றொரு வாசகர், ஊட்டி முகாம் விடுத்து தேவதேவனுடன் திரும்புகிறார். பேருந்தில் கும்பல். பேருந்து ஆட்டத்தில் நின்றிருக்கும் தேவதேவனின் ஜோல்னா பை அவர் அருகே அமர்ந்திருப்பவர் முகத்தை வந்து தொடும் தருணம் எல்லாம் சுருக்கென ஒரு கொடுக்கின் தீண்டல். ஒரு கட்டத்துக்கு மேலே பொறுக்க இயலா பயணி கவியின் பையை சோதனை விட்டிருக்கிறார். மஞ்சள் கொண்டை பூவுடன் பச்சை வண்ணப் பந்துக் கள்ளி. (கவி எப்படி அதை முள் படாமல் எடுத்ததுப் பைக்குள் போட்டிருப்பார் ?!!)
தேவதேவன் எழுதிய இந்தக் கதை தேவதேவன் எனும் கவி உள்ளத்தையும் அக்கவியின் கவிதைக்கு வாசகராக எவர் வருவாரோ அவர் உள்ளத்தையும் குறித்தது.
யசோதரை
ஒரு புத்தகத் திருவிழா. நாங்கள் இணைந்திருந்த ஒரு புத்தகக் கடை. உடல்நீர் கழிப்பதற்காய் வெளிப்புறம் சென்று திரும்பிக் கொண்டிருந்த நான், அப்போதுதான் வந்திருந்த நண்பர் கண்டு மலர்ந்தவனாய் நெருங்கி வந்து அவரிடம், இரகசியம் கொண்டு மூடியிருந்த வலது கையை மறைத்தபடி, பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் போல் மிகத்தேர்ந்த ஓர் உறுதியுடன், “வேணு உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள், அதை நான் தருவேன்” என்றேன். சில நொடிகள் நன்றாய் மவுனித்துவிட்டு, “ஒரு பூ” என்று அவர் கேட்டவுடனேயே, ‘இதோ’ என்பது போன்ற அழுத்தமான ஒரு நிதானத்துடன் அவர் முன் நீண்டிருந்த என் உள்ளங்கையில் இருந்தது, ஒரு சிவந்த ரோஜா.
அதிர்ந்துவிட்டார் வேணு.
அக்கணம் அந்த அற்புத நிகழ்வைப் பக்கத்திலிருந்த அனைவரும் பார்த்திருந்தால் நன்றாயிருக்குமே என்ற நப்பாசையுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தவேளை புத்தகக் கடையிலிருந்த பிற அனைவரும் வேறு வேறு கவனத்தில் இருக்கும்படியாகி விட்டிருந்தது.
சரி, இது ஒரு அபூர்வமாக நிகழக்கூடிய தற்செயல் நிகழ்வாகவே இருக்கலாம். நான் வெறுங்கையை விரித்துக் காட்டினாலும், “என் செல்ல எழுத்தாளப் பெருமகனே, இந்த இன்மைதான் நான் உனக்குத் தரும் பரிசு! இன்மை! இன்மை!” என்று இன்மை குறித்த ஒரு தத்துவம் விரித்துவிடலாம். சரி, ஏதோ வேறொரு பொருள்தான் வைத்திருந்தால் – அட, அது எந்தப் பொருளானாலும் கூட – பேதா பேதமற்ற ஒரு தத்துவ அடிப்படையைப் பேசியே, நாம் அடைய வேண்டிய உன்னதத்தின் ஓர் ஆழக் குறியீடாக்கி விடலாம். எதையானாலும் நம் பாழாய்ப்போன அறிவு, பிரிவு, நம்பிக்கைகள் கொண்டே சமாளித்துவிடலாம் அல்லவா?
அமைதியாய்ச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன். நான் சென்று திரும்பிக்கொண்டிருந்த நீண்ட அழகிய விரிந்த அந்தப் பாதையில்.
குனிந்து எடுத்து என் கைகளில் ஏந்திப் பார்த்துவிட்டு. அத்துணை நேரம் நான் என் கைகளில் வைத்திருந்தது அந்தத் திருவிழாக் கூட்டத்தில், புத்தகச் சந்தையின் உள் நுழைய வந்திருந்த ஒரு பெண்ணின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர்தானே! “நான் புத்தரின் யசோதரை தெரியுமா?” என்றாள்.
என் எதிரே வந்துநின்ற ஒரு பெண், “ஓ, நீதானா, சித்தார்த்த ராத்திரியை எழுதத் தூண்டியவள்?” என்றேன்.
வாசித்தேன். நன்றி என்பது போல் மறைந்துவிட்டாள் அவள். அவளைப் போன்ற ஓர் பேரழகியும் இருப்பார்களா இவ்வுலகில் என்றிருந்தது.
இந்த மாயக்கதையை இப்போதுதான் எழுதியிருக்கிறேன். யாருக்கும் இன்னும் வாசிக்கக் கொடுக்கவில்லை. ஆனால், முந்தைய அற்புத நிகழ்வைத்தான் கேட்ட என் முதல் வாசகி என் துணைவி சொல்கிறார், “நீங்கள் அந்த மலரைக் கையில் வைத்திருக்கும்போதே உங்கள் நண்பர் அதைக் கவனித்திருக் கிறார்…”
இல்லை, அதற்கு வாய்ப்பே இல்லை. அதன் காலமும் தூரமும் நான் அறிவேன். அப்படியானால் என்ன நிகழ்ந்திருக்கும்? சந்தை வாயிலுக்கு வெளியே அகன்ற நிலமும் பாதையும் ஒன்றாயிருந்த உள்நுழைவழியில் பேரொளிர்ந்து கிடந்த அந்த மலரை அவரும் பார்த்திருக்கலாம். ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் ஏதோ ஒன்றுதான் – அவரை அதனை எடுக்கவிடாது தடுத்திருக்கலாம். இன்னும் அவர் உள்ளில் கிடக்கும் அந்தப் பிழையின் வலிதான் அவருக்கு ஓர் அற்புதத்தைக் காட்டியிருக்கிறது. ஒரு மந்திரமுமில்லை, மாயமும் இல்லை, மயக்கங்களும் இல்லை.
தன்னறம் நூல்வெளி _ தேவதேவன் கவிதைகள்.
கடலூர் சீனு
தொடர்புக்கு: 9843870059, [email protected]