பசுஞ்சோலை- கடிதம்

எஞ்சிய பசுஞ்சோலை

அன்புள்ள ஜெ,

கதையை முன்நகர்த்திச் செல்லும் வேலையை சிறப்பாகச் செய்கிறது பாடல். சிம்புவின் குரலும், ரக்ஷிதாவின் குரலும் இனிமையாய் ஒலிக்கிறது. என்ன, ‘வேணும்’ என்பதை ‘வேனும்’ என்று உச்சரிக்கிறார் சிம்பு. இதாவது ‘தேரிக்காட்டுக்காரனுக்கு இம்புட்டுதான்யா வரும்’, ‘அந்தக் கேரக்டருக்காக மாற்றிப்பாடினார்’  என்று சமாளித்துக்கொள்ளலாம்.     சென்னைத் தொலைக்காட்சியில் ஜெனி∴பர் சந்திரன் என்றொருவர் செய்தி வாசிக்கிறார். ‘ல’ வரவேண்டிய இடங்களில் ‘ள’  (சாளைப்பணி, சோளையாறு) ‘ன’ வரவேண்டிய இடங்களில் ‘ண'(பணிக்காலம் – வாணிலை அறிக்கை, மணநோய் மருத்துவர்) என்று தப்பாமல் தப்புவார். எதற்கு வம்பு? விஷயத்துக்கு வருகிறேன்.

இந்தப்பாடலைக் கேட்டபோது முதலில் நான் கவனித்தது அதன் ஒலியின் தரம். இசையின் பருவடிவைக் கண்டுவிடலாம் போல ஒரு துல்லியம்.  ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாளப் பட இசையமைப்பாளர். குறைந்த படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் பல படங்களுக்கு இசை நடத்துனராகப் பணி புரிந்தவர். இசை விமர்சகர் ஷாஜி ‘அந்த நாட்களிலேயே தரமான ஒலிப்பதிவுக் கருவிக்காக சிங்கப்பூர் வரை சென்றிருக்கிறார் ஆர்.கே.சேகர்’ என்று கூறுகிறார். இசை என்கிற ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியின் தரம் குறித்த ஆர்வம், பார்வை ரகுமானுக்கு அவர் தந்தையிடமிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.

இளையராஜா இசையமைத்த ‘நண்டு’ படத்தில் இடம்பெற்ற ஒரு இந்திப்பாடல் ‘கைஸே கஹூன்’. தரமான ஒலியமைப்பு அமைந்திருந்தால் இந்தப்பாடல் அடைந்திருக்கவேண்டிய இடமே வேறு என்று இதைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். 1984 வரை இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்களுக்கு இதே போல தரக்குறைவான ஒலி அமைப்பே கிடைத்தது. இத்தனைக்கும் ‘ஸ்டீரியோபோனிக்’ இசையை ‘ப்ரியா’ படத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியதே இளையராஜாதான்.

https://www.youtube.com/watch?v=l2pnP8jSVRI

ஒப்பு நோக்க பழைய கறுப்புவெள்ளைப் படங்களின் பாடல்களின் ஒலித்தரம் ஆச்சரியப்படுத்துகிறது.

நெஞ்சில் ஓர் ஆலயம் – ‘எங்கிருந்தாலும் வாழ்க’

https://www.youtube.com/watch?v=HI0oQHsNy7k 

இளையராஜாவின் சிறந்த இசையொலியின் காலகட்டம் என்பது அவருடன் ஒலிப்பொறியியலாளர் எம்மி பணியாற்றிய (1984-1988) காலகட்டம்தான் என்கிறார் ஷாஜி. ராஜாவின் தனித்துவமான பேஸ் கிட்டார் இசையின் அழகுகளை வெகுசிறப்பாக வெளிப்படுத்தியது எம்மியின் ஒலிப்பதிவு. இன்றைக்கும் இளையராஜாவை அடுத்த தலைமுறை நினைவுகூரும் பாடல்கள் எம்மியின் கைவண்ணமே. ஏ.ஆர்.ரகுமானின் முதல் ஒலிப்பதிவுக் கூடமான பஞ்சத்தன் ஸ்டூடியோவை வடிவமைத்தவர் எம்மியே. அதன்பின்னர் ஸ்ரீதருடன் பணியாற்றினார் ரகுமான்.

அதுவரை திரையிசை என்றாலே இளையராஜாதான் என்றிருந்ததை மாற்றிய அந்த ஒலித்தரம் என்றால் என்ன? ஷாஜியின் வார்த்தைகளில் “அதைக் காதுகளால் உணரத்தான் முடியும். வார்த்தைகளில் விளக்க முயன்றால் தோராயமாக இப்படிச் சொல்லலாம். இயற்கையில் உள்ளதுபோல் இயல்பானதாக இருக்கவேண்டும். அதீத வண்ணங்கள் எதுவும் சேரக்கூடாது. அது ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கவேண்டும். இசைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் வேறு வேறாகப் பிரிந்து நம் காதுகளில் விழவேண்டும். ஒலியின் அலைவரிசைகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் பல அடுக்குகளில் பயணிக்கவேண்டும். துல்லியமான அவ்வொலியில் தெளிவு, துலக்கம், நுணுக்கம் ரசிக்கவைக்கும் தன்மை போன்றவை இருக்கவேண்டும்” இவையெல்லாமே இந்தப்பாடலில் உணரமுடிகின்றது.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்J

முந்தைய கட்டுரைஅஞ்சலி: தெணியான்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவம்,சூஃபி- கடிதம்