அமெரிக்கா- கடிதம்

அமெரிக்காவில்

அன்புக்குரிய ஜெ,

“அமெரிக்காவில்” வாசித்தேன். தங்களை போன்றே நியூ யார்க் நகரமும், சுதந்திர தேவியும், பிராட்வே நாடகங்களும் எனக்கும் அணுக்கமானவையே. அந்தப் பெரும் மனிதத் திரளில், மானுடத்தில் திளைக்கும் க்ளிப்பைப் போல இன்ப அனுபவங்கள் எனக்கு மிகச் சிலவே.

இந்தக் கிளர்ச்சியை எல்லா பெருநகரங்களும் ஓரளவுக்கு அளிக்கின்றன. பதினேழு வருடங்கள் விருதுநகரில் வளர்ந்து விட்டு நாங்கள் சென்னைக்கு குடி பெயர்ந்த போது, என் அப்பா என் கையில் ஒரு வரைபடத்தையும், சில பேருந்து எண்களையும் கொடுத்து, கல்லூரிகளுக்குச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி வருவது, கடைகளுக்கு செல்வது போன்ற பணிகளுக்கு அனுப்பி வைப்பார். அந்த எண்ணற்ற மனிதத் திரளில் காலை முதல் மாலை வரை அலைந்து திரிவது அந்த வயதில் பேரானுபவமாக இருந்தது. எத்தனை விதமான மனிதர்கள், ஒலிகள், உணவுகள், காட்சிகள்! ஒரே வாரத்தில் நானும் ஜோதியில் ஐக்கியமாகி, 37G பஸ் ஏறி, “போரோஸ் ஒண்ணு!”  என்று சத்தம் போட்டு டிக்கெட் காசை நடத்துனருக்கு  கொடுத்தனுப்பி விட்டு, ஒரு முழு சென்னைவாசியாக உணர்ந்தேன். (போரோஸ் – Power House bus stop).

பத்து வருடங்கள் கழித்து, இதே போல் நியூ யார்க் நகரத்தில் திரிந்த போது, ஜனநாயகத்தின் ஊற்று முகத்தில் நின்று கொண்டு என்னை உலகக்குடிமகளாக உணர்தேன்.

ஸ்டீபன் சாண்ட்ஹைமின் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி பிராட்வே பித்து பிடித்து ஒரு ஐந்தாறு வருடங்கள் ஆகி இருக்கும். ஆனால் பிராட்வே செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ஒரு ஒரு வாரம் நியூ யார்க்கில் தங்கி தினத்துக்கு இரண்டு நாடகங்கள் என்று ஆசை தீர பார்த்து தீர்க்க வேண்டும் என்பது என் மகளுக்கும் எனக்கும் நீண்ட நாள் கனவு.

பதினொன்று வருடங்கள் அட்லாண்டா புறநகரில் வாழ்ந்து விட்டு, மூன்று வருடங்களுக்கு முன் கலிபோர்னியா குடி பெயர்ந்தோம். இப்போது, மானுடத்தின் இரத்தம் கசியும் விளிம்பில் நின்று கொண்டு, காலந்தோறும் நிலைத்து நிற்கும் விழுமியங்களை எதிர்த்து வினா எழுப்பும் இந்த சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி அணுக்கமாகிக்கொண்டிருக்கிறது. உலகின் அத்தனை மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து சேர்ந்தபடி இருக்கிறார்கள். என் மகளின் 25 குழந்தைகள் கொண்ட வகுப்பில், 13 நாடுகளில் பிறந்து வளர்ந்த பெற்றோர் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு செய்த பொது தெரிந்தது. எல்லோரும் கொண்டு வருவது ஒன்றை. ஏதோ ஒன்றைப் புதிதாக சமைத்துப் பார்த்து விட வேண்டும் என்கிற முனைப்பை. “சரி செய்து பார், உடைத்துப் போடு, பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்கிற சுதந்திரத்தை இவ்வூர் அளிக்கிறது (Knowledge for knowledge’s sake?). தன்பால் உறவில் என்ன தப்பிருக்கிறது, குடும்பம், திருமணம் என்கிற பத்தாம்பசலித்தனம் எல்லாம் எதற்கு, தெருவெங்கும் LSD வெள்ளமாக ஓடினால் என்னாகும், திருட்டு செய்பவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்பது நியாயம்தானா, போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கு டெண்டு போட்டுக் கொடுத்து, ஊசியும் இலவசமாகக் கொடுத்தால் என்ன, இணையத்திலேயே ஒரு புது நாடு உருவாக்க முடியுமா, என்று அன்றாடமும் பல பரிசோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த வளமான மண்ணில் பிறந்ததுதான் உலகையே ஆட்டிப் படைக்கும் சக்திகளாக கணினித்துறையும் அது சார்ந்த நிறுவனங்களும் பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றன.

இங்கு சலனமின்றி நிற்கும் மலைகள் மீது ஓயாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் பசிபிக் மாசமுத்திரத்தைப் போல மாற்றத்துக்கான ஒரு விசை சளைக்காமல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. உலகை அழிக்காவிடில் அந்த விசைதான், மானுடத்தை முன்நகர்த்திக் செல்லப் போகிறது, ஆம், வீட்டு வாசலில் யாரவது போதை மயக்கத்தில் படுத்திருக்கிறார்களா என்று பாத்து விட்டு, சைக்கிளை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு சொல்கிறேன், இந்த ஊர் அணுக்கமாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது.

சாரதா

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைபற்றுக பற்று விடற்கு- கடிதம்