வணக்கம்.
தமிழில் ஆங்கிலப் பெயர்கள் எழுதுவது எப்பொழுதுமே ஒரு சிக்கலான ஒன்று என எண்ணுகிறேன். தமிழ் விக்கியில் மாற்றுமொழி சொற்களின் உச்சரிப்பிற்கு ஒரு புதிய (அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட) வழிமுறையை அறிமுகப் படுத்தும் எண்ணம் உள்ளதா? உதாரணத்திற்கு A.W.Brough பற்றிய உங்கள் கட்டுரையை முதலில் படித்தபோது நான் அந்தப் பெயரை (பிரப்) ‘Pirap’ or ‘Birab’ என்று வாசித்தேன். அதை நீங்கள் ப்ரஃப் என்று எழுதி இருந்தால் கூட ‘Prough’ என்று வாசிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள உச்சரிப்புக் கையேடு (https://en.wikipedia.org/iki/Help:IPA/English) போல தமிழ் விக்கியிலும் ஒரு உச்சரிப்புக் கையேடு உருவாக்கி, அதை பொதுமைப் படுத்தினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
(தமிழ் விக்கி பக்கத்தில் (https://tamil.wiki/wiki/pecial:Contact) தொடர்பு மின்னஞ்சல் கொடுக்கப்படவில்லை, அதனால் தங்களுக்கு எழுதுகிறேன்.)
நன்றி!
வினோத் ஜெகன்னாதன்
***
அன்புள்ள வினோத்
கலைச்சொற்களைப்பற்றியும் சொல்லாக்கங்களையும் பற்றியும் உச்சரிப்பு பற்றியும் ஒரு திறந்த பொது விவாதம் நம் சூழலில் நடந்தால் நல்லதுதான். ஆனால் அது அறிவியக்க ஆர்வலர்களால், ஏதேனும் மொழிப்பங்களிப்பு செய்தவர்களால் நிகழ்த்தப்படவேண்டும். இங்கே மொழிசார்ந்த எந்த விவாதத்திலும் மொழியறிவில்லா அரசியலாளர் ஊடுருவி வன்முறையை செலுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அரசியல் நேரடியாக அதிகாரத்துடன் இணைந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் அதிகாரம் என்பது அடியில் சாதியதிகாரம் மட்டும்தான். ஆகவே கட்டக்கடைசியில் அது சாதி மோதலாக வந்து முடிகிறது. அதனால் தேர்ந்தெடுத்த சிறுவட்டத்துக்குள் அன்றி இவற்றைப்பேசுவது என்பது இன்றைய சூழலில் முற்றிலும் பொருளற்றது.
கலைச்சொற்களை தமிழாக்கம் செய்யும் பெரும்பணி பார்தியார் காலத்திலேயே தொடங்கிவிட்டது. தொடக்க காலத்தில் இதழ்களுக்காக நிறைய சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அதன் பிறகு ஆட்சிமொழிச் சொற்கள், சிந்த்னைக்குரிய சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. மருத்துவ கலைச்சொற்கள் இலங்கையில் சாமுவேல் கிரீன் காலத்திலேயே தமிழாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் நீட்சி இந்தியாவில் பின்னர் நிகழ்ந்தது.
இது கடந்த இருநூறு ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஒரு பெரும் செயல்பாடு. இத்தகைய கூட்டுச் செயல்பாடுகளுக்குரிய நெறிகள் தானாக உருவாகி வந்திருக்கும் .அவற்றை ஒரு அறிஞரோ ஒரு தரப்போ ஒரு அதிகார மையமோ கட்டுப்படுத்திவிட முடியாது. பல திசைகளில் பலவாறாக நிகழ்வதிலிருந்து எது தங்கி வாழ்கிறதோ, எது பொருந்துகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். காப்பியை குளம்பி என்றூறு மொழியாக்கம் செய்தது நிலைக்கவில்லை.தாசில்தாரை வட்டாட்சியர் என்று மொழியாக்கம் செய்தது நீடித்தது. ஆகவே வட்டாட்சியர் என்பதை பயன்படுத்தலாம்.
ஈருருளி நிலைக்கவில்லை, பேருந்து நிலைத்தது. ஏன்? தமிழில் திசைச்சொல் என்னும் கருத்துரு உண்டு. பிறமொழிச் சொல் தமிழின் உச்சரிப்புக்குள் வருமென்றால் அதை பயன்படுத்தலாம் என இலக்கணம் சொல்கிறது, அதுவே திசைச்சொல். (இத்தகைய ஓர் இலக்கணம் தமிழில் இருப்பது மிக வியப்புக்குரியது. தொல்மொழிகளில் இப்படி ஒரு இலக்கண அனுமதி இல்லை. தமிழின் தனிச்சிறப்புகளிலொன்று இது) சைக்கிள் தமிழ்ச்சொல்லாகவே ஆகிவிட்டது. அந்த திசைச்சொல் இருப்பதனால் ஈருருளி தேவையில்லை. பஸ் தமிழ் உச்சரிப்புக்குள் வர முடியாது. ஆகவே அது அயல்சொல். ஆகவே பேருந்து நிலைத்தது
இதுதான் நடைமுறையிலுள்ள சாத்தியமான ஒரே வழி. நம் முன்னோர் வழிகாட்டியது இது. இதில் தூய்மை வாதத்தை ஏற்கலாமா? தூய்மைவாதம் ஒன்று இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தரப்பைச் சேர்ந்தவன் நான்.. தூய்மைவாதம் வெறுத்து ஒதுக்கப்படும் என்றால் ,முற்றிலும் இல்லாமல் ஆகும் என்றால் ,ஒரு மொழின் அடித்தளம் சிதையும்.. அது காற்றில் பறந்தலையத்தொடங்கிவிடும். தூய்மைவாதத்திலேயே நின்றுவிட்டால் அது வளர்ச்சி அழிந்து கல்குண்டாக அமர்ந்திருக்கும். காலப்போக்கில் மறையும். ஓர் அடிப்படை விசையாக தூய்மைவாதம் இருந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே தூய்மைவாதத்தை கேலி செய்து நிராகரிப்பதெல்லாம் எனக்கு உடன்பாடல்ல. நான் எப்போதும் மொழித்தூய்மைவாதிகளை கவனிப்பவன். தூய்மைவாதிகளின் இருப்பை ஏற்பவன். ஆனால் தூய்மைவாதிகளை ஒட்டி யோசிப்பவன் .அல்ல. இந்த முரணியக்கமே என்னுடைய மொழிக்கொள்கை.
கலைக்களஞ்சியம் போன்ற ஒன்று அறிவைத் தொகுப்பதுதானே ஒழிய புதிய அறிவுநெறிகளை உருவாக்குவது அல்ல. ஏற்கனவே மிக விரிவான தளத்தில், பொதுவிவாதம் வழியாக நிறுவப்பட்டுவிட்ட சில அடிப்படைகளைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமே ஒழிய ஒரு சிறு குழு கூடி தனக்கான முடிவுகளை எடுத்துவிட முடியாது.
தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்தில் இலக்கிய மதிப்பீடு ஒன்று உள்ளது.. அது புதுமைப்பித்தனுக்கும் பூவை எஸ்.ஆறுமுகத்துக்கும் ஒரு வேறுபாடை முன்வைக்கத்தான் செய்யும். ஆனால் அந்த வேறுபாட்டை கலைக்களஞ்சியம் உருவாக்கவில்லை. ஏற்கனவே இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களும் உருவாக்கிய வேறுபாடைதான் அது பதிவு செய்கிறது. அந்த வேறுபாடை அது பதிவு செய்யவில்லையெனில் அது கலைக்களஞ்சியமே கிடையாது. அதனால் எந்தப்பயனும் கிடையாது. அது ஒரு ஆவணப்பதிவுத்தொகையாக மட்டும் எஞ்சும். கற்பவனுக்கு அதில் பயனும் வழிகாட்டுதலும் வேண்டும் என்றால் புதுமைப்பித்தன் ஏன் முக்கியமானவர் என்றும், பூவை எஸ்.ஆறுமுகம் ஏன் ஒரு படி கீழானவர் என்ன்றும் அறிவதற்கான விளக்கம் கலைக்களஞ்சியத்தில் இருந்தாகவேண்டும்.
ஆகவே கலைக்களஞ்சியம் சொற்களை உருவாக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். கலைக்களஞ்சியம் மொழிச்சூழலால் இயல்பாக உருவாக்கப்படும் சொற்களை அவற்றின் பயன்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். மொழிக்குறிப்புகளை பயன்படுத்துவது, அந்நியக் கலைச்சொற்களை உச்சரிப்புக்ளை பயன்படுத்துவது ஆகியவற்றில் மாறா முறைமை என்ற ஒன்றை கலைக்களஞ்சியம் கொள்ள முடியாது. மாறா முறைமை கலைக்களஞ்சியத்தை இரும்புக்கோட்டை போல ஆக்கிவிடும்.
பிரப் என்பது அவராலேயே அவர் பெயர் எழுதப்பட்ட விதம். அதை கலைக்களஞ்சியம் மாற்ற முடியாது. வேறு உச்சரிப்புகள் இருந்தால் அதையும் அளிக்கலாம். ஈரோட்டில் பிரப் என்று அவர் பெயரில்தான் அந்தச்சாலை அமைந்திருந்தது. அப்பெயரால் தான் அவர் கட்டிய தேவாலயங்கள் அமைந்திருக்கின்றன. அதைப் வேறு உச்சரிப்புகளில் ஒலிபெயர்ப்பதில் பொருளில்லை. பரோ என்று இன்னொரு புழக்க மொழி பெயர்ப்பு இருந்து அவை இரண்டுக்கும் நடுவே ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் ஒரு கலைக்களஞ்சியம் அதை செய்யலாம். இதுதான் கலைக்களஞ்சியம் கைக்கொள்ளும் வழிமுறையாக இருக்கமுடியும்.
முற்றிலும் பொருளற்ற ஒரு உச்சரிப்பு முறை புழக்கத்திற்கு இருந்து அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் அதையும் கலைக்களஞ்சியம் ஏற்றுக்கொள்ளும். ஒருவேளை அடைப்புக்குறிக்குள் அக்கலைக்களஞ்சியம் அது முன்வைக்கும் ஓர் உச்சரிப்பு முறையைக் குறிப்பிடலாம் ஆனால் முதன்மையாகக் கொள்ளவேண்டியது எது புழக்கத்தில் இருக்கிறதோ அதைத்தான்.
அவ்வாறு தமிழ்ச்சூழலில் பல சொற்கள் அன்றாட புழக்கத்தில் வேரூன்றியிருக்கின்றன. சினிமா என்பது நம் மொழியில் உள்ள ஒரு திசைச்சொல். சரியான உச்சரிப்பு சினேமா என மொழியியலாளர் சொல்லலாம். அதன் மூலக்கலைச்சொல் கினெமா என்று வேறொரு அறிஞர் சொல்லலாம், வேண்டுமென்றால் அது ஒரு தரப்பு என்று உள்ளே பதிவு செய்யலாமே ஒழிய சினிமாவுக்கு பதிலாக சினேமா என்றோ கினெமா என்றோ மாற்றிவிட முடியாது. இலக்கணம் என்பதை இலக்கியம் கண்டதற்கு தான். அறிவுச்சூழலில் புழங்குவதற்குத்தான் கலைக்களஞ்சியம் அடிப்படை அமைக்கிறது.
ஜெ