கோதுமை ஏற்றுமதிக்குத் தடை- கடிதம்

அன்புள்ள ஜெ,

சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு சோதனைக்காக நின்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த புதிய இளைஞர் அடையாள அட்டையை சோதிக்கும் போது, ஏமனைச் சேர்ந்தவர்கள் உன்னுடன் வேலை செய்கிறார்களா என்று சிறிது ஆங்கிலத்திலும் நிறைய அரபியில் கேட்டார். ஆம் என்றேன்.

நல்ல “knowledge” உள்ளவர்களா, இது போன்ற எரிவாயு நிறுவனத்திலும் வேலை செய்கிறார்களா என்ற அவரது முகம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தது. வழக்கமாக அதிகார இறுக்கத்தில் கடந்து செல்லும் இடம் அது. முன்பு பாகிஸ்தானியர்கள் ஆளுகையில் இருந்த, சற்று பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதி.

இன்றைய சூழலில் கீழ்நிலை பாதுகாப்பு பணிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளிலிலிருந்து குறைந்த சம்பளத்தில் ஏராளமானோர் சேர்கின்றனர். இதற்கு முன்பு அது நேபாளியர்களின், மலையாளிகளின் வசமிருந்தது. உடலுழைப்பை நம்பி இருக்கும் தொழில்களில் அதிகாரம் எளிதாக மாற்றிக் கொள்கிறது. குறைந்த ஊதியத்திற்கு உழைப்பவர்கள் உலகத்தின் ஏதாவது பகுதியிலிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மாற்றங்களில் எந்தக் கருணையும் பணி உறுதியும் அவர்களுக்கு இல்லை.

இன்று அறிவு உழைப்பு தேவைப்படும் இடங்களில் இந்தியர்களின் தேவை இருக்கிறது. அத்தகைய இடங்களில் உயர் பதவிகள் தவிர்த்து, இடைநிலை, கீழ் நிலை அடுக்குகளில் இந்தியர்கள் ஏராளமானோர் கோலோச்சுகின்றனர். (அதிகாரம் நம்மவர்களிடம் இருக்கும் சில இடங்களில், அது கீழே பணியிலிருக்கும் இந்தியர்களின் மீது மட்டும் என்ற பொது விதி பயன்பாட்டில் செயல்படுகிறது). இந்நிலை இன்னும் குறைந்த ஊதியத்தில் வேறொருவர் வரும்வரை தொடரக்கூடும்.

***

சிலகாலமாக உக்ரைனில் நடக்கும் போர்ச் செய்திகளை அடுத்து இரண்டு செய்திகள் இங்கு அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துவிட்டார்கள். என்பதும் இந்தோனேசியா பனை எண்ணெய்  ஏற்றுமதியை தடை செய்து விட்டார்கள் என்பதும்.

இங்குள்ள செய்தி நிறுவனங்களும், மேற்கத்திய செய்தி நிறுவனங்களும் அது சார்ந்தும், அந்த ஏற்றுமதித் தடையால் ஏற்பட்ட அதிகப்படியான உற்பத்தியால் மேற்கண்ட நாடுகளில் இருக்கும் விவசாயிகள் விலை குறைந்து வருமானம் குறைந்து விட்டதாகவும் பலப்பல பக்கங்களாகக் கண்ணீர் விட்டு எழுத ஆரம்பித்து விட்டன.

சில நாட்களாக, நம் ஊரிலும் செய்தி நிறுவனங்கள் குரல் எழும்ப ஆரம்பித்துவிட்டது. வெளிநாட்டு செய்திகளைப் பிரதியெடுத்து அவர்களின் ஆராய்ச்சி முடிவினை வெளியிட ஆரம்பிப்பார்கள். அவர்களின் நன்மதிப்பைப் பெற முந்தய உலகப் போர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தது போல், கப்பல் கப்பலாக அனுப்பிவைக்க அவர்கள் பரிந்துரைப்பார்கள்.

https://www.aljazeera.com/economy/2022/5/16/indonesian-farmers-decry-palm-oil-export-ban-as-prices-plummet

https://www.aljazeera.com/economy/2022/5/16/indonesian-farmers-decry-palm-oil-export-ban-as-prices-plummet

https://www.aljazeera.com/news/2022/5/14/india-bans-wheat-exports-cites-food-security-and-soaring-prices

இன்றைய சூழல் போலவே இதற்கு முன்பு, உலகப் போர் நடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தானியங்கள் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் உள்நாட்டில் கோடி கோடியாக வங்கத்திலும் தென்னிந்தியாவிலும் மனிதர்கள் செத்து விழுந்திருக்கிறார்கள். அள்ளி அள்ளிப் பிணங்களைப் புதைத்திருக்கிறார்கள்.

அன்றும், இவர்கள் சொல்வது போல நல்ல விலை கொடுத்தே தானியங்களை வெளியே வாங்கிச் சென்றிருப்பார்கள். அன்றும் பசியால் செத்து விழுந்த ஏழைகள் போரினால் விலை கூடிய தானியத்தை வாங்க வழியில்லாதவர்களாக இருந்திருப்பார்கள்.

எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலில் இதற்கான குறிப்பு வருகிறது. நீங்கள் உங்களது பல உரைகளில் குரல் கம்ம குறிப்பிட்டிருக்கிறீர்கள். உப்புவேலி மற்றும் வெள்ளை யானை போன்ற இலக்கியங்களில் அது பதிவாகியுள்ளது.

இன்றைக்கும் இந்தியச் சூழலில் தானியத்தின் மீது அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பல ஆயிரம் வயிறுகள் காலியாக சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

***

உலக அளவில் உணவுப் பொருள் உற்பத்தி குறைய ஆரம்பித்துவிட்டது. உணவு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாடு இன்று தன் தேவைக்கு அரிசி இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தானில் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது. இதுபோலவே இலங்கை, மலேசியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு காரணங்களால் உணவுத் தட்டுப்பாட்டு சூழலில் நின்றுகொண்டிருக்கிறது.

மேலும் இன்றைய காலநிலை மாற்றத்தில், அரிசி இறக்குமதிக்காக அலையும் பிலிப்பைன்ஸ் நாட்டை போல இந்தியா ஆகாது என்ற உறுதியும் இல்லை. அப்படி இருக்கும் நேரத்தில் எந்த நாடும் விலை குறைத்து கொடுக்கப் போவதும் இல்லை.

இந்தச் சூழலில்தான் இந்திய ஏற்றுமதி தடைக்கு (உள் நாட்டிலும்) எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

நண்பர்கள் பேசும்போது, தேவைக்கு அதிகமான பனை எண்ணையை குடிக்கவா செய்வீர்கள் என்று ஒரு இந்தோனேசியனைக் கேட்டார்கள். இதே கேள்வியை அவர்கள் கொள்ளை லாபத்தில் விற்கும் கச்சா எண்ணைக்கோ, கார்களுக்கோ ஆயுதங்களுக்கோ, நாகரிக அடையாளங்களுக்கோ சொல்ல முடியுமா.

இன்னும் எத்தனை காலம் இந்தப் பணக்கார நாடுகளின் அதிகார, அகங்கார, சந்தை மற்றும் ஆளுமை சண்டைகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் உணவின்றி பஞ்சத்தில் சாக வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் உணவுப் பொருளின் விலை குறைவாக இருப்பதற்கு காரணம், அங்குள்ள மக்களின் குறைந்த வாழ்க்கைத் தரத்தால், அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் குறைந்த உழைப்பூதியம் அன்றி கச்சா எண்ணெய் போன்று அபரிவிதமாக பூமியிலிருந்து தானாக வருவதனால் அல்ல.

இயற்கையில் கிடைக்கும் பொருளை, கச்சா எண்ணையை, சந்தை விலைக்கேற்ப கொள்ளை லாபத்தில் விற்கும்போது, உழைப்பினால் கிடைக்கும் தானியங்களை, உலக தேவையைப் பயன்படுத்தி கொள்ளை லாபத்தில் ஏன் விற்கக் கூடாது.

வளர்ந்த நாடுகள் கொண்ட உட்கட்டமைப்பும் அது சார்ந்து அவர்கள் கொண்டுள்ள கூட்டு அமைப்புகளும் அத்தகைய விலை நிர்ணய காரணம் என்றால், அதைப் போல இங்கும் செய்ய வேண்டும் அன்றி அவர்களின் அதிகார சண்டைக்கு குறைவான (இந்திய உற்பத்தி) விலைக்கு அனுப்பி வைக்கக் கூடாது.

இன்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு விற்பனைக்குக் குறைவான விலையே நிர்ணயிக்கின்றன அது போலவே உள்நாட்டில் குறைவான விலையும் ஏற்றுமதிக்கு வேறு விலையுமாக இருக்க வேண்டும். அதற்கான உறுதியான தலைமை கொண்ட அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதனினும் பெரிதாக உணவுப் பொருள் உற்பத்திநாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தி கச்சா எண்ணைக்கு இருப்பது போல ஒரு அமைப்பில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

இன்று இந்தியாவில் இருக்கும் குறைந்த கட்டமைப்பும், அமைப்பு சார்ந்த கட்டுக்கோப்பும் ஓட்டையிட்டு, மண்ணில் ஒளிந்துகொள்ளும் உயிர் போன்ற சிலரால், அவர்களின் சொந்த சேமிப்பிற்காக சிதறியடிக்கப் படலாம். அதற்கான தொடக்க செயல்பாடுகள் தற்போதே ஆரம்பித்து விட்டது என்றே தெரிகிறது.

இந்த விலை உயர்வை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நல்ல வாய்ப்பாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய விவசாயின் கட்டமைப்பை உயர்த்தி அவனுடைய சந்ததிக்கு நவீன கல்வியும், மேன்மையான வாழ்க்கைத்தர உறுதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றதாக இருக்கும் உறுதியான கருத்தியல் மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்த உலக உணவுப் பொருள் தட்டுப்பாடு சூழலை எப்படி நமக்கு நன்மை தரும்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நமது ஒவ்வொரு செயல்பாடும் இருக்க வேண்டுமே அல்லாது மற்றுமொரு பஞ்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி விடக்கூடாது.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்