அறிஞர்களின் தவறுகள்

அன்புள்ள ஜெ,

நலம் தானே

தமிழ் விக்கி என்ற தளத்தில் மிகவும் முனைப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறீர்கள், பாராட்டுகள் உங்கள் வலை தளத்தில் உள்ள புத்தக விமர்சனம் மேலும் உங்கள் பரிந்துரை புத்தகம் ஆகியவற்றை முடிந்த வரை படித்து வருகிறேன் .அப்பிடி சமீப காலத்தில் வாங்கிய புத்தகம் தன் இந்திய வரலாறு காந்திக்கு பிறகு.

ராமச்சந்திர குஹா அவர்கள் மிக நடுநிலையாகவும் நேர்த்தியாகவும் நம்முடைய அரசியல் வரலாறு மற்றும் கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னீர்கள். உங்கள் பரிந்துரை வேறு அல்லவா, நான் மிகவும் நம்பித்தான் படித்தேன். ஆனால் புத்தகத்தின் இரண்டாம் நிலையில், பக்கம் 178 இல், மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார் என்று இருக்கிறது. அதை வாசித்த உடன் மீண்டும் ஒர் அரசியல் புத்தகத்தை உண்மைக்குப் புறம்பாக அடியொற்றி விட்டோமோ என்று சந்தேகம் இருக்கிறது. இதை ராமச்சந்திர குஹா தவறாக எழுதினாரா, இல்லை சாரதி அவர்கள் தவறாக குறிப்பிட்டரா என தெரியவில்லை.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இதுபோன்று பல விசயங்கள் வரலாற்றில் இருந்து மறைத்து எழுதுவது தெரியவருகிறது. மீண்டும் மீண்டும் எதாவது ஒரு வகையில்  இளைய தலைமுறைக்கு இந்த மாதிரியான பொய்ப் பிரச்சாரம் மட்டுமே போய்ச்சேருமா. அரசியல் கூட்டங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் இது நிறைத்து காணப்படுகிறது. இந்த சிக்கல்களை நாங்கள் எப்பிடி புரிந்து கொள்வது. எனக்கு தெரிந்த நான்கு பேருக்காவது நன் இன்றைய அரசியல் பொருளாதார உண்மைச் சிக்கல்களை எப்பிடி உண்மை எடுத்து கூறுவது.

இந்த புத்கத்தின் 178 பக்கத்தை படித்த பின் என் எண்ணம் முழுவதும் இதுவும் எதோ ஒரு சார்புடையது என்றுதான். நான் இதுவரை வாசித்த அனைத்தும் இதை போல் நான் அறிந்திராத விஷயங்கள் பற்றி பொய் சொல்வனவாக இருந்தால் எப்படி நான் உண்மையை அறிவது என்ற வினா எழுகிறது. மேற்கொண்டு இந்த புத்தகத்தை மேலும் படிக்கும் எண்ணமும் இல்லை. பெரும்பான்மையினர் உண்மைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாதா என வருந்தி இதை எழுதுகிறேன் .

ஜெகநாதன்

வேம்பார்

***

அன்புள்ள ஜெகநாதன்,

அறிஞர்களின் பிழைகளை நாம் குறிப்பிடத்தக்க நூல்களில் கூட பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, இந்தியாவைப்பற்றி காரல்மார்க்ஸ் அவருடைய கட்டுரைகளில் குறிப்பிடும் செய்திகளில் பெரும்பாலானவை காலனி ஆதிக்கவாதிகளால் எழுதப்பட்டவை. அவை பெரும்பாலும் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, மேலோட்டமானவை. அதே போல ஆப்பிரிக்க சமூகத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமம் பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய பெரும்பாலான கருத்துக்கள் காலனியாதிக்கவாதிகளின் பதிவுகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. அவை பிழையானவை என்று இன்று தொடர்ந்து நிறுவப்படுகிறது.

ஐரோப்பியர் பதினேழாம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் பயணம் செய்தனர். அங்கே வணிக ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் உருவாக்கினர். அதன்பொருட்டு அந்த பண்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து எழுதினர். பெரும்பாலான கீழைப் பண்பாடுகள், ஆப்ரிக்க பண்பாடுகள் தங்களைப்பற்றிய புறவயமான வரலாற்றை எழுதிக்கொள்ளாதவை. ஆகவே அவற்றின் வரலாறு ஐரோப்பியர் எழுதியவற்றை ஒட்டியே மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகள் பற்றி கிடைக்கும் எல்லா தரவுகளும் காலனியாதிக்கவாதிகள் எழுதியவையே.

விளைவாக ஐரோப்பா அல்லாத நாடுகளின் சமூகப்பரிணாமம், பொருளியல் உற்பத்தி, பொருளியல் விநியோகம் ஆகியவை சார்ந்த ஐரோப்பியர்களின் கருத்துக்கள் பெரும்பாலானவை காலனியாதிக்கவாதிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் சூழலுக்கு ஏற்ப, தங்களுடைய முன்முடிவுகளுக்கு ஒப்ப, அரைகுறை தரவுகளிலிருந்து உருவாக்கிக்கொண்டவையாக உள்ளன.

காலனியாதிக்க உளநிலைக்குச் சிறந்த உதாரணம் கால்டுவெல். கால்டுவெல் இன்று தமிழகத்தின் வரலாற்றெழுத்து, பண்பாட்டு வரலாற்றெழுத்து ஆகியவற்றில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.இந்திய மொழியியலில் கால்டுவெல்லின் கொடையை, தமிழகத்து எளிய மக்களுக்கு அவர் அளித்த கல்விச்சேவையை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் தமிழர்களைப்பற்றி அவர் சொன்ன கருத்துக்களை அப்படியே இன்று எடுத்து எழுதினால் இன்றைய தமிழர்கள் கொந்தளிப்படைவார்கள். தமிழர்களுக்கு பழங்குடிப் பாரம்பரியம் தவிர எந்தப்பண்பாட்டு வளர்ச்சியும் கிடையாது என்று அவர் குறிப்பிடுகிறார். பழங்குடிப்பாரம்பரியம் என அவர் சொல்வது காட்டுமிராண்டித்தனம் என்னும் பொருளில். பேய் வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவையே இங்குள்ள மதம் என்றும், அதற்குமேல் எந்த தத்துவமும் மெய்யியலும் தமிழர்களுக்கு இல்லை என்றும் சொல்கிறார். இங்குள்ள நாகரீகம், தத்துவம் அனைத்தும் பிற அனைத்தும் ஆரிய பிரமாணர்களால் இங்கு கொண்டுவரப்பட்டவை என்றும் அவர் வாதிடுகிறார்.

கால்டுவெல் நாடார் சாதியைப்பற்றி எழுதிய நூல் ‘திருநெல்வேலி சாணார்கள்’ நாடார் குலத்து அறிஞர்களின் மிகக்கடுமையான எதிர்ப்பைப்பெற்றது. அந்நூலை  வெளியிடுவதை அவரே பின்னர் நிறுத்திவைத்தார். ஆனால் இன்றும் ஐரோப்பிய இந்தியவியல் ஆய்வாளர்களில் பலர் அந்நூலிலிருந்து அடிப்படைத்தரவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக அண்மைக்காலத்தில் ஆய்வு செய்த அறிஞர்கள் கூட கால்டுவெல்லின் நூலிலிருந்து ஆழமான செல்வாக்கை அடைந்திருக்கிறார்கள்.

இது இந்தியர்களாகிய நாம் எதிர்கொள்ளவேண்டிய ஒரு சிக்கல். தரவுகளில் பிழைகளை நாம் சமநிலையுடன் அணுகவேண்டும். அப்பிழைகளை மூன்றாகப்பிரித்துக் கொள்ளலாம்

அ. முன்முடிவால் உருவாகும் பிழைகள்- கால்டுவெல் உருவாக்கியவை.

ஆ. மூலத்தரவுகள் சரியாக இல்லாமல் உருவாகும் பிழைகள். அவற்றின் அடிப்படையில் சில கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கும். அப்பிழைகளால் அந்த கொள்கைகளும் பிழையாக இருக்கும். உதாரணம், கார்ல் மார்க்ஸின் ஆசிய உற்பத்தி முறை பற்றிய கருத்துக்கள். அண்மைய உதாரணம், சி.ஜே.ஃபுல்லர் எழுதிய ‘தேவியின் திருப்பணியாளர்கள்’

இ. சாதாரணத் தரவுப்பிழைகள். அவற்றின் அடிப்படையில் அந்த ஆசிரியரின் கொள்கைகள் நிறுவப்பட்டிருக்காதென்றால் அவை அத்தனை பெரிய பிழைகள் அல்ல. நீங்கள் குறிப்பிடும் குகாவின் பிழை அத்தகையது.

உதாரணமாக அந்த தகவலை ஆதாரமாகக் காட்டி குகா எம்.ஜி.ஆருக்கு முன்பு தமிழகத்தில் அடிப்படைக் கல்வியே இல்லை என்றும், எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்ததனால்தான் அடிப்படைக்கல்வி உருவானது என்றும் வாதிட்டிருந்தால் அது இரண்டாம் வகை பிழை. அந்த தரவு அவர் நூலில் எதையும் நிறுவும் மூல ஆதாரமாக இல்லை. ஆகவே அது மூன்றாம் வகை பிழை அது

இந்த வேறுபாடு நம் பார்வையில் இருக்கவேண்டும். நாம் அறிந்தோர் என நமக்கே காட்டிக்கொள்வதற்காக சிறு தரவுப்பிழைகளை தேடிக்கண்டடைவது, அதையொட்டி செயற்கையான சலிப்பு, எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துவது அறிவுச்சூழலில் எந்த ஊடாட்டமும் இல்லாதவர்கள் கொள்ளும் ஒரு பாவனை. அது நமக்கு வரக்கூடாது. பிழைகள் எவர் கண்ணுக்கும் படும். ஒரு பிழையை நாம் கண்டடைந்தமையால் நாம் எவ்வகையிலும் மேலானவர்கள் ஆவதில்லை.

*

ஆய்வின் சில சிக்கல்களை மேலே சொல்லவேண்டும்.

தரவுகள் எப்போதுமே ஒருபக்கச் சார்பானவைதான். முழுமையான சரியான தரவுகள் எந்த அறிஞருக்கும் கிடைப்பதில்லை. அவர் தன்னளவில் முன்முடிவுகள் கொண்டவராக இருந்தால் தனக்கு சாதகமான தரவுகளையே எடுத்துக்கொள்வார். ஆய்வுநெறி இல்லாமல் அரசியல் சார்ந்தோ அல்லது வேறுபார்வைகள் சார்ந்தோ முடிவுகளை உருவாக்கிக்கொண்டு ஆராய்ச்சி செய்பவராக இருந்தால் கிடைக்கும் ஒரு தரவைக்கொண்டே கோபுரம் கட்டி வைத்திருப்பார். அந்த தரவை இன்னொரு முறை உறுதிசெய்ய மெனக்கெட மாட்டார். ஆகவே பெரும்பிழைகள் உருவாகிவிடும்.

தரவுகள் ஆய்வாளர்களுக்கு அடிப்படையானவை.அறிஞர்களுக்கு அவை துணைப்பொருட்களே. ஆகவே ஆய்வாளர்களை நாம் ஆய்வுநோக்கில், அவர்களின் தரவுகளை இன்னொருமுறை பரிசீலனை செய்துவிட்டே ஏற்கவேண்டும். தரவுகளை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள், எதை எடுக்கிறார்கள் எதை மழுப்புகிறார்கள் என்று ஒவ்வொரு முறையும்  பார்க்கவேண்டும்.

ஏனென்றால் அரசியல், பொருளியல், சமூகவியல் களங்களில் நேரடியாகவே அதிகாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே அதில் ஆய்வாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு கட்சி, அல்லது அதிகாரத்தரப்பின் குரல்களே.

நான் பொதுவாக ஆய்வாளர்களை என் சிந்தனைக்கான வழிகாட்டிகளாக கருதுவதில்லை. ஓர் ஆய்வாளரை பயில்கையில் அவருக்கு எதிரான இன்னொரு ஆய்வாளரையும் கருத்தில் கொள்வேன்.

நான் அசல் சிந்தனையாளர்களையே எனக்கான வழிகாட்டிகளாகக் கருத்தில்கொள்வேன். ஓர் அறிஞர் தரவுகளைக்கொண்டு மட்டும் தன் தரப்பை நிறுவுவார் என்றால் அவரை ஒருபடி குறைவானவர் என்றும், பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர் என்றுமே எண்ணுவேன். அவருடைய ஆய்வுகளிலிருந்து உள்ளுணர்வு சார்ந்து என்ன வெளிப்படுகிறது என்பதே எனக்கு முக்கியம்.

உள்ளுணர்வு என்பது தரவுகளைவிட நம்பகத்தன்மை கொண்டது என்பது என்னுடைய எண்ணம். தரவுகளிலேயே விளையாடும் பல அறிஞர்களை எனக்குத்தெரியும் அவர்கள் தரவுகளை எடுத்துகொள்வதில்லை. தரவுகளிலிருந்து சில தரப்புகளைத்தான் எடுத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.

ஒரு நல்ல கட்டுரையின் சாராம்சமென்பது அதன் ஒட்டுமொத்தத்தில் இருக்கிறது. அதில் ஒரு செய்தி அல்லது ஒரு தரவு சரியாக இல்லை என்றால் கூட  ஒட்டுமொத்தமாக அதனுடைய ‘தீஸிஸ்’ அதாவது கருத்துரைப்பு சரியா என்பது தான் நான் கவனித்துக்கொள்வது. அந்த சிந்தனையாளரின் ஒட்டுமொத்த தரிசனம் என்ன என்பதையே நான் முதன்மையாக கருத்தில் கொள்வேன்

என்னைப்பொறுத்தவை ராமச்சந்திர குஹாவோ இன்னொருவரோ என்னுடன் விவாதிக்கிறார்கள். எனக்கு முடிவுகளை அளிப்பதில்லை, நான் முடிவுக்குச் செல்ல உதவுகிறார்கள். நான் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருப்பவற்றிக்கு உரமளிக்கிறார்கள். அவற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறார்கள். அவற்றிற்கு எதிர்நிலையாக அமைந்து அவற்றை உடைத்தோ மறுசீரமைக்கவோ உதவுகிறார்கள்.

அதில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை வைத்தே ஒரு சிந்தனையாளரை நான் மதிப்பிடுகிறேனே ஒழிய அவர் எத்தனை தரவுகளை எனக்களிக்கிறார் என்பதை வைத்து அல்ல. தரவுகளின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இல்லை.

இரவுபகலாகத் தரவுகளில் நீராடும்  பல மலையாள இதழியல்- பொருளியல் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள் எதை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை அணுக்கமாக பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவர்கள் ஓர் அதிகாரத் தரப்பை ஏற்றதும் அவர்களின் தரவுகள் அப்படியே தலைகீழாக மாறிவிடுகின்றன. அவர்கள் தரவுகளை குறிப்பிட்ட வகையில் அடுக்கினால் அது உண்மை ஆகிவிடும் என்று நம்மை நம்பச்சொல்கிறார்கள். கண்கூடான அனுபவத்திற்கு அது எதிரானதாக இருக்கும்போது கூட தங்கள் வாதத்திறமையால் நிறுவிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் எங்கு தோற்கிறார்கள் என்றால் அதே தரவுகளுடன் அதற்கிணையான தர்க்கத்திறமையுடன் இன்னொருவர் வந்து   அதற்கு எதிர்மறையான ஒன்றை  அதேபோல நிறுவிவிட முடியும் என்ற சாத்தியத்தில் இருந்துதான்.

ராமச்சந்திர குஹாவிடம் நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த தரவு பிழையானது. ஆனால் தவிர்க்கக்கூடிய சின்னப்பிழைதான். ஏனென்றால் அவருக்கு அளிக்கப்பட்ட தரவுகளில் இந்தப்பிழைகள் இருந்திருக்கலாம் .அது சரிப்பார்ப்பதில் நிகழ்ந்த பிழையே அன்றி உள்நோக்கம் கொண்ட பிழை அல்ல.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇலக்குவனார்
அடுத்த கட்டுரையானை டாக்டர்- காணொளி