நிறுவனம், அறம்- கடிதம்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க

அறம் விக்கி

அன்புள்ள ஜெ,

எங்கள் கிராமத்து கடைக்குச் சிறிய “வேனில்” வந்த நூறு உர மூட்டைகளை உள்ளூர் சுமை தூக்குபவர்கள் (பதிவுசெய்யவில்லை என்பதால்) இறக்கக் கூடாது என்று தடுத்து, நாங்கள் அண்ணன் தம்பிகள் (சொந்த மூட்டைகள் என்பதால் தடையில்லை) முதுகில் சுமந்து போடுவதை கடைசிவரை நின்று பார்த்து விட்டுப் போன சுமை தூக்குவோர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று மட்டுமே கல்லூரியில் படிக்கும் வரை “கம்யூனிஸ்டுகள்” பற்றி எனக்குத் தெரிந்திருந்தது.

பின்பு கல்லூரி முடித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு போனபோது அங்கிருந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினராகி நானும் போராட்டங்களில் பங்கு பெறும் சூழ்நிலை வாய்த்தது என்றாலும் பழைய அனுபவம் காரணமோ என்னவோ முழுவதும் என்னை மனதால் இணைத்துக்கொள்ள முடிந்ததில்லை. நல்ல நண்பர்கள் அவர்களாகத்தான் இருந்தார்கள் என்றாலும் வாதங்களில் எதிரேதான் பொருத்திக்கொள்ள முடிந்தது.

பின்பு ஒரு சமயம் “நிறுவன நண்பர்கள் குழுமத்தில்” ஒரு தீவிரமான விவாதத்தின் போது நண்பர் ஒருவர், “உங்கள் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது நாங்கள் அறிவுப் பூர்வமாகவே எதிர்வினையாற்றினோம்” என்று எழுதினார்.

அன்று முதல் தேட ஆரம்பித்துவிட்டேன். ஒருமுறை மதுரை முழுவதும் அத்தனை கடைகளிலும் தேடியிருக்கிறேன். உங்களிடமும் புத்தகம் கிடைக்கவில்லை என்று கேட்டிருக்கிறேன். தற்செயலாகக் கிண்டிலில் பார்த்தவுடன் ஆசையோடு வாங்கிவிட்டேன். அன்றிலிருந்து கிடைத்த நேரம் எல்லாம் அருணாச்சலமும், வீரபத்திரப் பிள்ளையும் என் கூடவே இருந்தனர்.

“இடது காலை எடுத்து வைத்து விட்ட விஷயம், வைத்த மறுகணமே மனதைக் குத்தியது, அருணாசலம் தயங்கினான்” என்ற முதல் வரி இரண்டாவது வாசிப்பில் சட்டென நாவலின் ஒரு முழுமையான தோற்றத்தைக் கொடுத்தது. “அட” என்று சொல்லிக் கொண்டேன்.

அதுபோலவே முதல் வாசிப்பில் “இந்த இடத்தில் ஏன்” என்று தோன்றிய “மெல்லிய நூல்” (முன்பே வாசித்திருந்தாலும்) இரண்டாவது வாசிப்பில் “அய்யன் காளி” அவர்கள் தனது கைத் தடியை விட்டுவிட்டு எழுந்து செல்லும் நேரத்தில் கண்ணீர் வந்துவிட்டது. பாபுஜியின் ராட்டையின் “அறுந்த நூல்” சீரடைய வேண்டும் என்று மனம் விம்மியது. சோகன்ராம் “நிறுத்துடா கிழட்டு நாயே” என்று கத்த நினைத்தபோது மனம் அவனைத் தழுவிக்கொண்டது.

சங்க அரசியல் விளையாட்டு ஒன்றின் மூலம் கே. கே. எம் மைத் தாண்டி அவர் கூடவே இருக்கும் அருணாச்சலம் மேலே வருகிறார். அது சார்ந்த குற்றவுணர்ச்சி கொஞ்சம் அவரிடம் இருக்கிறது. அந்த சமயத்தில், சங்கத்துக்கு ஆள்சேர்க்க பாஸ்கரனைப் பார்க்கச் செல்லும் அருணாச்சலத்துக்கு வீரபத்திர பிள்ளையைப் பற்றி தெரியவருகிறது. சங்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த வீரபத்திர பிள்ளை இன்று “வரலாற்றில் இல்லாமலான” பின்புலத்தை அறிய அருணாச்சலம் கொள்ளும் தீவிரமும் அர்ப்பணிப்பும் அவர் மனசாட்சியால் தூண்டப்படுகிறது. தேடலின் வழியில் வீரபத்திர பிள்ளை எழுதிய குறிப்புகள் அருணாச்சலத்திற்கு கிடைக்கிறது. அதன் மூலம் சோவியத் நாட்டின் புகாரின், ட்ராஸ்க்கி போன்ற வரலாற்றில் இல்லாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவருகிறது. உள்ளூரிலும் வீரபத்திர பிள்ளையை காணாமல் செய்தவர்களில் அவருடன் இருந்த கே. கே எம்மும் உடந்தை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.

இடைப்பட்ட காலத்தில், அருணாச்சலம் கே. கே. எம்மிடம் ஆடிய அதே ஆட்டத்தை நாராயணன் சங்கத்தில் ஆடத் தயாராக இருக்கிறான். அருணாச்சலத்தின் சித்தாந்தத் திரை விலகி, பல பாவனைகளோடு உள்ளிருக்கும் அகங்காரத்தை உணர்ந்து மனம் கொந்தளிக்கிறான்.

ஒருவகையில் அருணாச்சலமும் வீரபத்திர பிள்ளையும் ஒன்றுதான். இருவரும் தான் நம்பிய சித்தாந்தத்தின் பொருட்டு பலியிடப்பட்டவர்களுக்காகத் தங்களையே பலிகொடுக்கத் தயாரானவர்கள். அது அவர்களின் மனசாட்சி கொண்ட தீவிரம். தான் நம்பிய ஒன்றின் பொருட்டு அதன் நன்மை தீமைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல். இத்தகைய மனிதர்கள் கிடைத்தற்கு அறியவர்கள் அல்லவா.

ராமசாமி சொல்கிறார் “வீரபத்ர பிள்ளை என் பார்வையில் அவன்தான் கலைஞன். அவன் அடைஞ்சது தான் வெற்றி” என்கிறார். வீரபத்திர பிள்ளை மீட்பதற்கு ஆள் இல்லாமல் வீழ்கிறார். அருணாச்சலத்தை நாகம்மை மீட்கிறாள்.

நினைத்துப் பார்த்தால் எங்கள் நிறுவனத்தின் அருணாச்சலத்தையும் நாராயணனையும் அங்கிருந்த வீரபத்திர பிள்ளையையும் கூட இப்போது அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது (அந்த அளவு தீவிரம் இல்லாமல்).

***

என் தந்தை இறந்த மறுநாள், சுடுகாட்டில் வைத்த பலி சோற்றை எடுக்காமல் காக்கைகள் நீண்ட நேரம் மரத்திலேயே அமர்ந்திருந்தது. எங்கள் “குடிமகன்” சொன்னபடி “அண்ணன் தம்பிகள் பிரியாமல் இருப்போம்” என்று வாய்விட்டுச் சொல்லி சிதையருகில் விழுந்து கும்பிட்டு தள்ளிச் சென்ற பின் சிறிது நேரத்தில் காக்கைகள் இறங்கியது.

கதையில் “அப்பாவுக்க செரியும் தெற்றும் கணக்குப் போட பிள்ளையளுக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்லும் நாற்பது வயது வரை திருமணம் செய்துகொள்ளாத பாஸ்கரன் வைத்த பலிச்சோற்றை முப்பது வருடமாக வாய் வைக்காத காக்கைகள்பற்றிச் சொல்லும்போது அனைத்து தர்க்கங்களும் தாண்டி மனம் சங்கடப்பட்டது.

****

நாவலில், மிகப்பெரிய அறிவாளியாக, தர்க்கத்தையும் உலக ஞானத்தையும் ஒன்றாக கொண்ட கதிர் சொல்லும் சொற்கள் எல்லாமே மிகச்சரியாக “ஆமாம் அதுதானே சரி என்று நினைக்க வைக்கிறது.”

ஒருமுறை எங்கள் நிறுவனத்தின் சம்பள உயர்வுக்கான உண்ணாவிரதப் பந்தலில், தலைவர் நிறுவனத்தை நிர்பந்திக்கும் கோஷங்கள் எழுப்ப நாங்கள் பின்னால் கூவிக் கொண்டிருந்தோம். அப்போது வயதான, சட்டை அணியாத, கூன் விழுந்த ஒரு விவசாயி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அது ஏனென்று தெரியாத ஒரு “குற்றவுணர்வை” எழுப்பியது. அவர் அன்று நடந்து சென்ற காட்சி என் மனதில் இன்னும் ஓர் ஓவியம் என மனதில் நின்றிருக்கிறது. அன்று அதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

கதிர் சொல்கிறான். “ஒரு பொருளாதார கட்டுமானத்தில் விவசாயியும் தொழிலாளியும் எதிரும் புதிருமான சக்திகள்,” “போனஸைப் போராடி அடையும் தொழிலாளி விவசாயியின் ரத்தத்தில் அதிகப் பங்கு கெட்டப் போராடும் ஒருவன்தான்” இப்போது நினைத்தால், இந்த எதிர்முனை தான் அன்று உணர்ந்ததோ என்று தோன்றுகிறது.

“குடும்பம்ங்கிற அமைப்பு, தேசம்ங்கிற அமைப்பு, சட்டம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு எத்தனையோ பேர் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்”

“நீங்க ரொம்ம உணர்ச்சி வசப்படுறீங்க, உங்ககிட்ட தத்துவம் இல்ல”

“நிறுவப்பட்ட எந்த ஒரு சித்தாந்தமும் அடுத்த கணம் முதல் உயிர் பலி கேட்கிற புராதன போர் தேவதையா ஆயிடுது”

போன்ற கதிரின் அறிவார்ந்த சொற்கள் ஒவ்வொன்றும் அதன் எதிர் தர்க்கம் இல்லாமல் அவையே எல்லை என்று நம்ப சொன்னாலும், உள்ளே ஒரு மனம் மயங்காதே அதைத் தாண்டிய ஒன்று இருக்கிறது என்று சொல்கிறது. அதுவே இந்த நாவலின் பாதிப்பு என்று நினைக்கிறேன்.

***

நாவலை வாசித்து முடித்ததும் ஒரு பெரிய கேள்வி எழுந்தது.

கருத்தியல் நமக்கு ஏன் தேவை, எது நம்மை அங்கு இருத்தி வைக்கிறது, கருத்தியலிலிருந்து எப்படி வெளியே வருவது?

அதற்கான பதில் சமீபத்தில் கிடைத்தது (jeyamohan.in என்ற இடத்தில் தான்!!)

“கருத்தியலிலிருந்து எளிதில் விடுதலை பெற முடியாது. ஏனெனில் உண்மையில் நாம் கருத்தியலை நோக்கி புதிதாகச் சென்றடையவில்லை. கருத்தியலிலேயே நாம் பிறந்து வளர்க்கிறோம். மதம் ஒரு மாபெரும் கருத்தியல் அதில் பிறக்கிறோம். அரசியல் கருத்தியல்களுக்குச் செல்கிறோம் அது உதிர்ந்தால் மீண்டும் மதத்திற்கே செல்கிறோம். அல்லது ஒரு புதிய கருத்தியலுக்கு தவிக்கிறோம்.

கருத்தியல் இல்லாத வெற்றிடம் என்பது ஆன்மீகத்தால், கவிதையால் மட்டுமே நிரப்பத்தக்கது. ஆன்மீகமோ கவிதையோயின்றி கருத்தியலால் கைவிடப்பட்டவர்கள் மதத்தையே சென்று சேர்க்கிறார்கள்.”

மதம் ஒரு கருத்தியல் என்பது எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது “சேப்பியன்ஸ்” வாசிக்கும்போது கொஞ்சம் புரிகிறது.

பின்தொடரும் நிழலில் குரல் நாவலின் தொடர்ச்சியாக இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “ஹராரி”யின் “சேப்பியன்ஸ்” சரியான தேர்வாக தெரிகிறது.

***

எங்கள் “பழைய நிறுவன மின்னஞ்சல் குழுமம்” இயல்பாகவே இடதுசாரி சாய்வு கொண்டது. “சங்கம் சார்ந்த” உங்கள் கட்டுரையை பகிர்ந்த போது அதன் விவாதத்தில் “ஜெயமோகன் இந்துத்துவ வாதி” என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். அன்று இந்நாவலை நான் வாசித்திருக்கவில்லை.

நாவலில் ஒரு பத்தி வருகிறது.

“அதன் (கம்யூனிசம்) சாரத்தின் சாரமான கனவு – பூரண மானுட விடுதலை என்ற தரிசனம் – மானுட குலத்தின் மனதில் விழுந்துவிட்டது. அது மீண்டும் மீண்டும் முளைத்தபடிதான் இருக்கும்”

“மார்க்ஸிய மெய்யியலின் ஆதார தரிசனம் உடைமையின்மையும் சமத்துவமும் இக விடுதலையும். ஒருபோதும் மானுடகுலம் இப்பெரும் கனவை விட்டுவிட முடியாது. மண்ணில் இதுவரை மனித மனம் கொண்ட உச்சங்கள் அனைத்தையும் நெகிழ்வுகள் அனைத்தையும் இப்பெருங்கனவுக்கு உரமாக்குவோம். அதற்கு உலகின் பேரிலக்கியங்கள் அனைத்திலுமிருந்து கண்ணீரைத் திரட்டுவோம், அனைத்து தரிசனங்களிலுமிருந்து தர்க்கங்களைத் திரட்டுவோம் அனைத்து மதங்களிலிருந்து படிமங்களைத் திரட்டுவோம்” என்று கெ. என் ஜோனி யின் குரலாக ஒலிக்கிறது.

தாங்கமுடியாத அரசியல் சண்டைகளால் அந்த குழுமத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இருந்திருந்தால் மேற்கண்ட வரியைக் காட்டி மறுத்திருப்பேன்.

அருணாச்சலத்தின் மனக்கொந்தளிப்பையும், வீரபத்திர பிள்ளையின் மூளைக் குழப்பத்தையும், புகாரினின் தவிப்பையும், ஏசுவின் கருணையையும் படைத்த மனிதனின் மனது எந்த எல்லைவரை சென்றிருக்கும்? என்ன பாடுபட்டிருக்கும். அந்த மகத்தான படைப்பிலக்கியவாதிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைஎம்.ஏ.சுசீலாவுக்கும், நல்லதம்பிக்கும் விஜயா விருது
அடுத்த கட்டுரைகுமரிப்பழமொழி- கடிதம்