அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி படித்துக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொருவரின் பதிவுகளும் சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள். “பிளாரென்ஸ் ஸ்வெயின்ஸ்” முதன் முதலில் காது கேளாதவர்களுக்கான பள்ளியை ஆரம்பித்தவர். என்னுடைய மாமியாரும் அவங்க தங்கையும் காது கேளாமலும் வாயும் பேச முடியாதவர்கள். இருவரையும் சென்னையில் இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் சேர்த்து 10வது வரை படிக்கச் செய்திருக்கிறார்கள். அதோடு கூடவே தையல் தொழிலும் கற்று இறக்கும் வரை அந்தத் தொழிலில் மேதைமையோடு இருந்தவர்கள். இன்னும் என் மாமியார் தைத்துக் கொடுத்த எம்பிராய்டரி வேலைப்பாடுள்ள ப்ளௌஸ் மற்றும் பிளைன் புடவையில் அவங்க வரைந்த பெயிண்டிங் இரண்டையும் பத்திரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டு. வீட்டில் எல்லாரிடமும் பிளாரென்ஸ் ஸ்வெயின்ஸ் பற்றி சொன்னேன்.
“குரங்கு குசலா” ராணியில் வரும். நான் எழுத்துக்கூட்டி படிக்ககற்றுக் கொள்ளும்போது பழைய ராணி எல்லாம் எடுத்து குரங்கு குசலா பக்கமாய் மடித்து வைத்து மெல்ல மெல்லமாய் படித்து, சரியாய் படித்தால் வரும் அந்த மகிழ்ச்சி எல்லாம் இப்ப நடந்தது மாதிரி ஞாபகம் வந்தது. அதே போல் கல்கண்டும். எங்க அப்பா எதை மறந்தாலும் கல்கண்டு, முத்தாரம் வாங்க மறக்க மாட்டாங்க. அதில் ஒரு முறை விலங்குகளின் குட்டிகளின் பெயர்கள் தூய தமிழில் இருந்தது. அடுத்த நாள் பரிட்சையில் புலியின் குட்டியின் பெயர் என்ன என்று கேட்ட கேள்விக்கு நான் புலிப்பறழ் என்று எழுதி இருந்தேன். அந்தக் கல்கண்டு கொண்டு போய் காட்டியதும்தான் டீச்சர் அதற்கு மார்க் போட்டாங்க. அப்பா இறந்து அவங்க போட்டோ மந்திரிச்சி வைத்த அன்று நாங்க அது முன்னாடி எப்போதும் அப்பா தனியா விளையாடும் சீட்டுக்கட்டும் கல்கண்டும் படத்திற்கு முன்னால் வைத்தோம். எல்லாம் பழைய ஞாபகங்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது சார்.
டெய்ஸி.