மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு ,
வணக்கம். தங்களின் உடையாள் நாவலை இணையம் வழியாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அறிவியல் புனைக்கதைகளின் மீது உள்ள விருப்பத்திற்கு காரணம் நாம் அறிந்த உண்மையை வைத்துக்கொண்டு கற்பனையைத் தூண்டுவனவாக அமைந்திருக்கும் கதைக்களங்கள் தான் ஐயா. அந்த வகையில் உடையாள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா.
நாமியின் தனிமை முதலில் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.ஏனெனில் பள்ளி விடுமுறை காலம் என்பதால் என் நண்பர்களைப் பிரிந்திருந்ததனால் தனிமை என்னையும் சூழ்ந்திருந்தது.
மனிதர்களின் எதிர்கால தொழில் நுட்பங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. முக்கியமாக குரு என்ற மென்பொருள்; ஒட்டுமொத்த மனிதர்களின் மொத்த அறிவும் ஒரே ஒரு சிறிய கருவியில் அடங்கி விடும் என்ற தொழில்நுட்பம் இக்கால அலைபேசிகளின் எதிர்கால முகம் போல எனக்கு தோன்றியது.
உயிர் அணுக்கள் இணைந்து உயிராக மாறும் முறையினைச் சில மாதங்களுக்கு முன்புதான் அறிவியல் பாடத்தில் படித்திருந்தேன்.
அமீபாக்கள் இணைந்து மனித உடலின் உருவத்தை எடுத்ததும் நாமி மகிழ்வது , ஒரு குழந்தை தன்னைப் போலொரு தோற்றத்தைக் கண்டு ரசிக்கிறது என்பதை தாண்டி ,தனிமையிலிருந்து தப்ப அது தன்னைப்போலொரு உயிருள்ள துணையை எதிர்பார்க்கிறது என்பதாகவே என்னால் பார்க்க முடிந்தது.
நாமி தனக்கு காலிகை என்று பெயர் சூட்டிக்கொள்ளும் பொழுது ,நானும் என் வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தேன். அங்கிருந்த மரங்களில் கொஞ்சி விளையாடும் அணில்களிலும், குயில்களின் இசை கேட்டு அசையும் மர இலைகளிலும் நான் பார்க்காமல் இருக்க காலம் என்பது என்னால் கவனிக்க பட மாட்டாது. அதனால் நாம் ஒவ்வொருவருமே காலத்தை நிகழ்த்தி கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது.
‘பனிமனிதன்’ நாவலில் “நான்” என்ற சுயத்திற்கு மனிதன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறான் என்பதை விளக்கியிருந்தீர்கள்.இருப்பினும் “நான்” என்ற உணர்வினைச் சுற்றியே மனிதஅறிவு திரள்கிறது என்று உடையாள் மூலமாக என்னால் அறிய முடிந்தது.
நாமி தன்னால் உருவாக்கப்பட்ட தியோக்களுக்கு உணவு பற்றாக்குறை வந்து விடக்கூடாது என்று எண்ணுவதும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் உண்மையிலேயே தியோக்களுக்கு அவளை ஒரு அன்னையாக்குகிறது.
நீலப்பந்து கோளில் மனிதர்கள் அனைவரும் கூட்டறிவு கொண்டவர்கள் என்பது வியப்பில் ஆழ்த்தினாலும், அப்படியொரு உலக அமைதி நமது பூமியிலும் இருக்க வேண்டும் என்ற பேராசையை உண்டாக்குகிறது.மேலும்
நமது பூமி ஒரு பேரழிவை நோக்கியே சூழன்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறது.
சாரா தன்னைப்போலவே முகம் கொண்ட பல லட்சம் சிறுமிகளைப் பார்க்கும் பொழுது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் என்னாலும் உணர முடிந்தது.
நாமியின் உயிருள்ள முகம் எனது ஆர்வத்தைத் தூண்டியது.என்னாலும் அப்படியொரு சிலையை உருவாக்க முடியுமென்றால் அது யாருடையதாக இருக்ககூடும் என்று என்னை சிந்திக்க வைப்பதாக அது அமைந்திருந்தது.
சில புத்தகங்களைப் படிக்கும் பொழுது நம்முள் ஒரு மாற்றம் ஏற்படும்.ஆனால் உடையாள் என்னுள் புதிய பரிமாணத்தையே தொடங்கி வைத்துள்ளது.அதன் மூலம் மேலும் பல தகவல்களை அறிந்து என்னை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்.
தங்கத்துளியைப் பசுமைத்துளியாக மாற்றிய உடையாளை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
இப்படிக்கு,
மீ.அ.மகிழ்நிலா
ஒன்பதாம் வகுப்பு,
ஸ்ரீவிக்னேஷ் வித்தியாலயா,
கூத்தூர்,
திருச்சி-621216
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307