உள்மெய்யின் ஒளியில்

முன்னர் ஒரு உரையாடலில் சமணத்தில் இடம்பெறும் வராகர் படிமை குறித்து பேசப்போக, இந்துத்துவர்கள் கொதித்து எழுந்தனர். வராகர் இந்து மதத்தின், வேதப் பண்பாட்டின் சொத்து. அதை எப்படி சமண மதத்துடன் இணைத்து பேசலாம் என்று கூச்சலும் ஆர்ப்பாட்டமும்  நிகழ்ந்தது.

உண்மையில் உலகில் எங்குமே எந்த பண்டைய மதத்துக்குமே இல்லாத வண்ணம், பாரதத்தில் மட்டும் துவங்கிய காலம் தொட்டு மூவாயிரம் வருடங்களாக இன்றுவரை அறுபடாமல் இந்துப் பண்பாடு தழைத்திருக்க முக்கிய காரணி வேதப்பண்பாடு. பிரம்மம் எனும் கருதுகோள் வேதப்பண்பாடு பாரத நிலத்துக்கும் உலகுக்கும் அளித்த பெரும் கொடை. அதே சமயம் இந்திய மதப்பண்பாட்டுக்கான தெய்வங்கள் தொன்மங்கள் புராணங்கள் உள்ளிட்ட கச்சாவான எல்லா அடிப்படைகளும் வேதப் பண்பாட்டுக்கு மட்டுமே சொந்தம், பௌத்தம் சமணம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மதங்கள் எல்லாம் இதிலிருந்தே பலவற்றையும் எடுத்துக்கொண்டது என்று சொல்வது அறியாமை.  (வேதங்கள் சார்ந்த எல்லாமே மிகப் பின்னர் குப்தர் காலத்தில் உருவாகி நிலை பெற்ற ஒன்றுமட்டுமே என்று வாதிடும் வலுவான எதிர்தரப்பும் இங்கே உண்டு)

உதாரணத்துக்கு, 30, 000 வருடங்களுக்கு முன்பு மம்மோத் யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆளரி சிற்பம் ஒன்று ஜெர்மனி குகையில் கண்டுபிடிக்க பட்டது. அது குறித்து அதன் தொடர்ச்சி வழியே  பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏதேனும் அறிய வேண்டும் எனில் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் பாரதம். இந்துப் பண்பாட்டில் நரசிம்ம மூர்த்தத்தில் அதன் தொடர்ச்சியைக் காணலாம்.

12 000 வருடத்துக்கு முன்பு எழுந்த பேராலயம் துருக்கியின் கொபக்லீ டேபே, அதன் 12 ஆவது தூணில் புடைப்பு சிற்பமாக வராகம். அதன் தலை மேலே துல்லிய வட்டக் குழி ( அதை விண் மீன் மண்டல தொகுதியுடன் இணைத்து கருதுகோளை உருவாக்க முயன்று வருகிறார்கள் மேலை சிந்தனையாளர்கள்) அதற்கு மேலே அன்னம் போல அல்லது வினோத மிருகம் போலும் ஐந்து  (பஞ்ச பூதம்?). இத்தொன்மத்தின் தொடர்ச்சி தேவை எனில் மிக எளிதாக இங்கே பாரதத்தில் கஜுராஹோ விலும், பூவராஹர் படிமத்திலும் புராணத்திலும் அதை கண்டடையலாம்.  வேதப்பண்பாட்டின் விளை கனியான படிமைகளை 30 000 வருடம் முன்பு ஜெர்மனியிலும் 12000 வருடம் முன்பு துருக்கியிலும் உள்ள மதத்தினர் எடுத்து செல்லவும் இல்லை. அங்கே திகழ்ந்தவை (பூர்வ) வேதப்பண்பாடும் இல்லை.

உண்மையில் இவை யாவும் ஒற்றை மானுட ஆழுள்ளத்தத்தின் சொத்து.இவை வேதப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சொத்தும் அல்ல, இவை வேதப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமே அமைந்த சுயம்பு வும் அல்ல. இந்து மதத்துக்குள் தெய்வங்களும் புராணங்களும் பரஸ்பரம் வெவ்வேறு மார்க்கங்களின் உட்செறிக்கும் நடவடிக்கையின் பொருட்டு இடம் பெயர்வது சகஜமாக இருந்திருக்கிறது. ஜைனம் ராமாயணத்தை உட்செறிக்க முயன்றிருக்கிறது. வைணவம் புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் என்றாக்கி உட்செறிக்க முயன்றிருக்கிறது. இப்படிப் பற்பல உண்டு.

சொந்தப் பற்றுக்களை விடுத்து,அறிவார்த்தமாகஇந்த அடிப்படைப் புரிதலின் பின்புலத்தில் வைத்து அயோத்திதாச பண்டிதரின் பௌத்தம் குறித்த எழுத்துக்களை அணுகினால் ‘இன்றைய காலத்துக்கான’  பண்பாட்டு உரையாடலின் புதிய திசைவழிகளை திறப்பவையாக அவை அமைவதைக் காண முடியும். அயோத்திதாசர் அவர்களைப் பயிலுவதில் உள்ள இடர்களை  அயோத்திதாசர் முதற் சிந்தனையாளர் நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறார் ஜெயமோகன். அத்தகு இடர்களைக் கடந்து அயோத்திதாசர் அவர்களின் சிந்தனை முறைமையைக் கொண்டு அதன் வழியே கிடைக்கும் பண்பாட்டுப் புரிதல்களை அறிவுத் தரப்பின் உரையாடலுக்கு கொண்டு வந்ததில் பேராசிரியர் தர்மராஜன் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அவரது நீட்சியும் தொடர்ச்சியுமான ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அயோத்திதாசர் நோக்கிலான பண்பாட்டு விவாத நூலே நீலம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் _ வைத்தியர் அயோத்திதாசர் _ எனும் நூல்.

பொது வாசகர்கள் அயோதிதாசர் சிந்தனைகளை அறிமுகம் கொள்வதற்கு முன்பு அவர்கள் முன் தடை என எழுவது அயோதிதாசரின் பூர்வ பௌத்தம் எனும் கருத்துருவாக்கம் அது  வரலாற்றுப் பார்வை யில் முற்றிலும் பிழை என்ற எதிர் தரப்பாரின் வாதம். இந்த வாதத்தைக் கடந்து அயோதிதாசரை அணுக அவரது காலப் பின்புலத்தில் வைத்து இன்றைய எதிர் தரப்பின் வாதங்களை மதிப்பிட வேண்டும்.

அவரது காலத்தில் உலக அளவில் எல்லா நிலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இனி கண்டுபிடிக்க நிலங்கள் இல்லை எனும் நிலையில் திபெத்திய ஷம்பாலா போன்ற ‘மறை நிலங்கள்’ உருவாகத் துவங்கிவிட்ட காலம்.உலக அளவில் பண்பாட்டு மானுடவியல் எனும் துறையே அப்போதுதான் முளை விட்டு தன்னைத் திரட்டிக்கொள்ளத் துவங்கி இருந்த காலம். இந்தியாவில் தொடர் பஞ்சங்களால் அறிவுத்துறைப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்த காலம். ஆல்காட் போன்றவர்களால் பௌத்தம் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலம். 1870 களில் சான்றுகள் கிடைத்தும் தொடர் ஆய்வுகள் வழியாக  1915 இல் ராய்சூர் கல்வெட்டு வழியே அப்படி ஒரு பௌத்த மன்னன் அசோகன் எனும் பெயரில் இங்கே இருந்தான் என்று ஐயம் தீர்ந்து உறுதி பெற்ற காலம்.  (Hultzsch) ஹெல்ஸ்ச் எனும் வெளிநாட்டவர்  (அசோகரை ‘கண்டுபிடித்த’ வரலாற்றில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு) வழியே  1908 இல் பெரிய கோயிலை காட்டியவர் ராஜராஜ சோழன் எனும் மன்னன் என்று முதன் முதலாக தமிழ் நிலம் ‘தெரிந்து’ கொண்ட காலம். இந்தப் பின்புலத்தில்தான் அயோத்திதாசரின் பௌத்தம் சார்ந்த மாற்று புராண மாற்று உரை செயல்பாடுகள் துவங்குகிறது. ஆகவே இந்த இடைவெளி அதற்கான பலவீனம் எல்லாம் அவரிடம் தொழிற்படுவது நியாயமே.

தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய கல் மேல் நடந்த காலம் எனும் நூலில், தஞ்சை பெரிய கோயிலின் பௌத்த சிற்பங்கள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை உண்டு. மூன்று புடைப்பு சிற்ப வரிசை குறித்த கட்டுரை. முதல் சிற்பத்தில் பௌத்த சைன்யம் முன் புத்தர் நிற்கிறார். இரண்டாம் சிற்பத்தில் புத்தர் வணங்கி வழியனுப்பி வைக்க படுகிறார். மூன்றாம் சிற்பத்தில் புத்தர் போன இடத்தில் வானிலிருந்து தஞ்சை கோயில் விமானம் வந்து இறங்குகிறது. சிற்ப வரிசை சொல்லும் சேதி தெளிவாகவே இருக்கிறது. தமிழ் நூல்கள் எதிலும் இல்லாத இந்த சிற்ப வரிசை மீதான குறிப்பை 1975 இல் சுரேஷ் பிள்ளை என்பவர் எழுதிய நூல் ஒன்றில் கண்டடைந்து, சென்று அந்த சிற்பங்களை பாஸ்கரன் பார்த்ததின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரை அது. இந்தப் பண்பாட்டு அசைவின் பின்புலம்தான் அயோத்திதாசர் தனது அத்தனை  யத்தனங்கள் வழியாகவும் சுட்டிக்காட்டுவது.

மேற்கண்ட சிற்ப வரிசையில், இன்றைய தஞ்சைப் பெரிய கோயில் என்பதை புற மெய் என்று கொண்டால், அதன் பூர்வதில் உள்ள புத்தரை உள் மெய் என கண்டு கொள்ள முடியும். அயோதிதாசரின் இந்த சிந்தனை முறையின்படி சென்று, ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டும் இன்றைய புற மெய்யான தமிழ்ப் பண்பாட்டின்  சில உள் மெய் நிலைகள் குறித்த நூலே _ வைத்தியர் அயோத்திதாசர் _ நூல்.

நூல் வழியே ஸ்டாலின் ராஜாங்கம் திறக்கும் உரையாடல் புள்ளிகளில் என்னை மிகவும் ஈர்த்தது அகத்தியர் தொன்மம் குறித்தது.  அ.கா.பெருமாள் அவர்களின் _ பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ _ நூலில் உள்ள அகத்தியர் குறித்த கட்டுரை வழியே, அகத்திய முனி எனும் பெயர் முதலில் வருவது மணிமேகலையில், அவர் வாழ்வது பொதிகை மலையில், காவிரி தாமிரபரணி இரண்டு நதிகளையும் தமிழ் நிலத்துக்கு கொண்டு வந்தவர், வைத்தியம் அறிந்தவர், பாண்டிய அரசர்களுடனும், சைவத்துடனும் இணைத்து அறியப்படுபவர், அகத்தியர் எனும் பெயரில் பலர் உண்டு என அகத்தியர் தொன்மத்தை பொதுவாக வரையறை செய்து கொண்டு, ராஜாங்கம் அவர்களின் அகத்தியரை அணுகினால் அவர் சுட்டும் உள் மெய் சுவாரஸ்யம் கூடியது.

சங்க இலக்கிய வரிசையில் எங்குமே இல்லாத அகத்தியர் முதன் முதலில் வருவது மணிமேகலையில். மணிமேகலை ஒரு பௌத்த காப்பியம். வீர சோழியம் நூலில் அகத்தியர் எவர் வசம் தமிழ் பயின்றார் எனும் குறிப்பை கண்டால் அவர் அவலோகிதர். புத்தரின் தோற்றம். பொதிகை மலை மூலிகைகளுடன் தொடர்பு கொண்டது. அகத்தியர் வைத்தியர். மிகப்பின்னர் நிகழ்ந்த சைவ எழுச்சியில் பற்பல கதைகள் வழியே சைவத்துக்குள் உட்செறிக்கப்பட்ட அகத்தியர் பண்டைய தமிழ் நிலத்தின் பௌத்த தொன்மம் ஆக இருக்கவே வாய்ப்புகள் மிகுதி. இன்றும் அகத்தியர் பெயரில் நிலவும் வைத்திய ஜோதிட நிலையங்களைக் காணலாம்.

இங்கே சுவாரஸ்யமான மற்றொரு இடையீடு. சித்த வைத்தியத்தில் பல முறைகளில் ஒன்று நோயாளிகள் ஜாதகத்தைக் கணிப்பது. எந்த நோய் எனினும் அந்த நோய் வினைப்பயனால் வருவது. அந்த வினைப்பயனை மாற்றும் வைத்தியருக்கு அந்த வினைப் பயன் வந்து விடாதிருக்க சில பரிகாரங்களை குறிப்பிட்ட மந்திரம் ஓதி, நோயாளி ஜாதகரோ அவரது ரத்த உறவோ செய்ய வேண்டும் அதன் பிறகே வைத்தியம் துவங்கும். அயோத்திதாசரின் ஆசிரியர் (அவர் பெயரே அயோத்திதாசர் அவரது பெயரையே காத்தவராயன் ஆன தனக்கு சூட்டிக் கொண்டார்) இந்த முறைமை கொண்டவர் என்பதற்கு இந்த நூலில் குறிப்புகள் உள்ளது.

அதே போல தமிழ் என்பதும் இறையனார் முன்நின்ற   தமிழ்ச் சங்கம் என்பதில் துவங்கி தமிழ் நிலத்தின் தமிழ் மொழி உருவாக்கத்தில் சமணத்தின் பங்கு முற்றிலும்  பின்னுக்கு தள்ளப்பட்டு சைவத்தின் மேலாண்மைக்குள் தமிழ் மொழியின் தோற்றுவாய் சென்ற நிலையைப் பேசுகிறது நூல். இங்கே சுவாரஸ்யமான மற்றொரு இடையீடு தென்னாடுடைய ‘தமிழ்’ ச் சைவத்தின் சாத்திரங்கள் எதற்கும் மூல மொழி தமிழ் இல்லை. சமஸ்க்ருதம்.

ராகுல சாங்கிருத்யன் திபெத் உள்ளே நுழையும்போது புத்த பிக்குவான அவரை நோக்கி நோயாளிகள் திரண்டு வந்தது முதல் தமிழ் நிலத்தின்  போதி தர்மர் சீனாவுக்கு மருந்து கொண்டு சென்றது வரை அன்று தொட்டு இன்று வரை வைத்தியம் பௌத்தர்கள்  வசமிருந்ததை (குறிப்பாக நாவிதர்) அசோகர் நாற்திசையும் வைத்தியம் கிடைக்க செய்த கல்வெட்டு துவங்கி, புத்தரின் வினய பிடகத்தை தொகுத்த நாவிதர் வரை பல்வேறு தரவுகள் வழியே பேசுகிறது நூல். கோயில் பண்பாட்டில் ஸ்ரீ முஷ்ணம், பழனி, இவையெல்லாம் நேரடியாகவே சித்த மருத்துவதுடன் தொடர்பு கொண்டவை. வைத்தீஸ்வரன் கோயில் முன்னர் வள்ளுவ பிரிவின் மேலாண்மை கொண்டிருந்தது என்கிறார் நூலாசிரியர். இங்கேயும் ஜோதிடம் முக்கிய கூறு.அதிலும் ஜோதிடத்தில்  ஒளஷத காண்டம் மட்டும் பார்க்க வருவோர் இன்றும் உண்டு. அந்த காண்டம் ஜாதகர் கொண்ட நோய்க்கான சித்த வைத்திய மருந்துகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது.

தரும சேனரின் (சமணத்தால் முடியாத) சூலை நோயை இந்த தலத்தின் ‘சக்தி’ வாய்ந்த சிவனே தீர்த்தார். மாணிக்கவாசகரை தேடி ஒரு அரசன் சில பௌத்த பிக்குகளுடனும் தனது ஊமை மகளுடனும் வருகிறார். மாணிக்கவாசகர் ஊமையைப் பேச வைக்கிறார்.  தமிழ்ச் சமண பௌத்த வைத்தியத் திறன் இன்மை சிவனின் சக்தியால் மீறப்பட்டு, சைவத்தின் மேலாதிக்கம் எழுவதன் சித்திரத்தை இக்கதைகளின் வழியே சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.

இந்த நூலை நோய்முடக்க சூழலில் எழுதியிருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். எத்தனையோ அலோபதி வாய்ப்புகள் இருக்க மக்கள் தன்னியல்பாக (அரசே அங்கீகரித்து விட்டது) கபசுர குடிநீர் போன்ற சித்த வைத்திய முறையை நோக்கி நகர அடியோட்டமாக இருப்பது எது எனும் வினா வழியே மீண்டும் ‘வைத்தியர்’ அயோதிதாசரை வந்தடைகிறார் ராஜாங்கம். நேரடியான பதில் இன்றைய மருத்துவ நிலை முற்றிலும் கைவிட்டு விட்ட நோயாளியின்பாலான அறம் மற்றும் கருணை என்பதே.

அயோத்திதாசர் இந்த இரண்டையும் சித்த வைத்தியத்தின் பின்புலத்தில் அதன் அடித்தளமான பௌத்தத்தின் பின்புலத்தில் இருந்து அறிந்தவர் கற்றவர். (அயோத்திதாசர் அவர் காலத்தில் முதல்தரமான வெற்றிகரமான வைத்தியர்) சித்த வைத்திய நூலைப் பயிலுவது ஒரு முறைமை. தவறான ஆட்கள் கையில் சேர்ந்துவிடாதிருக்க அவை பேசும் புற மெய் வேறு அந்த புற மெய்யின் இலக்கணத்துக்கு கீழே உள்ள உள் மெய் வேறு.அது வைத்திய மாணவருக்கு பிற வைத்தியர் மூலம் கையளிக்கப் படுவது. அப்படி வைத்தியம் கற்க, கொண்டு கூட்டியும் பிரித்தும் பொருள்கொள்ள அயோத்திதாசர் பயின்ற முறைமை கொண்டே திருக்குறள் போன்ற பலவற்றுக்கு அவர் உரை விளக்கம் செய்திருக்கிறார் என்கிறார் ராஜாங்கம். வைத்திய ஞானம் வழியாகவே நோயுற்ற உடல் முதல் நோயுற்ற சமூகம் வரை அனைத்தையும் (ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக) புரிந்து கொண்டு நோய் தணிக்கும் செயல் நோக்கி வைத்தியராகவே சிந்தித்தவர் அயோத்திதாசர் என்கிறார் ராஜாங்கம்.

நூலின் பிற்சேர்க்கைகளில் இரண்டு பகுதிகள் மிக முக்கியமானவை. ஒன்று அயோத்திதாசர் அவர் காலத்தில் தமிழ் நிலம் முழுவதையும் சூறையாடிய காலரா அம்மை பிளேக் போன்ற நோய்களுக்கு அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து தமிழன் பத்திரிக்கையில் இருந்து எடுத்து இணைக்கப்பட்டிருக்கும் பகுதிகள். இரண்டு ஆதி நாதர் எனும் சமண தொன்மத்துக்கும் தென்னாடுடைய சிவன் எனும் தொன்மத்துக்கும் அதன் கதைகளுக்கு இடையே உள்ள 18 ஒற்றுமைகள் குறித்த அட்டவணை.

தமிழ்ப்பண்பாட்டின் சுழிப்புகள் குறித்து காய்தல் உவத்தல் இன்றி அறிய விரும்பும் எவருக்குமான உரையாடல் புள்ளிகளை திறக்கும் மிகுந்த சுவாரஸ்யம் கூடிய நூல் இந்த _ வைத்தியர் அயோத்திதாசர் _ நூல்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமு.வ- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவில்லியம் மில்லர் – முதல்பொறி