மாயையும் மகிழ்ச்சியும்

Jessica Woulfe, ruins, Maya (civilization), Budha, Hinduism, HD wallpaper

மாயை

அன்புள்ள ஜெ,

இன்று தளத்தில் வெளியான ‘மாயை’ தொடர்பான ரம்யா அவர்களின் கேள்விக்கு உங்களின் பதிலின் முடிவில்

“ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை. உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.”

என்ற வரிகளை படிக்கும் போது “அந்த தெய்வம் தன்னறம் (ஸ்வதர்மம்)” என மனதில் உங்கள் குரல் கூறியது. அது சரிதானா?

ஒருவருக்கு வியாபாரம், தொழில்நுட்பம் என எதுவாகினும் அந்த தெய்வமாக இருக்க முடியுமா? அல்லது அறிவியக்கம், அறவியல், ஆன்மிகம் மட்டுமா?

மேலும் ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்னும் உங்களின் சொகளைத்தான் என் தன்னறத்தை கண்டறிய விதியாக கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு நண்பரிடம் தன்னறம் குறித்து பேசிக்கொண்டிருந்த போது ‘எனக்கு சும்மா ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பதுதான் பிடிச்சுருக்கு, அப்போ அது தான் என் சுதர்மமா?’ என்று கேட்டார்.

எனக்கு பதில் தெரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள்.

நன்றி ஜெ.

மணிகண்டன், கோவை.

***

அன்புள்ள மணிகண்டன்,

எனக்கு வரும் கடிதங்களில் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ’எனக்கு பயணம், பொழுதுபோக்கு நூல்களைப்படிப்பது, சிறு சாகசங்களில் ஈடுபடுவது ஆகியவை மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவற்றை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதுமா? மகிழ்ச்சியை அளிப்பது தான் தன்னறம் எனில் இந்த வகையான கேளிக்கைகள் ஒருவருடைய தன்னறம் ஆகுமா?’

இந்தகேள்வி ஒருவர் தன்னைக் கூர்ந்து கவனிக்காதபோது உருவாவது. உண்மையில் எவரும் கேளிக்கைகளில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது. கேளிக்கைகள் வாழ்வின் இடைவெளிகளே ஒழிய வாழ்க்கையின் மையப்போக்காக இருக்க முடியாது.

சென்ற காலங்களில் பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள் முழுக்க முழுக்க கேளிக்கையாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மைனர் என்று அவர்களைக் கூறுவதுண்டு. மைனர் விளையாட்டு என்று அந்த வாழ்க்கையை நமது சொலவடைகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் எவரும் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அல்ல. அவர்கள் மகிழ்ச்சியைத்தேடி நிரந்தரமாக சென்று கொண்டே இருந்தார்கள். அதன் பிரச்னை என்ன என்பது இறுதி வரை அவர்களுக்குப் புரியவே இல்லை.

ஒருவர் தின்னலாம், குடிக்கலாம், காமத்தில் ஆடலாம், பொருட்களை வாங்கிக்குவிக்கலாம், பயணம் செய்யலாம், சில்லறைச் சாகசங்களில் ஈடுபடலாம். ஆனால் அவை எல்லாமே மிக விரைவில் சலித்துவிடும். ஒவ்வொரு முறையும் அவை முடிந்த பிறகு முழு நிறைவின்மையை உணரமுடியும் . ஆகவே இன்னும் இன்னும் என்று தேடிச் செல்கிறார்கள். மேலும் மேலும் கசப்படைகிறார்கள். நையாண்டியும் வசையுமாக வெளிப்படுகிறார்கள்.

ஒருகட்டத்தில் அந்த அதீதத்தன்மை அவர்களுடைய உடல்நிலையை அழிக்கிறது. உளநிலையை சீரழிக்கிறது. அவர்கள் மட்கி அழிகிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்ந்து நிறைந்த மைனர் எவருமே இல்லை. கேளிக்கை வாழ்வாகாது என்பது தான் அவர்களுடைய வாழ்வின் சிக்கல்.

இதே பிரச்சினையை இங்கே அமெரிக்காவில் பார்க்கிறேன். கேளிக்கைக்கு முடிவில்லா வாய்ப்புகள் கொண்ட நாடு இது. ஆனால் கேளிக்கையின் நிறைவின்மை இங்குள்ளவர்களை அலைக்கழிக்கிறது. மொத்த அமெரிக்காவே தின்னு, குடி, கொண்டாடு என கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது.

இங்கே பெரும்பான்மையினர் கேளிக்கையின் பொருட்டு பணம் சேர்க்க மிகக்கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு விடுமுறைக்காக ஆண்டு முழுக்க முழுநாளும் வியர்வை சிந்துகிறார்கள். உண்மையில் அந்த உழைப்பே அவர்களை ஒருங்கிணைவுடனும், நிலைத்தன்மையுடனும் வைத்திருக்கிறது. உழைப்பின் முள்ளில் சிக்கியிருப்பதனால் கேளிக்கையின் காற்றில் பறக்காத சருகுகள் அவர்கள். கேளிக்கை என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் ஒருவகை இனிய கனவுதான். கேளிக்கையின்போது அவர்கள் குற்றவுணர்ச்சியால் அதில் திளைக்கவும் முடிவதில்லை.

ஓரளவு பணம் இருந்து, கேளிக்கையில் சிக்கிக்கொள்பவர்கள் இலக்கற்று காற்றில் அலைக்கழியும் சருகென வாழ்கிறார்கள். சாலைகளில் ஹார்லே டேவிட்சனில் சீறிப்பாயும் உடம்பெல்லாம் பச்சைகுத்தியவர்கள், கேளிக்கை மையங்களில் திரண்டு குடித்து கூச்சலிடுபவர்கள் எவரும் நிறைவடைந்த உடல்மொழி கொண்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எதையோ நடிக்கிறார்கள்.

அவர்களில் பலர் மெல்லமெல்ல சூதாட்டம், போதைப்பொருள் பழக்கம் வரை சென்று அழிகிறார்கள். (அமெரிக்காவில் இருந்து போதைப்பொருளை ஒழிக்கவே முடியாது. அந்த நாகரீகம் உருவாக்கும் தனிப்பட்ட வெறுமை அத்தகையது.) மிகச்சிலர் இந்நாடு உருவாக்கும் கேளிக்கைவலையை உதறிவிட்டு சேவை, ஆராய்ச்சி என கண்காணா நாடுகளுக்குச் செல்கிறார்கள். இரண்டாம் பாதியினரே அமெரிக்காவின் உண்மையான செல்வம். அமெரிக்கா அவர்களால் உருவாக்கப்படுவது. இங்கே முதல் பாதியினரை இரண்டாம் பாதியினர் சுமக்கிறார்கள்.

மனிதர்கள் மண்ணுக்கு வந்தது மகிழ்வாக இருப்பதற்குத்தான். ஆனால் மகிழ்வு என்பது உண்மையாக இருப்பது இங்கிருக்கும் இயற்கையுடன் இணைந்திருப்பதிலும், இங்கிருக்கும் வாழ்விற்கு தன்னுடைய கொடையை அளிப்பதிலும்தான். தன்னுடைய உளஆற்றலையும் உடல் ஆற்றலையும் ஈட்டிக்கொள்ளும்போதும், அவற்றை செலவழிக்கும் போதும் தான் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

உண்ணும்போது மகிழ்ச்சி, உண்ட ஆற்றலை உழைப்பாகவோ விளையாட்டாகவோ செலவழிக்கும்போதும் மகிழ்ச்சி. கற்கும்போதும் மகிழ்ச்சி, கற்பிக்கும்போதும் மகிழ்ச்சி. இந்த சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சி, அவற்றை குறைவற திரும்ப செலுத்தும்போது மகிழ்ச்சி. இவற்றில் ஒன்றை மட்டும் செய்பவன் ஒருபக்கம் வீங்கியவன். அவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. கற்றுக்கொண்டே மட்டும் இருப்பவன் மகிழ்ச்சியாக இருப்பவன் அல்ல, கற்பிக்கும்போதுதான் ஆளுமை சமநிலைப்பட்டு உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது.

கேளிக்கை என்பது ஒருவகை சமநிலையின்மை மட்டும்தான். அங்கே மனிதன் ஒன்றை மட்டும் செய்துகொண்டிருக்கிறான். கடும் உழைப்புக்கு பிறகு கேளிக்கை என்பது நிறைவூட்டுவது, மேலும் உழைப்புக்கு கொண்டு செல்வது. உழைப்பற்ற கேளிக்கை ஆத்மாவை உடலை சீரழிப்பது. ஆகவே எவரும் வெறும் கேளிக்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அது ஒரு மாயை.

மெய்யான நிறைவென்பது நம்மை பயனுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதில் இருக்கிறது. இந்த சமூகத்தில் இருந்து நாம் எடுத்தவற்றை குறைவறத் திருப்பிக்கொடுப்பதில் உள்ளது. அதுவே தன்னறமாக முடியும். இங்கு எந்தப்பங்களிப்பை ஆற்றினால் உங்கள் முழு ஆற்றலும் வெளிவருகிறதோ அதுவே தன்னறம்.

இப்படிச் சொல்கிறேன் நீங்கள் ஒரு ராக்கெட் என்றால் முழு எரிபொருளும் எரிந்து பீறிட்டு வெளியேறி விசையாகி உங்களை வானுக்குத் தூக்குகிறது. ஒரு துளிகூட எஞ்சாமல் உங்கள் கற்பனையாற்றல் ,அறிவாற்றல், உடலாற்றல் ஆகியவை செலவழிக்கப்படும்போது மட்டுமே நீங்கள் நிறைவடைகிறீர்கள். கேளிக்கைகளில் அவ்வாறு ஆற்றல் செலவழிக்கப்படுவதில்லை. ஆகவே அது ஒருபோதும் ஒருவருடைய தன்னறமாக ஆக முடியாது. கேளிக்கையில் எவரும் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை, ஆகவே எவரும் அதில் தன்னை கண்டடைவதில்லை, ஆகவே அதில் எவரும் நிறைவுகொள்வதில்லை. கேளிக்கையில் ஈடுபடுவதை எவரும் தன் அடையாளம் என சொல்லிக்கொள்வதில்லை.

கேளிக்கைகளில் மட்டும் ஈடுபடுபவர்கள் ஒருவகை தன்னலமிகள். அவர்களுக்குக் கொடுத்தல் என்பதில் இருக்கும் இன்பம் தெரியாது. பெற்றுக்கொள்வதிலேயே இன்பம் இருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறார்கள். கூர்ந்து உங்கள் வாழ்க்கையை கவனித்தால் மகிழ்வுற்ற தருணங்கள் என்று நீங்கள் குறிப்பிடும் வாழ்க்கைப்புள்ளிகள் அத்தனையும் நீங்கள் கொடுத்த தருணங்களாகவே, இருக்கும். உங்கள் மைந்தருக்கு கொடுத்த தருணங்கள் பெற்றவர்களுக்கு கொடுத்த தருணங்கள். அதற்கிணையாகவே இச்சமூகத்திற்கு, அறிவியக்கத்திற்கு நீங்கள் கொடுப்பது பெருமகிழ்வளிக்கக் கூடியது. உங்களைப்பற்றிய ஆழ்ந்த தன்னம்பிக்கையை அளிக்கக்கூடியது நிறைவை நிமிர்வை அளிக்ககூடியது .அதுவே தன்னறமாக இருக்க முடியும்.

மிக எளிய ஒரு மனிதன் தன்னுடைய தன்னறம் என்று கண்டுகொள்வது தன் குடும்பத்துக்கோ குழந்தைகளுக்கோ தன்னை முற்றளிப்பதைத்தான். அதற்கு மேலதிகமாக அறிவாற்றலோ ஆன்மீக ஆற்றலோ உள்ள ஒருவர் இச்சமூகத்திற்கும் அறிவியக்கத்துக்கும் அளித்தாகவேண்டும். குடும்பத்துக்கு வெளியே ஆளுமை வளர்ந்த ஒருவர் குடும்பத்திற்குள் மட்டும் தன்னை அளித்தாரென்றால் நிறைவின்மையை அடைகிறார். குற்ற உணர்வை அடைகிறார். பல்லாயிரம் பேர் தங்கள் குடும்பத்துக்கு அப்பால் ஒரு துளிகூட வளராதவர்கள்.

தங்களை முழுக்க குடும்பத்துக்கு அளித்த எளிமையான மனிதர்கள் உணடு, அவர்கள் ஒருவகை நிறைவுடன் சாக முடியும். ஏனென்றால் அவர்களின் அக அளவு அவ்வளவுதான். ஆனால் கற்பனையாற்றலும் அறிவாற்றலும் ஆன்மிக ஆற்றலும் உள்ளவர்கள் அவ்வாறு எளிமையாகத் திகழ்ந்து மறைய முடியாது. அவர்களுக்கு மேலதிகமாகச் சில தேவைப்படுகின்றன. தன்னறம் என்று நான் திரும்ப திரும்ப சொல்வது இதையே.

எதை அளித்தால் எவ்வண்ணம் அளித்தால் நீங்கள் முற்றாக உங்கள் ஆற்றலை செலவிட்டிருப்பீர்கள் என்று நீங்களே கண்டுகொள்வதற்கு பெயர்தான் தன்னறம். அதற்கு பிறர் உதவ முடியாது நீங்களே கண்டுகொள்ள வேண்டியது தான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇலங்கையர்கோன், தொடராத தொடக்கம்
அடுத்த கட்டுரைஉடையாள், கடிதம்