லாபம், ஒரு கடிதம்

கவுண்டர்?

என்  தலையில் அடித்தது போல் இருந்தது !

நான் சொல்லிவருவது ஒன்றுண்டு. நம்மவர்களின் உள்ளம் பெரிய அளவில் ஊழல்மயம் ஆகிவிட்டது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏதாவது லாபம் பார்க்கவே முயல்கிறார்கள். ஒரு செயலை எண்ணிக்கொண்டாலே லாபக் கற்பனைக்குச் செல்கிறார்கள். ஆகவே வேறொருவர் எதையாவது செய்தாலும் அதில் அவருக்கு லாபம் உண்டு என கற்பனை செய்கிறார்கள். இன்னொரு கோணத்தில் யோசிக்க மூளை ஓடுவதே இல்லை. இது ஒரு கூட்டு உளநோய்.

நோயில் இருந்தது மீள ஏதேனும் மார்க்கம் உண்டா?  சமூகத்தை திருத்த கேட்கவில்லை என்னை மாற்றிக்கொள்ள கேட்கிறேன் .

ஐசக் ராஜ்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சமூகசேவையாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். புகழ்பெற்றவர். செல்லும் வழியில் டீக்கடையில் அவர் வீட்டை விசாரித்தேன். அங்கே நின்ற அத்தனைபேரும் ஒரே குரலில் அவர் சமூக சேவை செய்து ஏகப்பட்ட பணம் சம்பாதித்துவிட்டதாகச் சொல்லி புழுங்கினார்கள். நுணுக்கமான உள்வட்ட தகவல்கள் வேறு.

ஆனால் அந்த சமூகசேவகர் நோயுற்று உடல்நலம் குன்றி மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் இருந்தார். நாங்கள் பணத்துடன் பார்க்கச் சென்றிருந்தோம்.

அந்த மனநிலையின் ஊற்றுமுகம் ஒன்றே. அந்த டீக்கடை ஆட்கள் வாழ்நாளில் எவருக்கும் எதுவும் செய்தவர்களோ, பிறர்நலமோ பொதுநலமோ நாடி ஒரு முறையேனும் சாதாரணமாக எண்ணிப்பார்த்தவர்களோ அல்ல என்பதுதான். உண்மையிலேயே அவர்களுக்கு சமூகசேவை என்றால் என்ன என்றே தெரியாது. ஒருவர் உழைக்கிறார், ஆனால் பணம் சம்பாதிக்கவில்லை என்பதை அவர்களால் கற்பனையில்கூட பார்க்க முடியவில்லை. அந்த டீக்கடைதான் நம் சமூக வலைத்தள அரட்டை.

அந்நோயை வெல்ல ஒரே வழிதான். நாமும் தனிப்பட்ட பயன்கருதாது, பொதுநலன் நாடி எதையாவது செய்ய ஆரம்பிப்பது. அதன் அகநிறைவை, விடுதலையை அறிவது.

ஜெ

முந்தைய கட்டுரைஃபால்ஸம் நூலகச்சந்திப்பு
அடுத்த கட்டுரைபூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு