இஸ்லாமியரும் காங்கிரஸும்- கடிதம்

இஸ்லாமியரும் காங்கிரஸும்

அன்பின் ஜெ.

ஸ்ரீதர் பாலாவுக்கு தாங்கள் அளித்த பதிலான இஸ்லாமியரும் காங்கிரஸும்” படித்தேன். அக்கட்டுரையின் மையப் பேசுபொருள் “இந்துமதம் வெறுமொரு அரசியலியக்கமாக சிறுத்துவிடக்கூடாது” – இது மிக முக்கியமான செய்தி, மதம் வழியாக உருவான பாகிஸ்தான் இன்று அடைந்திருக்கும் நிலையும், இன்னுமொரு அண்டை நாடான இலங்கையில் பௌத்த மதமும், சிங்கள தேசிய பெரும்பான்மைவாதத்தை அரசியலில் கலக்கச் செய்து அங்குள்ள அரசியல்வாதிகள் அந்த நாட்டை கொண்டு சேர்த்திருக்கும் கதையும் நம் அனைவருக்குமான பாடம்.

அதேபோல “இஸ்லாமியர் காங்கிரஸ் நோக்கிச் செல்லவேண்டும்.” – “சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் இஸ்லாமியர்களை நோக்கி சென்றால் அது காங்கிரஸின் அழிவு. காங்கிரஸை நோக்கி இஸ்லாமியர் செல்லவேண்டும்” என்று தாங்கள் எழுதியிருந்தீர்கள்.

தமிழ்திசை இந்து நாளேட்டில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு கட்டுரையோடு இணைத்து அதை புரிந்துகொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் தளத்தில் சிவக்குமார் எழுதியிருந்த https://www.jeyamohan.in/110841/ கடிதமும் உடன் நினைவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில் India Today 02-05-22 Deepening divide (அகன்று விரியும் பிளவு) என்கிற அட்டைப்படக் கட்டுரைகளில் ஒன்று தாங்கள் கூறக்கூடிய “தேசிய முஸ்லீம்” என்கிற விஷயத்தை பேசுகிறது. இதில் தாங்கள் கூற வந்திருப்பது முஸ்லீம்களை உள்ளடக்கிய அம்சம். ஆனால் இந்துத்வா இந்துமதத்தையும், தேசியத்தையும் ஒரே தரப்பாக்கி பிற அனைத்தையும் எதிர்முனைக்கு துரத்திவிடுகிறது என்பதே. அது exclusive-வாக திரிக்கிறது. முஸ்லிம்கள் போன்ற மதச் சிறுபான்மை மட்டுமல்ல, மொழிவழி, நிலவழி, பொருளாதார வேறுபாடுகளைக் கணக்கிலெடுக்காத குறுகிய நோக்குடையுது.

இதே சிந்தனையில் இருந்தபோது சென்னையில் இருக்கும் சிந்தி மொழி இந்துக்களின் சிறியதொரு ஆன்மிக அமைப்பான சூஃபிதர் செயல்பாட்டின் பொருத்தப்பாடு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மதக் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்புக்காக முழுமையாக ஒரு மாதம் அன்னதான ஏற்பாட்டை இவர்கள் பொறுப்பேற்பது அசாதாரணமாக எனக்குப்படுகிறது.

அதுவும் கணக்கொன்று போட்டு பணத்தை அறக்கொடை செய்துவிட்டு ஒதுங்கிச் செல்வது வழக்கமான நடைமுறையே. அதைவிட பெரிய கஷ்டம் அதை நேரிடையாக வினியோகிப்பது, அதற்காக நாள்தோன்றும் 75-100 பேர்கள் மாலை 5-7 மணியளவில் குழுமி உடலுழைப்பைத் தருவது முன்னுதாரணமற்ற பெருஞ்சேவையாகும். இந்த நூறு பேர்களின் பின்னணி வணிக சமூகத்திலிருந்து எழுவதையும் நினைவில் கொள்வது அவசியம். தொழில், குடும்பம் என்பதை ஒதுக்கி தணியாத ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது நாற்பதாண்டுகளாக இன்று வரை நீடித்திருக்க வாய்ப்புள்ளது.

இங்கு நோன்பு துறப்புக்காக என்னருகில் அமர்ந்திருந்தவரிடம் இதை எப்படி உணர்கிறீர்களென்று கேட்டேன். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, இஸ்லாமிய மரபில் மறுபிறப்பு ஏற்படும்போது அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் இருப்பர், நல்லவர், கெட்டவர் என்கிற கணக்கெடுப்பு நடக்கும், அந்த நேரத்தை மாபெரும் இறுதித் தீர்ப்பு நாள் என்றழைப்பர், அப்பொழுது கடுங்கோடை நிலவும், அடங்காத தாகமெடுக்கும். அப்பொழுது நல்லவர்களுக்கு குளிர்ந்த நீர் கொடுக்கப்படும், அவ்வாறான ஒரு காட்சியை இந்த 14 மணிநேர உண்ணாநோன்புக்குப் பிறகு இந்த சிந்தி நண்பர்கள் அளித்திருக்கும் இந்த உணவும், குளிர்ந்த நீரும் என் தாகத்தை தணித்ததைப் போல, பசியாற்றியதைப் போல இவர்கள் நம்பும் புனர்ஜென்மத்தில் நல்லருள் கிடைக்கட்டும், இந்த வாழ்வில் இவர்களின் வணிகத்தில், தொழிலில், வேலையில் வளர்ச்சி உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தார்.

https://www.hindutamil.in/news/opinion/columns/793180-triplicane-wallajah-mosque.html
ஏதோ நாளிதழ் ஒன்றில் வந்தது, Today’s newspaper tomorrow’s waste paper என்றாகிவிடாமல் தங்களின் தளம் முக்கியமான பண்பாட்டு ஆவணக்கிடங்கு போல பெருக்கெடுத்திருப்பதால் இங்கு பதிவாவது அவசியம் என்று கருதுகிறேன்.

காங்கிரஸ் – இஸ்லாமியர் விஷயத்தில் தாங்கள் சொன்னதைப் போல சிந்தி இன இந்துக்கள் முன்கையெடுத்துள்ளனர். அந்த அறக்கொடையை ஏற்று மனமகிழும் முஸ்லிம்களும் – சொல்லாமல் ஒரு செய்தியை மறைமுகமாக தருகின்றனர். அன்பு பெருகவும், வெறுப்பு மறையவும் இது அவசியம்.
நன்றி,

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரைஅமெரிக்கா, கடிதம்
அடுத்த கட்டுரைதினத்தந்தி- நம் அன்றாட மர்மங்களில் ஒன்று