தமிழ் விக்கி, தாவரவியல் அகராதி

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழ் விக்கி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றதில் எங்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி. அந்த தடங்கலை குறித்து பெரிதாக நான் கவலைப்படவில்லை. நீங்கள் நல்ல நோக்கத்துடன் துவங்கி இருக்கும் இவ்வரிய பணி அப்படி ஒருசிலரால் நிறுத்திவிட முடியும் ஒன்றல்ல. சொல்லப்போனால் அப்படி ஒரு தடங்கல் உருவானதால் தான் தமிழ் விக்கி எத்தனை பெரிய பணி என்பதை மேலும் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அருஞ்செயல்களுக்குத்தானே தடைகளும் எதிர்ப்புகளும் வரும்.

தமிழ் விக்கி பணியில் ஈடுபட்ட பிறகு  தமிழுக்கு  பங்காற்றியிருக்கும், கலைத்தொண்டாற்றியிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த ஆளுமைகள், அவர்களின் தனி வாழ்க்கை இலக்கிய பங்களிப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டபின் பிரமிப்பும் திகைப்பும் பல சமயங்களில் அதிர்ச்சியும் உண்டாகிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் விக்கி பதிவுகளை மனதிற்குள் தொகுத்துக் கொண்டு பெரும் குற்ற உணர்வுடன் தான் உறங்கச் செல்கிறேன்.

தொலைத்தொடர்பு வசதிகளும், நகலெடுக்கும் வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பொருளாதார வசதிகளும் இல்லாத காலங்களில்  அம்மாமனிதர்களின் கடும் உழைப்பும் அதன் பயனான அரும்பணிகளையும் எண்ணிப்பார்க்கையில், எல்லா வசதிகளும் கொண்டிருக்கும், விரல்நுனியில் உலகமே குவிந்திருக்கும் இக்காலத்தில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்யாமல் இருக்கும் குற்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பழங்கால சுவடிகளை தேடி சேர்த்து,  ஆயிரக்கணக்கான பக்கங்களை, தகவல்களை கையெழுத்துப் பிரதி எடுத்து, உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருக்கும் ஒருவரிடம் அப்பிரதிகளை பத்திரமாக வைத்துக் கொள்வதாக சொல்லி மருத்துவர் வாங்கி கொள்கிறார். அவற்றை தவறுதலாக மருத்துவரின் மனைவி நெருப்பிலிட்டு எரித்துவிடுகிறார். ஆனால் மருத்துவமனையில் இருப்பவரோ  பரவாயில்லை  என்று அவற்றை மீண்டும் கைகளில் எழுத துவங்குகிறார்.

இப்படி பலநூறு ஆளுமைகளின் வாழ்வை அர்ப்பணிப்பை கற்பனை கூட செய்ய முடியாத அவர்களின் கடின உழைப்பை வாசிக்கிறேன், அவர்களின் பங்களிப்பை அதிசயிக்கிறேன். இதுநாள் வரை நான் வாசித்திருக்கும் புனைவு அதிபுனைவு  போன்ற எதிலும் அடக்க முடியாத திருப்பங்கள் சுவாரஸ்யங்களுடன் இருக்கிறது  அவர்களின் தனி வாழ்க்கை தகவல்கள்.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கல்வித்தொண்டும் இறைத்தொண்டும் ஆற்றியவர்கள்,  ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரும் பற்பல குழந்தைகளுமாக இருந்தவர்கள். குழந்தைப்பேறில்லாததால் தத்தெடுத்துக்கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், மனைவி இறந்தபின்னர் மறுமணம் குறித்து சிந்திக்காமல் வாழ்ந்து முடித்தவர்கள், மணம் புரிந்த பின் துறவு வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு மனைவியை பிரிந்து சென்றவர்கள். என பல்வேறு ஆளுமைகள் பல்வேறு வாழ்க்கைக் கதைகள்.

ஒரு பெண்ணை விரும்பும் இஸ்லாமிய அறிஞர் அப்பெண்ணை கேட்டு பெண் வீட்டினரை அணுகுகிறார். ஆனால் பெண் தர மறுக்கிறார்கள். மறுநாள் அப்பெண் பாம்பு கடித்து இறக்கிறாள். பெண் வீட்டார் தேடி வந்து இளைய மகளை  அவருக்கு மணமுடித்து தருகிறார்கள்.

வெளி நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவரின் மனைவி பிரசவத்தில் சிறுமகளை விட்டுவிட்டு இறந்து, அம்மகளும் 5 வயதில் இறந்த பின்னர் அவர் தொண்டாற்றி மரணித்து மனைவியின் அருகிலே புதைக்கப்படுகிறார். இரு பெரிய கல்லறைகளுக்கு அருகில் அம்மகளின் சிறு கல்லறையும் இருக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு இளம்பெண் இறைச்சேவைக்கென இந்தியா வந்து  தங்கி இருக்கும் இடத்தில் எதேச்சையாக  சில ஊமைப்பெண்களை சந்திக்கிறார். அதுவே இறை நிமித்தம் என்றெண்ணி ஊமைப்பெண்களுக்கு கல்வியும் கைத்தொழிலும் கற்பிப்பதில் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிறார். அவரே பெண்களின் மார்பகங்களை மறைக்க முன்பக்கம் முடிச்சிட்டு கொள்ளும் வகையில்  எளிய ரவிக்கையையும் வடிவமைத்து அறிமுகப்படுத்துகிறார்.

தீண்டாமைக் கொடுமைகளில் ஒன்றாக தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொல்லப்பட்டதை  கவிதையாக பதிவு செய்கிறார் ஒரு கலைஞர்.

இசைக்கலைஞர்களின் தனிவாழ்க்கையை வாசிக்கையிலெல்லாம் ஒவ்வொருவரின் வாழ்வையும் ஒரு முழுநாவலாகவோ அல்லது திரைப்படமாகவோ விரித்தெழுதலாமென்று தோன்றும். பல நாதஸ்வர கலைஞர்களுக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் அதில் பலர் சகோதரிகளை மணந்திருக்கிறார்கள். ஒருவரின் நான்கு மனைவியரில் மூவர் சகோதரிகள்.

நீண்ட நாதஸ்வரக் கச்சேரிக்கு பிறகு அயர்ந்து போன கலைஞர் ஒருவரிடம் உயரதிகாரி ஒருவர் பொருட்டு மீண்டும் வாசிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது மீண்டும் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தவர் நெஞ்சுவலியென்று  அருகிலிருக்கும் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அங்கேயே உயிர் விடுகிறார்.

மற்றொரு பிரபல நாதஸ்வர கலைஞர் தேர்வீதியில் சுவாமி ஊர்வலத்தில் வாசித்துக்கொண்டு வருகையில் தெருவிலிருந்த ராஜ தேள் கடித்து அங்கேயே உயிர்விடுகிறார். கல்நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர், எப்போதும் இருவராக இரட்டை நாதஸ்வரம் வாசித்தவர்கள் என பற்பல ஆளுமைகள் அவர்களின் வாழ்வுகள்.

இவற்றுடன் முன்பு வந்துகொண்டிருந்த நாளிதழ்கள், அவற்றின் மொழிநடை அவை எத்தனை பிரதிகள் வெளிவந்தன போன்ற தகவல்கள். சிற்றிதழ்கள், சிறுகதைகள், நாவல்கள்,  கோவில்கள், சமணப்படுகைகள், பெண்களின்  இலக்கியப்பணிகளும் பதிவாகி இருக்கின்றன. திருக்குறளுக்கு உரை எழுதிய ஜமீந்தாரிணி, மகனிடம் தன் நாவலை எந்த சேதாரமுமில்லாமல் பதிப்பிக்க சொல்லிய அன்னையொருவர், பால்யவிவாகத்திற்கு பின்னர் பல வருடங்கள் கணவனின் அனுமதியுடன் கதைகள் எழுதிய பெண், பழங்காலக் கோவில்கள், நாட்டார் கலைகள், இசைக்கருவிகள், சிறுவர் இதழ்களின் முழுதொகுப்பு,  இப்படி தமிழ் விக்கி வேலைகளில் நான் பெற்றவை இத்தனை வருட வாசிப்பில் கிடைத்ததை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.

ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம் பக்கங்களை சரிபார்த்த அன்றெல்லாம் உறங்கவே முடியவில்லை. ஒருநாள் வீட்டிலிருந்து புறப்பட்டுப்போன இன்னொரு ஆளுமை வீடுதிரும்பவேயில்லை ஒரு கிணற்றில் சடலமாக மறுநாள் மிதக்கிறார். அன்னை இறந்த பின்னர் சிற்றன்னையால் அன்புடன் வளர்க்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். தந்தையால் குழந்தையாக இருக்கையில் வேலைக்கு அனுபட்ட ஒருவர் மாபெரும் கலைதொண்டாற்றுபவராக உருவாகிறார். சொல்லிக்கொண்டே போகலாம்.

எந்த நேரமானாலும், நாளின் எத்தனை அசதியான அந்தியாக இருந்தாலும் தமிழ் விக்கி வேலைகளை செய்யாமல் உறங்கப் போவதில்லை, போக முடிவதில்லை. விஷ்ணுபுரம் குடும்பம் போலவே இப்போது விக்கி குடும்பம் என்றும் சொல்லலாம் என்னும் அளவுக்கு இதில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் மேலும் நெருங்கி இருக்கிறோம். பல நாட்கள் விக்கியில் குறிப்பிடப்பட்டிருக்கும், நாங்கள் பங்களித்திருக்கும், திருத்தங்கள் செய்திருக்கும் பக்கங்களில் இருக்கும் ஆளுமைகளை குறித்து பேசிக்கொள்கிறோம். பேசிக்கொள்ளாத நாட்களிலும் இம்மாபெரும் வலையில் பல்வேறு இடங்களில் இருக்கும் நாங்கள் உணர்வால் இணைந்திருக்கிறோம்.

இந்த வேலைகளின் அருமையை இவற்றால் எங்களுக்கு கிடைப்பவற்றை நிச்சயமாக எழுதியும் சொல்லிம் விளக்கியும் பிறருக்கு புரியவைக்க முடியாது. ஆனால் இப்போது உணர்வது போல் என் வாழ்வை பொருளுள்ளதாக முன்னெப்போதும் உணர்ந்ததே இல்லை.

எத்தனை காலம் இதை செய்யப்போகிறேன் என்னும் கேள்வியை சில சமயம் எதிர்கொள்கிறேன். எப்போதும் செய்துகொண்டிருப்பேன் என்று பதில் தருகிறேன்.

சமீபத்தில் நண்பர் ராஜமாணிக்கம் பேசிக்கொண்டிருக்கையில் கல்வெட்டுக்களில் கோவில்களுக்கு ஆடுகளை தொடர்ந்து  தானமாக ஒரு குடும்பம் கொடுக்க வேண்டும் என்பதை ’’சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருப்பதை சொன்னார். அப்படி சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அல்லது நானிருக்கும் வரை அதை முழு அர்ப்பணிப்புடன் விரும்பி செய்துகொண்டிருப்பேன்.

சென்ற வாரம் கவிஞர் ஒருவர் அவரது விக்கி பக்கத்தின் திருத்தம் குறித்து என்னை தொடர்பு கொண்டார் அதை திருத்தினேன் எனக்கு அவர் நன்றி சொல்லி ’’நீங்கள் கல்லூரியில் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ஓய்வு நேரத்தில் இதை செய்கிறீர்கள் போலிருக்கிறது வாழ்த்துக்கள்’’ என்று தகவல் அனுப்பினர். அவர் எனக்கு அப்போதுதான் பரிச்சயம் நான் அதற்கு நன்றி என்றோ ஆம் என்றோ  பதிலளித்திருந்தால் போதும் ஆனால் “ஓய்வு நேரங்களில் அல்ல, கல்லூரிப்பணிக்கும் இல்பேணுதலுக்கும் அளிக்கும் அதே முக்கியத்துவத்தை கொடுத்து தமிழ் விக்கி பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்’’ என்று நீண்ட விளக்கமளித்தேன். தமிழ் விக்கி பணி என்பது அத்தனை முக்கியமானது.

உருவாக்கிக் கொண்டிருக்கும்  தமிழ் விக்கி பக்கங்களில் இருக்கும் ஆளுமைகளின் செயல்களுக்கு ஈடாக ஏதேனும்  செய்வது என்பதெல்லாம் எனக்கு சாத்தியமில்லை எனினும் தாவரவியல் துறையில் இத்தனை வருடங்கள் ஆழ்ந்த பிடிப்புடன் பணியாற்றிக்கொண்டு, அரசுச்சம்பளமும் வாங்கிக்கொண்டிருப்பவளாக குறிப்பிட்டு சொல்லும்படியாகவாவது ஏதேனும் செய்ய நினைக்கிறேன்.

இத்துறையில் புழங்கும்  லத்தீன் பெயர்களுக்கிணையான தமிழ் சொற்களும், ஆங்கில தாவரவியல் சொற்களுக்கு இணையான  தமிழ் சொற்களும் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.

சில மாதங்களுக்கு  முன்பாக பல வீடுகளில் அழகுச்செடியாக இருக்கும், பிளவுபட்ட இதழ்களுடன் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் செம்பருத்தி மலரின் தமிழ் பெயர் என்ன என்று நண்பர்கள் கேட்கையில் அதற்கு இணையத்தில் ’ஜிமிக்கி செம்பருத்தி’ என்றிருப்பது தெரியவந்தது. அது பொருத்தமாகவே இல்லை. அறிவியல் பெயரிலேயே அத்தாவரத்தை அறிந்துகொள்ளும் குறிப்புகள்  இருக்கையில் தொடர்பே இல்லாமல் ஜிமிக்கி என்று  குறிப்பிட்டிருந்ததில் எனக்கு ஆட்சேபணை இருந்தது.

இதன் அறிவியல் பெயர் Hibiscus schizopetalus.  schizo -petalus என்பதற்கு பிளவுபட்ட இதழ்கள் என்று பொருள் எனவே நான் இந்த மலருக்கு  ‘பிளவிதழ் செம்பருத்தி’’ என்று பெயரிட்டேன். இப்படி  flower bed  என்பதை பூம்பாத்தி, aggregate fruit  என்பதை திரள் கனி, petiolule   என்பதை சிற்றிலைச்சிறுகாம்பு,  parthenocarpy என்பதை கன்னிக்கருவுருதல் என்று தமிழ்ப்படுத்துகிறேன்.

பல தாவரவியல் சொற்கள் தூய தமிழில் சங்க பாடல்களில் இருக்கின்றன. அல்லியும் புல்லியும் இணைந்த பகுதியை தாவரவியல் ஆங்கிலத்தில் tepal அல்லது perianth என்கிறது. சங்கப்பாடல்கள் இதை அதழ் என்கின்றன. வெண்முரசிலும் Dicotyledon என்பதை குறிக்கும்  ஈரிலைமுளை  போன்ற  பல சொற்கள்  இருக்கின்றன குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதற்கென இரண்டுமணி நேரம் வேலை செய்கிறேன்.

2000 ஆங்கில தாவரவியல் சொற்களும், ஓரிரு வரிகளில் அதற்கான ஆங்கில விளக்கமும், இணையான தமிழ் சொல்லும், தேவைப்பட்டால் எளிய கோட்டு சித்திரமுமாக ஒரு தாவரவியல் கலைச்சொல்லகராதியை உருவாக்க நினைக்கிறேன். இறுதியில் அகராதியை மேலும் செம்மைப்படுத்தி திருத்தங்கள் செய்ய விஷ்ணுபுரம் நண்பர்களின் உதவியும் இருக்குமென்பதால் தரமான ஒரு அகராதியை என்னால் நிச்சயம் உருவாக்க முடியும். 20000 சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கிடைக்குமா, இதை  தனியாக என்னால் செய்துவிட முடியுமா என்றெல்லாம் நான்  யோசிக்கவில்லை. இதை தொடங்கி முடிக்க முடியும் என்று நம்புகிறேன் உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.

தமிழ்  விக்கியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றியும் அன்பும்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைகொதித்தலுக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைகொற்றவை, கவிதைகள்