இனிய ஜெயம்
கண் மருத்துவத்துக்கான விடுப்பு முடிந்த நாளில் இருந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் உத்ராகண்ட் சென்றேன். ரிஷிகேஷ் ஹரித்வார் என கங்கை கரை நெடுக விதவிதமான முகங்களை கண்டு திளைத்தேன். எத்தனை வண்ண பேதம் கொண்ட துறவியர் முகங்கள். விஷ்ணுபுற சோனா நதிக்கரையில் ஸ்ரீ பாத திருவிழா நாளொன்றில் நிற்கிறேன் எனும் உள மயக்கு.
வந்த பிறகும் வித விதமான திருவிழாகளை தேடி ஓடிக்கொண்டும் அது குறித்த காணொளிகளை தேடித் தேடி பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். அந்த வரிசையில் you tube இல் இந்த அர்த் கும்ப் எனும் காணொளி காணக் கிடைத்தது.
இயக்குனர் சனல்குமார் சசிதரன் 2019 இல் தான் சென்று வந்த கும்பமேளா குறித்து எடுத்து, தனது சானலில் இது ஆவணப்படம் அல்ல எனும் குறிப்புடன் அவர் வெளியிட்டிருக்கும் காணொளி.
தின்பண்டங்கள் விற்கும் வியாபாரி, கிளி ஜோசியம் பார்க்கும் எளியவர்கள், கயிற்றில் கழைக்கூத்து நடத்தும் மகளை கிழே நின்று பார்க்கும் தாய், சாலை அமைக்கும், பந்தல் வேயும் பணியாளர்கள், வந்து கொண்டே இருக்கும் கிராமத்து மனிதர்கள், பிரம்மாண்ட கூடாரங்கள், கூடாரம் நிறைந்து விரிக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், ஒலி பெருக்கி கூவல்கள், வண்ண தொலைக்காட்சிகளில் பிரதமரின் ஆதித்யநாத்தின் வித விதமான போஸ்கள், உபந்யாஸங்கள், குழந்தைகள், யாசகர்கள், வெளிநாட்டினர், மொபைல் பார்த்துக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் நிர்வாணி, ஆணுறுப்பில் பல கிலோ எடை கொண்ட எதையோ தொங்க விட்டபடி நிற்கும் நாகா பாபா, யாகத் தீ சுற்றி அமந்திருக்கும் நூற்றுக்கணக்கான கெளபீனதாரிகள், லட்சங்களில் வந்து கொண்டே இருக்கும் பக்தர்கள், என எத்தனை எத்தனை வித்யாசம் கூடிய முகங்கள். ஒவ்வொரு முகத்தையும் ஒரு துளி எனக் கொண்டால், அதன் கடலான கும்பமேளா குறித்து பரவசமூட்டும் இந்த காட்சித் தொகுப்பு, பாலத்தில் நடந்துபோகும் லட்சக் கணக்கான பக்தர்களின் தலைக்கு மேலே பறப்பது போலும் காட்சி மயக்கம் தந்து கடந்து போகும் தொடர்வண்டி காட்சியுடன் நிறைகிறது.
சனல் குமார் சசிதரன் படங்கள் ( ஒழிவு திவசத்தே களி, s. துர்கா போன்ற) சிலவற்றை பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான படங்கள் என்பதை தாண்டி அவற்றை கலை என்று கொண்டாடும் அளவு அவை முக்கியம் கொண்டவை இல்லை. குறிப்பாக கலை தனது இயல்பில் கொண்டிருக்கும் மீண்டும் மீண்டும் அதில் வந்து தோய வைக்கும் தன்மை அவரது படங்களில் கிடையாது. இவற்றில் இருந்து மாறாக இந்த அர்த் கும்ப் படம் அதன் காட்சி வெட்டுகள் இயக்குனரின் தலையீடு இன்றி நிகழும் அதில் உள்ள :நிகழ் உண்மை’ காரணமாக மிக எளிதாக கலைப் பெறுமதியை அடைந்து விடுகிறது.
நான் முன்னர் கண்டு இதே அளவு பரவசத்தை அளித்த படம் ஹெர்ஸாக் இயக்கிய காலச் சக்கரம் எனும் ஆவணம். உலக சமாதானத்தின் பொருட்டு வஜ்ராயன பௌத்த மண்டலம் வரைந்து சடங்குகள் நிகழ்த்தும் பூஜை செய்ய தலாய் லாமா பெரியதொரு மாநாடு ஒன்றை கயாவில் ஒருங்கமைவு செய்கிறார். அந்த விழா குறித்து ஹெர்ஸாக் எடுத்த ஆவணமே அப்படம். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளனுக்கு பரவசத்தை அள்ளித்தரும் படம்.
இவ்விரு படங்களும் உங்கள் பார்வைக்காக.