பூன் முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம், நலமறிய ஆவல்.

விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் நானெல்லாம் 2015-ல் அல்லது அதற்கு முன்பே ஊட்டி இலக்கிய முகாமில் கலந்து கொண்டுள்ளேன் என்று பெருமையாக சொல்லும் போதெல்லாம், இந்தியா செல்வதற்கே நாக்குத் தள்ளுகிற நிலையில், இதெல்லாம் நமக்கு அவ்வளவு எளிதாக அமைய வாய்ப்பில்லை என்ற ஏக்க மனநிலையில்தான் முன்னர் எப்போதும் இருந்திருக்கிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜெ, அக்காவுடன் அமெரிக்கா வருகை, இரண்டு முழு நாட்கள் நான் வசிக்கும் வட கரோலினா மாநிலத்தில், இரண்டு முழு நாட்கள் பூனில்  முதன் முறையாக அமெரிக்காவில் இலக்கிய முகாம் என்ற தகவல் அறிந்தவுடன், “ஐயோ, சொக்கா. ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே” என்ற சந்தோசத்தில் மூழ்கி திளைக்கும் நிலையில் இருந்தேன். கண்டிப்பாக இதே மன நிலையில்தான் நண்பர்களும் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வட கரோலினா பூனில் இலக்கிய முகாம் என்பதால், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் விவேக்கும், நானும் முகாம் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டோம். இரண்டு, மூன்று வீடுகள் ராஜனும், விவேக்கும் பார்த்துக் கொண்டிருந்தாலும் 50 பேர் வரை தங்குவதற்கான எந்த பிரமாண்ட  வீடும் அமையவில்லை. நான் இவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து,  அலுவலக வேலை முடித்து ஒரு நாள் மாலை வேளை, தேடத் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே அருமையான வீடாக 44-பேர் வரை தங்குவதற்கான வீடு கிடைத்தது. ஐம்பது வரை கூட அனுமதி. உடனே, வீட்டில் இருக்கும் வசதிகளையும், முன்பு தங்கி இருந்தவர்கள் பதிவிட்ட கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் பார்த்து நல்ல வீடுதான் என்று தெரிந்து கொண்டவுடன், விவேக்குக்கு இந்த வீட்டைப் பற்றி இணைய தள முகவரியை உடனே அனுப்பி வைத்தேன்.

விவேக்கிடம் இருந்து ராஜனுக்கு தகவல் பரிமாறப்பட்டு, நல்ல வசதியான வீடு என்று நாங்கள் மூவரும் உறுதி செய்து கொண்டவுடன், ராஜன் உடனே பதிவு செய்து விட்டார்.

அதற்கடுத்து உணவு மற்றும் பொருட்கள் வாங்கும் வேலைக்கான திட்டமிடலை, ஒரு மாதத்துக்கு முன்பே நானும், விவேக்கும் ஆரம்பித்தோம். தங்கும் இடத்திலிருந்து 30 நிமிட கார் பயணத்திலேயே நல்ல வட இந்திய உணவகம் அமைந்திருந்தது மிகவும் வசதியாக இருந்தது. வெள்ளி, சனி இரண்டு நாட்களும் முழு நாள் நிகழ்வுகளாக இருந்ததால், உணவகத்தில் இருந்தே முகாம் வீட்டுக்கு உணவு கொண்டு வர ஏற்பாடு செய்து இருந்தோம். வார இறுதி நாட்களில் இங்கு உணவகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இரவு உணவு கொண்டு வந்து கொடுக்க முடியாது, வந்து வாங்கிக் கொள்ளவும் என்றார்கள் உணவகத்தில் இருந்து.

திரும்பத் திரும்ப உரிமையாளரிடம் பேசும் பணியை விவேக் பார்த்துக் கொண்டு எல்லா நேரமும் ஸ்நாக்ஸ், டீயும் சேர்த்து கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்து விட்டோம். என்ன மெனு, எவ்வளவு வேண்டும் என்ற திட்டமிடும் வேலையை நான் பார்த்துக் கொண்டேன். நாங்கள் கேட்டதை விட, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு உணவும், தேநீரும், சிற்றுண்டியும் கிடைத்தது.

உணவக நிறுவன உரிமையாளரிடம் பேசும் பணியை விவேக் பார்த்துக் கொண்டார். தங்கும் இடமும், உணவும்,தேநீரும், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்து விட்டதால், மூன்று நாட்களுக்கான காலை உணவுக்குத் தேவையான மற்ற பொருட்கள் வாங்குவதும், முதல் நாள் இரவு உணவும் முகாம் செல்லும் அன்று வாங்கிக் கொள்ள திட்டமிட்டோம். நிகழ்வு நடுவில்  வெளியே யாரும் செல்லத் தேவையில்லாமல் உங்களிடமும், அக்காவிடமும் முழு நேரமும் உரையாட செலவிட  வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாகிவிட்டது.

நல்ல வசதிகளை கொண்ட பெரிய மாளிகை வீடு. பச்சை புல்வெளி சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்தது. மாடியில் கண்ணாடியில் இருந்து பார்க்கும்போது கரடிகள் மேய்ந்து கொண்டிருந்த மாதிரி இருந்தது. கண்ணைக் கசக்கி பார்த்தாலும் அப்படித்தான் தோன்றியது எனக்கு. கழுத்தில் மணிகள் கட்டிய கருப்பு நிற மாடுகள்தான். மறு நாள் நண்பர்களுடனான மாலை நடையில் உறுதி செய்து கொண்டேன்.

தூங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வீட்டில் இருந்தன. மாடியில் குளியல் அறை மட்டும் 10-12 பேருக்கு ஒரு குளியல் அறை இருந்தது. அதிகாலை 4:30 மணிக்கெல்லாம் கழிவறையை பயன்படுத்தும் சத்தம் கேட்டது.

மே 12 வியாழன் இரவு உணவை உண்டு கொண்டே உங்களையும், அக்காவையும் சுற்றியே மொத்த நண்பர்கள் குழு சுற்றி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தோம். அன்றைய நாள் இரவில் எல்லோரும் அவர்களைப் பற்றிய அறிமுக நிகழ்வு இருந்தது. நெகிழ்ச்சியான, வேடிக்கையான பல நினைவுகள் பகிரப்பட்டன. சௌந்தர் அண்ணாவும், ராஜனும் நிகழ்வு விதிகளையும், இருப்பிட விதிகளையும் எடுத்துரைத்தனர். அறிமுகம் முடிந்ததும் எல்லோரும் ஒரு அலைவரிசையில் வந்து விட்டோம் என்று தோன்றியது.

முதல் நாள் நிகழ்வு

மறு நாள் மே 13 வெள்ளி காலையில் தேநீர் அருந்த நீங்கள் உணவு உண்ணும் அறைக்கு வந்தவுடன், பேச்சு மறுபடியும் தொடர்ந்து. வெடிச் சிரிப்பு, சிந்திக்க, அறிவுப் பகிர்வு என்று பல தளங்களில் உரையாடல்கள் இருந்தன.

அது வரை சலசலத்துக் கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம், காலை 9 மணிக்கு சரியாக முதல் நிகழ்வுக்காக தியான மண்டபதில் கூடுவது மாதிரி மொத்த அமைதி. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த முகாமில் கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது என்ற அக்கறையும், ஆர்வமும் நண்பர்கள் முகத்தில்.

நண்பர் பழனி ஜோதி பாடி முதல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடக்க உரையாக கவனச் சிதறல் இல்லாமல் எப்படி உரைகளை கவனிப்பது என்ற  சிறு உரையுடன் ஆரம்பிக்கப் பட்டது.

சிறுகதைகள் பரிணாமம் பற்றி முதல் உரை அன்றைய தொடக்கமாக அமைந்தது. சிறுகதைகள் எப்படி தொடங்கப்பட்டது, சிறுகதைகளின் முன்னோடிகள் யார், ஒரு சிறு கதையின் தொடக்கம், மையம், முடிவு எப்படி இருக்க வேண்டும், முடிவில் சிறுகதை தொடங்குவதென்று பல புள்ளிகளைத் தொட்டு உங்கள் அறிமுக உரை இருந்தது.

உரை முடிந்தவுடன் நண்பர்களின் கேள்வி, பதில்கள் நிகழ்வு இருந்தது. எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது என்று சொல்லி ஒரு தடவைக்கு இரு தடவை சொல்லி பார்த்தாலும், சௌந்தர் அண்ணா கேள்வி நேரம் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டார். தேநீர் இடைவெளியில் உங்களிடம் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

இத்தனை எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுதி குவித்தாலும், உடனே  மனதில் பதியக் கூடிய சிறுகதைகளை சொல்லச் சொன்னால் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் மட்டும் 2000 சிறு, குறு கதைகள் எழுதப்பட்டன என்றீர்கள். அப்போ சிறுகதை எழுவது என்பது சவாலான எழுத்து வடிவம் தானா என்ற கேள்விக்கு, “ஆமாம் சவால் தான். ஒரு குயவனைப் பற்றி எழுத வேண்டும் என்றால், அவருடைய வாழ்க்கையை காட்ட வேண்டும்”, என்றீர்கள். சிறுகதையில் சொல்லக் கூடாது, காட்ட வேண்டும் என்று பல இடங்களில் நீங்கள் எழுதி, சொன்னதும் நினைவுக்கு வந்தது.

தேநீர் இடைவெளி முடிந்து, நண்பர்கள் ஜெகதீஷ் அசோகமித்திரனின் ‘பிரயாணம்’ , விஜய் சத்தியா ஜெயகாந்தனின் ‘சுய தரிசனம்’, மது திருச்செந்தாழையின்  ‘ஆபரணம்’ சிறுகதை வாசிப்பு அனுபவ பகிர்வு நிகழ்வு இருந்தது. அவர்களின் வாசிப்பு அனுபவம் முடிந்தவுடன் நண்பர்களும் அவர்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பிரயாணம் சிறுகதை குறித்து உங்கள் விளக்கம் அந்த சிறுகதையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க உதவியது. யோக நித்திரையில் புலன் ஒடுக்கதில் குரு இருத்தல் என்பது யோக மரபில் முக்கியமான மரபென்ற விளக்கம் கிடைத்தது.

எங்களுக்கு யோக நித்திரை, புலன் ஒடுக்கத்தில் குரு இருத்தல் என்பதெல்லாம் தெரியாது என்ற போதாமை இருக்கும் போது, இந்த மாதிரி சிறுகதைகளை புரிந்து கொள்வது சவால் தானே என்று தேநீர் இடைவெளியில் கேள்வி கேட்டேன்.” நான் உங்கள் எல்லோரையும் விட ஒரு பத்து வருடம் அதிகம் வாசிக்கிறேன், வாசிக்க வாசிக்க இந்த கதைகள் எல்லாம் புலபட்டு விடும்”, என்றீர்கள். நாங்கள் எல்லாம் அப்படி வாசித்து நிரப்ப கூடிய இடைவெளியா இது?

நிகழ்வுக்கு நடுவில் உணவு வரும்போது மட்டும் நானும் விவேக்கும், தாமுவும் 5 நிமிடம் வேறு வழியில்லாமல் செல்ல நேர்ந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசுவும், விவேக்கும் அறிவியல் புனைவு கதைகள் பற்றி பேசினர். அறிவியல் கதைகள் என்பதாலா, இல்லை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த நிகழ்வு  என்பதா தெரியவில்லை. நண்பர்களின் வாசிப்பு அனுபவ பகிர்வு கொஞ்சம் குறைவாகதான் இருந்தது. அறிவியல் கதைகள் பற்றிய உங்கள் விளக்கத்தோடு அந்த நிகழ்வு முடிந்தது.

நண்பர் பாலாஜி ராஜு,  கவிஞர்கள் அபி, தேவதச்சன், மதார் கவிதைகள் பற்றி உரை ஆற்றினார். கவிதைகளின் தரிசனம், அழகியலை எப்படி உணர்ந்து கொள்வது என்ற உங்களின் நீண்ட விளக்கம் இந்த கவிதைகளை புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. அன்றைய இரவும் தூங்குவதற்கு முன் பாலாஜி ராஜு, நான், பழனி ஜோதி கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு ராஜனின் வெவ்வேறு இசையை ரசிப்பது எப்படி, ரசிப்பு தன்மையை வளர்த்துக் கொள்வது எப்படி,  நல்ல இசை எது என்பது பற்றிய விரிவான உரை இருந்தது. இது ஏற்கனவே விஷ்ணுபுர இலக்கிய வட்ட அமெரிக்க நண்பர்களுக்காக நடத்திய உரையின் மறு நிகழ்வு. ஒரு இசை அமைப்பாளரின் இசையே கேட்டு வளர்ந்த எனக்கு, மாற்று இசையை எப்படி கேட்டு ரசிப்பது என்ற கேள்விக்கு, பூவே உனக்காக படத்தில் வருவது போல ஒரு முறை தான் காதல் மலரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்ற தத்துவ விளக்கம் எனக்கு கிடைத்தது. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் படியான எளிய பதிலிது.

அன்று இரவு உணவுக்குப் பிறகு வெண்முரசு ஆவணப் படம் முகாமில் கலந்து கொண்ட நண்பர்களுக்காக திரையிடப் பட்டது. ஒரு சில நண்பர்கள் முதல் முறையாக பார்த்து, மிக அருமையாக இருந்தது என்று சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

சென்ற ஆண்டு இதே மாதம் வட கரோலினாவில் உள்ள மோரிஸ்வில் திரையரங்கில் அமெரிக்காவில் முதன் முதலாக வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் 95 நண்பர்களை ஒருங்கிணைத்து நிகழ்வு நடந்தது. இந்த வருடம் அமெரிக்காவில் முதன் முறையாக பூனில் இலக்கிய முகாம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட எனக்கு கிடைத்த வாய்ப்பு நல்லூழ் என்று தான் சொல்வேன்.

இரண்டாம் நாள் நிகழ்வு

முதல் அறிமுக அமர்வு தத்துவம். ஷங்கரின் பாடலுடன் தொடக்கம். பழனி ஜோதி, ஷங்கர் பாடல் பாடும்போதும், ஸ்ரீகாந்த் குழல் இசைக்கும் போதும், ஸ்கந்தா, ராஜன் இசையமைக்கும் போது  கண்களை மூடிக் கொண்டு தான் ஆழ்ந்து ரசித்து கேட்கிறீர்கள்.

எல்லாத் துறைகளிலும் தத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதும் நிர்வாகவியலில் விதிகளை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்களுக்கு தத்துவ பார்வை தேவையில்லை. ஆனால் விதி முறைகளை உருவாக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு தத்துவ பார்வை மிக முக்கியம் என்பது நல்ல புரிதலாக அமைந்தது. மேலை நாட்டு தத்துவத்துக்கும், கீழை நாட்டு தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன, தொடக்க நிலை தத்துவ நிலை புரிதலுக்கு வாசிக்க வேண்டிய நூல்கள் எவை என்று தத்துவம் பற்றிய அடிப்படை புரிதலுக்கு உங்கள் உரை மிக உதவியாக இருந்தது.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு ராஜனின் அமெரிக்கா கலாச்சாரத்தைப் புரிந்து கொள்தல் தலைப்பில் ஒரு புனைவு, ஒரு அபுனைவு நூலில் இருந்து பல உதாரணங்களை தொட்டு அமைந்தது அவர் உரை.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ரெமிதாவின் ஆங்கில கவிதைகள் பற்றி உணர்வுபூர்வமாக சிலாகித்து அவர் பேசியது, ஒரு நல்ல ஆங்கில பேராசிரியை அவர்களின் வகுப்பு மாதிரி இருந்தது.

மறுபடியும், தேநீர் இடைவெளிக்குப் பிறகு நண்பர்கள் விசு மற்றும் செந்தில் அவர்களின் வால்மீகி, கம்ப இராமாயண பாடல்கள், விளக்கத்துடன் உரை இருந்தது. கம்ப இராமாயண பாடல்களை பாடும் போது, குரலில் ஏற்ற, இறக்கத்தோடு ஒரே பாடலை திரும்பத் திரும்ப சொல்லும் போது அந்த பாடல் கொடுக்கும் ரசிப்புத்தன்மை, வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தம், விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்று உங்கள் விளக்கம் உதவியாக இருந்தது.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு நாவல் நேரம். போரும் அமைதியும் பற்றி அருணா அக்காவின் உரை இருந்தது. தேர்வுக்கு தயாராவது போல, நிகழ்வுக்கு முந்திய இரண்டு, மூன்று நாட்களாக காரில் பயணம் செய்யும் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரைக்குத் தயாராக வாசித்துக் கொண்டே வந்தார். இந்த நாவலைப் பற்றிய அக்காவின் பார்வையும், நாவலில் அவர் சிலாகித்து பேசிய இடங்களும் மிக அருமையாக இருந்தது.

தேநீர் இடைவெளியில் என்னிடம் இந்த உரை எப்படி இருந்தது என்று அக்கா கேட்டார். கொடுக்கப்பட்ட 15-20 நிமிடங்களில் இவ்வளவு பெரிய நாவலின் சாராம்சத்தை சுருக்கிச் சொல்வது சவால்தான், ஆனால் நாவல் பற்றிய உங்கள் பார்வையும், முக்கியமான இடத்தை தொட்டுச் சென்று பேசியதும் மிக அருமையாக இருந்தது என்றேன். நற்றுணை, ரஷ்ய கலாச்சார மைய 200 வது வருட நிறைவைக் கொண்டாடும் விதமாக, இரண்டு அமைப்பும் இணைந்து நடத்திய நிகழ்வில் கரம்சோவ் சகோதரர்கள் பற்றி அருணா அக்காவின் உரையும் இணைய வழிக் கூட்டத்தில் பங்கு கொண்டு கேட்டுள்ளேன்.

அதன் பிறகு, சௌந்தர் அண்ணாவின் பனி உருகுவதில்லை நூல் பற்றி கலந்துரையாடலை தொடங்கி வைத்தார். அருணா அக்கா தன் நல்ல தோழி என்று பேசினார். பனி உருகுவதில்லை நூலுக்கும், அருணா அக்காவுக்கும் நிறைய வாசக ரசிகர்கள். நூலையும், இந்த நூலில் இருந்து அக்காவின் நினைவுகளையும் சாரதா, மேனகா மற்ற நண்பர்களின் உரை மிக அருமையாக இருந்தது.

சிறு இடைவெளியில் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். மறுபடியும் சிறு தேநீர் இடைவெளி. கடைசி நிகழ்வாக பழனி ஜோதியின் கானல் நதி பற்றி வாசிப்பனுபவம் இருந்தது. அருமையான உரை. இந்த நாவலைப் பற்றி வேறு ஒரு நிகழ்வில் நாங்கள் பேசி விவாதித்து இருக்கிறோம். ஒவ்வொரு உரைக்குப் பின்பும் நண்பர்களின் வாசிப்பு அனுபவ பகிர்தலும், உங்கள் விளக்கமும் சேர்ந்து நாங்கள் இந்த இரண்டு நாள் முகாமில் நாங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டது, கலை, இலக்கியத்தில் நாங்கள்  அடுத்த நிலைக்கு உயர மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் நல்லூழ்.

இரவு உணவுக்குப்பின், எங்களுக்காக சிறு வெளிச்ச பின்னணியில் நடந்த பேய்க் கதைகள் மறக்க முடியாத தனி அனுபவம்.

முகாமில் இருந்து எல்லோரும் கிளம்பும் முந்தைய நாள் இரவும், ஒரு மணி வரை உங்களுடன் கலந்துரையாடல் இருந்தது.

மே 15 ஞாயிறு அன்று காலை உணவு முடிந்தவுடன், சிற்றுண்டிக்கான உணவு மிஞ்சி இருந்தது. அடுத்த தடவை காலை சிற்றுண்டிக்கு உணவு திட்டமிடுவதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரில் கிளம்பிச் செல்லும் நண்பர்களுக்கு மிஞ்சியிருந்த உணவுப் பொருட்களை பிரித்துக் கொடுத்து விட்டோம்..

மூன்று நாட்களும் பழனி ஜோதி மனைவி மகேஸ்வரி, ராதா, சிஜோ, செந்தில், தாமு, பிரகாசம்,  வாஷிங்டன் டிசி நண்பர்கள் நிர்மல், ரவி, வேல்முருகன், ஸ்வர்ணா, விஜய் மற்றும் பல நண்பர்களின் உதவியால் உணவக அறையில் எளிதாக ஏற்பாடுகளை, சுத்தம் செய்யும் வேலைகளை சமாளிக்க முடிந்தது.

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக எங்கள் அறிவுப் பசிக்கு சிறு தீனியாக உங்களுடன் இந்த இரண்டு நாள் சந்திப்பு எங்களுக்கு முழு மன நிறைவாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நிறைவு கொள்கிறோம். இந்த இலக்கிய முகாம் வட கரோலினா மாநிலத்தில் பூனில் ஒவ்வொரு வருடமும் தொடரும் என்று நம்புகிறேன்.

என்றும் அன்புடன்

முத்து காளிமுத்து

முந்தைய கட்டுரைஅல்லல் அற்ற வாழ்க்கைகள்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா- கடிதம்