பூன் இலக்கிய முகாம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

பூன் இலக்கிய முகாம் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய முகாம். எனக்கு புதிய நல்ல அனுபவமாக இருந்தது.

எந்த செயலிலும்  எப்படி கவனிப்பது, எப்படி தொகுத்துக் கொள்வது, அப்படி தொகுப்பதன் வழி அடையும் இடம் என்ன போன்ற கேள்விகளுக்கான முக்கிய அடிப்படை விதிகள் முதல் நாள் முகாமில் சொல்லி ஆரம்பிக்கப்பட்டது.

முகாமின் துவக்கத்தில் இருந்த சிறுகதை  பற்றிய உங்கள் உரை,  முகாமில் சிறுகதை வாசிப்பு நிகழ்வு நடந்த பொழுது  அஸ்திவாரமாக இருந்தது.

முதல் நாள் நிகழ்வில் சிறுகதை, அறிவியல் புனைவு, கவிதை, இசையை ரசிப்பது ஆகிய இலக்கிய அனுபவங்கள்  வேறு வேறு வாசிப்பு, கேள்வி பதில்கள் வழியாக முகாமில் முன் வைக்கப்பட்டது. முதன் முதலாக முறையான இலக்கிய முகாமை காணும் எனக்கு பல தரப்பட்ட வாசிப்புகள், கேள்வி பதில்கள், விளக்கங்கள் வழியாக முன்னகரும் இலக்கிய அணுகுமுறை வேறு உலகமாக  இருந்தது.  நல்ல இலக்கிய வாசிப்புள்ள நண்பர்கள், அவர்களது தயாரிப்பு, கேள்விகளை உருவாக்கும் முறை, பதில் சொல்லும் முறை ஆகியவை எனக்கு எவ்வளவு இன்னமும் வாசிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக இருந்தது. நேரம் மட்டுறுத்தப்படும் விதம், நிகழ்வினை தொடங்கும் விதம் எல்லாம் சிறப்பாக இருந்தது.

நிகழ்வுக்கு வெளியே பல நண்பர்கள் அறிமுகம், இனிமையான பாடல்கள், புல்லாங்குழல் இசை, சுவையான உணவு, அருமையான மலை சாரல் இடம், உங்களிடம் கேள்வி கேட்க வாய்ப்பு  என இரண்டு நாட்களும் உற்சாகமாக சென்றது.

நிகழ்வுக்கு வெளியே நடந்த உரையாடல்களின் போது நவீன உலகியல் குறித்த பேச்சுக்களின் போது இந்திய மரபின் கலைச்சொற்கள் வழியாக பதில் அளித்தீர்கள். சரளமான, சுவையான, செறிவான பதில்கள். இது பெரும் திறப்பினை கண் முன் நிறுத்தியது.  முதலில் இந்திய மரபின் கலைச்சொற்கள் நேரடி பேச்சில் இவ்வளவு பயன்படுத்த முடியும் என்பதே அனுபவத்தில் இனிமையானதாக, புதுமையாக இருந்தது. இந்த உலகை காணும் கண்ணாடியாக சொற்களும், அதன் அர்த்தமும் இருக்கின்றது, அதுதான் அனுபவத்தினை உருவாக்குகின்றது.  என்னை போன்றோர் சொற்களின் போதாமை காரணமாக மிக குறைவான சொற்களை கொண்டுதான் இந்த உலகியல் அனுபவத்தினை நோக்கி செல்ல முடிகின்றது. அதன் காரணமாக அனுபவங்களும் ஒரு கூண்டுக்குள்தான் இருக்கின்றன. மரபின் சொற்களை வாசித்தாலும் அதை அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் அளவுக்கு பக்குவமில்லை, தெளிவில்லை. உங்கள் பதில்களில் வந்த கலைச்சொற்கள் அந்த போதாமையின் மீது வெளிச்சம் கொண்டு வந்தது. மரபின் கலைச்சொற்கள் பொது மைய நீரோட்டத்துக்கு வருவது பரபரப்பினை தருகின்றது. இரண்டாம் நாள் நிகழ்வு உலக தத்துவம் பற்றிய உரையுடன் துவங்கியது. வாசிக்க வேண்டிய புத்தங்களையும் பரிந்துரைத்தீர்கள்.

அமெரிக்க பொருளாதார பின்னனி மீதான அபுனைவு, அமெரிக்க கலாச்சாரம் மீதான தன்வரலாற்று அபுனைவு, இந்திய காவிய மரபு, ஆங்கில கவிதை, நாவல்கள், கீழ்தஞ்சையில் வந்த தன்வரலாறு அபுனைவு  என இரண்டாம் நாள் நிகழ்வு சென்றது. இந்திய காவிய மரபை வாசிக்கும்+அர்த்தப்படுத்தும் விதம், ஆங்கில கவிதையில் கற்பனாவாதத்தின் இடம், அது உருவாக்கிய உலகம், அமெரிக்க அபுனைவு நூல்களில் சுட்டப்படும் கலாச்சார விழுமியங்கள், அதன் பின்னனி,  நாவல்கள் வாசிக்கப்படும் விதம், அதன் சுவையை அடையும் முறை, அதன் விடுப்பட்ட இடங்கள், கீழ்தஞ்சையின் பின்புலம், அதன் பின்னனியில் உருவான தன்வரலாற்று நூலின் மீதான ஆசிரியருடனான உரையாடல் என விரிவாக நிகழ்வுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இரண்டாம் நிகழ்வு முடிந்த பின்னர் இரவு 1 மணி வரை நண்பர்களுடன் பேச்சு சென்றது. பல வரலாற்று தகவல்கள் பற்றி நண்பர்களும், நீங்களும் பேசியதை கேட்க முடிந்தது. அதன் பின்னர்  நீங்கள் சொன்ன பேய்க் கதைகள் அபாரம். சொல்லப்படும் விதத்தில்தான் கதைக்குள் பயமும், திகிலும் இருந்தது. சிரிப்பும், கேலியும் கொண்ட இரவாக கழிந்தது.

வாழ்வில் முதல் முறையாக இத்தனை இலக்கிய பற்றும், அதில் திறனும் உடைய நண்பர்களுடன் முழு நாளை செலவிட வாய்ப்பு கிடைத்தது.  மலைப்புடனும், இனிமையுடனும் சென்றது. உங்கள் வருகையால் மட்டுமே இது சாத்தியமானது.

ஆசிரியரின் “செயலே விடுதலை” என்னும் வரி எனக்கு ஒரு மந்திரம் போல கூட இருக்கின்றது. கஷ்ட நஷ்டம், அன்றாடத்தில் என கூட தக்க வைத்துக் கொள்ள முயன்று கொண்டுள்ளேன்.  எனக்கு இந்த இலக்கிய முகாம்  இலக்கியத்தின் செயல், இலக்கியத்தில் வாசகன் விடுதலையாக செயல்படுபடுவது  என்பது பற்றியெல்லாம் பல காட்சிகளை  காண வாய்ப்பளித்தது , நல்லதொரு அனுபவம்.மிக்க நன்றி.

அன்புடன்
நிர்மல்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் சந்திப்பு
அடுத்த கட்டுரைகோதுமை ஏற்றுமதி- கடிதம்